ஜெனீவாவுக்குப் பிறகு இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான செயல்முறைகள் பற்றி எதையுமே பேசுவதாக இல்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளில் முக்கியமானவற்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையைக் கேட்டிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்களித்த இந்தியா இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்தைத் தணிப்பதில் அக்கறை கொண்டிருக்கும் நிலையில் தற்போதைக்கு அரசியல் தீர்வுக்கான செயன்முறைகளைப் பொறுத்தவரை எந்தவிதமான வற்புறுத்தலையும் செய்யுமென்று எதிர்பார்ப்பதற்கில்லை.
தீர்மானத்தைக் கொண்டுவந்த அமெரிக்காவும் கூட வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை அடுத்த மாதம் ஹிலாரி கிளின்டனுடன் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அரசியல் தீர்வு குறித்து புதிதாக எதையும் பேசுவதற்கு வாய்ப்பில்லையென்றே தோன்றுகிறது. ஜெனீவாத் தீர்மானத்திற்கு எதிரான சண்டமாருதத்தைத் தொடருவதன் மூலமாக பொருளாதார நெருக்கடி உட்பட மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தைத் தொடர்ந்தும் திசை திருப்பிக் கொண்டிருக்க முடியுமென்பதை நன்குணர்ந்திருக்கும் அரசாங்கம் "கலரிக்கு விளையாட்டுக் காட்டும்' தந்திரோபாயமாகத் தன்னை ஒரு அமெரிக்கமேற்குலக வல்லாதிக்க நாடுகளின் நோக்கங்களுக்கு எதிரான ஏகாதிபத்திய விரோத சக்தியாகக் காட்சிப்படுத்தும் கைங்கரியங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றது.
இத்தகையதொரு பின்புலத்தில், இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வை நோக்கிய செயன்முறைகளில் அக்கறை காண்பிக்க வேண்டிய தேவை தனக்கிருப்பதாக அரசாங்கம் கிஞ்சித்தேனும் கருதுமென்பதற்கான அறிகுறி எதையும் காணமுடியவில்லை. ஜெனீவாவுக்கு முன்னரான காலகட்டத்தில் அரசியல் தீர்வுக்கான செயன்முறையாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்தது. கடந்த வருடம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கம் ஒரு இடைக்கட்டத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பெயர்களை அறிவித்தால் மாத்திரமே மேற்கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியுமென்று நிபந்தனை தெரிவித்தது. தங்களுக்கும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் காணப்படக்கூடிய இணக்கப்பாட்டைத் தெரிவுக்குழுவின் பரிசீலனைக்குச் சமர்ப்பிப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது என்று சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு முன்வரவில்லை.
இத்தகைய உறுதிமொழியொன்றை கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தாங்கள்அளிக்கவில்லையென்று அரசாங்கத் தலைவர்கள் ஒருபோதுமே மறுதலிக்கவில்லை. அத்துடன், வேறு யாருமல்ல ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுக்குச் சமாந்தரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனான தனியான பேச்சுவார்த்தையை அரசாங்கம் தொடருவதில் எந்தப் பிரச்சினையுமே இல்லையென்று ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பகிரங்கமாக அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கமும் அல்லது கூட்டமைப்பின் தலைவர்களும் தங்கள் தங்கள் நிலைப்பாடுகளில் தொடர்ந்தும் உறுதியாக நின்றதன் காரணத்தால் முட்டுக்கட்டை நிலை தொடர்ந்தது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக அரசியல் தீர்வுக்கான யோசனைகளை வகுப்பதற்கு ஆறு மாத கால அவகாசம் போதுமானதென்று அரசாங்கத் தலைவர்கள் கூறிக்கொண்டிருந்தனர். தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்ட பிறகு தற்போது ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. ஜெனீவா பரபரப்பில் தெரிவுக்குழு பற்றி பேச்சுகள் அமிழ்ந்து போயின. ஜெனீவாவுக்குப் பிறகு அதைப் பற்றி எந்த அரவத்தையும் காணோம். ஜெனீவாத் தீர்மானத்தின் விளைவாக மூண்டிருக்கும் சர்ச்சையைத் தனக்கும் சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளுக்கும் இடையேயான ஒரு இராஜதந்திரத் தகராறாகக் காட்டிக்கொண்டு இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக்காண்பதற்கு முன்னெடுக்க வேண்டிய செயன்முறைகள் பற்றி அரசாங்கம் வஞ்சகத்தனமாகப் பேசாமல் இருக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலை தோன்ற வாய்ப்பிருக்கிறது!
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment