இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது. சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான்.
முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் கொடுத்து வந்தது. இன்று அந்தப் பாதுகாப்பு இல்லாது போய்விட்ட நிலையில்- யாரும், எப்போதும், எப்படியும் குற்றங்கள் செய்யலாம் என்று துணிந்து விட்டனர். இலகுவாகத் தப்பிக்கலாம் என்பதால் எந்தக் கூச்சமும் இல்லாமல் குற்றங்களில் இறங்குகின்றனர். இந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் புலிகளின் அருமையை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள்.அதேபோல புலிகள் இல்லாத சூழலில் தான் அவர்களின் அருமை புரியத் தொடங்கியுள்ளது.
முள்ளிவாய்க்காலிலேயே தமிழரின் செழிப்பான வாழ்வும், எதிர்காலமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது. அதற்கு சிங்களப்படைகள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் தான் பொறுப்புக் கூற வேண்டும். போரை நிறுத்த ஐ.நாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை.உலகத்தின் கண்முன்னே தான் தமிழருக்கு இந்தக் கொடுமைகள் எல்லாம் இழைக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலில் பீரங்கிகள் மூலம் தமிழரைக் கொன்றொழித்துக் கொண்டிருந்த போது- அமெரிக்காவில் இருந்தபடியே அதை செய்மதிப் படங்களின் ஊடாகப் பார்த்திருக்கிறார்கள். உள்ளிருந்தே தகவல்களைப் பெற்றிருக்கிறது இந்தியா. ஆனாலும் யாருக்கும் அங்கே தமிழர் மீது இரக்கமே வரவில்லை. அங்கிருந்த மூன்றரை இலட்சம் மக்களின் அவலத்தை விட அவர்களுக்கெல்லாம் பெரிதாக இருந்தது- புலிகளின் அழிவு தான். அதை எல்லோருமாகச் சேர்ந்தே செய்து முடித்திருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கெல்லாம் நிம்மதி வந்துவிட்டது.ஆனால் தமிழரின் நிம்மதி பறிபோய் விட்டது. தமிழர்கள் போரின் போது இழந்தவற்றையும் சரி, அதன் பின்னர் அவர்கள் இழந்து போயுள்ள நிம்மதியையும் சரி, எந்த உலக சக்தியாலும் கொடுத்து விட முடியாது. இவர்களிடத்தே இருந்து வந்த ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் இனிமேல் ஏற்படுத்தி விட முடியாது. எல்லாம் சீர்குலைந்து வேரறுக்கப்பட்டு விட்டது. இது தான் தமிழருக்கு முள்ளிவாய்க்கால் கொடுத்த பரிசு.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.
முள்ளிவாய்க்காலில் தமிழரைச் சீரழித்து, சின்னா பின்னமாக்கியவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்காமல் விடப் போவதில்லை. இப்போதே பலரும் அதற்கான தண்டனையையும்- வலியையும் சுமக்கத் தொடங்கி விட்டனர். இது இன்னமும் நீளப் போகிறது. தமிழருக்கு எதிராக தொடரப்பட்ட போரும், அதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கும் காரணமாக இருந்தவர்களை நீதி ஒரு போதும் தண்டிக்காமல் விடாது. அந்த நம்பிக்கை ஒன்று தான் தமிழரை அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. ஆனாலும் அது வெளிச்சத்தை நோக்கிய பயணமாக அமையுமா அல்லது இருளைத் தேடிய பயணமாக அமையுமா என்பதை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
-இன்போ தமிழ் குழுமம் -
0 கருத்துரைகள் :
Post a Comment