நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வராவிட்டால் வேறு எந்த வழிகளிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இந்திய நாடாளுமன்றக்குழு இலங்கை வந்திருக்கும் நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசர பேச்சொன்றை நடத்தியுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயம், தீர்வுப்பேச்சு, மே தினக் கூட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பில் அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் உறுதியான நிலைப்பாடுகள் கேட்டறியப்பட்டதுடன், பங்காளிக்கட்சிகளிட மிருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.
இலங்கை அரசு, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்திவரும் நிலையில், நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்தும் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்காவிட்டால் வேறு எந்தவழிகளிலும் தீர்வைத் வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த இதன்போது ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தாம் பல தடவைகள் அழைப்பு விடுத்தார் என்றும், தெரிவுக்குழுவின் அவசியத்தை சுட்டிக்காட்டினார் என்றும் ஜனாதிபதி பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவைமட்டுமின்றி, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகள் உள்நாட்டுப் பொறிமுறையைப் பயன்படுத்தியே நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு சர்வதேசத்தின் தலையீடுகள் இருத்தல் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் குழுக்கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே நேற்றுமுன்தினம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடிக்கும் இறுக்கமான போக்கு தொடர்பில் இந்தியக் குழுவிடம் எடுத்துரைக்குமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார் என அறியக்கூடியதாகவுள்ளது.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment