வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவரும் இராணுவ மயமாக்கல் மற்றும் காணி அபகரிப்பு போன்றவற்றிற்கு இடமளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் தயாரில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
ஒரு நாட்டில் அவசரகாலச் சட்டம் அசாதாரண சூழ்நிலையில்தான் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். சாதாரண சட்டம்தான் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டும். அவசரகாலச்சட்டம் இனியும் ஏன் நீடிக்கப்படுகிறது என்ற காரணத்தை இங்கு விவாதிப்பவர்கள் கூறுவதில்லை.
தற்போது சாதாரண சட்டம் பின்தள்ளப் படுகின்றது. அவசரகாலச்சட்டம்தான் நாட்டை ஆட்சி செய்கிறது. இதனால் வன்முறை அதிகரிக்கின்றது. தமிழ் பேசும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகள் முற்றாக மீறப்படுகின்றன. உலகில் எந்த நாட்டிலும் அவசரகாலச்சட்டம் இவ்வாறு நீடிக்கப்படுவதில்லை. இந்த நாட்டில்தான் அது மாதக்கணக்கில் நீடிக்கப்படுகின்றது.
அவசரகாலத்தை நீடித்துக்கொண்டு நீதியான தேர்தல் நடத்த முடியுமா?
இந்த அவசரகாலச்சட்டத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியுமா? இது மோசடிமிக்க தேர்தலாக அமையும். தென்ஆபிரிக்கா,இந்தியா போன்ற நாடுகளில் இம்மாதிரியான சட்டங்கள் நிறைவேற்றுவதென்றால் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. ஆனால், இலங்கையில் மாத்திரம் இச்சட்டம் பல மாதங்களாக நீடிக்கப்படுகின்றது. இதன்மூலம் அரசு பக்கச்சார்பாகச் செயற்படுகிறது. இச்சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுவதால் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துக் குறித்து எவரும் பேசுவதில்லை.
கிழக்கின் சிறுபான்மை இன மக்களின் நிலம் அபகரிப்பு
இந்த மாதிரியானதொரு சூழ்நிலையில்தான் கிழக்கில் சிறுபான்மை இன மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. சம்பூரில் உப்பளம் ஒன்றை அமைப்பதற்காக ஆயிரத்து 805 ஏக்கர் நிலம் அபகரிக்கப்படுகின்றது. இதன்மூலம் மூவின மக்களும் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் இதனால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் பேசினேன். பஸில் ராஜபக்ஷவின் கவனத்திற்கும் கொண்டு வந்தேன். ஆனால், அதை அவர் மறுத்துள்ளார். மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்று பஸில் கூறினார். இருப்பினும், மிகவும் இரகசியமான முறையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அதேபோல், வன்னியில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. பாரியதோர் இராணுவ மயமாக்கல் அங்கு இடம்பெறுகின்றது.
தமிழ் மக்களை இந்த அரசு சமமாக நடத்தவில்லை என்று தமிழ் மக்கள் உணர்கின்றனர். தமிழ்ப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் இவ்வாறான இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு போன்றவற்றை இனிமேலும் அனுமதிக்க நாம் தயாரில்லை என்றார்.
0 கருத்துரைகள் :
Post a Comment