ஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்!

ஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் அவா. அது எனக்குமட்டுமல்ல ஈழவிடுதலையை நேசிக்கும் அனைத்து ஈழ அபிமானிகளுக்கும் இருக்கும் ஒரு ஆத்மார்த்தமான உணர்வின் வெளிப்பாடு. இனவிடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திய படைப்புகள், எப்போதும் போராட்டத்தின் நியாயத்தை எடுத்தியம்பியும், அப்போராட்டத்தின் வீச்சை வலுப்படுத்தியும் நிற்பதுடன், அந்தப்போராட்டம் தொடர்பான உண்மை நிலையை பலதரப்பட்ட மக்களிடம் பதிவுசெய்வதனூடாக போராட்டத்துக்கான ஆதரவுப்பரப்பை விஸ்தரிக்கக்கூடிய கருத்தியல் ரீதியான தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்.அத்தகய படைப்பாயுதங்களில ஒன்று ஓவியம்.

ஈழவிடுதலைப் போராட்டத்தை ஓவியங்களில் உயிர்ப்பித்துக் காட்டிய ஓவியர் புகழேந்தி அவர்களைப் பொறுத்தவரை, அப்போராட்டத்தை நீண்டகாலமாக நேசிப்பவர். தேசியத்தலைவர் பால் மிகுந்த அபிமானம் கொண்டவர். ஈழமக்களின் போராட்டம் பற்றிய தெளிவான உணர்வுடனும் பற்றுறுதியுடனும் தளராத நம்பிக்கையுடனும் செயற்பட்டு வருபவர் என்பதற்கு அப்பால், முள்ளிவாய்க்கால் யுத்தபேரிடிக்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட தளர்வுநிலையைக் கணித்து தனக்கான பொருத்தமான நிகழ்ச்சிநிரலை ஒழுங்குபடுத்தி செயற்பட்டுவரும் ஒரு தலைச்சிறந்த படைப்பாளி.  எப்பாடுபட்டேனும் தமிழ்மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தின் கனதியை குறையவிடக்கூடாது என்பதற்காக, அந்தப்பாரத்தையும் தலைவரின் சிந்தனையையும் மனதில்கொண்டு தனது ஆயுதமாகிய தூரிகையை கையில் எடுத்து ஈழமக்களின் விடுதலைக்காக பாடுபடும் ஓவியர் புகழேந்தி அவர்கள் ஈழத்தமிழருக்குக் கிடைத்த ஒரு உன்னத ‘ஓவியப்போராளி’ என்று கூறினால் மிகையாகாது.

1956ம் ஆண்டு இங்கினியாக்கலையில் சிங்கள இராணுவம் சிங்களக்காடையர்களுடன் இணைந்து நூற்றிஐம்பதிற்கும் மேற்பட்ட  ஈழத்தமிழர்களை படுகொலைசெய்தது. அப்படுகொலையுடன் தொடங்கி முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை வரை கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர். ஊனமடைந்தவர்கள், விதவைகளாக்கப்பட்வர்கள் என ஈழத்தமிழினத்தின் அவலங்கள் தொடர்கின்றன. அடையாளம் தெரியாமல் இறந்தவர்களினதும், காணாமல் போனவர்களினதும் படங்களுடன் கண்ணீருடன் அலையும் பெற்றோர்கள் இன்னும் அவர்கள் இருப்பார்கள் என்ற சிறிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள். இதுபோல் பலவகைகளில் தொடரும் ஈழத்தின் அவலம் சொல்லிமாளாது.

சிங்கள ஆட்சியாளர்கள் முள்ளிவாய்க்கால் போருடன் ஈழத்தமிழ்மக்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகச் சொல்கின்றனர். வெற்றி மமதையில் ஈழத்தமிழ்மக்களை அடிமைகளாக நடாத்திவருகின்றனர். பெரும்பான்மை இனத்திற்குச் சாதகமாக அரசியல், பொருளாதார, நீதிச்சட்டங்களை மாற்றியமைத்து இனி எப்போதும்  ஈழத்தமிழ்மக்களை பாதுகாக்க குரல் கொடுக்க யாருமில்லை என்ற ஆணவத்தில் எக்காளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அனால் சிங்களம் தனித்து போரிட்டு தமிழீழப்போராட்டத்தை பின்னடைவுநிலைக்குத் தள்ளவில்லை. என்பது மட்டும் வெளிப்படையான உண்மை.

சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்கும், வழுவிழக்கச் செய்வதற்கும் பல்வேறு தந்திரோபாயங்களைச் கையாள்கின்றது. இதுதான் ஈழவிடுதலைப் போராட்டம் எதிர்நோக்குகின்ற இன்றைய இக்கட்டான காலகட்டம்.

இத்தருணத்தில்  ஈழவிடுதலைப் போராட்டத்தின் வீச்சு வலிமையிழந்து போகாமல் பாதுகாத்து விடுதலை உணர்வை வலுப்படுத்தி புதிய சந்ததிக்கு உணர்வை ஊட்டுவது மிகவும் முக்கியமானது. இந்த முக்கிய இலக்கு ஓவியர் புகழேந்தி அவர்களின் ‘போர்முகங்கள்’ எனும் கலைப் படைப்பில் மிகவும் பிரதானப் பட்டிருக்கின்றது.

அவரின் தூரிகையில் ஈழப்போராட்டம், மக்களின் உணர்வலைகள், அவர்கள் அடைந்த அவலங்களின் வெளிப்பாடு என ஈழப்போராட்டத்தின் பல்வேறுபட்ட பரிணாமங்களை கவனத்திலெடுத்து படைக்கப் பட்டிருப்பது தனிச்சிறப்பு.

அவருடைய படைப்புகள் மிகவும் ஆழமாகவும் அனுபவம் மிக்கதாகவும் அமைந்துள்ளன. குறிப்பாக அவரது தூரிகை ஈழத்தமிழர்களின் வேதனைகளை, போராளிகளின் போர்ப் பங்கேற்புக்களையும் போரியல் வடிவங்களையும் யதார்த்தமாகவும் உனர்வுபூர்வமாகவும் உயிரோட்டமாகவும் வெளிக்கொண்டுவந்துள்ளது.
அதேவேளை ஈழத்தமிழர்களின் போரட்டத்திற்காக பல அறவழித் தியாகங்களையும் போரட்டங்களையும் செய்து எப்போதும் உறுதுணையாகவும் நம்பிக்கையுடனும் தோள் கொடுத்துக்கொண்டிருக்கும் தமிழக மக்களிடம் ஒரு பாரிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் அவரது ஓவியங்களில் அதிகமாகவே உண்டு. அதுவே அரசியல் ரீதியான ஒரு ஒருங்கிணைவிற்கும், மாற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

படைப்பில் குறிப்புணர்த்தும் விடயமாக உலகத்தில் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஈழவிடுதலையை வென்றெடுக்க அயராது பாடுபடவேண்டும். முள்ளிவாய்க்கால் கரையில் தமிழனின் வீரம் வீழ்ந்ததாக சிங்களம் பறைசாற்றினாலும் சாம்பல் மேட்டிலிருந்து எழும்‘பீனிக்ஸ்’ பறவை போல தமிழீழம் மலர்ந்தேதீரும் என்ற எண்ண அலையையும், விடுதலையானது ஈழத்தமிழனுக்கு ஏன் அவசியமானது என்பதையும், மக்கள் இதற்காக கொடுத்த விலை சந்தித்த அவலத்தையும், தமிழனின் வீரத்தை எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாது என்பதையும் பதிவுசெய்ததனூடாக தமிழ்மக்களிடையே தளர்வு நிலையை போக்கி தன்னம்பிக்கையையும் எழுச்சியையும் ஏற்படுத்தும். இந்த ஓவியங்கள் தமிழர்களுக்கு கிடத்த அருமையான வரலாற்று ஆவணங்கள்.

துவண்டுவிடாதே தமிழா! அவலங்களையும் அளிவுகளையும் தாங்கிய ஈழத்தமிழினம் சிங்களத்தின் கொடும் பிடிக்குள் அகப்பட்டுள்ளது. அவர்களின் மெளனம் இயலாமையின் வெளிப்பாடு அல்ல. காலம் கனியும் என்ற நம்பிக்கையில், அதற்கான களத்தை உலகத் தமிழ் மக்கள் ஏற்படுத்தித் தருவார்கள், வருவார்கள் என்ற நம்பிக்கையின் எதிர்பார்ப்பில் தளராது வேதனைகளைத் தாங்கி காத்திருக்கின்றது என்ற மனஉணர்வே புகழேந்தி அவர்களின் ஓவியங்களை பார்த்துவிட்டு வரும்போது ஏற்படுகின்றது.

அத்தருணத்தில் தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினக்கலாமா! வாழ்வை சுமையென நினத்து தாயின் கனவை மிதிக்கலாமா? உரிமையை இழந்தோம்! உணர்வை இழக்கலாமா? என்ற பாடல் வரிகள் எமது உணர்வுகளின் நினைவுகளை மீண்டெழுப்புகின்றன.

ஈழத்தவன்

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment