இராணுவ சட்டத்தின் பிரகாரமே ஜெனரல் பொன்சேகா கைதானார்

இராணுவத் தளபதியாகவும் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்த காலத்தில் இராணுவ சட்டத்தையும் ஒழுக்கங்களையும் மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சட்டத்தின் அடிப்படையிலேயே அவ்விரு பதவிகளையும் வகித்து ஓய்வுபெற்று எதிரணியினரின் பொது ஜனாதிபதி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், எந்தவொரு இராணுவ அதிகாரியோ அல்லது வீரரோ சேவையில் இருந்த காலத்தில் இழைத்த குற்றத்திற்காக அவர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னரும் 6 மாத காலத்திற்குள் இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியுமென்றும் விளக்கமளித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா அவரது கொழும்பு அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து விளக்கமளிக்கும் முகமாக நேற்று மாலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

இங்கு பேசிய அரச பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல;

"திங்கட்கிழமை இரவு 9 மணியளவிலேயே சரத் பொன்சேகா இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பிரதானமாக அவர் இராணுவத் தளபதியாகவும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்த காலத்தில் இராணுவச் சட்டம் மற்றும் ஒழுக்கங்களை மீறிச் செயற்பட்டதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு குறித்து இரகசியபேச்சுகள் நடைபெறும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் தேசிய பாதுகாப்புப் பேரவையில் அங்கத்தவராக இருந்து கொண்டு ஜெனரல் பொன்சேகா அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் தலைவர்களுடனும், கட்சிகளுடனும் பல தொடர்புகளை பேணி வந்துள்ளார்.

எனவே, இவற்றின் அடிப்படையிலேயே இராணுவ சட்டத்தின் 57(1) ஆவது சரத்தின் கீழ் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்த ஒருவர் ஓய்வு பெற்றதன் பின்னரும் அவர் தனது சேவைக்காலத்தில் இழைத்த குற்றத்திற்காக 6 மாத காலத்துக்குள் இராணுவ சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும். இதனடிப்படையிலேயே பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது பதவிக் காலத்தில் எடுத்த தீர்மானங்களுக்கு அரசியல் தொடர்புகள் காரணமாக இருந்திருக்கின்றன. இதற்கமைய அவரது செயற்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மேலும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கமைய சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை குறித்து முடிவு செய்யப்படும்.

அத்துடன் சரத் பொன்சேகாவின் கைதில் பொலிஸார் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. அவரை இராணுவப் பொலிஸாரே கைது செய்தனர். அவர் தற்போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அவருடன் இருந்த வேறு சிலரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அது தொடர்பாக சி.ஐ.டி.யினர் விசாரணை செய்து வருகின்றனர் என்று கூறினார்.

இதேநேரம், இராணுவ சேவையில் பதவி வகித்த போது இராணுவ சட்ட, ஒழுக்கங்களை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே ஜெனரல் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் எதுவும் இதில் அடங்காது என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல இதன் போது சுட்டிக்காட்டினார். எனவே, அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் இருப்பின் சிவில் நீதிமன்றம் ஊடாகவே அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

"நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்தாரா அல்லது யுத்த இரகசியங்களை வெளியிட்டாரா என்று தற்போதே கூற முடியாது. விசாரணைகளின் முடிவிலேயே அது தெரியவரும். எனினும் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டமைக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறிருப்பினும் குற்றச்சாட்டுகள் பற்றி கூற முடியாது. விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களமே அது குறித்து தீர்மானிக்கும். சாட்சியங்களின் பின்னரானது இரண்டாவது நடவடிக்கை. அது பற்றி இப்போதே கூற முடியாது.

இதேநேரம், ஜெனரல் பொன்சேகா தன் சார்பாக சட்டத்தரணியொருவரை அமர்த்திக் கொள்ள முடியும். அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியும். அதை பயன்படுத்திக் கொள்வது சரத்பொன்சேகாவின் விருப்பம் என்றும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர்

இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இது பற்றி பேசுகையில்;

ஆதாரங்களின் அடிப்படையிலேயே இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதா இல்லையா என்பது பற்றி முடிவாகும். இதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென்று கூற முடியாது. கூடிய விரைவில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனினும் சரத் பொன்சேகா தனக்கென்று சட்டத்தரணியொருவரை நியமித்துக் கொள்ள முடியும்.

அது மட்டுமல்லாது அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், அதை ஆட்சேபித்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும்.

இதேநேரம், ஜெனரல் பொன்சேகா தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. கூட்டுப் படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி என்ற வகையில் சுகாதார வசதிகளுடன் அவர் மரியாதையாகவே உபசரிக்கப்படுகிறார். ஜெனரல் பொன்சேகாவை அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்குப் பார்க்க முடியும். பாதுகாப்பு அமைச்சிடம் அதற்கான அனுமதி இன்று (நேற்று செவ்வாய்க்கிழமை) கோரப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் அதற்கான அனுமதி வழங்கப்படும்.

இராணுவத்தில் பணியாற்றிய யாதுமொரு அதிகாரியோ அல்லது படைவீரரோ சேவையிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னரும் சேவைக்காலத்தில் இழைத்த குற்றத்திற்காக 6 மாத காலத்திற்குள் இராணுவச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய முடியும்%27 என்று கூறினார்.


தினக்குரல்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment