ஜெனிவா விவகாரம் ஒருவாறு ஓய்ந்து போக அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்கள் பற்றிய செய்திகள் இப்போது வெளியாகத் தொடங்கிவிட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடை முறைப் படுத்த வேண்டும் என்ற தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்துக்குள் அரசு இப்போது சிக்கியிருக்கிறது. இதனால் பரிந்துரை களில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதா? இல்லையா? என்ற இழுபறி அரசுக்குள் நீடித்து வருகிறது.
அரசில் அங்கம் வகிக்கும் ஒருசாரார் அந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதால் சர்வதேச அழுத்தத்திலிருந்து தப்பிவிடலாம், சர்வதேச தலையீட்டைத் தடுக்கலாம் என்றவாறாக அரச தலைமைக்கு ஆலோசனை வழங்கி வருகி றார்கள். குறிப்பாக அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரி அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர ஆகியோர் அரசுக்கு இந்த ஆலோசனையைக் கூட்டாக வழங்கியிருக்கிறார்கள். மறுபுறத்தில் அரசில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ஜி.எல்.பீரிஸ், நிமால் ஸ்ரீபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க ஆகியோர் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது எனவும், எல்லாப் பரிந்துரைகளும் இலங்கைக்கு ஏற்றதாக இல்லை எனவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குக் கால எல்லை தேவை எனவும் பல்வேறுபட்ட கருத்துக்களை முன்வை க்கின்றனர்.
இது தவிர இலங்கை அரசின் ராஜதந்திரிகள் குறிப்பாக மேற்கு நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்கள் இந்தப் பரிந்து ரைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே அழுத்திக் கூறி வருகிறார்கள். பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க இவர்களில் முக்கியமானவர்.
இவை எல்லாவற்றையும்விட ஜனாதிபதியும் தனது பக்கக் கருத்தை மேடைகளில் வெளியிடுகிறார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அதற்கு உள்நாட்டுக்குள்ளேயே தீர்வு எட்டப்பட வேண்டும். அதனை நாம் சரியாகச் செய்வோம். சர்வதேச ஆலோசனைகள் எமக்குத் தேவையில்லை என்று சர்வதேசத்தின் தலையீட்டை அடியோடு நிராகரித்து வருகிறார்.
ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் அரசுக்குள்ளேயே இப்படி எதிரும் புதிருமான கருத்துக்கள் மேலோங்கிக் காணப்படுகின்றன. இது தொடர்பில் ஓர் உறுதியான ஒருமித்த கருத்தை அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை அறிவது என்பது மிகக் கடினமான ஒன்றாகவே இருக்கிறது.
ஆயினும் இந்தத் தீர்மானத்தினால் இலங்கை அரசு மீதான சர்வதேச அழுத்தம், ஐ.நா.வின் கண்காணிப்பு என்பன அதிகரித்து வருகின்றன என்பது மட்டும் உண்மை. இந்த விடயம் அரசுக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அதனை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் அரசு தொடர்ந்தும் தீர்மானத்தை நிராகரிப்பது மட்டுமன்றி சர்வதேச நாடுகளையும் விமர்சித்து வருகிறது. குறிப்பாகத் தீர்மானத்தை கொண்டு வந்த நாடான அமெரிக்கா மீதும் அதனை ஆதரித்து வாக்களித்த இந்தியா மீதும் அரசு கடும் சினம் கொண்டுள்ளது.
அந்த நாடுகளின் அரசுகளை சீற்றம் அடைய வைக்கும் வகையில் இலங்கை அமைச்சர்கள், ராஜதந்திரிகள் எனப் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். தீர்மானத்தில் உள்ள சாதக பாதகங்களைச் சரியாக ஆராயாமல் அரசு இவ்வாறு வாய்க்கு வந்தபடி சர்வதேசத்தைத் திட்டித் தீர்ப்பது இலங்கைக்கே ஆபத்து என வெளிநாட்டு ராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இப்படியான போக்கினால் சர்வதேசத்தை இலங்கை மேலும் பகைத்துக் கொள்ளும் நிலைமையே உண்டாகும் எனவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வாறான செயல்களினால் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருபோதும் வலுவிழந்து போகாது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியும் சரி அமைச்சர்களும் சரி இப்போது தமது உரைகளின்போது அடிக்கடி ஒரே கருத்தை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையைப் பிளவுபடுத்தி இனங்களைப் பிரிக்க சர்வதேசம் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அரசின் இந்தக் கருத்து கொழும்பில் உள்ள பல வெளிநாட்டுத் தூதுவர்களைக் கோபம் அடையவும் இலங்கை மீதான வெறுப்பை மேலும் அதிகரிக்கவும் செய்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையைப் பிளவுபடுத்தி இனங்களைப் பிரிப்பதன் மூலம் சர்வதேசத்துக்கு என்ன இலாபம் இருக்கும் என வெளிநாட்டுத் தூதுவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசு அடிக்கடி இப்படிக் கூறி சர்வதேச சமூகத்தை கேவலப்படுத் துவதாகவும் தூதுவர்களினால் விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அரசு என்னதான் செய்தாலும் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தாமல் எதிர்காலத்தில் சர்வதேசத்திடம் எந்த ஒரு உதவியையும் பெற முடியாத நிலை உருவாகும் என்பதையும் வெளிநாட்டுத் தூதுவர்கள் சுட்டிக்காட்டத் தவறிவில்லை. இந்த விடயம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் தூதுவர்களினால் தெரியப்படுத் தப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. இந்தநிலையில்தான் அரசு இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சை கையில் எடுத்திருக்கிறது. தன்மீது தொடுக்கப்படும் சர்வதேசத்தின் அழுத்தத்தைக் குறைப்பதற்காக கூட்டமைப்புடனான பேச்சு என்ற நாடகத்தை அரசு இப்போது ஆடத் தயாராகிறது.
அரச பேச்சுக் குழுவின் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜயசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்தும் அவ்வாறானதொன்றே. தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான பேச்சை அரசு கூட்டமைப்புடன் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. அதற்கான சமிக்ஞை கூட்டமைப்பின் தலைமையிடம் இருந்து கிடைத்திருக்கிறது என்று ரஜீவ விஜயசிங்க அதிரடிக் கருத்து ஒன்றை திடீரென வெளியிட்டார். அவரின் இந்தக் கூற்று சர்வதேசத்தின் பார்வை யைத் திசை திருப்புவதற்காகவே வெளியிடப்பட்டதாக ராஜதந்திரிகள் கருதுகின்றனர். பேச்சை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு சிறிய முயற்சியும் இல்லாமல் அவர் வெளியிட்ட இந்தக் கருத்தின் பின்னணி இதுதான் என்று சொல்ல ப்படுகிறது. அவரின் கருத்துக்கு அடுத்த நாளே பதிலடி கொடுத்துவிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
"பேச்சை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரை இல்லை. அதற்கான முன் முயற்சிகள் எதனையுமே அரசு மேற்கொள்ளவில்லை. அதுபற்றி எம்முடன் பேசவுமில்லை. பேச்சுத் தடைப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. ஆயினும் இதுவரை பேச்சுத் தொடர்பான எந்தவொரு செய்தியையும் அரசு எமக்கு அனுப்பவில்லை. பேச்சை அரசுதான் இடைநிறுத்திக் கொண்டது. ஆகவே அவர்கள்தான் விட்ட இடத்தில் இருந்து அதனைத் தொட வேண்டும். அதற்கு ஏன் நாங்கள் சமிக்ஞை காட்டவேண்டும். ஏதோ கனவு கண்டவர்கள்போல அவர்கள் கருத்துக்களை வெளியிடுகிறார்கள்'' என்று கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார் சம்பந்தன்.
உண்மையும் அதுதான். பேச்சை நிறுத்தியது அரசுதான். கூட்டமைப்பு அல்ல. ஆகவே பேச்சை மீளத் தொடங்க வேண்டும் என்றால் அரசுதான் அதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே இடம்பெற்ற பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட எதனையும் அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. குறிப்பாக மக்களின் மீள்குடியமர்வு, காணாமற் போனோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய விடயங்களில் அரசு கொடுத்த உறுதி மொழிகளில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அரசுடன் தொடர்ந்த பேசுவது என்பதும் கேள்விக் குறியானதொன்றே. பேச்சில் எட்டப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாத அரசுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதால் பயன் என்ன? அப்படியான பேச்சு கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்றே கூட்டமைப்பு கருதுகிறது.
இதனால் ஏற்கனவே பேச்சில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தி ஒரு நல்லெண்ண சமிக்ஞையை வெளியிட்டால்தான் கூட்டமைப்பு அரசுடனான பேச்சுக்கு நம்பிக்கையுடன் செல்லமுடியும். கூட்டமைப் புடனான பேச்சில் இணக்கம் காணப்பட்ட விடயங்களையே நடைமுறைப்படுத்தாத அரசு ஐ.நா. தீர்மானம் வலியுறுத்தும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எப்படி நடைமுறைப்படுத்து என்று நம்புவது?
இது அரசின் ஒரு நாடகம்தான். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேசத்திடமிருந்து வரும் அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இப்போது கூட்டமைப்புடன் பேச்சு என்ற ஒரு கட்டுக்கதையை அரசு அவிழ்த்துவிட்டிருக்கிறது. அதுதான் உண்மை.
அரசுடன் வலிந்து பேச வேண்டிய தேவை எதுவும் கூட்டமைப்புக்கு இருந்தாலும் அரசு பேசத் தயாராகும்வரை காத்திருப்பதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. ஆகவே இந்த விடயத்தில் கூட்டமைப்பு இனிமேல் கடும்பிடியில்தான் இருக்கப்போகிறது என்பதை தலைவர் சம்பந்தனின் கருத்துக்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன. ஏற்கனவே இணக்கம் கண்ட விடயங்களை நடைமுறைப்படுத்தாமல் தொடர்ந்தும் தீர்மானங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருப்பதால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விடிவு எதுவும் கிடைக்கப்போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
குறிப்பாக மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தமது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உருப்படியான எதையும் அரசு செய்யாமல் பேச்சுக்கு வாருங்கள் என அழைப்பதற்கும் பின்னர் தாம் நினைத்த நேரத்தில் பேச்சைக் கைவிடுவதற்கும் கூட்டமைப்பு ஒன்றும் எடுபிடிக் கட்சியல்ல. அது தமிழர்களின் உரிமைக்காக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்கும் கட்சி. அரசின் தந்திரோபாயங்கள் இனிமேல் கூட்டமைப்பிடம் பலிக்காது. அரசு மீது ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானமும் கூட்டமைப்பின் அரசியல் பயணத்துக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கிறது.
அந்தத் தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேறுவதற்குக் கூட்டமைப்பும் தனது பங்களிப்பைக் குறையின்றிச் செய்திருக்கிறது. ஆதலால் கூட்டமைப்பு இப்போது சர்வதேச சமூகத்தால் மதிக்கப்படும் அரசியல் கட்சி. அதனை அரசு புரிந்துகொண்டு எதிர்காலத்தில் செயற்படவேண்டும். கூட்டமைப்புடன் பேசுவதாக இருந்தால் அதற்கான வழிவகைகளை சரியாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment