நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் சர்ச்சைக்குள்ளான அரசியல் விவகாரங்களில் ஒன்று, தடுப்புக்காவலில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றுக் கணக்கானஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் நிலமை பற்றிய விடயமாகும்.
இந்தக் கைதிகளுக்காகக் குரல் எழுப்புதல், அவர்களைக் காலதாமதம் செய்யாமல் விடுவிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்தல்,அதன் மூலம் இத்தனைஎண்ணிக்கையானோரை "வெற்றிகரமாக" விடுவிக்கச் செய்தோம் என உரிமை கோருதல்.... இப்படி இந்த விடயத்தை வைத்து சில தரப்புக்கள் அண்மைக்காலத்தில் பண்ணிய அரசியல் எல்லோருக்கும் நன்கு தெரிந்தது தான்...!
இத்தகைய எத்தனங்களில்,இந்தக் கைதிகளின் அவல நிலைமை பற்றிய உண்மையைப் புரிந்து, உணர்ந்து, கவலைப்பட்டு, வேதனையுற்று, அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீ திகளுக்கு காலம் தாமதித்தாவது நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நியாய எண்ணம் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அரைவாசி இருப்பதாகக் கருதினாலும் கூட, எஞ்சிய அரைவாசி இலக்கும் இவ் விவகாரத்தில் குரல் எழுப்புபவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வதன் மூலம் இதில் அரசியல் லாபம் ஈட்டிக்கொள்வதே என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
அவசர காலச் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையங்களிலும்,பிற தடுப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் வாடும் தமிழர்களின் விடயங்களைப் பொறுத்தவரை அவ்விவகாரம் அரசியலாக்கப்படுகின்றதே தவிர,அதில் சட்டம் தனது கடமையைச் செய்வதாகத் தெரியவில்லை.
இக்கைதிகளின் விடயத்தில் வேண்டுமென்றே காட்டப்படும் நீண்ட காலதாமதத்துக்கு அரசியல் தலைமைத்துவங்களின் இலக்கு வைக்கப்பட்ட நோக்கங்கள் அல்லது இக் கைதிகள் தமிழர்கள் என்பதால் அவர்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும் என்ற உதாசீனப்போக்கே காரணம் என்பது வெளிப்படையானது.
இந்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இக்கைதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்படுபவர்கள் போன்ற ஒரு மாயை தமிழர்கள் மத்தியில் விதைக்கப்படும் விதத்தில் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
நேற்று இத்தனை பேர் விடுவிப்பு, இன்று இத்தனை பேர் விடுதலையாகினர், இத்தனை பேர் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டனர் என்ற செய்திகள் ஒரு புறம் வெளியாகின்றன. மறுபுறத்தில் இத்தகைய விடுதலைக்காக அக்கைதிகள் நீதிமன்றுக்குக் கூட்டிவரப்படும் சமயத்தில் அவர்களின் விடுவிப்பை ஆட்சேபித்து எதிர்ப்பு நடவடிக்கைளில் சட்டதரணி களும் பிறரும் ஈடுபடுகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவரான இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் அவரது சகாக்களும் கூடக் காணப்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடு மூலம் ஆளும் தரப்பு "மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டுவது போல" இரட்டை வேடம் போடுகின்றது என்பது தெளிவு.
ஒருபுறம் சிங்களவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தான் அரசுத் தலைமை இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கிறது என்ற செய்தி தமிழர்களுக்கு.மறுபுறம் அரசுத் தரப்பில் முக்கிய சட்டப் பிரமுகர்கள் இந்த விடுவிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், ஆட்சேபனை தெரிவிப்பதால் இந்த விடுவிப்பு அரசுத் தலைமையின் விருப்பத்துடன் நடக்கவில்லை, சட்டத்தின் வழமையான நடவடிக்கையே என்ற கருத்து சிங்களவர்களுக்கு.
தேர்தலை ஒட்டி நடக்கும் இரட்டை வேடம் என்று கருதி இதனை இந்தப் போக்கை நாம் கவனத்தில் எடுத்காமல் விட்டுவிடலாம். யார் குற்றியாவது எப்படிக் குற்றியாவது அரி சியானால் சரி, என்ற கணக்கில் எப்படியாவது இந்தக் கைதிகள் விடுதலையாகி வெளியே வந்தால் போதும் என்று நாம் பொறுத் திருக்கலாம். ஆனால் அதிலும் ஒரு விடயம் கவனிக்கத்தக்க சிரத்தை காட்டப்பட வேண்டிய அம்சம் உள்ளது.
அவரச காலச் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையங்களிலும், தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும் வாடிய இந்தத் தமிழ்க் கைதிககள் இப்போதெல்லாம் சில நிபந்தனைகளுடன் விடுதலை என்று வெளியே விடப்படுகின்றார்கள். அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ் வளிக்கப்படும் உத்தரவுடன் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றார்கள். அப்படியில்லாமல் விடுதலை செய்யப்படுவோர் மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திடப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தினால் உத்தரவிடப்படுகின்றது.
இத்தகைய உத்தரவுகள் எத்தகைய சட்டத்தின் கீழ் வழங் கப்படுகின்றன என கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தமிழர் கள் சார்பில் சிரேஷ்ட சட்டதரணி கே.வி. தவராஜா கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைதாகித் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவரைப் பிணையில் விடுவிப்பதாயின் பிணைக்கு நிபந்தனை விதிப்பது வேறு. அதற்கான நியாயாதிக்கம் நீதிமன்றத்துக்கு உண்டு. ஆனால் அக்கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப் பத்திரமே தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர்கள் முற்றாக விடுதலை செய்யப்படுவது வேறு. அத்தகைய விடுதலைக்கு நீதிமன்றம் நிபந்தனை ஏதும் விதிக்க முடியாது. அதே போல அவர்கள் இவ்வளவு காலம் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை உத்தரவும் விடுக்கப்பட முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. குற்றப்பத்திரமே தாக்கல் செய்யப்படாத ஒருவருக்கு எந்தக் கட்டு பாடுமில்லாத விடுதலையையே நீதிமன்றம் அளிக்க முடியுமே தவிர, அந்த விடுதலைக்கு நிபந்தனை விதிக்கும் வகையிலான தண்டனையை வழங்க முடியாது.
இதனையே சிரேஷ்ட சட்டத்தரணி தவராஜா நீதிமன்றத் துக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். ஆனாலும் இந்தக் சட்டச் சிக்கலை நீண்ட விவாதத்துக்கு உட்படுத்தி, அதன் காரணமாக இக்கைதிகளின் விடுதலை தாமதமாகிவிடக்கூடாது என்ற காரணம் கருதி, தவறான சட்ட முறைமையின் கீழாவது அக்கைதிகள் வெளியே வருவதைப் பொறுத்து, சமாளித்து, பார்த்திருக்க வேண்டிய நிலைமை சட்டத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த தமிழ்த் தரப்புக்கு....!
எத்தனை காலத்துக்குத்தான் சட்டத்தின் பெயரால் இத்தகைய காதில் பூச்சுற்றும் வேலைகள் தொடரப் போகின்றனவோ....? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.....!
0 கருத்துரைகள் :
Post a Comment