மனித உரிமை மீறல்களும் தனிமனித கடப்பாடுகளும்

மனித உரிமை மீறல்கள் என ஆங்காங்கே செய்திகள் வெளியாகின்றன என்ற போதும் நம்மில் பலருக்கு அது குறித்ததான தகவல்கள் பூரணமாக தெரிந்திருப்பதில்லை. சிலர் அதனை தெரிந்து கொள்ள விரும்புபவர்களாகவும் இல்லை.

இப்படியான ஒரு நிலையில் நமது சமூகம் காலத்தை கடந்து கொண்டிருக்கும் போது அசம்பாவிதங்களின் அதிகரிப்பில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழும் காலத்தின் ஒவ்வொரு நொடிப்பொழுதின் மகத்துவத்தையும் உணர்ந்து செயற்படும் போது மாத்திரமே அகிம்சையோடானதொரு உலகை காண முடியும்.

மனித உரிமை என நாம் எதனை கூறுகின்றோம் யாராலும் உருவாக்கப்படாததும், எவராலும் வழங்கப்படாததுமான மனிதனுக்கு கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். ஒருவரின் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை. அத்துமீறிய பறிப்புக்கள் தண்டனைக்குறிய குற்றம் என என்ன தான் வார்த்தைக்கு வார்த்தை வாய் கிழிய பேசினாலும், இன்றைக்கு இலங்கை சுதந்திரமடைந்து 61 வருடங்களின் பூர்த்தியைக் கண்டுள்ளதாக சொல்லப்பட்டாலும் இங்கே தனி மனித சுதந்திரமென்பது எந்த நிலையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்ற போது நடந்த அட்டுழியங்கள்,மனிதப் பேரழிவுகள், சொத்துப் பறிப்பு, படுகொலைகள் மற்றும் கற்பழிப்புகளின் பின்னராக ஐக்கிய நாடுகள் சபையின் கலந்துரையாடலில் தீர்வாக அறிவிக்கப்பட்டதே மனித உரிமைப் பிரகடனம். அதற்கமைய வருடா வருடம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. ஆனாலும் அதே அட்டூழியங்கள் இன்றும் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் சமத்துவமற்ற நிலை, வழக்கு ஆதாரம் இல்லாமல் கைது செய்தல், காணாமல் போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை என வெவ்வேறு உருவில் அவதாரமெடுத்துள்ளன.

இவ்வாறாக மனித உரிமைகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் அசம்பாவிதங்களின் தொடர்ச்சிக்கான பிரதான காரணம் யாதென ஆராயும் போது எமக்கு தெளிவாக தெரிய வருவது, இவ்வமைப்பின் உறுப்புரைகள் குறித்தும், சட்ட திட்டங்கள் குறித்ததுமான போதிய அறிவு மக்களுக்கின்மையே. இது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலமாக மாத்திரமே இதற்கான தீர்வொன்றினை காண முடியும்.

இதோ 1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'சர்வதேச மனித உரிமைகள் சாசனம்' 30 உறுப்புரைகள்.

1. சமத்துவ உரிமை சகல மனிதர்களும் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.

2. ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கும் உரிமை இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.

3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் அவரவர் விருப்பத்திற்கமைய வாழும் உரிமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு.

4. எந்த ஒரு தனி மனிதனையும் அடிமையாக நடத்தும் உரிமை எவருக்கும் இல்லை.

5. சித்திரவதை, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பதற்கான உரிமை.

6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை.

7. அனைவருக்கும் சமமான சட்டத்தின் பாதுகாப்பு.

8. ஒருவரின் உரிமை பறிக்கப்படும் போது சட்டத்தை நாடும் உரிமை.

9. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.

10. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைத்தல், நாடு கடத்தலுக்கு யாருக்கும் உரிமை இல்லை.

11. எந்த நபருக்கும் நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை.

12. குற்றஞ்சாட்டப்படுவோர், நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.

13. ஒருவரின் தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் யாரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.

14. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.

15. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.

16. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.

17. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை.

18. எந்த ஆணோ பெண்ணோ தான் விரும்பியவரை திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.

19. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

20. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் உண்டு.

21. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.

22. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.

23. அரசியல் உரிமை அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.

24. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை.

25. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.

26. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.

27. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.

28. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.

29. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.

30. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.

மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது அனைவராலும் மிதிக்கப்படுவது தடுக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு தனி மனிதனும் சட்டத்தை தன் கரங்களில் எடுத்துக் கொள்ளும் உரிமையை கொண்டவனல்ல என்பதும் உணர்த்தப்பட வேண்டும். எனவே முழு உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்சத்தில் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி வளமானதொரு எதிர்காலத்தை அடையலாம். என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் என்று ஒவ்வொருவரும் மனிதமுள்ள மனிதராய் மாறுகின்றார்களோ அன்று வரை இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதென்பது கடினமான விடயமே.

-சம்யுக்தா
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment