சிங்கள ஆட்சியாளர்களை திருப்திப்படுத்தச் செல்லும் இந்தியக் குழு


சிறிலங்காவிற்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்துவிட்டு மறுநாளே சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிற்கு கடிதம் ஒன்றை அவசரம் அவசரமாக எழுதினார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க். உள்நாட்டில் நிலவிய அரசியல் காரணங்களுக்காகத்தான் இவ்வாறான ஒரு முடிவை எடுக்கத் தூண்டியது என்கிற பாணியில் கடிதம் எழுதினார் சிங்க்.இதிலிருந்து மறைமுகமாக இந்தியா சிறிலங்காவிற்கு உதவி வருகிறது என்பதை அறியலாம். மத்திய அமைச்சர் சிதம்பரமோ ஒரு படிமேல் சென்று இந்தியா இராஜதந்திர ரீதியில் வெற்றிகொண்டு விட்டதாக கொக்கரித்தார். சிறிலங்கா அரசின் திட்டங்களுக்கு ஏற்ற வகையிலையேதான் இந்தியா செயற்படுகிறது.இதன் ஒரு வடிவமே இந்திய நாடாளுமன்றக் குழுவின் சிறிலங்காவிற்கான பயணம்.
இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழு ஏப்ரல்16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை சிறிலங்காவில் தங்கி தமிழர்களின் தற்போதைய நிலைமைகளை கவனித்து வருவார்கள் என்று கூறியது இந்திய அரசு. இந்த வாரத்தில் வந்த தகவலோ தமிழர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. சிறிலங்கா செல்லும் குழு சிறிலங்கா அரசு தயாரித்து வைத்துள்ள நிகழ்ச்சிநிரலிற்கு ஏற்றவாறே செயற்படும் என்று இந்திய வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.
வன்னியில் இடம்பெற்ற கோரத் தாண்டவத்தை 2009-இல் பான் கீ மூன் பார்க்கச் சென்றார். சிறிலங்காவின் இராணுவத்தினர் அவருக்கு சித்தரிக்கப்பட்ட ஒரு சில சம்பவங்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். தென் பகுதி திரும்பியதும் அவருக்கு பசுமை நிறைந்த காட்சிகளையும் மனதிற்கு இனிமை கொடுத்த நிகழ்வுகளையுமே சிங்கள அரசு அளித்தது.அடுத்த ஓரிரு நாட்களில் ஐரோப்பாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிங்கள அரசை புகழ்ந்து தள்ளினார் மூன்.
பான் கீ மூன் போன்றே முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் கிளின்டன் மற்றும் புஷ் சுனாமியின் அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளை பார்க்கச் சென்றபோது சிங்களப் பகுதிகளையே அதிகமாகப் பார்த்தார்கள். சுனாமியினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்க்க சிறிலங்கா அரசு இவர்களுக்கு அனுமதி மறுத்தது. இதுபோன்றே இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கும் பல கண்ணுக்கு குளிர்ச்சியான சம்பவங்களையும்இ சிறந்த விருந்தோன்பல்களையும் அளித்து குறித்த குழுவின் நற்சான்றிதலைப் பெற்று உலக அரங்கில் பொய்ப் பிரச்சாரங்களைச் செய்யலாம் என்று கருதுகிறது சிங்கள அரசு.
அனைத்து உரிமைகளையும் இழக்கும் ஈழத் தமிழர்கள்
விடுதலைப்புலிகளுக்கு அஞ்சி ஓடிய சிங்களப் படையினரும்,அவர்களின் உறவினர்களும் நான்காம் கட்ட ஈழப் போருக்குப் பின்னர் தமிழர்களுடன் சண்டித்தனம் செய்து தமிழர்களின் நிலங்களை கொள்ளையடிக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் அதிவேகமாக இடம்பெற்று வருகிறது. எஞ்சியுள்ள ஒரு சில உரிமைகளையும் பறிக்கும் வண்ணம் சிங்களம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது. தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூட பயப்படும் நிலையை உருவாக்கி வருகிறது சிங்களம்.
தமது பூர்வீகக் கிராமங்களில் பகலிலேயே நடமாடத் தயங்குகிறார்கள் தமிழ் மக்கள். தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றும் செயற்பாடுகளும், தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை இடித்துவிட்டு புத்தர் சிலைகளை நிறுவும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழர்களின் சொந்தக் கிராமங்களில் குடியேற உரிமையாளர்களுக்கு அனுமதி மறுப்பதுடன், அக் கிராமங்களில் சிங்களவர்களை குடியேற்றும் பணிகளே மும்மரமாக இடம்பெற்று வருகிறது.
ஹொங்கொங்கைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு சிறிலங்காவில் அதிகரித்து வரும் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து கவலையைத் தெரிவித்துள்ளது. சமீபத்தில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் ஒரு கோரிக்கையை ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு முன்வைத்தது. இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சிறிலங்கா அரசின் ஆள்கடத்தும் தொழில் மிக அசிங்கமான ஓர் அம்சம். ஏப்ரல் 9-ஆம் தேதி பிரேம்குமார் குணரட்ணம் என்பவரை நாடுகடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த நபர் ஏப்ரல் 6-ஆம் தேதி கடத்தப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் சோஷலிஸ கட்சியையும்,மனித உரிமை அமைப்புகளையும் ஆஸ்திரேலிய அரசையும் உடனடியாக செயலில் இறங்கும்படி செய்தது."
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உடனடியாகவே ஆள்கடத்தல் பற்றி எதுவுமே தெரியாது என்று அறிவித்தார். இவருடைய அறிக்கைக்கு முன்னர் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தின் பணிப்பாளர் லஷ்மன் ஹிலுகல்ல கருத்து வெளியிடுகையில், “குணரட்ணம் மற்றும் திமுத்து ஆகியோரை அரசு கடத்துவதற்கான காரணம் எதுவுமே இல்லை என்று தெரிவித்தார். இக் கூற்றுக்களை சுட்டிக்காட்டி தனதறிக்கையில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்தக் கடத்தலில் அரசு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை அரச தரப்பினரின் அறிக்கைகள் தெளிவாக்கியுள்ளது.”
கொலன்னாவ மேயரைக் கடத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்காவின் இராணுவத்தைச் சேர்ந்த கப்டன் தரத்திலான இரண்டு அதிகாரிகளும் வேறு இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள்.சம்பந்தப்பட்டவர்கள் கைதானவர்களால் படம்பிடிக்கப்பட்டு முக்கிய பத்திரிகைகளில் அந்தப் படங்கள் பிரசுரமாகி அவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர். இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைக் கைது செய்யப்போகையில் தவறுதலாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது."
அரசு ஆள்கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளது என்பதை இந்தச் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.சமீப காலத்தில் நடந்துள்ள ஆள்கடத்தல்களின் எண்ணிக்கை 60 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் வரை இவ்வாறான ஆள்கடத்தல்கள் தொடர்பாக நம்பகரமான விசாரணைகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்க முடியாது.”
குணரட்ணம் மற்றும் திருமதி ஆட்டக்கல ஆகியோர் கடத்தப்பட்டது மற்றும் ஏனைய ஆள்கடத்தல்கள் தொடர்பாகவும் உயர்மட்ட விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடுமாறு ஐ.நா. மனித உரிமைய ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கோத்தபாய ராஜபக்ச மிக உயர்ந்த பதவியில் இருப்பது மட்டுமல்ல ஜனாதிபதியின் சகோதரராக இருப்பதால் அவ்வாறான விசாரணை ஒன்று நடப்பது சாத்தியமில்லை என்று கூற வேண்டிய நிலையில் இருக்கின்றோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு.
ஆள்கடத்தல், கற்பழிப்புக்கள், கொலைகள், கொள்ளைகள் என்று பலதரப்பட்ட குற்றவியல் சட்டங்கள் தொடர்ந்தும் சிறிலங்காவில் இடம்பெற்று வருகிறது.உலகச் சட்டங்களை மதிக்க வேண்டிய அரசே இதுபோன்ற மனித உரிமை மீறல்களை செய்து வருகிறது.தமிழர்களின் பண்பாட்டு தலைநகரான யாழ்ப்பாணத்தில் மதுபோதைக்கு பலர் அடிமையாகி வருகிறார்கள் என்று பத்திரிகைகளில் தினமும் செய்திகள் வருகிறது.
சிங்கள இராணுவமும் அதன் ஒட்டுக்குழுக்களும் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகளிடையே போதைப் பொருட்களை விற்று தொழில் செய்கிறார்கள். போதைக்கு அடிமையான பின்னர் கடத்திச் சென்று தமிழர் பண்பாட்டிற்கு ஒவ்வாத செயற்பாடுகளை செய்ய ஊக்கிவிக்கப்படுகிறார்கள். இப்படியான சம்பவங்கள் இடம்பெறும் பிரதேசங்களில் வாழும் மக்களை சந்திப்பதைவிடுத்து சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பயணம் செய்தால் எப்படி இந்திய நாடாளுமன்றக் குழுவினால் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர முடியும் என்பதே கேள்வி!
சிறிலங்காவிற்காக போராடும் இந்தியா
இந்தியக் குடிமக்களாக வாழும் பல கோடித் தமிழ் மக்களின் நெஞ்சங்களை வதைக்கும் விதமாக செயற்படுகிறது இந்திய மத்திய அரசு. தமது உறவுகள் ஈழத்தில் வதைபடுவதைக் கண்டு துடிதுடித்துப் போயிருக்கிறார்கள் தமிழக மக்கள். இவர்ளைப் பிரதிபலிக்கும் முகமாகவே தமிழக முதல்வரும் பல செயற்பாடுகளை செய்கிறார். இவ்வகையில், இந்தியக் குழுவின் சிறிலங்காவிற்கான பயணம் வெறும் கண்துடைப்பு நாடகமென்றும், சிங்கள அரசிற்கு நற்பெயரை உலக அரங்கில் பெற்றுத்தரும் வகையிலேயே மத்திய அரசு செயற்படுகிறது என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
ஆரம்பத்தில் இக்குழுவில் அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் என்று கூறிவிட்டு, இறுதி நேரத்தில் இக்குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது என்று கூறிவிட்டார் ஜெயலலிதா. அதற்கான காரணத்தையும் தெளிவாகக் கூறிவிட்டார். இது குறித்து ஏப்ரல் 11-ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்இ அதில் அவர் தெரிவிக்கையில்: “இலங்கையில்2009-ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின்போது இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டில் மறு குடியமர்த்துவதற்காகவும், மறுவாழ்வு அளிப்பதற்காகவும் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, இந்த மாதம் 16-ஆம் தேதி முதல்21-ஆம் தேதி வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்து,அதில் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அ.தி.மு.க.சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டுவை அனுப்ப நான் முடிவு செய்தேன்."
இலங்கையில் தமிழர்கள், பெரும்பான்மையினரான சிங்களவர்களுக்கு இணையாக முழு உரிமை பெற்ற குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்பதிலும், போரினால் இடம்பெயர நேர்ந்த தமிழர்களை அவர்கள் முன்னர் வசித்த இடத்திலேயே மீள்குடியமர்த்த வேண்டும் என்பதிலும் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது.எனவே, இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் இலங்கைப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும், அவர்களோடு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் கலந்துரையாடினால் அது தமிழர்களுக்கு ஆறுதலாகவும், உண்மை நிலவரங்களை தெரிந்துகொள்ள உதவும் என்றும் நம்பினேன்.அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மறுவாழ்வு நட வடிக்கைகளை பார்வையிட்டு, அவற்றில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் அது உதவும் என்ற எண்ணத்தில் தான் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்ப நான் சம்மதித்தேன்."
இந்தச் சூழ்நிலையில், இலங்கை பயணம் குறித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அது, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாக கலந்துரையாடவும், அவர்களின் உள்ளக் குமுறல்களை கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாததாக அமைந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ச உட்பட சிங்கள அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கூட்டங்கள் மற்றும் விருந்துகள் ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.”
இந்த சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலைப் பார்க்கும் போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப் பயணம் போலவும், இது இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து இந்தியாவில் எற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போலவும்தான் தெரிகிறது. இது மட்டுமல்லாமல், இக்குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைகளில் ஆர்வம் உடையவர்கள், சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் யாரும் இடம் பெறாதது எனது ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது."
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ராஜபக்ச அரசு தடுத்து நிறுத்தாததாலும்,தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக சர்வதேச அணுமின் முகமையிடம் இலங்கை முறையிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதன் அடிப்படையிலும், இலங்கைத் தமிழர்கள் மீதான அணுகுமுறையில் இலங்கை அரசிடம் எந்தவிதமான மாற்றமும் தெரியவராததாலும்,இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள்குடியமர்த்தல் ஆகியவை பற்றியும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் நேரில் காணும் யதார்த்தங்களை பற்றியும் இலங்கை அதிபர் ராஜபக்சாவுடன் விவாதம் செய்ய வாய்ப்பு தரப்படாமல் உள்ளது. எனவே, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிலிருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்கிறது என்பதையும், இந்தக் கூட்டுக் குழுவில் அ.தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு பங்கேற்கமாட்டார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் கருத்துக்கள் அனைத்துமே தமிழக மக்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. தமிழக மக்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் செயற்படும் சிங்கள அரசுடன் எப்படி விருந்து உண்ணலாம் என்கிற கேள்வி நியாயமானதே.பல்லாயிரம் தமிழ் மக்களை அழித்த இரத்தம் படிந்த கரங்களை எப்படி தொடலாம் என்கிற ஆதங்கம் நியாயமானதே. விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையைப் பெற்றுத்தரும் வகையில் செயற்படுமாறு தொடர்ந்தும் உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு தனது நாடு ஒருபோதும் அடிபணியாது என்று கூறிவருகிறார் மகிந்த ராஜபக்ச. இப்படிப்பட்ட அரசை தனிமைப்படுத்துவதை விடுத்து அதனுடன் நேசக்கரம் கொள்வதென்பது எந்த விதத்தில் நியாயம் என்கிற கேள்வி நியாயமானதே.
வார்த்தைக்கு வார்த்தை இலங்கை என்று கூறும் ஜெயலலிதா,தமிழர்களின் தாயகத்தை (வடக்குக் கிழக்கு பகுதிகள்) தமிழீழம் என்று அழைத்தால் உலகத்தமிழர்களுக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கும். சிங்கள அரசு தமிழீழத் தமிழர்களுக்கு நீதியை வழங்காது என்பதனை ஏற்றுக் கொண்டுள்ள ஜெயலலிதா, தமிழீழமே இலங்கை என்கிற தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரே தீர்வாக அமையும் என்பதனை ஏற்றுக்கொண்டு திராவிடக் கழகத் தலைவர் வீரமணி போன்ற தலைவர்களின் பின்னால் தமிழீழப் பயணத்திற்கான அறவழிப் போராட்டத்தை தமிழகத்தில் ஆரம்பிப்பதே சிறப்பான அணுகுமுறையாக இருக்கும். 
சிறிலங்கா அரசை திருப்திப்படுத்தவே இந்திய நாடாளுமன்றக் குழு செல்கிறதே தவிர, தமிழீழ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயப் போகவில்லை என்பது நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. இறுதி நேரத்திலாவது திடமான முடிவை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி கூற உலகத் தமிழர்கள் கடமைப்பட்டுள்ளார்கள். தமிழக காங்கிரஸ் மற்றும் தி.மு.காவினர் ஜெயலலிதா எடுத்த முடிவை தாமும் எடுத்து சிறிலங்கா செல்லாமல் இருந்தால் தமிழினத்தின் ஒற்றுமையை சிங்களவர்களுக்கும், ஹிந்திக்காரர்களுக்கும் காண்பிக்க உதவியாக இருக்கும் என்றால் மிகையாகாது. இதனையே ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
அனலை நிதிஸ் ச. குமாரன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. கல்லறைப்பூக்கள்April 14, 2012 at 6:33 PM

    உண்மையில் புரட்சித்தலைவி தான், தமிழக அரசியலில் எந்தவித இலாபநோக்குமின்றி மனிதாபிமான அடிப்படையில் தீர்க்கமான முடிவுடன் செயல்படுகிறார்; எம் ஜீ ஆருக்குபின் தமிழ்மக்களுக்கு கிடைத்தகொடை; நீங்கள் கூறிய தி.க தலைவர் வீர்மணி&கோ ; அரசியல் சந்தர்ப்பவாதியாகவும்,பிழைப்புவாதியாகவும் டிரஸ்டை இலாபநோக்கில் நடந்திக்கொண்டிருப்பவர்;இவரும் தமிழினத்தலைவர் என்று தனக்கு தானே கூறிக்கொண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்க்கு துணைபோன துரோகிகளின் கூட்டத்தை சேர்ந்தவர் தான், ஏன் அப்பழுக்கற்ற தமிழ்தேசிய தலைவர் நெடுமாறன் தங்கள் பார்வையில் படவில்லையா????

    ReplyDelete