தேசியத்தலைவரைப்பற்றி ...........!-05

சண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள்.  இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையின் வடிவங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டாளர்கள். தங்களுக்குத் தரப்படும் திட்டங்களை மெருகூட்டி மேன்மைப்படுத்தி செயற்படுத்துவதற்கும் பதில்சொல்வதற்கும் பொறுப்பு வாய்ந்தவர்கள். தலைவரின் திட்டத்தின் விளைவான வெற்றிச் செய்தியை சொல்லக்கடப்பாடுடையவர்கள். சண்டைக்களங்களில் தனித்துவமான ஆளுமையை வெளிப்படுத்திய தளபதிகளும் வீரர்களும் இருக்கின்றார்கள். எதுவாகினும் பிரபாகரன் என்ற ஒரு தனிவீரனின் ஆளுமை அச்சில்தான் அவர்களது வீரமும் , ஆளுமையும் பதியப்படுகின்றது.

ஈழவிடுதலைப்போராட்டத்தில் பலபோராளிகள் தங்களை இணைத்துக்கொண்டதும், பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை போராட்டத்திற்காக ஒப்படைத்ததும் தலைவர் பிரபாகரன் மீதான  நம்பிக்கையின் வெளிப்பாடுதான். தனது  பொறுப்பு என்ன?  என்பதையும் தனது பொறுப்பை அடைய என்னென்ன செய்யவேண்டும்? என்பதையும் தெளிவாக உணர்ந்து செயற்பட்டவர்.  அவர் விடுதலைக்கான ஒவ்வொரு கட்டங்களைப்பற்றிய சிந்தனைகளை திட்டங்களாக்கி அதைச் செய்யக்கூடிய பொறுப்பானவர்களை இனங்கண்டு செயற்படுத்தியவர்.

தலைவரின் சிந்தனையில் ஒரு தீர்மானம் அல்லது திட்டம் குறுகிய காலத்தில் உதித்ததாகவும் இருக்கலாம். நீண்ட காலமாக அவரது மனதில் உருவாகிக் கொண்டிருந்ததாகவும் இருக்கலாம். தனது சிந்தனைகளை மனதிற்குள் வைத்து பொருத்தமான நேரத்தில் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தும் திறன் எல்லோரையும் விட மேலோங்கியே இருக்கும்.

எத்தனையோ சம்பவங்கள், சண்டைகள் அவரது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால் ஒரு மாபெரும் சமரை எப்படி வழிநடத்தினார் என்பதற்குச் சான்றாக, அவருடைய தலைமைத்துவத்தின் மகுடமாக அமைந்தது முகமாலைப் பெட்டிச்சண்டை.

முகமாலை பெட்டிச்சண்டையென்பது விடுதலைப்புலிகளின்  அதிஉச்ச வீரத்தையும் சண்டையிடும் ஆற்றலையும் அதிசிறந்த திட்டமிலையும் வெளிப்படுத்திய சமர். இதனால்தான் இந்தச்சமரானது சமர்களுக்கெல்லாம் தாய்ச் சமராக விளங்குகின்றது. உலக இராணுவ வரலாற்றில் வியத்தகு சண்டைகளைப்பற்றி உரைக்கத் தலைப்படின்  ‘இத்தாவில் பெட்டிச்சண்டை’ முதன்மையான சண்டையாக பதியப்படும்.

முகமாலைப் பெட்டிச்சண்டை போன்றதொரு பாரிய ஊடறுப்பு நடவடிக்கையைச் செய்வதற்கான சாத்தியப்பாட்டை தலைவர் பரீட்சித்துப் பார்த்தது 1998 ம் ஆண்டு நடைபெற்ற கிளிநொச்சி சண்டையில்தான். இந்தச்சண்டையில் தளபதி பால்ராஜ் அவர்கள் தலைமையில் ஒரு ஊடறுப்பு நடவடிக்கையைச் செய்திருந்தார். கிளிநொச்சியின் வெற்றியைத் தீர்மானித்ததில் பிரதான பங்கை வகித்தது இந்த ஊடறுப்பு நடவடிக்கை. ஆனையிறவில் இருந்து கிடைக்கும் உதவியை தடுக்கும் நோக்குடன் மறிப்பு(cutout) கிளிநொச்சியில் இருந்து பின்வாங்கும் அணியை நிறுத்த தடுப்பு(cutoff) என இராணுவத்தின் பிரதேசத்திற்குள் ஊடுருவி நிலையமைத்திருந்து இராணுவத்தை பிரித்து வைத்திருந்ததே ஊடறுப்புத் தந்திரோபாயம். இந்த ஊடறுப்புத்தான் கிளிநொச்சி சண்டையை வெற்றியடைய வைத்ததில் பிரதான பங்கை வளங்கியது.

சண்டை முடிந்ததும், தலைவர் திட்டமிட்டுத் தந்த முக்கிய சண்டையை வெற்றிகரமாக முடித்துள்ளேன் என்ற திருப்தியில் தளபதி பால்ராஜ் அவர்கள் தலைவரைச் சந்தித்தபோது கைகுடுத்து வாழ்த்திய தலைவர் ‘இந்தச்சண்டை உனக்கு ஒரு பரீட்சார்த்த சண்டைதான், உனக்கான சண்டை இதில்லை பால்ராஜ்’ எனக் கூறியதாகச் சொல்லிய தளபதி, ‘நான் ஏதோ நினைச்சுக்கொண்டு போக, அண்ணை   இப்படிச் சொல்லிட்டார். அவர் பெரியளவில்  திட்டம் ஒன்றை மனதிற்குள் வைத்திருக்கின்றார். எங்க எப்ப என்று தெரியவில்லை. ஆனால் அந்தச் சண்டையை  தலைவர் எனக்குத்தான் தருவார். எனவே இதைவிடக் கடுமையானதொரு சண்டையை பிடிக்க தயாராக இருக்கவேண்டும்’ எனப்பகிர்ந்து கொண்டார்.

ஓயாத அலைகள் சண்டையின் ஒரு கட்டமாக, 2000 இல் மீண்டும் ஆனையிறவை வெற்றி கொள்வதற்கான தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளை தலைவர் முன்னெடுத்தார். தளபதி பால்ராஜ் அண்ணையை அழைத்த தலைவர், ஆனையிறவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் தளபதி பால்ராஜ் அண்ணைக்கான திட்டத்தைக் கொடுத்து அதற்குரிய வேவு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கூறினார்.  தலைவர் வழங்கிய திட்டத்தின் படி ஆனையிறவுத் தளம் மீதான தாக்குதலை தளபதி தீபன் முன்னெடுக்க, பால்ராஜ் அண்ணை புதுக்காட்டுச்சந்திக்கும் பளைக்குமிடையில் ஊடறுத்து நிற்கவேண்டும்.

தலைவரின் திட்டத்திற்கமைய இதற்கான வேவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வேவு அணியினரும் அப்பகுதிக்குள் சென்று தடுப்பு, மறிப்பு செய்வதற்கான சாதகமான பகுதிகள் எவை என ஆராய்ந்தனர். சில இடங்களில் இராணுவத்துடன் முட்டுப்பட வேண்டி இருந்தாலும்  தங்களது வேவு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தனர். இறுதியில்  இராணுவ முகாங்களின் அமைவிடங்கள், அப்பகுதியில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த தொடர் சண்டைக்கான தயார்ப்படுத்தல்கள் போன்றவற்றை ஆராய்ந்து பார்த்து, புதுக்காட்டுச் சந்திக்கும் பளைக்கும் இடையில் ஊடறுப்பு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர். அதேவேளை பளைக்கும் கொடிகாமத்திற்கும் இடையிலான இராணுவத்தின் நிலவரங்கள் தொடர்பான நிலைப்பாடுகளையும் பார்த்துவிட்டு வந்தனர் வேவு அணியினர்.

ஊடறுப்பு செய்வதற்கு கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ள இராணுவத்தின் அமைவிடங்கள் செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான தகவல்களைக் கொடுத்து, புதுக்காட்டுச்சந்திக்கும் பளைக்கும் இடையில் ஊடறுப்பது சாத்தியமில்லை என்பதற்கான காரணத்தையும் தெரிவித்த வேவுப் பொறுப்பாளர், பளைக்கும் கொடிகாமத்திற்கும் இடையில் இராணுவத்தின் பாதுகாப்பு நிலவரம் பலவீனமாக உள்ளது என்ற கருத்தையும் தளபதி பால்ராஜ் அண்ணையிடம் தெரியப்படுத்தினார். தளபதி பால்ராஜ் அண்ணை அனைத்துத் தகவல்களையும் தலைவருக்குத் தெரியப்படுத்தினார். அதை உன்னிப்பாக ஆராய்ந்த தலைவர் ‘சண்டை பிடிக்க வாய்ப்பாயிருக்கின்ற இடத்திலேயே மறிப்பு (cutout) தடுப்பு (cutoff) க்களை  போடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு’  கூறினார்.

 இந்த சம்பவத்தைப்பற்றி பால்ராஜ் அண்ணை கூறும் போது ”பளையிலிருந்து ஆனையிறவு வரைக்கும் இராணுவத்தின் மிகவும் பலம்பொருந்திய அணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. பளையில் ஆட்லறித்தளமும் இருந்தது. எனவே இவ்வளவு ஆமியையும் தாண்டி ஊடறுத்து நிற்க முடியுமா?  எதிர்கொள்வது சாத்தியமா? என்று யோசித்துக் கொண்டிருக்க, ‘நீ என்ன யோசிக்கின்றாய், பளைக்கும் கொடிகாமத்திற்கும் இடையில் சாத்தியமாக உள்ள இத்தாவிலிலேயே ஊடறுப்புசெய்வதற்கான இடத்தை உறுதிப்படுத்தச் சொல்லு பால்ராஜ்’ என அண்ணை சொன்னார். “இனி நாம் அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்டப்பணிகளைத் தொடருவோம்” எனக்கூறி வேவு நடவடிக்கையை பூரணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்தார். ஊடறுப்பு நடவடிக்கைக்கான திட்டமும் பூரணப்படுத்தப்பட்டது.


இதற்கான பயிற்சி நடவடிக்கைகளில் சண்டையின் பிரதான தளபதிகளான பால்ராஜ், தீபன், துர்க்கா, விதுஷா உட்பட அனைவரும் அங்கு நின்று தங்களது பகுதி சண்டைகளுக்கான பயிற்சியைக்  கண்காணிக்க, தலைவர் அந்த முகாமிற்கு அடிக்கடி வந்து பயிற்சியின் முக்கியமான விடயங்களையும் சரிபார்த்தார்.

இந்தச் சண்டையில் கனரக அணிகளின் பங்கு முக்கியம் என்பதால் கனரக ஆயுதப் போராளிகளுடன் கூடுதலாக நேரத்தைச் செலவழித்தார். மற்றும் கடுமையான சண்டையை எதிர்கொள்ளவேண்டும் என்பது தலைவருக்கு தெரிந்திருந்ததால் போராளிகளின் உளவுரணை மேம்படுத்தவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

ஒரு நாள் தலைவர் அந்த பயிற்சி முகாமிற்கு வந்து கொண்டிருந்தபோது அந்த முகாமிற்கு கிட்டவாக ஒரு தளபதியின் வாகனம் பழுதடைந்து நின்றது. அதில் தளபதியுடன் சென்ற போராளிகள் நின்றிருந்தனர். (தளபதிகள் வெளியில் போகும் போது, அவர்களுடன் நிற்கும் சில போராளிகள் மட்டும் தளபதியுடன் வெளியில்  செல்லலாம்). அந்தத் தளபதி தலைவர் கலந்துரையாடலுக்கு வருகின்றார் என்ற காரணத்தால் அவர்களை வாகனத்துடன் விட்டுவிட்டு வேறு வாகனத்தில் சென்றுவிட்டார்.

கலந்துரையாடலுக்கு வந்த தலைவர் அந்தப்போராளிகள் பழுதடைந்த வாகனத்துடன் நின்றதைப் பார்த்துக் கொண்டு வந்தவர். கலந்துரையாடலை முடித்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கும் போது வாகனத்துடன் சில போராளிகள் நின்றதை நினைவுபடுத்தி, அவர்களுக்கு சாப்பாடு அனுப்பப்பட்டுள்ளதா? அனுப்பியிருக்காவிட்டால் சாப்பாடு அனுப்புங்கள் என்று கூறிவிட்டே சாப்பிட அமர்ந்தார்.  ஒரு முக்கியமான சண்டைக்கான கலந்துரையாடலைக் கையாண்டு விட்டு, சாப்பாட்டு நேரத்தில் தான் வழியில் கண்ட போராளிகளை அந்த தருணத்தில்கூட நினைவுபடுத்தியது,  ஒவ்வொரு சின்ன விடயத்திலும் எவ்வளவு அக்கறையாக இருப்பார் என்பதற்கான சிறிய உதாரணம்.

பெட்டிச்சண்டைக்கான திட்டத்தில் சண்டைக்கு முதல் நாள் ஒரு பிளாட்டூன் தரையிறங்கி நிற்கும். சண்டையன்று, சண்டைக்கான முழு அணிகளும் தரையிறங்குவதற்கு முன் முதல் நாள் செல்லும் பிளாட்டூன் தரையிறங்கும் இடத்தில் கட்டவுட் போட்டு அணிகள் பாதுகாப்பாக தரையிறங்க வழிசமைக்கும் என்பதற்கமைவாகவே திட்டமிடப்பட்டது.

சண்டைத்திட்டங்களை  தாக்குதல் அணிகளுக்கு தளபதி பால்ராஜ் விளங்கப்படுத்திக் கொண்டிருக்கும் போது வந்த தலைவர், திட்டத்தில் மாற்றத்தைச் செய்து ‘முதல் நாள் செல்லும் அணியை அனுப்பவேண்டாம். எல்லாரும் ஒரே நாளே செல்லுங்கள். முதல் நாள் செல்லும் பிளாட்டூன் தரையிறங்கும் போது எதிரி அலேட் ஆனால் ஒட்டு மொத்த சண்டையையும் பாதிக்கும். மற்றும் எதிரி எதிர்பார்க்கமுடியாத இடத்தில் தரையிறங்குவதால் அணிகள் தரையிறங்கும் போது குழம்பினாலும் நிலைகளிற்குச் செல்வதில் சிரமம் இருக்காது. முதல்நாள் சிறு தவறு நடந்தாலும் ஒட்டு மொத்த திட்டத்தையும் பாழடித்துவிடும்’ என்று திட்டத்தின் மாற்றத்தை சொல்லிவிட்டுச் சென்றார். அவர் எதிர்பார்த்தமாதிரியே அணிகளின் நகர்வை ராடரில் அவதானித்த எதிரி தாக்குதலை ஆரம்பித்து விட்டான்.  1500 பேர்களை கொண்ட திட்டத்தில்  கிட்டத்தட்ட அரைவாசிக்கு பேருக்கு மேல் தரையிறக்க முடியவில்லை.

முகமாலை பொக்ஸ் சமருக்கான கலந்துரையாடலில், நெப்போலியன் கையாண்ட ஒரு தந்திரோபாயத்தைப்போல ‘கடற்புலி உங்களை  தரையிறக்கி விடும். ஏற்றுவதற்கு வராது. நான் பரந்தனில் நிற்பன் நீங்கள் அதால வந்து கைதாங்கோ’ என்ற  விடயத்தைக் கூறி சண்டைக்கு அனுப்பிவைத்தார். இங்கு தரையிறங்கும் படையணிகள் சண்டையிட்டு வெற்றி பெறுவதே ஒரே வழி. பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற எண்ணத்தைப் போராளிகளுக்கு ஏற்படுத்தினார். இது வென்றேயாக வேண்டும் என்ற மனநிலையில் போராளிகளை வைத்திருக்கும். இந்தப் பொக்ஸ் சண்டைக்கு அது அவசியம் என்பது தலைவரின் கணிப்பு.

சண்டை தொடங்கும் வரை கட்டளைத்தளபதிகள் ஊடாக சண்டையை நேரடியாகத் தயார்ப்படுத்திவிட்டு, சண்டை தொடங்கிய பின் பானு அண்ணையை இந்தச் சண்டையை ஒருங்கிணைக்கும் பொறுப்பை வழங்கி சண்டையை ஒட்டுமொத்தமாக  வழிநடாத்தினார்.

அந்த நேரத்தில் தளபதி தீபன் தலைமையிலான அணிகள் முகாவில் பக்கத்தால் உடைத்துக் கொண்டு, ஊடறுத்து நிற்கும் பால்ராஜ் அண்ணையின் அணியுடன் இணைய வேண்டும். இதற்காகத் தளபதி தீபன் அவர்களின் அணிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியைத்தழுவிக்கொண்டிருந்தன.

மறுபுறம், சிங்களத்தின் சிறப்பு படைகளை எதிர்த்து கடுமையான சண்டையை பிடித்துக்கொண்டிருந்தது தரையிறங்கிய படையணி. பால்ராஜ் அண்ணையை உயிருடனோ அன்றி பிணமாகவோ கொண்டுவருவோம் என்ற உறுதிப்பாட்டில் சிங்களப்படை பொக்ஸ்சை சுற்றி வளைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.

”என்னை நம்பி அங்கு போராளிகள் இவ்வளவு பெரிய படைக்குள் நின்று, தக்கவைத்துச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இங்க உடைச்சுக் கொண்டு போகமுடியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்” என்று தளபதி தீபன் அவர்களைக் கடுமையாகச் சாடிய தலைவர், மாற்றுத்திட்டமாக ஆட்லறிகளை நேரடிச்சூட்டிற்குப் பயன்படுத்தி உடைக்கிறீங்கள், உடைக்காமல் திரும்பி வந்து காரணம் சொல்லக்கூடாது என கண்டிப்பான கட்டளையைக் கொடுத்தனுப்பினார். இதற்கு மேல் தலைவரிடம் காரணங்களுடன் செல்ல முடியாது என்பது தீபன் அண்ணைக்குத் தெரியும். தானே நேரடியாகக் களத்தில் இறங்கி, மருதங்கேணியில் ஆட்லறிகளை வைத்து நேரடிச்சூட்டை வழங்கி உடைத்துக் கொண்டு நகர்ந்த புலியணிகள் புதுக்காட்டுச்சந்தியைக் கைப்பற்றிது. அதில் ஒரு தொகுதி அணி பின்னர் பளையை நோக்கி முன்னேறி, ஊடறுத்து நின்ற அணியுடன் கைகோர்த்தது.

ஊடறுப்புச் சமருக்கான படையணிகளுக்கு மூன்று நாட்கள் எந்த வித சப்ளையும் கிடைக்காது என்பதை கணித்த தலைவர், அவர்களுக்குரிய வெடிபொருள்களை மட்டுமல்ல, உற்சாகமாகச் சண்டைபிடிப்பதற்கான சத்தான உலர் உணவுப்பொருட்களையும் தயார்ப்படுத்திக் கொடுத்திருந்தார். இதற்கென கலோரி கூடிய சொக்லேட்டுக்களைக் கூட வெளிநாட்டிலிருந்து எடுத்திருந்தார். அந்தளவிற்கு சிறிய விடயங்கள் தொடங்கி, ஒவ்வொரு விடயத்திலும் தன்னை நம்பி சண்டையிடும் போராளிகளின் சகல விடயங்களையும் சரிபார்ப்பார், கவனிப்பார், ஊக்கமளிப்பார். சண்டையின் ஒருவொரு நிமிடத்தையும் கண்காணித்து, அதை வெற்றியை நோக்கி மாற்றுவதற்கான சகல செயற்பாடுகளையும் திட்டமிடல்களையும் ஒழுங்கமைப்புகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருப்பார்.

சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் நிதித்துறைப்பொறுப்பாளர் கேணல் தமிழேந்தி அவர்களை அழைத்து பொக்ஸ்குள் சென்று அங்குள்ள போராளிகள், பொறுப்பாளர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகள், என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்று பார்த்துச் சரிசெய்யுமாறு அனுப்பினார். அவரைமட்டுமல்ல சண்டையுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையைச்சார்ந்த பொறுப்பாளர்களரையும் அழைத்துச் சகல விடயங்களையும் சரிபார்க்குமாறு அனுப்பி வைத்தார்.

ஒரு சண்டையை திட்டமிடும் நேரத்தில் அந்தச் சண்டையின் வெற்றியைச் சாதகமாக்கும் அல்லது வலுப்படுத்தும் பிற நடவடிக்கைகளைக்கூட தனது நேரடிக்கண்காணிப்பில் இருந்த அணிகளைக் கொண்டு ஒரு பக்கத்தால் செய்து கொண்டிருப்பார். 

ஆனையிறவு படைத்தள வெற்றியின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  தீர்மானம் எடுப்பதிலிருந்து  சண்டையில்   இறுக்கங்கள்  ஏற்பட்ட   போது   சம்பந்தப்பட்ட தளபதிகளுக்கு  கடுமையான  கட்டளைகளையும்  மாற்றுத்  திட்டங்களையும் வழங்கி சண்டையின் வெற்றிக்கான தலைமையை வழங்கியவர்  தலைவர்.


சண்டையின் நினைவாக, பால்ராஜ் அண்ணை முகமாலை பொக்ஸ் சமருக்குள் எடுத்த படத்தை தனது அலுவலகத்தில் பெரிதாக்கி கொழுவியிருந்தார். அதுமட்டுமல்ல தளபதி பால்ராஜ் அவர்கள் வீரச்சாவடைந்த போது ‘என்னையும் விஞ்சிய போராளி’ என மனந்திறந்து சொன்ன தலைவர் சுயபுகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்.

ஒரு சண்டையில் தலைவராகவும் இராணுவத்தளபதியாகவும் தனது பாத்திரம் என்னவோ அதைச் சரியாக செய்வதுடன் சண்டைக்கு தான்  நியமிக்கும் தளபதிகளினூடாக அந்தப்பணிகளை செய்விப்பதற்கான சகல திட்டங்களையும் ஆலோசனைகளையும் கட்டளைகளையும் வழங்குவார்.தனது கட்டளையை சரியாக செயற்படுத்தவில்லை என்று அறிந்தால் அந்த நிமிடமே குறிப்பிட்ட தளபதியின் பொறுப்பை மாற்றி, புதிய தளபதியை நியமித்து சண்டையை முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருப்பார். இப்படியாக பல வகையில் தமிழீழ விடுதலைக்கான தலைமைத்துவத்தைக் கொடுத்ததால் தான் அவர் தமிழர் மனங்களில் என்றென்றைக்கும் தன்னிகரில்லாத் தலைவராகவும்  சிறந்த இராணுவத்தளபதியாகவும் வாழ்ந்துகொண்டிக்கின்றார்.

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :