சிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன?

யுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். 
இவர் தனது சிறுபராயத்தில், பனையோலைகளால் கூரை வேயப்பட்டு, நான்குபுறமும் பனைமட்டைகளால் சுத்தி வரியப்பட்ட குடிசை ஒன்றில் வாழ்ந்திருந்தார். இவரது இந்தக் குடிசையின் நிலம் களிமண்ணால் மெழுகப்பட்டிருந்ததுடன், வீட்டைச் சுற்றி களிமண்ணாலான மிகத் தாழ்வான சுவரும் அமைக்கப்பட்டிருந்தது. நச்சுப் பாம்புகள் வீட்டுக்குள் நுழையாமல் தடுப்பதற்காகவே இவ்வாறான தாழ்வான சுவர் அமைக்கபட்டிருந்தது. இந்த வீடானது இரு அறைகளையும் ஒரு விறாந்தையையும் கொண்டிருந்தது. சாந்தி இந்த வீட்டில் தான் பிறந்திருந்தார். 


பிட்டு, தோசை, இடியப்பம், பாலப்பம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பது தொடர்பாக சாந்தியின் தாயார் சாந்திக்கு கற்றுக் கொடுத்திருந்தார். சாந்தி வீட்டில் இரண்டாவது பிள்ளை. இவருக்கு ஆறு இளைய ஆண் சகோதரர்களும், ஒரு மூத்த பெண் சகோதரியும் இருந்தனர். 

பேருந்து சாரதியாக கொழும்பில் வேலை பார்த்த சாந்தியின் தகப்பனார் மாதத்தில் இரு தடவைகள் வீட்டுக்கு வருவார். சாந்திக்கு பதினொரு வயதாக இருந்த போது சாந்தியின் தகப்பனார் இறந்துவிட்டார். இதன் பின்னர் குடும்ப நிர்வாகத்தை இயக்குவதற்காக சாந்தியின் தாயார் பனை ஓலைகளில் எவ்வாறு பாய் பின்னுவது என்பது தொடர்பாக சாந்திக்கு கற்றுக் கொடுத்தார். 

யாழ் குடாநாட்டில் பனைமரங்கள் பரந்தளவில் வளர்ந்துள்ளன. இப்பனை மரத்தின் ஒவ்வொரு பாகங்களையும் உள்ளுர் மக்கள் பயன்படுத்திக் கொள்வர். அதாவது பனை மரத்திலிருந்து பெறப்படும் கள் குடிப்பதற்கு பயன்படுகின்றது. அதேபோன்று பனம் பழத்திலிருந்து பனங்காய் பணியாரம் தயாரிக்கப்படுகின்றது. இதைவிட பினாட்டு, பனங்கிழங்கு, ஓடியல் போன்றனவும் பனை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. பனைமரத்தின் ஓலைகள் வீடுகள் வேய்வதற்கும், வேலிகள் கட்டுவதற்கும், பனை மரத்தின் அடிப்பாகம் கட்டடங்களுக்கான கூரைகள் அமைப்பதற்கும் பயன்படுகின்றன. 

இராணுவ முன்னேற்றம் காரணமாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பல இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்த சாதாரண தமிழ் மக்களின் அனுபவங்களை சாந்தியின் கதை கூறிநிற்கிறது. அதாவது வன்னியில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கையிலிருந்து தப்பிப் பிழைத்து வந்த மக்கள் கூறும் அனுபவப் பகிர்வுகளில் இங்கு கூறப்படும் சாந்தியின் அனுபவமும் ஒன்றாகும்.]

சாந்தி தான் பெற்றுக் கொண்ட அனுபவத்தை இவ்வாறு பகிர்கின்றார்: 

நான் சிறுமியாக இருந்த போது, எனது தாயார் பனை ஓலைகளை வெட்டுவதற்காக மனிதர் ஒருவரைக் கூலிக்கு அமர்த்தியிருந்தார். இவ்வாறு வெட்டப்படும் பனை ஓலைகளை இம் மனிதர் மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு எமது வீட்டுக்கு எடுத்து வருவார். நாங்கள் பச்சை, சிவப்பு, ஊதா போன்ற நிறங்களிலான சாயங்களை கடைகளில் வாங்குவோம். பின்னர் இந்நிறச் சாயங்கள் கலந்த பனை ஓலைகளை ஊறவைப்போம். பின்னர் இவற்றை எமது வீட்டைச் சூழவிருந்த மணல்களில் பரவி காயவைப்போம். அதன் பின்னர் அவற்றின் மீது நானும் எனது தாயாரும் 'ஐவிரல்' 'மூவிரல்' போன்ற பெயர்களால் வடிவங்கள் போடுவோம். நானும் எனது தாயாரும் இப்போதும் கூட இந்தப் பெயர்களை பாய்களில் வடிவங்கள் போடுவதற்காக பயன்படுத்துகிறோம். நான் இளமையாக இருந்த போது மிளகாய், வெங்காயம் மற்றும் நீண்ட அவரை போன்றவற்றை எமது தோட்டத்தில் பயிரிட்டு அவற்றை சந்தையில் விற்றோம்.


1990 ல், அதாவது எனக்கு இருபத்து மூன்று வயதாக இருந்த போது, முதன் முறையாக நாங்கள் எமது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்தோம். மிகத் தாழ்வாகப் பறந்த உலங்குவானூர்தி ஒன்று எமது கிராமத்தை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளத் தொடங்கியதால் கிராமத்தவர்கள் அனைவரும் தப்பியோடினோம். பின்னாளில் எனது கணவராக வந்த அந்த மனிதன் தனது சகோதரியின் மகனை காவிக் கொண்டு இடுப்பளவுக்கு ஆழமாக இருந்த அந்த நீரோடையின் ஊடாக நடந்து கொண்டிருந்தார். உலங்குவானூர்தி எம்மை நெருங்கிய போது, நாங்கள் உருமறைப்புக்காக எமது தலைகளுக்கு மேல் பனை ஓலைகளைப் பிடித்துக் கொண்டோம். அப்போது எனது கணவரின் சகோதரி இறந்து விட்டார். இதனால் உதவியின்றி தவித்த எனது கணவருக்கு அவரது சகோதரியின் மரணச்சடங்கையும் அவரின் 31 ம் நாள் நினைவு நாளையும் மேற்கொள்வதற்கு எனது குடும்பத்தவர்கள் உதவிபுரிந்தனர்.


பின்னாளில் எனது கணவராக வந்த இந்த மனிதர் எமது வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், புத்திசாலியாகவும் இருந்தார். நான் தோட்டத்தில் பாடுபட்டு உழைப்பதை அவதானித்த இவர் தனது 28 வது வயதில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். எந்தவொரு சீதனமும் இன்றி அவர் என்னைத் திருமணம் செய்ய முன்வந்தார். எனது அம்மா, இரு மாமாக்கள் மற்றும் எனது மைத்துனர்கள் எமது திருமணத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தி வைத்தனர். எனது தாயார் சமைப்பதற்கு கற்றுத் தந்திருந்தார். நான் திருமணம் செய்வதற்கு சில ஆண்டுகளின் முன்னரே எனது தாயார் போன்று நன்றாக சமைக்கத் தொடங்கினேன். எமது திருமணத்துக்கு உறவினர்கள் பலரும் வந்திருந்தனர். திருமண நாளில் முதலில் பாலுக்குள் வாழைப்பழம் ஒன்றை நாம் போட்டோம். பின்னர், சுவாமி அறைக்குள் வாழையிலை ஒன்றைப் போட்டு அதில் எல்லாக் கறிகளையும் சேர்த்து நான் எனது கணவருக்கும் அவர் எனக்கும் பரிமாறிக் கொண்டோம். இதன் பின்னர் நாம் மச்சான் மச்சாள் என்ற உறவுமுறையால் அழைக்கப்பட்டோம்.


1995 ல் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்தினர் எமது இடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். நாம் இருந்த இடத்தை நோக்கி அவர்கள் எறிகணைகளை வீசத் தொடங்கினர். அதனால் எல்லோரும் அங்கிருந்து தப்பியோடினோம். இந்த நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாவற்குழிப் பாலத்தின் மீது விமானக்குண்டுகளை வீசினர். இதனால் இதற்குள் பெருமளவான மக்கள் அகப்பட்டுக் கொண்டனர். எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமளவான முதியோர்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் எமது மாமாவின் இடத்தை வந்தடைந்தோம். அங்கே நாங்கள் பனை ஓலையால் வீடொன்றை அமைத்து பத்து ஆண்டுகள் வரை தங்கியிருந்தோம்.


2004 ல், அதாவது யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, எமது திருமணம் நடந்த இடத்துக்கு பதினான்கு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரும்பிச் சென்றோம். அப்போது அங்கு எவரும் குடியேறியிருக்கவில்லை. இதனால் அந்த இடம் காடு போன்று காட்சியளித்தது. இங்கிருந்த எமது வீடு முற்றாக அழிவடைந்திருந்தது. நாம் பகுதியளவில் பாதிப்படைந்திருந்த எமது மாமாவின் வீட்டில் தங்கியிருந்து கொண்டு எமது நிலத்தை துப்பரவாக்கி மீண்டும் வீடொன்றை அமைத்துக் கொண்டோம்.


திருமணம் செய்து பதினான்கு ஆண்டுகளின் பின்னர் நான் மகள் ஒன்றுக்கு தாயாகினேன். எமது மகள் பிறந்திருந்த போது நாம் மிகவும் மகிழ்வடைந்தோம். எனது கணவர் எப்போதும் கட்டிட வேலையோ அல்லது கூலி வேலையோ செய்து வருமானம் ஈட்டிக்கொள்வார். அல்லது உழவியந்திரங்களில் சீமெந்து மற்றும் மணலை ஏற்றும் வேலையிலும் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நாங்கள் பனங்கிழங்குகளை அவித்து அவற்றை விற்றும் சிறிது பணத்தை தேடிக்கொண்டோம்.


எமது மகளின் முதலாவது பிறந்த நாளன்று ஏற்கனவே வைத்த நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்வதற்காக பூநகரி நாகதம்பிரான் ஆலயத்துக்கு சென்று கற்பூரச் சட்டி எடுத்து எமது நன்றிக்கடனைத் தீர்த்துக் கொண்டோம். அதாவது நாம் பல ஆண்டுகளாக பிள்ளைப் பாக்கியம் அற்று வேதனைப்பட்ட போது இவ்வாறானதொரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதாக எண்ணியிருந்தோம்.


யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு இரு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் எமது கிராமத்தில் அச்சம் நிலவ ஆரம்பித்ததால், நாம் மீண்டும் பூநகரியில் சென்று வாழத் தொடங்கினோம். அங்கே ஒரு ஆண்டு காலம் தங்கியிருந்ததன் பின்னர் மீண்டும் இடப் பெயர்வு. 2006 ல் பளையில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் பூநகரி நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் பூநகரியை விட்டு எல்லோரும் இடம்பெயரத் தொடங்கினர்.


இதன் பின்னர் நாம் ஒரு மாத காலம் வரை எனது இளைய சகோதரனுடன் சேர்ந்து வாழ்ந்தோம். பின்னது மாதம் ஒன்றுக்கு ரூபா 170 வாடகையாக கொடுத்து வேறு வீட்டில் தங்கினோம். கிளிநொச்சி வரை முன்னேறிய இராணுவத்தினர் ஜனவரி 2009 ல் நாம் இருந்த இடத்தை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கியதால் விசுவமடு என்ற இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தோம். நாங்கள் சமையலுக்குத் தேவையான பொருட்கள், உடைகள் மற்றும் அரிசி போன்றவற்றை துவிச்சக்கரவண்டிகளில் கட்டி விசுவமடுவுக்கு எடுத்துச் சென்றோம். துவிச்சக்கர வண்டியின் பின்னால் பொருட்களும் முன் பக்கத்தில் எமது மகளையும் காவிக் கொண்டு எனது கணவர் செல்ல நான் அவர்களுக்கு அருகில் நடந்து செல்வேன். பின்னர் நாம் எமது பசுக்களையும், கோழிகளையும் கைவிட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். வீதி எங்கும் மக்கள் நிறைந்து காணப்பட்டனர். இவ்வாறான நெருக்கமான வீதியில், காயமடைந்தவர்களைக் காவி வந்த உழவியந்திரம் ஒன்று மக்களை விலத்திக் கொண்டு வெகு வேகமாக விசுவமடு வைத்தியசாலையை நோக்கி விரைந்து சென்றதை நான் பார்த்தேன்.


விசுவமடுவில் நாம் நான்கு நாட்கள் மட்டுமே தங்கியிருந்தோம். அதன் பின் சுதந்திரபுரத்தில் ஆறு நாட்களும் இடம்பெயர்ந்திருந்தோம். நாங்கள் போகும் இடங்களில் கூடாரம் ஒன்றை இரு தடிகளைக் கொண்டு நிலத்தில் கட்டி தங்குவதற்கான தற்காலிக கொட்டகையை உருவாக்கிக் கொண்டோம். அதன் பின் அந்த இடத்தில் பதுங்குகுழி ஒன்றை அமைத்துக் கொண்டோம். அதனை அமைப்பதற்காக தேநீர்க் கோப்பைகள் மற்றும் சாப்பாட்டுக் கோப்பைகளைப் பயன்படுத்திக் கொண்டோம். அதன் பின் எமது சேலைகளில் மணல்களை போட்டு மூட்டைகள் கட்டுவதற்கான பைகளைத் தயாரித்துக் கொள்வதற்காக நூலையும் ஊசியையும் வாங்கினோம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மணல் மூட்டைகளை எமது பதுங்குகுழியைச் சூழ அடுக்கி வைத்தோம். அதற்குள் சிறு துவாரத்தை ஒன்றை விட்டோம். இதன் பின்னர் நாம் அனைவரும் அதற்குள் ஒழிந்து கொள்வோம். எறிகணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதால் எம்மால் சமைக்கக் கூட முடியவில்லை. எறிகணைகள் வெடிக்கும் சத்தம் நின்றவுடன் நாம் உடனடியாக கஞ்சி காய்ச்ச ஆயத்தமாவோம். நாம் எப்போதும் குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகளின் சத்தங்களால் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்தோம். முதலில் நாம் நெருப்பை மூட்டிக்கொள்வோம். பின்னர் எறிகணைகளின் சத்தம் கேட்கத் தொடங்கியவுடன் பதுங்குகுழியை நோக்கி ஓடிவருவோம். அதன் பின் பானையை எடுத்துக் கொண்டு மீண்டும் பதுங்குகுழிக்குள் ஒடிவருவோம்.


செந்தூரன் சிலையடியில் இருந்த மரம் ஒன்றின் கீழ் நாம் நித்திரையின்றி ஓரிரவைக் கழித்தோம். நாம் வள்ளிபுனத்திலிருந்த ஆச்சிதோட்டம் என்ற இடத்தில் மூன்று நாட்கள் வரை தங்கியிருந்தோம். அப்போது கிபிர் மற்றும் பல்குழல் எறிகணைகள், ஆட்டிலறிகள், ஐஞ்சிஞ்சி மோட்டர், ராங்கிகள், கொத்துக் குண்டுகள் என பலதரப்பட்ட தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கொத்துக் குண்டு பத்துக்கு மேற்பட்ட துண்டுகளாக வெடித்துச் சிதறும். இந்த இடத்திலிருந்த பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் நாம் அந்த இடத்தை விட்டு கோம்பாவில் என்ற இடத்தை சென்றடைந்தோம். அங்கே ஒரு வார காலம் வரை இருந்தோம். கோம்பாவிலில் தங்கியிருந்த முதல் சில நாட்களில் எந்தவொரு குண்டுச் சத்தங்களையும் நாம் கேட்கவில்லை. ஆனால் அந்த இடத்தில் ஏற்கனவே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான ஆதாரங்களை நாம் நேரில் பார்த்தோம்.


கேப்பாபுலவு, விசுவமடு, கிளிநொச்சி, சுதந்திரபுரம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய ஐந்து இடங்களிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் 40, 50, 100 என பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் கடற்படையின் தாக்குதல்களையும் மக்கள் முகங்கொடுத்தனர். நாங்கள் செல்லும் திசையெல்லாம் மக்களின் உடலங்கள் காணப்பட்டன. இவற்றிலிருந்து துர்நாற்றம் வீசின. நாம் இதனால் வாந்தி எடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் எங்களுக்கு முன்னே உந்துருளியில் சென்றுகொண்டிருந்த இருவரின் தலைகளை கூவிவந்த எறிகணை ஒன்று பதம் பார்த்துக் கொண்டதால் அந்த இடத்திலேயே அவர்கள் இருவரும் தலை வேறு உடல் வேறாக சிதறினர். அவர்களின் உந்துருளி வாய்க்கால் ஒன்றுக்குள் சென்று விழுந்தது.


வன்னியிலிருந்த 200,000 வரையான மக்கள் பொக்கணை என்ற இடத்தில் ஒன்றுகுவிந்தனர். ஒருவருக்கு அருகில் இன்னொருவர் பதுங்குகுழிகளை அமைத்தனர். இது பாதுகாப்பு வலயம் என பிரகடனப்பட்டிருந்தது. இங்கே நாங்கள் ஒரு பதுங்குகுழி ஒன்றை அமைத்து நாம் முதலில் செய்தது போன்று கூடாரம் அமைத்தோம். எம்முடன் எனது தாயார், பாட்டி, சகோதரன் மற்றும் எமது மகள் ஆகியோர் இருந்தனர். மார்ச் 23,2009 எனது மகளும் நானும் பசியால் அழுதுகொண்டிருந்தோம். ஆனால் எறிகணைகள், பல்குழல் எறிகணைகள், ராங்கிகள், கிபிர் விமானங்கள் போன்றவை ஈவிரக்கமற்ற முறையில் நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்டன. எங்களால் வெளியில் செல்ல முடியவில்லை. எம்மிடம் சிறிதளவு அரிசியே இருந்தது. எம்மிடம் விறகுகள் எதுவும் இருக்கவில்லை.


தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட அந்தக் கணத்தில், எனது கணவர் பதுங்குகுழியை விட்டு வெளியில் சென்று விறகு கொத்த ஆரம்பித்தார். இவ்வாறு அவர் விறகு கொத்திக் கொண்டிருந்த அந்த வேளையில், கூவி வந்த எறிகணை ஒன்று நாங்கள் இருந்த இடத்துக்கு அருகே வீழ்ந்து வெடித்தது. உடனே எனது கணவர் நிலத்தில் விழுந்து பாதுகாப்பு நிலை எடுத்தார். நாம் அனைவரும் பதுங்குகுழிக்குள் பதுங்கிக் கொண்டோம். மீண்டும் பிறிதொரு எறிகணை எனது கணவர் விழுந்து கிடந்த இடத்தடியில் விழுந்து வெடித்தது. உடனே எனது சகோதரன் வெளியில் சென்று பார்த்தவுடனேயே 'அத்தான் இறந்துவிட்டார்' எனக் கூறியவாறு கதறி அழுதார். அதன் பின் நாங்கள் எனது கணவரின் உடலை பதுங்குகுழிக்குள் கொண்டு வந்தோம். நாங்கள் அவரின் உடலை ஒரு துணியில் வளர்த்தினோம். அதன் பின் துணியாலும் பாயாலும் அவருடலைச் சுற்றிக் கட்டினோம். நாம் இருந்த பதுங்குகுழிக்கு அருகிலிருந்த பதுங்குகுழியில் பாதுகாப்புத் தேடி ஒளிந்திருந்த மக்கள் எனது கணவரின் தலை சிதறுப்பட்டு மூளை வெளித் தெரிந்ததால் அவரின் தலையை துணியொன்றால் இறுகக் கட்டினர். இவரின் உடலையும் சுமந்தவாறு உழவியந்திரம் ஒன்றில் நாம் வலையர்மடம் நோக்கிச் சென்றோம். அங்கே எனது கணவரின் உடலத்தை புதைத்தோம். எனது கணவரை நான் இழந்த நாளிலிருந்து எனது தாயார் நோயுற்று காணப்படுகிறார்.


பொக்கனை என்ற இடத்தில் நாம் தங்கியிருந்த போது இறந்த தமது குழந்தைகளை கொண்டு சென்ற பல தாய்மார்களை நான் நேரில் பார்த்துள்ளேன். இவ்வாறான பயங்கரமான, மனதை நெக்குருக வைக்கும் காட்சிகளால் நான் உண்மையில் பாதிப்படைந்துள்ளேன். இந்நிலையில் நான் எங்கிருக்கிறேன் என்ற நினைவு கூட மறந்துவிடும். நாங்கள் உயிர் தப்புவோம் என்ற நம்பிக்கை எம்மிடம் சிறிதளவும் இருக்கவில்லை. நாங்கள் உயிருடன் தப்பமாட்டோம், விரைவில் சாகப் போகிறோம் என நாம் நினைத்திருந்தோம். 



எனது கணவர் இறந்து 21 நாட்களின் பின்னர் எனது சகோதரர் ஒருவர் கொல்லப்பட்டார். அதேநாளில், எனது பெறாமகன் ஒருவர் படுகாயமடைந்தார். எனது சகோதரன் பதுங்குகுழியை விட்டு குடும்பத்தவர்களுக்கு நீர் எடுப்பதற்கு வெளியில் வந்தபோதே இவரிலிருந்து ஐந்து அங்குல இடைவெளில் வீழ்ந்து வெடித்த எறிகணையில் தலை, கால் மற்றும் கைகளில் காயமடைந்து உயிர் துறந்தார். எனது சகோதரனின் மனைவியின் சகோதரனும் கொல்லப்பட்டார். இவரது மனைவியின் தாயார் உயிருடன் உள்ள போதிலும் இவரின் இரு கால்களும் மிகவும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. நாங்கள் இவர்களை பொக்கணைக்கு அருகிலிருந்த மாஞ்சோலை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். ஆனால் அவர்கள் அங்கேயே இறந்துவிட்டனர். நாங்கள் எறிகணைகளின் மத்தியிலும் அவர்களின் உடலங்களை வலையர்மடத்தில் புதைத்தோம்.


மாஞ்சோலை வைத்தியசாலை வீட்டோடிருந்த மண்டபம் ஒன்றிலேயே இயங்கியது. இங்கே மக்கள் நிறைந்திருந்தனர். நாங்கள்எமது விரல்களைக் கூட அங்கே வைக்க முடியவில்லை. காயப்பட்டவர்கள் கத்துகின்றனர். அழுகின்றனர். அங்கே போதியளவு மருந்து இருக்கவில்லை. வைத்தியர்கள் கூட இவர்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளவில்லை. மக்களின் உயிர்களை வைத்தியர்களால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. மிகச் செறிவாண எறிகணைகள் வீழ்நது வெடித்ததால் வைத்தியர்களால் சத்திர சிகிச்சை கூட செய்ய முடியவில்லை. ஏற்கனவே தனது மகளையும் மகனையும் யுத்தத்தின் போது இழந்த பெண்ணொருவர் தனது காயமடைந்த பேரப்பிள்ளையை கூட்டிக் கொண்டு வந்திருந்தார். பின்னர் அவ்விடத்தில் விழுந்த எறிகணையில் அந்தப் பெண்மணியும் இறந்துவிட்டார்.


அந்த வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை அறையைச் சூழ மண் மூட்டைகள் அடுக்கிவிடப்பட்டிருந்தன. ஆனால் தரையில் கிடந்த நோயாளிகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இருக்கவில்லை. இங்கு சிகிச்சை பெற்ற மக்கள் கால்கள், தலைகள் மற்றும் முகங்கள், கண்கள் போன்றவற்றில் காயமடைந்திருந்தனர். இவ்வாறான காட்சிகளைப் பார்ப்பதென்பது என்னைப் பொறுத்தளவில் கடினமாக இருந்தது. வைத்தியசாலைகள் மீதும் குறிவைத்து தாக்கப்பட்டன. காயப்பட்டவர்களை ஏற்றிச் செல்வதற்கான கப்பல் பின்னர் வரவேயில்லை.


நாங்கள் எனது குடும்பத்தவர்களின் இறந்த உடலங்களை மாஞ்சோலையிலும், கணவரின் உடலத்தை வலையர்மடத்திலும், எனது சகோதரன் மற்றும் அவரது மாமியாரின் உடலங்களை மாஞ்சோலையிலும் புதைத்தோம். இதில் பொக்கணையில் கொல்லப்பட்ட எனது மைத்துணி ஒருவரின் உடலத்தை செறிவான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால், புதைக்காமல் அப்படியே விட்டு விட்டு வந்துவிட்டோம்.


யுத்தம் நிறைவுறுவதற்கு ஒரு மாதத்தின் முன்னர் நான் காயமுற்றேன். எனக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் நான் ஊன்றுகோலின் உதவியுடன் நடக்கத் தொடங்கினேன். இறுதி யுத்தம் நிறைவுறுவதற்கு சில வாரங்களின் முன்னர் இறந்த உடலங்களை ஏற்றிய உழவியந்திரங்கள் மற்றும் மாட்டுவண்டில்களை காணமுடிந்தது. இவை நிறைய இறந்த உடலங்கள் காணப்பட்டன. இறுதி 15 நாட்களும் சாப்பிடுவற்கான உணவுகள் காணப்படவில்லை. நான் தேநீரை மட்டுமே குடித்தேன். நான் மிக மெலிந்திருந்தேன். நாங்கள் குழிகளைத் தோண்டி பதுங்குகுழிகளை அமைத்து தங்கியிருந்தோம். வாகனங்களின் கீழே பாதுகாப்பாக தங்கினோம். நாங்கள் இறந்து விடுவோம் என்ற அச்சமே மேலோங்கி இருந்தது. இந்தநேரத்தில் நாம் பாதுகாப்புக்காக பதுங்கியிருந்த வாகனத்தின் கீழ் பிறிதொரு மனிதனும் வந்து ஒளிந்திருந்தார். சற்று நேரத்தின் பின் வீழ்ந்த எறிகணையில் அவர் கொலல்ப்பட்டார். எனது சகோதரனின் மனைவி காயமடைந்துவிட்டார். எனது சகோதரன் தாக்கப்பட்ட போது தனது சுயநினைவை இழந்திருந்தார். தொடர்ச்சியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினோம்.


முள்ளிவாய்க்காலிலிருந்து நாம் வட்டுவாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். மே 17,2009 எனக்கு முன்னால் மக்கள் பலர் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். இரு வயதுபோனவர்கள் மற்றும் இளம் பெண் ஒருவர் மீதும் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்யப்பட்டதை நான் பார்த்தேன். அவர்கள் எம்மை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். ஆனால் நாங்கள் கீழே விழுந்து படுத்து எமது உயிரைக் காப்பாற்றிக் கொண்டோம். வீதி பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட நாம் காட்டுக்குள் இறங்கி நடக்கத் தொடங்கினோம். இராணுவத்தால் சுடப்பட்டு கொல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான இறந்த உடலங்களை நான் பார்த்தேன். நாங்கள் வட்டுவாகலை அடைந்த போது, இராணுவத்தினர் எம்மை அழைத்தனர். அதில் காயமடைந்தவர்களை காவிச் சென்றனர். தாம் எமக்கு உணவு தருவதாக அவர்கள் எம்மிடம் கூறினர். வட்டுவாகலில், கிட்டத்தட்ட 300,000 மக்கள் ஒன்று குவிந்திருந்தனர். நாங்கள் மிகவும் தாகமாக இருந்தோம். மக்கள் சிறுநீர் மற்றும் மலங்கழித்த இடத்துக்கு அருகில் நீர்க் குழி ஒன்று காணப்பட்டது. 



இராணுவத்தினர் அதில் குழி ஒன்றைத் தோண்டி குடிப்பதற்கான நீரை எடுக்குமாறு உத்தரவிட்டனர். அங்கே மலசலகூடங்கள் காணப்படவில்லை. நாங்கள் குடித்த நீருடன் சிறுநீரும் கலந்திருந்தது. ஆனால் நாங்கள் மிகத் தாகமாக இருந்ததால் மாசடைந்த அந்த நீரையே பருகினோம். அங்கு வேறு நல்ல நீர் கிடைக்கவில்லை. "இளம் பெண்கள் சிறுநீர் கழிக்கச் சென்ற போது அவர்கள் மீளவும் தமது உறவுகளிடம் வந்து சேரவில்லை என்ற விடயத்தை நான் அறிந்து கொண்டேன். அதன் பின்னர் இந்த இளம் பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடப்பதை அவர்களது பெற்றோர்கள் கண்டுகொண்டனர்"


வட்டுவாகலில் வைத்து எம்மை 150 பேரூந்துகளில் ஏற்றிக் கொண்டு வலயம் 04 என்ற இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு கொண்டு சென்றனர். இது எல்லா இடைத்தங்கல் முகாங்களுடனும் ஒப்பிடும் போது மோசமானதாக இருந்தது. இங்கு உணவு மற்றும் ஏனைய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. பின்னர் எம்மை இராணுவத்தினர் ஆனந்தக்குமாரசுவாமி முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கே எமக்கு உணவளிக்கப்பட்டது. அது மிகவும் மோசமான உணவாக இருந்ததால் அதனை எம்மால் சாப்பிட முடியவில்லை. இதனால் நாம் கடைகளில் உணவுகளை வாங்கி உண்டோம். இதன் பின்னர் அரசசார்பற்ற நிறுவனங்கள் சில எமக்கான உலருணவு மற்றும் ஆடைகளை வழங்கின. ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணையராலயம் எமக்கு சமைப்பதற்கான பாத்திரங்களை தந்தது. வலயம் நான்கிலிருந்த எனது சகோதரர்களில் ஒருவருக்கு இவ்வாறான எந்தப் பொருட்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை. கிழமையில் ஒரு தடைவ மரக்கறிகள் எமக்கு தரப்படும்.


எமது உறவுகளின் உடலங்களைப் புதைத்த வலையர்மடம் என்ற இடத்துக்கு செல்ல நாம் விரும்புகிறோம். ஏனெனில் அவர்களுக்கான இறுதிக் கடன்களை நாம் ஆற்ற விரும்புகிறோம். நாம் இறந்த எமது உறவுகளுக்கு ஏழாம் நாள் சோறு மற்றும் கறி என்பவற்றை படைத்தோம். ஆனால் அவர்களின் 31 ம் நாள் கடமைகளை எம்மால் செய்ய முடியவில்லை. இவர்களின் 31 வது நினைவு நாளன்று நாம் வவுனியா முகாமில் இருந்தோம். இவர்களின் 90 ஆம் நாள் நினைவில் முகாமிலிருந்த பிள்ளையார் கோவிலுக்கு சோறு மற்றும் கறிகளை சமைத்த படைத்தோம்.


முகாமிலிருந்த சாதாரண குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 20-30 லீற்றர் நீர் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டன. ஆனால் அங்கிருந்த அரச பணியாளர்கள் நாளொன்றுக்கு 60 லீற்றர் பெற அனுமதிக்கப்பட்டனர். எமது முகாமில் ஆறொன்று ஓடிக்கொண்டிருந்தது. நாம் குளிப்பதற்கு அங்கு செல்வோம். இவ்வாறான துன்பங்களைக் கடந்து நானும் எனது ஆறு வயது மகளும் எனது தாயார் மற்றும் கண் தெரியாத பாட்டியுடன் எமது கிராமத்தில் வசித்து வருகிறோம். எனது தாயாருக்கு தற்போது 68 வயது. ஆனால் எனது பாட்டியின் வயது எனக்குத் தெரியாது.


எமது வாழ்வாதாரத்திற்காக நாம் எதையாவது செய்யவேண்டும். ஆகவே நான் தற்போது பனைமட்டை வெட்டி விற்றுவருகிறேன். நான் 100 பனைமட்டைகளை 400 ரூபாவுக்கு விற்பேன். இது பெரிய ஆதாயத்தை ஈட்டித் தராது. ஆனால் பிழைப்பதற்கு வேறு வழியில்லாததால் இதனைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன். நாங்கள் உண்பதற்கு உழைக்கவேண்டும். நாங்கள் பாதுகாப்புக்காக இரு நாய்களை வைத்திருக்கிறோம். 'ஊசிபாபு' 'பட்டாசு' என அந்நாய்களுக்கு எனது மகள் பெயர் வைத்துள்ளார். எனது கணவர் தற்போது உயிருடனிருந்திருந்தால் நாம் எமது வாழ்வைப் பற்றி எதுவும் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. எனது தாயார் பனை ஓலைகளைக்கொண்டு பெட்டி தயாரிக்கிறார். எனது கணவரின் சாவு எனது தாயாரை மனதளவில் பெரிதும் பாதித்துவிட்டது. இவரது மனநலம் பாதிக்கப்பட்டதால் நான்கு மாத காலம் வரை அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். எனது தாயார் எப்போதும் அழுதுகொண்டேயிருப்பார். தற்போது அவர் ஒரளவு குணமாகி வருகிறார். எனது வேலைகளில் அவர் உறுதுணையாக இருக்கிறார். 


நன்றி - புதினப்பலகை
ஓவியங்கள் - ஓவியர் புகழேந்தி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. Yuththththin echchankal!
    Kandathu ivaithan michcham!
    Kaanathavai ekka chakkam!
    Vendame inyorupothum yuththam!
    Vendiduvome Iravanai Niththam!

    ReplyDelete