ஜெனிவா தீர்மானத்திலிருந்து சிறிலங்கா கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? - இந்திய நாளேடு

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா எடுத்திருந்தால், தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா தனது ஒத்துழைப்பை ஒருபோதும் வழங்காதிருந்திருக்கலாம். இவ்வாறு சென்னையை தளமாகக் கொண்டு வெளியாகும் The Hindu ஆங்கில நாளிதழில் நிருபமா சுப்பரமணியன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


கடந்த மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா தனது கருத்தில் எடுத்துள்ள அதேவேளையில், 2009ல் ஜெனீவாவில் இடம்பெற்ற கூட்டத் தொடரின் போது சிறிலங்கா தான் பெற்றுக் கொண்ட வெற்றி மமதையில் செயற்பட்டதை மீளவும் திரும்பிப் பார்க்கலாம்.


சிறிலங்கா அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து யுத்த வெற்றியைப் பிரகடனப்படுத்தி ஒரு வாரத்தின் பின்னர், சிறிலங்கா இராணுவத்தால் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குறிப்பிட்ட சில மேற்குலக நாடுகள் ஒன்று சேர்ந்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் 2009ல் கூட்டப்பட்ட பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரில் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.


அந்த நேரத்தில் சிறிலங்காவின் இறுதிக் கட்ட உள்நாட்டுப் போர் இடம்பெற்ற யுத்த வலயத்தில் சிந்தப்பட்ட இரத்தம் கூட காய்ந்திருக்கவில்லை. ஆனால் தனது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாது சிறிலங்கா அரசாங்கம் தப்பித்துக் கொண்டது.


ஆனால் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவால் உறுதி கூறப்பட்ட விடயம் ஒன்று தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளடங்கியிருப்பதை பேரவையின் சில உறுப்பு நாடுகள் நினைவில் கொண்டுள்ளன: "சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள இனமோதலானது இராணுவத் தீர்வு மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படமாட்டாது எனவும், இந்த யுத்தமானது நாட்டில் நிலையான, இறுதியான சமாதானத்தையும் நல்லிணக்கப்பாட்டையும் கொண்டு வருவதற்கேற்ற வகையில் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரசியல் தீர்வொன்றின் மூலமே நிறைவுக்கு கொண்டு வரப்படும் என சிறிலங்கா அதிபர் அண்மையில் வழங்கியிருந்த உறுதிப்பாடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்."


2009 ல் கூட்டப்பட்ட கூட்டத் தொடரின் போது சிறிலங்கா அரசாங்கம் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் என நம்பிய இந்தியா அதற்கான பரிசாக அப்போது சிறிலங்காவை ஆதரித்திருந்தது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் இந்தியாவை ஏமாற்றியதால் தற்போது இந்தியா சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்துள்ளது எனக் கூறப்படுகின்றது.


தற்போது பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முற்பட்டமைக்கு இரு நோக்கங்கள் காணப்படுகின்றன. அதாவது இந்தியாவானது இவ்வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு சற்று முன்னர் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதென முடிவெடுத்திருந்தது. இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம், சிறிலங்கா அதிபரால் வழங்கப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பான வாக்குமூலத்தை மீளவும் சுட்டிக்காட்டலாம் என இந்தியா எண்ணியது.


இந்நிலையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது ஏன்?


சிறிலங்கா அரசாங்கமானது தனது மாகாணங்களுக்கான அதிகாரத்தை பரவலாக்கி, தற்போது மத்திய மயப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் நிர்வாக அதிகாரத்தை பரவலாக்கி அதற்கான தீர்வை நோக்கி நகர்வதற்காக வரையப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு நினைவூட்டுவதற்கான ஒரு வழிமுறையாகவே தற்போது இந்தியா சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்துள்ளது.


இத்திருத்தச் சட்டத்தை சிறிலங்காவானது நிறைவேற்றும் பட்சத்தில் அங்கு வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு நிலையான, உறுதியான அரசியல் வழி அமைதித் தீர்வை வழங்க முடியும் என இந்திய மத்திய அரசு நம்புகின்றது. 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்தோ – சிறிலங்கா உடன்படிக்கையின் பிரகாரமே 13வது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இத்திருத்தச் சட்டமானது சிறிலங்காவின் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதற்கான சரத்தைக் கொண்டுள்ளது.


சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு வரையறுக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்குவதற்கான நடைமுறை உள்ளபோதிலும், தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்படாது, உள்ளுர் அரசியல்வாதிகளுக்கு போதியளவு அதிகாரங்கள் வழங்கப்படாது காணப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.


அடிப்படையில், சிறிலங்கா ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தீவிர கவனம் செலுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் அரசியல் ரீதியான இயல்புநிலையைக் கொண்டு வருவதற்கான உறுதியான நகர்வுகளை மேற்கொண்டிருந்தால் இந்தியா 2012ல் நிறைவேற்றப்பட்ட பேரவையின் தீர்மானத்துக்கு தனது ஆதரவை வழங்காது இருந்திருக்கலாம். சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் கவனத்திற் கொள்ளப்படாது விடப்பட்டிருக்கும்.


அரசியல் தீர்வை நோக்கிய சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகள் சிறிலங்கா மீது இந்தியா மேலும் நட்பை பலப்படுத்திக் கொள்வதற்கு வழிவகுத்திருக்கும். இதன் மூலம் அனைத்துலக ரீதியில் சிறிலங்காவானது மேலும் கூட்டாளிகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுப்பதற்கு இந்தியா உதவியிருந்திருக்கும்.


இதற்குப் பதிலாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மிக விரைவான, தளர்வான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபர் '13 ஆம் திருத்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட' சரத்துக்களை நிறைவேற்றுவதில் தான் ஆர்வமாக உள்ளதாக அறிவித்த போது உண்மையில் அரசியல் வழித் தீர்வில் சிறிலங்கா அதிபர் மிகவும் ஆர்வமாக உள்ளார் என எல்லோரும் கருதினர்.


ஆனால் சிறிலங்கா அதிபர் 13ம் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி, காவற்துறை அதிகாரப் பகிர்வில் சில வரையறைகளை மேற்கொண்ட போது அந்த நம்பிக்கை இழந்து போனது. அத்துடன் 'உள்நாட்டை' அடிப்படையாகக் கொண்ட அரசியற் தீர்வொன்றை முன்வைப்பது தொடர்பாகவும் ராஜபக்ச தனது கருத்துக்களை முன்வைத்தார். இதன் பெறுபேறாக அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் சிறிலங்கா அதிபர் எத்தகையை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்பது தெளிவற்ற விடயமாக உள்ளது.


அண்மையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு உருவாக்கப்படுவதற்கான அறிவிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இக்குழுவுக்கு தமிழ்க் கட்சி தனது பிரதிநிதிகளின் பெயர்களை அனுப்பாததாலேயே இக்குழுவை உருவாக்குவது தொடர்பில் தாமதம் காணப்படுவதாக கூறப்படுவதானது உண்மையில் தந்திரோபாய ரீதியான தாமதம் என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல.


2012 ஜனவரியில் சிறிலங்காவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா வருகை தந்த போது சிறிலங்கா அதிபர் 13வது திருத்தச் சட்டம் தொடர்பான தனது வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் இவ்வாக்குறுதி வழங்கிய கையோடு தான் இவ்வாறான வாக்குறுதி எதையும் இந்திய அமைச்சரிடம் வழங்கவில்லை என சிறிலங்கா அதிபர் அறிவித்தார்.


சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்களுக்கு எதிராகவே இந்தியா வாக்களித்ததாகவும், 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டில் நிலையான அமைதியை உருவாக்கி, தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதை மட்டும் நோக்காகக் கொண்டு இந்தியா வாக்களிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் ஆதரவுடன் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததில் இந்தியக் கூட்டணி  கட்சிகள் பங்கு வகிக்கின்ற போதிலும், சிறிலங்காவுக்கு இந்தியாவானது தனது செய்தியை தெளிவாக அனுப்புவதற்கேற்ற வகையிலேயே இதற்கான ஆதரவை இந்தியா வழங்கியுள்ளது. ஆனால் இந்தியா இவ்வாக்கெடுப்பில் பங்குபற்றாது நடுநிலைவகித்திருந்தாலும் கூட இந்தியாவின் நிலைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையே அது காண்பித்திருக்கும்.


சிறிலங்கா இத்தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் இந்திய மத்திய அரசானது தனக்கு ஆதரவளிக்கும் என சிறிலங்கா முழுமையாக நம்பியிருந்தது. சிறிலங்கா வெளிவிவகார செயலகத்துக்கு இந்திய மத்திய அரசாங்கமானது பேரவையில் நிறைவேற்றப்படும் தீhமானத்தின் சரத்துக்களை கவனத்திற் கொண்டுள்ளதாக செய்தி அனுப்பிய போது இந்தியாவின் உண்மையான நிலைப்பாடு முதலில் வெளித் தெரிந்தது.


சிறிலங்காவானது தனக்கு எதிராக வாக்களித்த 24 நாடுகளுடனும் பகைமை பாராட்டியுள்ளதுடன், தனக்கு சார்பாக வாக்களித்த 15 நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த 8 நாடுகள் ஆகியவற்றுக்க நன்றி பாராட்டி கடிதம் அனுப்பியிருந்தது. இந்தியாவானது இவ்வாக்கெடுப்பில் பங்குபற்றாது நடுநிலை வகிப்பது சரியான தெரிவாக இருக்காது என சிறிலங்கா இந்தியாவுக்கு அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவானது தற்போது சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் சிறிலங்காவைப் பாதுகாக்க வேண்டும் எனக் கருதியதை விட தனது நாட்டின் சொந்த நலனைக் காப்பதிலேயே குறியாக இருந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டியுள்ளது.


பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானம் தொடர்பில் சில வரையறைகளையும் மாற்றத்தையும் கொண்டு வந்து தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக இந்தியா ஆராய்ந்து வருவதாக மார்ச் 19 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.


இத்தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் சிறிலங்காவுக்கு மிக வலுவான செய்தி ஒன்றை அனுப்ப முடியும் எனவும், அதேநேரம் சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கை குறைக்க முடியும் எனவும் இந்தியா நம்பியிருந்தது. சிறிலங்காத் தீவில் நிலவும் இன முரண்பாட்டைத் தீர்ப்பதில் இந்தியா பங்களிக்க வேண்டும் என சிறிலங்கா அரசும் சிறுபான்மை தமிழ் மக்களும் கருதுகின்றனர். எப்போதும் இதையே இருதரப்பும் எதிர்பார்த்து நிற்கின்றன.


கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்தி அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் இதற்கான நகர்வுகளில் சிறிலங்கா அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் இந்திய மத்திய அரசு நம்புகின்றது.


சிறிலங்காவின் நகர்வுகள் தற்போது மறுக்க முடியாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாண்டின் இறுதியில் சிறிலங்கா அரசாங்கம் தனது முயற்சிகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.


தமிழ் தலைமைக்கும் தமிழ் மக்களுக்கும் நேர்மையான, நீதியான அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தவறிழைத்தால் அனைத்துலக சமூகமானது தொடர்ந்தும் சிறிலங்கா மீது எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.


சிறிலங்கா அரசாங்கம் உறுதியான, நிலையான அரசியற் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ்த் தலைமை தன்னாலான பங்களிப்பை வழங்கும் என இந்தியா எதிர்பார்த்து நிற்கின்றது.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment