விடுதலைப் புலிகளுக்கு தடை: தேச நலன் கருதி காரணத்தை தெரிவிக்க முடியாது,


விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாதாடினார்.ஆனால், விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்க மத்திய அரசிடம் பல்வேறு காரணங்கள் உள்ளது. தேச நலன் கருதி தான் இந்த காரணங்களா மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதாடினார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் 1992ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தத் தடை நீட்டிப்பு குறித்து விசாரிப்பதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரஜித் சென் தலைமையில் ஒரு நபர் தீர்ப்பாயத்தை அமைத்தது. இந்தத் தீர்ப்பாயம் டெல்லி, சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் விசாரணை நடத்தியது.

இறுதியாக கடந்த 2010ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டித்தது சரியே என்று அந்தத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தடையை விலக்க முடியாது, வைகோவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் வைகோவின் மனு மீதான இறுதி விசாரணை நேற்று தொடங்கியது. நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இதை விசாரித்தது. அப்போது வாதாடிய வைகோ,

விடுதலைப் புலிகள் உத்தேசித்துள்ள தமிழ் ஈழம் என்ற தனி நாட்டில் இந்தியாவின் ஒரு பகுதியாகிய தமிழ்நாட்டையும் பிரித்து, அதில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர். ஆகவே, விடுதலைப் புலிகள் அமைப்பால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படலாம் என்பதுதான் புலிகள் அமைப்பு மீது இந்தியா தடை விதிக்க முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் துளியும் உண்மையில்லை.

தந்தை செல்வா காலத்தில் நடந்த அகிம்சைப் போராட்டக் காலத்திலும் சரி, பின்னர் நடைபெற்ற ஆயுதப் போராட்டக் காலத்திலும் சரி இந்தியாவின் எந்தப் பகுதியையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழர்கள் எண்ணியதே இல்லை.

இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் இலங்கைத் தமிழர்களால் எளிதாக அடைக்கலம் புக முடிகிறது. ஆனால் புலிகள் அமைப்பின் மீதான தடை காரணமாக தமிழகத்துக்கு வரும் இலங்கைத் தமிழர்கள் மட்டும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். ஆகவே, புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் வாதாடுகையில், விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை விதித்ததை நீக்க கோரி பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். வைகோ வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் இல்லை. அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் இல்லை.

இதுதவிர தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை செய்ய மத்திய அரசிடம் பல்வேறு காரணங்கள் உள்ளது. தேச நலன் கருதி தான் இந்த காரணத்தை வெளியிடாமல் மத்திய அரசு உள்ளது. எனவே இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தை நிறைவு செய்யாத நிலையில், வழக்கின் விசாரணையை வரும் நாளைக்கு (ஏப்ரல் 11) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Share on Google Plus

About அகிலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment