நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அரசு கூட்டமைப்பு பேச்சு மீண்டும் ஆரம்பிக்கப்படுமா அல்லது இடைநடுவில் கைவிடப்படுமா எனப் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் எழுந்துள்ள இவ்வேளையில், பேச்சுகள் மீண்டும் விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மேலோங்கிக் காணப்படுகின்றன என அரசதரப்பு பேச்சுக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க நேற்று "உதய'னிடம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இதுவிடயம் தொடர்பில் சாதகமான சமிக்ஞைகளை வெளிக்காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார். கூட்டமைப்புக்கு சில அழுத்தங்கள் இருந்தாலும் அதன் உறுப்பினர்கள் மீண்டும் பேச்சுமேடைக்கு வருவார்கள் எனத் தான் நம்புகிறார் என்றும் அவர் "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளுக்கமைய இலங்கை அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பித்தது.
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட தீர்வுத்திட்டப் பேச்சுகள் ஆரம்பக்கட்டத்தில் சுமுகமாக நடைபெற்றுவந்தன. இருதரப்பும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடின.
பலசுற்றுகளாக இடம்பெற்றுவந்த இந்தப் பேச்சுகள் ஒருகாலகட்டத்தை எட்டியிருந்த தறுவாயில் அரச தரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை எழுத்துருவில் கோரியிருந்தது.
இதனையடுத்து அதனைக் கூட்டமைப்பு அரசதரப்பிடம் கையளித்தது. அத்துடன், முக்கிய சில காரணிகளுக்கு அரசதரப்பிடமிருந்து அது பதிலை எதிர்பார்த்திருந்தது. தடுத்துவைக்கப்பட்டோர் தொடர்பிலான பெயர் விவரங்களை அரசு வெளியிடவேண்டும் என்பது ஆரம்பக்கட்டக் கோரிக்கைகளுள் பிரதானமாக இருந்தன.
பெயர் விவரங்கள் வெளியிடப்படும். இதனை முக்கிய பல ஆதாரங்களுடன் வருவோர் பார்வையிடலாம் என அரசு உறுதியளித்தது. ஆனால், அரசின் உறுதிமொழி சாதகமான முறையில் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், தொடர்ந்தும் பேசுவதில் பயனில்லை. தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலைத் தாருங்கள் எனக்கூறி பேச்சுமேடையிலிருந்து தற்காலிகமாக வெளியேறியது கூட்டமைப்பு. இதனையடுத்து அரச தரப்பு தமது பக்க நியாயங்களைத் தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூட்டமைப்பினர் புலிகள்போல் செயற்படுகின்றனர் என விமர்சிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் காலங்களும் பல கடந்தன. இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் நடைபெற்ற முக்கிய சந்திப்பையடுத்து ஸ்தம்பிதமடைந்திருந்த பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகின. இதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பும் அளப்பரியது.
இவ்வாறு பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுகள் பொலிஸ், காணி அதிகாரங்கள் விடயத்தில் மீண்டும் ஸ்தம்பிதமடையும் நிலையை எட்டின. இந்நிலையில், அரசும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் விடயத்தில் மும்முரமாக ஈடுபட்டது.
அதுமட்டுமின்றி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனைகளையும் விதித்தது. தமது பிரதிநிதிகளின் பெயர்களைக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு முன்மொழிந்தால் மாத்திரமே பேச்சுகள் முன்னெடுக்கப்படும் எனத் திடமாக அறிவித்தது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொள்ளவில்லை. முதலில் பேச்சு; அடுத்தே தெரிவுக்குழு; பேச்சுமூலம் எட்டப்படும் தீர்வைப் பரிசீலிக்கும் கருவியாகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமையவேண்டும் என அது ஆணித்தரமாக இடித்துரைத்தது.
இதனால் வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்த பேச்சுகள் முடிவடையும் நிலைக்கு வந்தன. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குமிடையே மீண்டுமொரு சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்புக்குப்பின்னர் தீர்வுத்திட்டப் பேச்சுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அந்த எதிர்பார்ப்பு கைகூடவில்லை.
இதற்கிடையில், ஜெனிவா மாநாடு ஆரம்பமானதால் இந்த விவகாரம் அப்படியே தணிந்துபோனது. ஆனால், ஜெனிவா மாநாடு முடிவடைந்த கையோடு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில், மூன்றாம் தரப்பு மத்தியஸ்த விவகாரத்தால் இந்த விடயம் பெரிதாகவே பேசப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையிலேயே, ஸ்தம்பிதமடைந்துள்ளது எனக் கூறப்படும் தீர்வுத்திட்டப் பேச்சுகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என அரசதரப்பு பேச்சுக்குழுவின் முக்கியஸ்தரும், எம்.பியுமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவிடம் "சுடர் ஒளி' வினவியது.
அதற்கு அவர், "மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாகும் எனத்தான் நம்புகிறார் என்றும், அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் தென்படுகின்றன'' என்றும் குறிப்பிட்டார்.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment