16.01.2010
ஊடக அறிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அதன் பின்பு ஊடகங்களில் இவ் ஆதரவு எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது என்பதையிட்டு பலவிதமான ஊகங்கள் எழுந்துள்ளன. இவ்விடயம் தொடர்பாக பல உண்மையற்ற பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன. எந்த அடிப்படையில் இவ் ஆதரவு வழங்கப்படுகின்றது என்பதைப் பற்றி நான் எந்தவொரு ஊடகத்திற்கும் எவ்விதமான பேட்டியும் கொடுக்கவில்லை.
2010 ஆம் ஆண்டு தை மாதம் ஆறாம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டிலும் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் மீண்டும் தனது ஆட்சிக் காலத்தை நீடிப்பதற்கு அவர் மக்களிடம் கேட்டிருக்கும் ஆணையை ஏன் ஆதரிக்க முடியாது என்பதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளது.
குறிப்பிட்ட அறிக்கையிலிருந்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம எதிர் வேட்பாளருமாகிய, ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான காரணம் தெளிவாகின்றது. இருந்த பொழுதிலும் கீழ்க்காணும் தெளிவுபடுத்தலை நான் முன்வைக்க விரும்புகின்றேன்.
தை மாதம் 6ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் கூறிய பிரகாரம் நாங்கள் இரண்டு முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அவர்களுடன் தமிழ் மக்களுடைய உடனடித் தேவைகள் சம்பந்தமாகவும், வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களினுடைய – தமிழ் மக்களுடையதும், முஸ்லிம் மக்களுடையதுமான அரசியல் தீர்வு தொடர்பாகவும் நாம் பேசி இருக்கின்றோம்.
நீண்ட காலமாக இவ்விடயம் சம்பந்தமாக நாட்டிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகள் விசேடமாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இடது சாரிக் கட்சிகள் போன்றவைகளின் விரிவான பேச்சு வார்த்தைகள் சகலதும் எந்த ஒர் அரசியல் தீர்வும் ஒருமித்த, பிரிக்கப்படாத இலங்கைக்குள் அமைய வேண்டும் என்ற அடிப்படையி;ல் தான் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நிலைப்பாட்டிற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஏனைய தமிழ் கட்சிகளின் கூட்டணியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்விடயம் சம்பந்தமாக 2006 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஆந் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்ட சர்வ கட்சி பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினதும், இக் குழுவிற்கு உதவ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினதும், ஆரம்பக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் கூறப்பட்டிருக்கும் சில விடயங்களை குறிப்பிட வேண்டியது எனது கடமையெனக் கருதுகின்றேன்.
2006 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆந் திகதி டெயிலி நிய+ஸ் பத்திகையில் ஜனாதிபதி உரை முழுமையாக இடம்பெற்றிருந்தது. குறிப்பிடட் தலைப்புக்களின் கீழ் ஒர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைப்பிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் தெளிவாகக் கூறிய கருத்துக்களை நான் சரிவரக் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஐக்கியம், ஆட்புல ஓற்றுமைப்பாடு, இறையாண்மை
எமது நாட்டினுடைய ஐக்கியம், ஆட்புல ஒற்றுமைப்பாடு, இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். இதில் பேரம் பேசுவதற்கு இடமில்லை. எமது இந்த நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் பரவலாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது. விசேடமாக இந்தியாவும் இணைத் தலைமை நாடுகளும் நாட்டினுடைய பிரிவினையை முற்றாக நிராகரித்துள்ளன. பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஒரு நியாயமான தீhவைக் கட்டி எழுப்புவதே எமது குறிக்கோளாக அமைய வேண்டும். தேசியப் பிரச்சினைக்கு இங்கே கூடியிருக்கும் ஒவ்வொரு கட்சியும் தமது சொந்த தீர்வை வைத்திருக்கும். நாங்கள் கூடிப் பேசி, வேறுபட்ட கருத்துக்களில் இருந்து எமது நாட்டிற்கு பொருத்தமான வடிவத்தை தேர்ந்தெடுப்போம். பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் தொடக்கம் முன்னர் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் எம்மால் ஆராயப்பட் வேண்டும் ஏனைய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் தக்க பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். நான் நாட்டின் மீது ஒரு தீர்வைத் திணிக்கமாட்டேன். ஆனால் உங்களுடைய ஆலோசனைகளின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணுவீர்கள்”.
மேலும் மக்களிற்கு மக்களால் அதிகாரப் பகிர்வு என்ற தலைப்பின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியது பின்வருமாறு.
“தாங்கள் வாழும் பிரதேசங்களில் மக்கள் தமது தலைவிதியை தாமே பொறுப்பெடுத்து தமது அரசியல், பொருளாதார சூழலை அவர்களே தீர்மானிக்க வேண்டும். சமத்துவமற்ற வளங்கள் வழங்கப்படுவதும், மத்தியில் முடிவுகள் எடுக்கப்படுவதும், கணிசமான காலமாக ஒரு பிரச்சினையாக அமைந்திருக்கின்றன. மேலும் மத்தியின் மீது கூடுதலான நம்பிக்கை வைக்காமல் அதிகாரப் பகிர்வு தனித்துவத்தையும் பாதுகாப்பையும் சமூக, பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம். மொத்தமாக எந்த ஒரு தீர்வும் மக்கள் தங்கள் தலைவிதியை தாமே பொறுப்பெடுப்பதற்கு, அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமான தேவையாகும். உலகத்தின் பல பாகங்களில் இது பரீட்சிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எமது அயல் நாடான இந்தியா உள்ளடங்கலாக உலகத்தின் பல உதாரணங்களைப் படித்து இலங்கைக்கான அரசியல் சாசன கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.”
மேலும் முடிவிற்கு வரும் சில சிந்தனைகள் என்ற தலைப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியது பின்வருமாறு
“மோதலின் பின்னணிக் காரணிகளை மனதில் கொண்டு, நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல் எந்த ஒர் அரசியல் தீர்வும், அதி உயர்ந்த அதிகாரப்; பகிர்வை அடையக் கூடியதாக அமைய வேண்டும்”
ஆனால் துரதிஸ்டவசமாக இந்த ஆலோசனைகளில் பங்கு பற்றிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் கூறப்பட்ட மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில் தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் எனது பேச்சு வார்த்தைகள் அமைந்திருந்தன.
ஒரே விடயங்கள் சம்பந்தமாகத்தான் எனது பேச்சு வார்த்தைகள் இரு பிரதான வேட்பாளர்களுடனும் நடைபெற்றது. இந்த விடயங்களில் எதுவும் நாட்டினுடைய பிரிவினைக்கு வழிவகுக்க கூடியவை எனக் கூற முடியாது. குறுகிய அரசியல் இலாபத்திற்காக உண்மைகளை திரித்துக் கூறி இனவாதக் கருத்துக்களை பரப்பியதனால் நாட்டு மக்கள் போதிய துன்பங்களை அனுபவித்து விட்டார்கள், அவர்கள் கௌரமான நிரந்தரமான சமாதானத்திற்கு உரித்துடையவர்கள். யுத்தத்தின் முடிவு அவ்விதமான ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான தன்நலம் கொண்ட, உண்மைக்கு புறம்பான பிரசாரத்தினால் நாட்டு மக்கள் ஏமாற்றப்படக் கூடாதென நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இரா.சம்பந்தன்
பாராளுமன்ற குழுத் தலைவர்
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி.
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)
0 கருத்துரைகள் :
Post a Comment