அமெரிக்காவின் பின்புலத்துடன் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேலை தான் என்று, கோமாவில் இருந்து எழுந்து வந்தவர்கள் போல சில அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தேசியப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கங்கள் தீர்வு காணத் தவறியதன் விளைவே ஜெனிவா தீர்மானம்.
பண்டா - செல்வா உடன்பாடு, டட்லி- செல்வா உடன்பாடு, சிறிலங்கா - இந்திய உடன்பாடு, 13 வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்கா அரசு - கூட்டமைப்பு பேச்சுக்கள் ஆகியவற்றை முறையாக நிறைவேற்றியிருந்தால், இன்று சிறிலங்கா அரசு இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்காது.
இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தின் பேரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சு இடம்பெற்றது.
அந்தப் பேச்சுக்கள் ஒரு ஆண்டுக்கு நீடித்த போதிலும் எந்தவொரு தீர்வும் வந்து விடவில்லை.
போரின்போது மருத்துவமனைகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்படுவதை, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை நாம் இங்கு சுட்டிக்காட்டிய போது சிறிலங்கா அரசாங்கம் அதுபற்றிக் கண்டு கொள்ளாமல் இருந்தது.
இங்கிருந்த அமைச்சர்கள் எவராவது, அது தவறென்று கூறினரா?
இறுதிக்கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டதாக அனைத்துலக அமைப்புக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாதுள்ளது.
போரின் போது சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் பற்றிய சரியான எண்ணிக்கை விபரம் ஏதும் இல்லை.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே, இங்கு ஆட்கடத்தல்கள் இடம்பெற்றன.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர்கள் தேசிய விவகாரங்கள் குறித்துப் பேசினால், இனவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது.
கிழக்கைப் பொறுத்தவரை காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. புத்தர்சிலைகள் முளைக்கின்றன.
வடக்கில் அரச சேவையில் தமிழ் பேசும் ஒருவருக்காவது நியமனம் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலும் எமது மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
இதுபற்றி இங்கு கூறினால், எம்மை இனவாதிகள் என்று கூறுகின்றீர்கள்.
சிங்கள சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சிறிலங்கா அதிபரும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தான் முதலில் ஜெனிவாவுக்குச் சென்றனர்.
சிறிலங்காவுக்கு ஆதரவாக - ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த கியூபா சிறிலங்காவில் இடம்பெற்ற போருக்கு அமெரிக்காவின் 60 வீத ஆயுத உதவி இருந்ததாக கூறியுள்ளது.
அதேபோன்று இந்தியாவும் உதவியிருப்பதாக கூறியிருக்கின்றது.
இந்தநிலையில் சிறிலங்கா அரசுக்கு உதவி செய்த நாடுகள் மனிதஉரிமை பேரவையில் எதிராக செயற்பட்டமை தொடர்பாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் முட்டாள்தனமான செயற்பாடுகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும் படியே கூறுகிறது. அதில் வேறு எதுவும் கூறப்படவில்லை.
இருந்தபோதிலும் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை.
வடக்கு,கிழக்கில் இதே நிலைமை மேலும் நீடிக்குமேயானால் அது நல்லிணக்கத்துக்கு பதிலாக மேலும் பாரிய பிரச்சினைகளையை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment