தேர்தல் பிரசாரங்களில் மூட்டப்படும் இனவாதத் தீ

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பலதரப்பட்ட யுக்திகளை கையாளும் முறைமை அரசியலில் சர்வ சாதாரணமானது. அதிலும் இனவாதம் பேசி வாக்குத் தேடும் அநியாயம் அரங்கேறுவது கொடுமையிலும் கொடுமை. இவ்வாறு யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தித்திட்டங்களின் முன்மொழிவுகள், சம்பள உயர்வுகள், வரிச்சலுகைகள் என்பன இவற்றில் முதன்மையானவை. ஆனால் இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் அடிப்படை மனித உரிமைகளை வழங்குவது கூட தேர்தல் வாக்குறுதிகளாக அமைந்து விடுகின்றன.

பேரினவாத ஆட்சியில் சிறுபான்மை இனம் அடக்கப்படுவதே இத்தகைய வாக்குறுதிகள் வழங்கப்படுவதற்கு அடிப்படைக் காரணமாகும். இருந்ததை பறித்தெடுத்து மீளவும் தருவது கூட, தேர்தலில் வாக்குத் திரட்டும் நோக்கமாயின் இலங்கையின் இன ஒற்றுமை எந்தளவில் உள்ளதென்பதை ஊகிப்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையிரா. அதிலும் இனவாதம் பேசி வாக்குத் தேடும் அநியாயம் அரங்கேறுவது கொடுமையிலும் கொடுமை.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், ஜெனரல் சரத் பொன்சேகாவும் அதி தீவிரம் காட்டினர். இறுதியில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதென்ற முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது. இந்த முடிவை எடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பட்டபாடு தனி அத்தியாயமாக எழுதப்பட வேண்டியது.

எனவே அதனை பற்றி இவ்விடத்தில் விபரியாமல் விடுவது சாலச் சிறப்புடையது. எனினும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு கூட, பத்துக்கு எட்டு என்ற நிலையிலேயே எடுக்கப்பட்டதாகும். இந்த முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுப்பதற்கு முன்னதாக அந்த கூட்டமைப்பின் கூட்டு கட்சிகள் தனிக்கட்சிகளாகவும், தனித் தனி உறுப்பினர்களாகவும் பிரிந்து நின்று ஜனாதிபதித் தேர்தல் பற்றிய முடிவுகளை அறிவித்தனர்.

தமிழ் மக்களின் நலன் தொடர்பில் எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தங்களின் சுயலாப தேடலுடன் அல்லது யாருக்கேனும் மறைமுகமாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இவர்கள் இப்படி முடிவெடுத்தார்கள் என தமிழ் மக்கள் பேசும் அளவிற்கு அவர்களின் முடிவுகள் அமைந்தன.

அவர்கள் எடுத்த முடிவுக்காக வருந்த வேண்டிய காலம் விரைவில் உண்டென்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் தமிழ்மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறி ஆபத்துக்களை சம்பாதிக்க மறுப்பவர்களே அன்றி அவர்கள் அரசியலிலோ அன்றி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடிகளை பிடித்து அறிவதிலோ ஆற்றல் குறைந்தவர்கள் அல்ல. எனவே அவர்கள் தங்கள் வாக்குகளை சரியான இடத்தில் பிரயோகிப்பார்கள் என்பது நிறுத்திட்டமான உண்மை.

இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு அதிகமான உரிமைகளை வழங்கிவிடும் எனத் தென்பகுதியில் செய்யப்படும் விசமத்தனமான பிரசாரம், சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும் பிரித்தாளும் நோக்குடையதுடன் இத்தகையவர்கள் எதிர்காலத்திலும் இனவாதத் தீயை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்க பின் நிற்கமாட்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.

எதுவாயினும் தமிழ், சிங்கள மக்கள் இலங்கையின் எதிர்கால ஒற்றுமை பற்றி சிந்திப்பதே நாட்டின் எதிர்கால அமைதிக்கு ஆரோக்கியமானதாக அமையும்.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment