இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளில் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் வெளிப்படுத்திவரும் குளறுபடித்தனம் சொல்லிமாளாதவை. அந்த வரிசையில் தாமும் சளைத்தவர் அல்லர் என்பதை யாழ்ப்பாணத்தில் வந்து நின்று ஒருபாட்டம் தமது கருத்துக்களையும் அழுதுகொட்டித் தீர்த்துக் கட்டியிருக்கின்றார் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண.
அங்கு அவர் சொன்ன சில கருத்துக்கள் வேடிக்கையானவை. சில பொருத்தமேயற்றவை. சில புரிந்து கொள்ளவே முடியாதவை. கடந்த மூன்று வருடங்களில் அவர் 126 "மரதன்" அமர்வுகளை நடத்திய இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் இப்போது பதின்மூன்று கட்சிகளே எஞ்சிநின்று, கூட்டத்துக்குச் சமுகம் தருகின்றன. அவற்றில் பதினொரு கட்சிகள் அரசுக் கூட்டமைப்பில் இருப்பவை. எஞ்சிய இரண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும்தான் எதிர்த்தரப்பில் இருப்பவை. ஆளும் தரப்புக்கு அடுத்த பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவை இந்த அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் பங்குபற்றுவதேயில்லை. அப்படியிருக்க, தாம் தலைமை வகிக்கும் அந்த அமைப்புக்கு "அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு" என்ற நாமத்தை அவர் இன்னமும் வைத்துக்கொண்டிருக்கின்றார். வைத்திருந்து விட்டுப் போகட்டும்.
ஆனால் அது ஏதோ இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சமாச்சாரம் என்று அவர் யாருக்கும் கயிறுவிடாமல் இருப்பது நல்லது. அடுத்தது அந்தக் கட்டமைப்பிற்குச் சமுகம் தரும் அல்லது அதில் பங்குபற்றும் கட்சிகளின் மொத்தம் ஒன்பது கட்சிகள் தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை என்று யாழ்ப்பாணத்தில் கூறியுள்ள அவர், அந்தக் கட்டமைப்பில் வடக்குத் தமிழருக்கு எதிர்காலத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார். இந்தக் கூற்றின் மூலம் தமிழர்களைப் பிரதிநிதித் துவப்படுத்தும் பெரும்பாலான கட்சிகள் அந்தக் கூட்டமைப்பில் இருக்கின்றன என்பது போலவும், ஆக வட பகுதித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமே அங்கு இல்லை என்பது போலவும் அவர் கதை விடுகின்றார்.
இது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் எத்தனமின்றி வேறில்லை. "அ", "ஆ" என்ற பெயர்களில் எல்லாம் கட்சிகளை வைத்துக்கொண்டு அவை எல்லாம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன எனக் கட்சிகளின் மொத்த எண்ணிக்கையில் கயிறு விடாமல், தமிழர்களின் எத்தனை வீதமானோரைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் தனது அந்த அமைப்பின் கூட்டங்களில் பங்கு பற்றுகின்றனர் என்ற கணக்கை அவர் கூறமுன்வர வேண்டும். கடந்த பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 23 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவர் மட்டுமே (ஈ.பி.டி.பியின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே) அக்கூட்டத்தில் பங்குபற்றத் தகுதியுடைய அரசுத் தரப்பின் ஒருவராவார். அமைச்சர் முரளிதரன் (கருணா) கூட சிங்களக்கட்சி ஒன்றின் நியமன நாடாளுமன்ற உறுப்பினரே தவிர தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அல்லர்.
தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதே தற்போதைய அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமை வகிக்கும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு. அந்தக் குழுவில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இருப்பதாகக் காட்டுகிறார் விதாரண. அது மட்டுமல்ல, வடக்குகிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 23 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22 பேர் அந்தக் கட்டமைப்பில் இல்லாதபோதிலும் வடக்கின் பிரதிநிதித்துவம் மட்டும்தான் அதில் இல்லை என்பது போலவும், விரைவில் அதற்கும் இடமளிக்கப்படும் என்றும் பூச்சுற்றுகின்றார் அவர். மற்றும் ஒரு கதையையும் அவர் விடுகின்றார். தமது கட்டமைப்பின் கூட்டங்கள் அரைவாசிக்கு முன்னேறிய நிலையில் அக்கூட்டங்களில் பங்குபற்றுமாறு தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தார் என்றும் ஆனால் அவர்கள் பங்குபற்றாமல் மறுத்தமை துரதிஷ்டம் என்றும் "றீல்" விட்டிருக்கின்றார் அவர். இச்சந்தர்ப்பத்தில் இரண்டு விடயங்களை நாம் அவருக்குப் சுட்டிக் காட்டுவது அவசியமாகின்றது. ஒன்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தின் அமைப்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவேயன்றி, அமைச்சர் விதாரண அல்லர். ஆகவே யாரை அந்தக் கட்டமைப்பில் பங்குபற்ற அழைப்பது என்பதைத் தீர்மானிப்பவர் ஜனாதிபதியேயன்றி அக்கட்டமைப்பின் தலைவரான திஸ்ஸ விதாரண அல்லர்.
அடுத்தது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டைக் காண்பதற்காக இந்தக் கட்டமைப்பைத் தாம் அழைத்துள்ளதால், வடக்குகிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கூட்டமைப்பை அதற்குத் தாம் அழைக்கவேயில்லை என ஜனாதிபதியே திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதனை அண்மையில் ஜனாதிபதிக்குக் கூட சுட்டிக்காட்டி நினைவுபடுத்தியிருந்தனர்.
ஆகவே யதார்த்தம் அல்லாத உண்மை அல்லாத கருத்துக்களின் மீது தங்களின் வாதங்களைக் கட்டியெழுப்பி அதன் மூலம் தமது செயற்பாட்டை நியாயப்படுத்தலாம் என தென்னிலங்கைத் தலைவர்கள்அதுவும் பேரினவாதப் போக்குடைய சக்திகளோடு தமது பதவி ஆசைக்காக இணைந்து கொண்டு செயற்படும் இடதுசாரிகள் கருதுவார்களே யானால், அந்தப் பருப்பு தமிழர் மத்தியில் வேகாது என்பதை முற்கூட்டியே அத்தகையோர் புரிந்து கொள்வது நல்லது.
0 கருத்துரைகள் :
Post a Comment