ஈழப் படுகொலை புதிய சாட்சியம்!

இலங்கை அதிபர் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில்...

ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது!

இலங்கையிலிருந்து செயல்படும் 'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு, இந்த ஆவணத்தை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்டது அந்த அறிக்கை. 2008-ம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மே 18-ம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை அதில் விரிவாகதொகுத்திருக்கிறது.

மே மாதம் 8-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்பதை அங்கிருந்த நபர்களின் நேரடியான வாக்குமூலங்கள் மூலமாக இந்த அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து வெளியாகி வந்த செய்திகளில் பெரும்பாலானவை யூகங்கள் மற்றும் செவி வழிச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டிருக்க கடந்த டிசம்பர் 13-ம் தேதி வெளியிடபபட்ட இந்த அமைப்பின் அறிக்கைதான் அந்த கொடூரங்களை முதன்முதலாக விரிவான முறையில் ஆவணப்படுத்தியிருக்கிறது.

இந்த அமைப்பு விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசாங்கத்தையும் விமர்சிக்கின்ற ஓர் அமைப்பு. இதன் உறுப்பினர்கள் பலரும் தலைமறைவாக இருந்தே பணியாற்றினர். இருதரப்பையும் விமர்சனம் செய்ததால், அவர்களுக்கு எல்லா திசைகளில் இருந்தும் அச்சுறுத்தல் வந்து கொண்டேயிருந்தது. எனினும், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தைரியமாக உண்மைகளை சேகரித்து உலகுக்கு வெளிப்படுத்தி வந்தார்கள்.

'இலங்கை அரசு எவ்வளவு கொடூரமாக தமிழர்களை படுகொலை செய்தது. அப்படிச் செய்துவிட்டு இன்றுவரை எவ்வாறு இந்தியாவையும், உலக நாடுகளையும் அது ஏமாற்றி வருகிறது' என்ற விவரங்களை விரிவாக இந்த அறிக்கையில் தொகுத்திருக்கிறார்கள். இதில் இடம் பெற்றிருக்கும் கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்மை உலுக்குகின்றன. நாம் பல்வேறு செய்திகளின் மூலமாக ஏற்கெனவே அறிந்து கொண்ட விஷங்கள்தான் என்றபோதிலும் அது நம் நெஞ்சை பதைக்க வைக்கிறது.

பல்வேறு நபர்களை விசாரித்து தடையங்களைசேகரித்து மிகவும் ஆதாரபூர்வமாக இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறார்கள்.யுத்தப்பகுதிகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையை சொல்லும்போது இலங்கை அரசு ஏமாற்று தந்திரங்களை கையாண்டது. இன்றைக்கும்கூட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு சிங்கள அரசு எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

2009 ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் முதல் வாரம் வரை சுமார் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன. அதே காலக்கட்டத்தில், மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருந்த 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' என்ற அமைப்பினரோ தினம் 60-லிருந்து 90 பேர் வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டு வந்தார்கள். எனவே கொல்லப்பட்டது சுமார் 6,500 பேர் வரை இருக்கலாம்' என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். அங்கு வேலை செய்துகொண்டிருந்த செஞ்சிலுவை சங்கத்தினரின் மதிப்பீடோ இன்னும் அதிகமாக இருந்தது.

புலிகளின் சுகாதாரத் துறை பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் டாக்டர் ஒருவர், இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 37 ஆயிரம் இருக்கும் என கூறியுள்ளார். மார்ச் மாதத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், ஏப்ரல் மாதத்தில் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாவும், மே மாதத்தில் 15 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த டாக்டர் தெரிவித்துள்ளார். முள்கம்பி முகாம்களிலிருந்து தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டும் என விருப்பப்பட்ட ஒருவரையும் அரசாங்கம் அனுப்பவில்லை என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

முகாம் ஒன்றில் இருந்த மருத்துவர் ஒருவரின் வாக்குமூலம் நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறது. முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எவ்வாறெல்லாம் துன்பத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை இந்த அறிக்கை விரிவாக பேசியிருக்கிறது. நன்றாக விசாரணை செய்த பிறகுதான் முகாம்களில் இருப்பவர்களை விடுவிக்க முடியும் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. விசாரணை என்ற பெயரில் மேலும் மேலும் மனித உரிமை மீறல்கள்தான் நடத்தப்படுகின்றன. எவரை வேண்டுமானாலும் புலிப் படையில் இருந்தவர் எனக்கூறி சித்ரவதை செய்வதற்கு இப்போது நல்ல வாய்ப்பு சிங்கள ராணுவத்துக்கு கிடைத்திருக்கிறது.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தமிழர்களை அவர்கள் இழிவுபடுத்தி சித்ரவதைப் படுத்தி, சொல்லொன்னா துயரத்துக்கு ஆளாக்கி வருகிறார் கள். முகாம்களில் இருக்கும் இளைஞர்களை விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கிறோம் என்ற பெயரில் தொடர்ந்து சிங்கள அரசு பிரசாரம் செய்து வருகிறது. குறிப்பாக இளம்பெண்கள் தங்களது தலைமுடியை கிராப் கட்டிங் செய்திருந்தால் அவர்களெல்லாம் புலிகளின் படையில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். முகாம்களில் இருப் பவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு சிங்கள ராணுவ வீரர்கள் எவ்வாறு ஊழல் செய்கிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்தியிருக்கிறது.

முகாம்களிலிருக்கும் பெண்கள்பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் என அவ்வப்போது வெளியாகும் ஒருசில செய்திகளைத்தவிர அவர்களுடைய உண்மை நிலை எதுவும் வெளிவருவதில்லை. பொழுது சாய்ந்த பிறகு ஒரு வேனில் வருவது, அங்கே இருக்கும் இளம் பெண்களை மட்டும் தனியாக பிரித்து அவர்களை அந்த வேன்களில் அழைத்துச் செல்வது, மீண்டும் அதிகாலை நேரத்தில் கொண்டுவந்து விடுவது என சிங்கள ராணுவம் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது.

அப்படி அழைத்துச் சென்று கூட்டிவரப்படும் பெண்கள் தமக்கு நேர்ந்த அவமானங்களை ஏற்கவும் முடியாமல், வெளியில் சொல்லவும் துணிவு இல்லாமல் அவர்கள் குற்ற உணர்வால்
தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். முகாம்களில் மட்டுமின்றி மருத்துவமனைகளிலும்கூட சிங்கள ராணுவத்தின் கொடுமை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. வவுனியா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய ஒருவர், அங்கு சிங்கள ராணுவத்தினர் அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களில் பலரை பிடித்துச் செல்வது பற்றியும், அப்படி ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படும் ஒருவர்கூடமுகாம்களுக்கு திரும்ப வரவில்லை என்பதையும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் உள்ளவர்கள் பற்றி சரியான பதிவுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஒருவர் எங்கிருந்து கொண்டு வரப்பட்டார் என்பதையோ, அவர் ராணுவத்தால் எங்கே அழைத்து செல்லப் பட்டார் என்பதையோ நாம் தெரிந்து கொள்வதற்கு வழியில்லாமல் போய்விட்டது. இந்திய அரசை இலங்கையிலுள்ள ராஜபக்ஷே அரசு எவ்வாறெல்லாம் ஏமாற்றியிருக்கிறது என்ற விவரங்களையும் இந்த அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள்.

முகாம்களின் நிலைமையைப் பற்றி சர்வதேச தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சொல்ல முற்பட்டபோது, அவர்களுடைய விசா அனுமதியை ரத்து செய்துவிடுவோம் என்று மிரட்டியதோடு அவர்கள் மீது வழக்கு தொடுப்போம் என்றும் இலங்கை அரசு மிரட்டி வந்தது. அதனால், பலர் வாய்மூடி கிடக்க வேண்டியதாயிற்று. 2006-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவின் உதவியோடு அனல்மின் நிலையம் ஒன்றை கட்டுவதற்கு இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது.

அந்த நிலையத்துக்கான இடத்தை தம்பூர் என்ற பகுதியில் தேர்வு செய்திருந்தது. அங்கு குடியிருந்த மக்களை அங்கிருந்து காலி செய்வதற்காக அப்பகுதியின் மீது இலங்கை அரசு வான்வெளி தாக்குதலை நடத்தியது. கடுமையான குண்டு வீச்சின் காரணமாக அப்பகுதி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி, எஞ்சி யிருந்தவர்கள் எல்லாம் தமது வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடம் தேடி ஓட வேண்டிய நிலை உண்டாயிற்று. அவர்கள் மீண்டும் அந்தப் பகுதிக்கு திரும்ப முடியாதபடி இலங்கை அரசு தடை விதித்து விட்டது. இவையெல்லாம் இந்தியாவுக்கு தெரிந்தே நடந்தவைதான். மார்ச் 2009- ல் இந்திய அரசு மருத்துவமனை ஒன்றை யுத்தமுனையில் திறந்தது.

அங்கு ஏராளமானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய மருத்துவர்கள், இலங்கை அரசின் தமிழர் விரோத அணுகுமுறையை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். ஒருமுறை அந்த மருத்துவமனைக்கு பஷில் ராஜபக்ஷே சில பத்திரிகையாளர்களை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அப்போது,அங்கிருந்த இந்திய மருத்துவர் ஒருவர் பஷில் ராஜபக்ஷேவைப் பார்த்து ஒரு தோட்டாவில் சிதைந்த பாகங்களை எடுத்துக்காட்டி, ''இதை நான் 6 வயது குழந்தை ஒன்றின் இதயத்துக்கு அருகில் அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்தேன்.


நீங்கள் பயங்கரவாதிகளைத்தான் சுடுகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆறு வயது குழந்தை ஒரு பயங்கரவாதியா?'' என்று ஆவேசமாக கேட்டார். பஷில் ராஜபக்ஷே பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார். இந்தியா நடத்திய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களை வெளி உலகுக்கு தெரியாமல் மறைத்ததன் மூலம் காயம் பட்டவர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு குறைத்துக் காட்டியது. இப்போதும்கூட கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா உதவி வருகிறது.

ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புதைகுழிகள் உலக நாடுகளின் கவனத்துக்கு வந்துவிடக் கூடாதே, போர் குற்றங்களுக்காக இலங்கை ஆட்சி யாளர்கள் விசாரணையை எதிர்கொள்ள நேரிடுமே என அஞ்சிய இலங்கை அரசு,அதனால்தான் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு உலக நாடுகள் பல உதவி செய்ய முன்வந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. இதை ஈழத்தமிழர்கள் இந்திய அரசின் துரோகமாகவே கருதுகிறார்கள். இந்த செய்தியை இந்த அறிக்கை பதிவுசெய்திருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஈழத்தில் நடத்தப்பட்ட போரின் வேகம் சற்று மட்டுப் படுத்தப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாயின. ஆனால், அங்கே நடந்த போரைப் பற்றி எல்லா விவரங்களையும் சேகரித்திருக்கும் இந்த அறிக்கை, 'இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்கி இலங்கை அரசு எந்த சலுகையையும்காட்டவில்லை. மாறாக இந்திய தேர்தல் முடிவதற்குள் அங்கே போரைமுடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில்தான் இலங்கையின் ஆட்சியாளர்கள் குறியாக இருந்தார்கள்' என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

கடந்த 60 ஆண்டு காலமாக இலங்கை சூழல் எவ்வாறு பேரினவாத அரசியலால் மாசுபடுத்தப்பட்டது என்பதை இந்த அறிக்கை விரிவாக எடுத்துரைத்துள்ளது. தற்போது, இலங்கையின் ஆட்சியாளர்கள் வெற்றிக்களிப்பில் இருந்தபோதிலும், இனப்பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் அங்கு ஒருபோதும் அமைதி ஏற்படாது என்பதை கோடிட்டு காட்டியுள்ள இந்த அறிக்கை, இதற்காக தமிழர்கள் மீண்டும் தனியே ஆயுதமேந்தி போராடுவது என்பதை சரியான வழியாக ஏற்கவில்லை. தற்போதையஇலங்கையின் நிலை ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து தரப்பினருக்குமே ஆபத்தானதாகத்தான் இருக்கிறது.

எனவே, இலங்கையில் ஜனநாயகத்தை உருவாக்கவேண்டியதில் தமிழர்களைப் போலவே சிங்களர்களுக்கும் பொறுப்புள்ளது. இரண்டு இனங்களையும் சேர்ந்த அரசியல் தெளிவு கொண்ட ஜனநாயக சக்திகள் சேர்ந்து செயல்படும்போதுதான் இலங்கையின் விஷச்சூழல் மாறும் என்பதை இந்த அறிக்கைவிரிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. இதில் உள்ள முக்கியமான அம்சம், போர் நடந்தபோது கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள்தான். படிக்கும்போது நமது ரத்தத்தை உறைய வைக்கும் அந்த வாக்குமூலங்கள் வெளிப்படுத்தும் உண்மைஎன்ன என்பதை அவர்களின் வார்த்தைகளிலேயே.

'மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்'

ரவிக்குமார் எம்.எல்.ஏ
ஆனந்த விகடன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment