இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஆறாவது தேர்தல் நாடு முழுவதிலும் நாளை நடைபெறவிருக்கின்றது. இலங்கையில் சர்வஜன வாக்குரிமை முறைமை நடைமுறைக்கு வந்து இந்த 78 ஆண்டுகால வரலாற்றில் இத்துணை வன்முறையும், குழப்பங்களும், குளறுபடிகளும், அதிகாரத் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்ற தேர்தல் எதுவுமில்லை என்ற சிறப்பு மகுடத்தோடு இந்தத் தேர்தல் நாடகம் இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.
தேர்தல் பிரசாரங்கள் நேற்று முன்தினம் இரவுடன் ஓய்வுக்கு வந்தன. நாளை வாக்களிப்பு. நாளை மறுதினம் காலையில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது பெரும்பாலும் தெளிவாகிவிடும்.வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணுதல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியாகி விட்டன.
எனினும், இதுவரை பிரசார காலத்தில் இடம்பெற்று வந்துள்ள வன்முறைகள், இரு பிரதான வேட்பாளர்களிடையேயும் நிலவும் கடும் போட்டி, இரு தரப்புகளுமே வெளிப்படுத்திப் பிரதிபலித்து வரும் துவேஷ விரோதக் கருத்துக்கள் என்பவற்றை நோக்கும்போது, தேர்தல் பிரசாரம் மட்டுமல்லாமல், வாக்களிப்பும் கூட சரித்திரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான வன்முறைகள் நிறைந்ததாக இம்முறை அமையும் என்றே தோன்றுகின்றது.
முதல் தடவையாகத் தேர்தலை நடத்துவதற்கு தனித்தும் விசேடமாகவும் சிறப்பு அதிகாரங்களைக் கொண்டிருக்கும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமே தமது உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விசனிக்கும் நிலைமை இந்தத் தேர்தலின்போது ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.அது மாத்திரமல்ல. தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவுகளைக் கடைப்பிடிக்கும்படி நாட்டின் உச்ச நீதி, நியாயாதிக்கமுடைய உயர்நீதி மன்றம் விடுத்த உத்தரவே கிடப்பில் போடப்பட்டு விட்டதாக மக்கள் உணரும் நிலைமை.
தேர்தல் பிரசாரம் தொடர்பில் அரச சொத்துக்கள், அரச கட்டமைப்புகள், அரச ஊழியர்கள் என்று சகல தரப்புகளும், வசதிகளும் ஒரு பக்கச்சார்பாகத் துஷ்பிரயோகம் செய்யப்படுவது அப்பட்டமாக துலாம் பரமாக வெளிப்பட்டு நிற்கின்றது.
அரச ஊடகங்களோ ஆளும் தரப்பு வேட்பாளரை மட்டும் பிரசாரப்படுத்தும் அவரது முழு ஊதுகுழல்களாகி விட்டன என்பது வெளிப்படையான உண்மை.
குறுகச் சொல்வதானால், எப்படி எப்படியெல்லாம் தேர்தல்கள் நடத்தப்படக்கூடாதோ, எவையெவை எல்லாம் நீதி, நியாயமான தேர்தல்களுக்கு மாறானவையோ அவை எல்லாம் அப்படி அப்படியே இங்கு இத் தேசத்தில் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி அரங்கேறுவதுதான் நாட்டின் பெரும் துரதிஷ்டமாகும்.
தேசியப் பத்திரிகைகளின் பெயரைப் பயன்படுத்தியே அநாமதேய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, மக்களைத் தவறாக வழிநடத்தி, அதன்மூலம் வாக்குத் தேடும் அளவுக்கு சில தரப்புகள் தாழ்ந்து போயி ருக்கின்றமை மிகவும் வெட்கக்கேடான விடயமாகும்.
இவ்வாறு பொய், புரட்டு, ஊழல், துஷ்பிரயோகம், அடாவடி, அட்டகாசம், அத்துமீறல், பதவித் துஷ்பிரயோகம், பாதுகாப்புத் தரப்பைத் தவறாகப் பயன்படுத்தி சாதக நிலையைப் பெற்றுக்கொள்ளுதல் என்ற பல குளறுபடிகளோடு அரங்கேற்றப்படும் இத் தேர்தலை "சபாஷ் சரியான போட்டி'என்று விதந்து ரைக்கும் வகையில் சவாலாக எதிர்கொண்டு எதிர்க் கட்சிகள் களத்தில் இறங்கியிருக்கின்றமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்நிலையில் இத் தேர்தல் நடவடிக்கை விடயங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர், வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களினால் இத் தேர்தல் குளறுபடிகளைச் சரியாக அவதானித்து உண்மைகளை வெளிப்படுத்த முடியுமா, அப்படி வெளிப்படுத்தினாலும் கூட, அநியாயம் இழைத்த தரப்புகள் தவறான முறையில் தேர்தல் லாபம் ஈட்டாமல் இருப்பதை அந்த வெளிப்படுத்தல்கள் தடுக்கும் வகையில் பயனளிக்குமா என்பவையெல்லாம் சந்தேகமே.
நீதியான நியாயமான சுதந்திரமான சுயாதீனமான தேர்தலுக்கான வாய்ப்புகள் தொலைக்கப் பட்டமையால், கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் பட்ரிஷியா புட்டனிஸ் அம்மையார் தெரிவித்தமை போல, சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு இத்துறையில் கெட்ட பெயரையே அது சம்பாதித்துத் தரப்போகின்றது என்பது திண்ணம்.
பதவி மேல் ஆசையும், அதிகாரத்தில் இருப்பதற்கும், அதில் இருப்பவருடன் ஒட்டிக்கொண்டு தம் காரியங்களைச் சாதிப்பதற்கும் எண்ணுபவர்களின் ஆட்சி மோகமுமே இதற்கெல்லாம் காரணம்.
0 கருத்துரைகள் :
Post a Comment