இலங்கை விவகாரத்துக்கு விக்கிரமாதித்தன் கதையுடன் சமாந்தரம் வரைகிறார் ஹரிகரன்


இலங்கையின் இன நெருக்கடித் தீர்வு விவகாரத்தில் இந்தியாவின் முயற்சிகளுக்கும் விக்கிரமாதித்தன் கதைக்கும் இடையில் சமாந்தரம் வரைந்துள்ளார் கேணல் ஆர்.ஹரிகரன் . இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பாக புரிந்து கொள்ளக் கூடியவை என்ற தலைப்பில் தெற்காசிய ஆய்வுக் குழுமம் (South asia Analysis Group )கேணல் ஹரிகரன் கட்டுரையை வெளியிட்டுள்ளது. 

இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலை கொண்டிருந்த காலத்தில் அப்படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணி ஆற்றிய வரும் தெற்காசியா தொடர்பான ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு நிபுணருமான கேணல் ஹரிகரன் இலங்கைக்கான இந்தியப் பாராளுமன்றக் குழுவின் 6 நாள் விஜயம் தொடர்பான செய்திகளில் சாதகமானதும் , பாதகமானதுமான இரு அம்சங்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்தராஜ பக்ஷவின் உறுதிமொழி பற்றிய செய்திகள் தொடர்பான தமது ஆய்வில் இந்தியத் தூதுக்குழுவுக்கு 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளை அமுல்படுத்துவதுடன் அதற்கப்பாலும்  (13+) செல்லப் போவதாக உறுதி மொழி அளித்ததாக இந்தியக் குழுவுக்கு தலைமை தாங்கிய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்ததையும் பின்னர் அது தொடர்பாக இலங்கை ஆங்கிலப் பத்திரிகைகளில் அது தொடர்பாக இலங்கை அரச தரப்பை மேற்கோள் காட்டி மறுக்கப்பட்டிருப்பதையும் ஹரிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியப் பிரதமருக்கு, இந்தியவெளி விவகார அமைச்சருக்கு எதிர்க் கட்சித் தலைவியான எனக்குக் கூட இந்த உறுதி மொழியை ஜனாதிபதி அளித்திருக்கிறார் என்றும் அமைச்சர்கள் சொல்வதோ அல்லது மறுப்பதோ இங்கு விடயம் அல்ல என்றும் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்திருந்ததையும் இந்துப் பத்திரிகையை மேற்கோள் காட்டி குறிப்பிட்டிருக்கும்  ஹரிகரன், இந்தியத் தலைவர்களுடன் விடயங்களை கையாளுகையில் ஜனாதிபதியின் திட்டத்தில் மாற்றம் இல்லை என்பதை இது வெளிப்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்.

அவர்கள் ( இந்தியத் தலைவர்கள்) கூறும் போது இணங்குவதும் முன்னர் போன்று செயற்படுவதுமாக ஜனாதிபதியின் திட்டத்தில் மாற்றம் இல்லை என்பதை இது வெளிப்படுத்தும் என்று ஹரிகரன் தெரிவித்திருக்கிறார். அலரிமாளிகையின் வழமையான அலுவலாக இது இருக்கப் போகிறது. நல்லிணக்கம் ஏற்படாத நல்லிணக்க நடவடிக்கைகள் மேலும் இழுத்துச் செல்லப்படும் என நாங்கள் எதிர்பார்க்க முடியும். புது டில்லியின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு இருக்கப் போகிறது ? விடயங்களின் தற்போதைய  நிகழ்ச்சி நிரல் முறைமை தொடர்பாக புதுடில்லி சுலபமான பதிலைக் கொண்டிருக்க முடியாது. இந்திய பாரம்பரிய கதையில் மன்னன் விக்கிரமாதித்தன் செய்ததைப் போன்று  மீண்டும் (சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும்  மரத்தில் ஏறியதைப் போன்று)  ஆரம்ப இடத்துக்குச் செல்வதற்கான அர்த்தத்தையே இது கொண்டிருக்கும் சாத்தியம் காணப்படுகிறது என்று ஹரிகரன் கூறியுள்ளார். 

நல்லிணக்கத்துக்கான அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக தூதுக் குழு தெளிவான முறையில் கருத்துகளை தெரிவித்திருக்கிறது என்ற பாராட்டும் ஹரிகரனிடம் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. சமத்துவம், கௌரவம், நீதி, சுயமரியாதையின் அடிப்படையில் தமிழ் மக்களின் சட்ட பூர்வமான  தேவைகளை  நிறைவேற்றுக் கூடிய அர்த்தபுஷ்டியுடனான அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட இதய சுத்தியுடனான அரசியல் நல்லிணக்கத்தை எட்டுவதற்கு தெளிவான அணுகு முறையை பின்பற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இங்கே அரசாங்கம் பற்றிப்பிடிக்க வேண்டும் என்று தூதுக் குழு தெரிவித்திருப்பதையும் ஹரிகரன் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் துரிதமான அரசியல் இணக்கப்பாட்டை நோக்கி முன் நகர வேண்டும் என்று இந்திய பாராளுமன்றக் குழு வலியுறுத்தியிருக்கிறது. அத்துடன் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை ஆரம்பிப்பதற்கான நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உருவாக்க வேண்டிய தேவை இருப்பதையும் தூதுக் குழு வலியுறுத்தியிருக்கிறது என்பதை ஹரிகரன் எடுத்துக் காட்டியுள்ளார்.

காணாமல் போனோர் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான தகவல்கள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாக அமுல்படுத்த வேண்டிய தேவைப்பாடு, காணாமல் போனோர், கடத்தப்பட்டோர் தொடர்பான விடயங்களை விசாரணை செய்தல்,  மும்மொழிக் கொள்கையை மேம்படுத்துதல், பாதுகாப்பு வலயங்களை குறைத்தல், தனியார் காணிகளை இராணுவத்தினர் திரும்ப வழங்குதல், இராணுவக் குறைப்பு, வடக்கில் சிவில் நடவடிக்கைகளில் படையினர் சம்பந்தப்படுவதை படிப்படியாக குறைத்தல் போன்ற விடயங்கள் பற்றி தங்களது விஜயத்தின் போது தெளிவான நிலைப்பாட்டிற்கு வந்திருப்பதாக இந்தியக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பான முன்னேற்றம் குறித்து கால வரையறைக்குள் கண்காணிக்கப்பட வேண்டி இருப்பதாகத் தெரிவித்துள்ள ஹரிகரன், ஆனால் யார் இதனை செய்வார்கள்  என்று கேள்வி எழுப்புகிறார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ  அரசாங்கமா? தமிழ் அரசியல் சமூகமா? இந்தியாவா? யூ.என்.எச்.சி.ஆரா? என்று கேள்வியை அவர் முன்வைத்திருக்கும் அதே சமயம், தமக்குரிய பங்கை யாவருமே நிறைவேற்றினால் 18 ஆம் நூற்றாண்டில் இலங்கை ஈட்டியிருந்த செரண்டிப் (கண்டெடுத்த அதிர்ஷ்டம்)  என்ற பெயர்  தத்ரூபமானதாக, உண்மையானதாக  அமையும் என்று தான் கருதுவதாக ஹரிகரன் கூறியுள்ளார்.

தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. தமிழர்கள் விடயத்தில் இந்தியாவின் முகம் என்பது ஹிந்தி முகமே தோழரே....... அவர்கள் ஒரு நாளும் தமிழர்களுக்கு நன்மையான விடயங்கள் குறித்து சிந்திக்க மாட்டார்கள்.

    ReplyDelete