சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும், அவர்களுக்கு உதவி செய்யவும் அனைத்துலக சமூகத்தை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசத்திடம் இந்திய மனிதஉரிமைகள் பாதுகாப்பு அமைப்பு மனுவொன்றைக் கையளித்துள்ளது.
அனைத்துலக மனிதஉரிமைகள் பாதுகாப்பு என்ற அமைப்பின் சார்பில் நேற்றுக்காலை புதுடெல்லியில் சிறிலங்கா தூதரகம் அருகே போராட்டம் நடத்தப்பட்டது.
புதுடெல்லி தமிழ்ச் சங்கத் தலைவர் கிருஸ்ணமணி மற்றும் அனைத்துலக மனிதஉரிமைகள் பாதுகாப்பு என்ற அமைப்பின் செயலர் ராஜேஸ் கோங்கா ஆகியோரின் தலைமையில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “ராஜபக்ச போர்க்குற்றங்களை விசாரணை செய்“, “சிறிலங்காவைப் புறக்கணியுங்கள்“, “சிறிலங்காவில் மனிதாபிமானம் கொல்லப்பட்டு விட்டது“ என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த போராட்டத்தில் பேசிய உச்சநீதிமன்ற சட்டவாளர் ராஜேஸ் கோங்கா,
“நாம் விடுதலைப் புலிகளுக்கோ அல்லது வேறு எந்தக் குழுவினருக்கோ ஆதரவாக இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை.
சிறிலங்காவில் போர் முடிந்து விட்டது. அங்குள்ள தமிழர்கள் இனரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதையும், இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதையும் சிறிலங்கா அரசு நிறுத்த வேண்டும்.
எல்லாத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அவர்கள் நினைக்கக் கூடாது.“ என்று தெரிவித்தார்.
தீன்மூர்த்தி பவனில் இருந்து சிறிலங்கா தூதரகம் நோக்கி சென்ற இந்தப் பேரணியை சாணக்கியபுரி காவல் நிலையம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து காவல்துறையினரின் தடுப்பு அருகே நின்று போராட்டக்காரர்கள் முழக்கம் எழுப்பினர்.
பின்னர், இந்த அமைப்பின் நிர்வாகிகளான கிருஸ்ணமணி மற்றும் ராஜேஷ் கோங்கா உள்ளிட்ட சிலர் சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசத்தை சந்தித்து மனுவைக் கையளித்தனர். அந்த மனுவில்,
“சிறிலங்காவில் நடைபெற்ற போரின்போது, இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மிகப்பெரும் இனப்படுகொலையாக- அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரை இழக்க நேர்ந்தது.
சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தலையிட்டு, அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை தவிர்த்திருக்க வேண்டும்.
அவ்வாறு நடக்காமல், எண்ணற்றோர் பலியானதற்கு ஆதாரமாக, பல தடயங்கள் வெளிவந்துள்ளன. இது, அனைத்துலக சமூகத்தை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. அப்பாவி மக்கள் பலரும், அவர்களின் சொந்த இடங்களை விட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கான ஆதாரங்கள், உலக அளவில் வெளியாகியுள்ளன.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மாநாட்டின் போது, சிறிலங்காவில் நடைபெற்ற போரின் போது நிகழ்ந்த அத்துமீறல்கள் குறித்து, விரிவாக அலசப்பட்டு, அனைத்துலக நாடுகள் தமது கவலைகளை பதிவு செய்துள்ளன.
சிறிலங்காவின் வடக்கு பகுதியில், இனி நடைபெற வேண்டிய புனரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் விரிவாக தெரிவித்துள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் அமைப்பில், கையொப்பமிட்டுள்ள நாடுகளில் ஒன்று சிறிலங்கா. எனவே, தமது நாட்டில் மனிதஉரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் சிறிலங்காவுக்கு உள்ளது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்து விட்டாலும், பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைத்து விடாது.
அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களையும், பகுதிகளையும், மீண்டும் புனரமைப்பு செய்ய வேண்டியது அவசியம். தொண்டு நிறுவனங்களும், மனிதஉரிமை அமைப்புகளும், அரசியலுக்கு அப்பாற்பட்டவை. எனவே, இவற்றை அங்கு அனுமதிக்க வேண்டும்.
புனரமைப்பு நடவடிக்கைகளில், இவற்றையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
சிறிலங்காவில், உண்மையில் என்ன சூழ்நிலை என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமெனில், அங்கு, அனைத்துலக அளவில் இயங்கும் மனிதஉரிமை அமைப்புகளை அனுமதிக்க வேண்டும்.
மனிதஉரிமை ஆர்வலர்களையும், தொண்டு நிறுவனங்களையும் அனுமதிப்பதன் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி கிடைக்க வழி வகை ஏற்படும். இதன்மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதி ஏற்படும்.“ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment