'ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சியே சிறிலங்காவில் நடைபெறுகின்றது' - ஆசிய மனித உரிமை அமைப்பின் இயக்குநர்


சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார். இவ்வாறு ஆசிய மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த Suhas Chakma* இந்தியாவினை தளமாகக்கொண்ட Tehelka இணையத்தில் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.  

மார்ச் 2013ல் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றி அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறிலங்கா அரசாங்கத்திடம் இதன் 19வது கூட்டத் தொடரில் கேட்டுக் கொண்டது. 

இக் கூட்டத் தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஏப்ரல் 04, 2012 அன்று சிறிலங்கா நாடாளுமன்றில் விவாதம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறெனினும், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் எவற்றை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது என்பது தொடர்பாக மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றில் அறிவிக்கத் தவறிவிட்டார். 

கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது விளக்கவுரைக்கு அப்பால் சென்றுள்ளதாக மார்ச் 27, 2012 அன்று நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்திருந்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவை எதிர்த்து இந்தியா வாக்களித்ததை விட, சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான கடும் போக்கான தீர்மானத்தை இந்தியா எடுக்க வேண்டியுள்ளது. 

பேரவையில் இந்தியா அளித்த வாக்கானது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. இந்தியா சிறிலங்காவை எதிர்த்து வாக்களித்ததை தாராளவாதிகள் வரவேற்றுள்ளனர். ஆனால் அரசியல் அவதானிகளும் விமர்சகர்களும் இந்தியாவின் இந்தத் தீர்மானமானது பூகோள அரசியல் ரீதியில் தவறிழைக்கப்பட்ட ஒன்றாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் இவ்விரு நிலைப்பாடுகளும் சரியானவையல்ல. 

நிறவெறிக் கொள்கையை எதிர்த்து 1965ல் உருவாக்கப்பட்ட ஐ.நா உடன்படிக்கையை வடிவமைப்பதில் இந்தியா பங்கேற்றிருந்தது என்பதை தற்போதைய இந்தியாவின் நிதி அமைச்சரும் அணிசேரா நாடுகள் அமைப்பின் [Non-Aligned Movement] முன்னாள் தலைவருமான பிரணாப் முகேர்ஜி மறந்திருக்கலாம். இதேபோன்று பாலஸ்தீன் உட்பட அரேபிய நாடுகளை ஆக்கிரமிக்கும் கொள்கைக்கு எதிராக ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட சிரியா மற்றும் இஸ்ரேலியக் குடியேற்றங்கள் என்பவற்றில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்தும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Arab spring இன் அழுத்தத்தின் காரணமாகவே இந்தியா இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது. ஆகவே இந்நிலையில் பூகோள அரசியல் என்பது கூட்டல் கணக்கு போன்றதல்ல. 

மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இந்தியாவின் இரு தரப்பு தலையீடானது எவ்வாறு வித்தியாசப்படுகின்றது? 1980 களில், அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளில் நாடுகளின் எல்லைகளில் இடம்பெற்ற கிளர்ச்சிகளுக்கான ஆதரவு செல்வாக்கிய போது, இந்தியா, தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு தனது ஆதரவை வழங்கியிருந்தது. பின்னர் தனது அமைதி காக்கும் படையை சிறிலங்காவில் களமிறக்கியிருந்தது. 

சிறிலங்கா சாதகமான நகர்வுகளை எடுத்திருந்தால், இந்தியாவோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் பேரவையோ தமது தலையீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இடம்பெயர்ந்து முகாங்களில் தங்கியிருந்த தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தது. சிறிலங்காவில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கில் 50,000 நிரந்தர வீடுகளை ரூபா 3.48 இலட்சம் செலவில் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பழிவாங்கும் குணமும், சர்வதிகாரப் போக்கும், கொண்ட காடைத்தனமான செயல்களில் ஈடுபடுகின்ற ஒருவராக மாற்றம் பெற்று விளங்குகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உண்மையான யுத்த கதாநாயகனாகத் திகழ்ந்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதிகாரப் பரவலாக்கல் மற்றும் மீளிணக்கப்பாடு என்பன வழங்கப்படாது காலந்தாழ்த்தப் படுகின்றன. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நலனை தான் அடைந்து கொள்வதற்காக, ஐரோப்பிய நாடுகளிலிருந்த தனது தூதரங்களை மூடிக்கொள்வதென சிறிலங்கா தீர்மானித்தது. சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த ஐரோப்பிய நாடுகள் சிறிலங்காவின் தேசிய பிரச்சினையில் தமது ஆதரவை அடைந்து கொள்வதற்கான எந்தவொரு நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. 

சிறிலங்கா அதிபர் இவ்வாறானதொரு அணுகுமுறையைக் கைப்பற்றியதானது, ஆசிய கண்டத்தின் தனித்துப்போன புதிய துறவி இராச்சியம் [hermit kingdom of Asia] என்ற நிலையை சிறிலங்கா அடைந்து கொண்டது. சிறிலங்காவில் ஏற்கனவே குடும்ப ஆட்சி நடைபெறுகின்றது. அண்மைய வரலாற்றில் ஆசிய நாடுகளில் எதிலும் சிறிலங்காவைப் போல் குடும்ப ஆட்சி நடைபெறவில்லை.சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 




• அதிபரின் சகோதரர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ச தற்போது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு செயலராகக் கடமையாற்றுவதுடன், பிறிதொரு சகோதரரான பசில் ராஜபக்ச சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகிக்கின்றார். 

• அதிபரின் மூத்த சகோதரன் சமல் ராஜபக்ச தற்போதைய சிறிலங்கா நாடாளுமன்றின் சபாநாயகராக உள்ளார். 

• சமல் ராஜபக்சவின் இரண்டாவது மகன் சமீந்திர ராஜபக்ச சிறிலங்கா எயார் லைன்சின் இயக்குனராகவும், ராஜபக்சவின் மைத்துனரான நிசாந்த விக்கிரமசிங்க சிறிலங்கா எயார்லைன்சின் தலைவராகவும் கடமையாற்றுகின்றனர். 

• அதிபர் ராஜபக்சவின் மருமகனான சசீந்திர ராஜபக்ச ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக உள்ளார். 

• தொழில் ரீதியாக தேயிலை வர்த்தகராக உள்ள சிறிலங்கா அதிபரின் முதலாவது மைத்துனன் ஜலியா விக்கிரமசூரிய அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதராக 2008 இலிருந்து கடமையாற்றுகின்றார். 

• சிறிலங்கா அதிபரின் பிறிதொரு மைத்துனரான, வர்த்தகரான உதயன்க வீரதுங்க, 2006 இலிருந்து ரஸ்யாவுக்கான சிறிலங்காத் தூதராக கடமையாற்றுகின்றார். 

• அதிபர் ராஜபக்சவின் பிறிதொரு மைத்துனரான, ஓய்வு பெற்ற கேணல் பிரசன்ன விக்கிரமசூரிய சிறிலங்காவின் Airport & Aviation Services Ltd இன் தலைவராக கடமையாற்றுகின்றார். 

• சிறிலங்காவில் தற்போது நிலவும் குடும்ப ஆட்சியானது சிறிலங்கர்களின் வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் கட்டுப்பாட்டை விதிக்கின்றது. அத்துடன் சிறிலங்காவின் அரசியலமைப்பில் இரு தடவைகளுக்கு மேல் அதிபர் பதவியை வகிப்பதற்கான சலுகையை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. 

புதினப்பலகை

*Suhas Chakma is director of the Asian Centre for Human Rights.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment