இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்திவிட்டார்.
கடந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாகத் தாம் நின்றபோதும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தமது உபாயம் என்னவென்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
தாம் வென்று ஜனாதிபதியானதும், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டைக் கண்டு, அதனை முன்வைத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்று அப்போது அவர் வாக்குறுதியளித்தார்.
இந்த நான்கு வருட காலத்தில் அவர், இவ்விடயத்தில் தென்னிலங்கையின் இணக்கமான தீர்வைப் பெறமுனைந்தவராகத் தெரியவில்லை.ஒருபுறம் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத வழியிலேயே பெரும் கொடூரப் போரைத் தொடுத்து, அடக்கி, அழித்து, ஒழித்துவிட்டு மறுபுறம் அந்த வெற்றிச் சாதனையின் மீது நின்ற படி ஆட்சியில் தொடர்வதற்கு மீண்டும் தனக்கு ஆணை வழங்கக் கோரி மக்கள் முன் வந்துநிற்கின்றார் அவர்.
அடுத்த தடவை தீர்வுக்கான யோசனை வரையறையை மக்களிடமோ, தென்னிலங்கைக் கட்சிகளிடமோ, பிற தலைவர்களிடமோ அவர் கோரமாட்டாராம். அவரே தீர்வின் வரையறைகளை வெளிக்கட்டமைப்பை வடிவத்தை வெளிப்படையாக முன்வைப்பாராம். அதுவும் தேர்தலில் வென்றபின்னர்!
அதற்காகத்தான் இத் தேர்தலில் மக்களிடம் அதற்கு ஆணை கேட்கின்றார் தாம் எனவும் அவரே கூறிவிட்டார்.தாம் தீர்வுக்கு அடிப்படையாக முன்வைக்கப் போகும் வரையறையின் சில அம்சங்களையும் அவர் வெளிப்படுத்தி விட்டார்.
* வடக்கும், கிழக்கும் இணைக்கப்படமாட்டாது.
* மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங் கப்பட மாட்டாது.
* தற்போதைய நாடாளுமன்றத்துக்கு மேலதிக மாக, மாகாணசபைகளின் பிரதிநிதிகளை உள்ளடக் கிய மேல்சபை ஒன்று இருக்கும்.
இதுபோன்ற கருத்துக்களையே அவர் முன்வைத் திருக்கின்றார்.
தமிழர் தரப்பில் உரிமைக்கான போராட்டத்தை ஆயுத வழியில் முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மஹிந்த ராஜபக்ஷ அரசு எடுத்த கொடூர குரூர கோர இராணுவ நடவடிக்கைகள் மூலம் துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழர் தரப்பில் உரிமைக்கான போராட்ட வலிமை மிகவும் நலிவடைந்து வலுவிழந்து போய் விட்டது என்பது வெள்ளிடைமலை.
அந்த வெற்றியின் உச்சத்தில் அடக்குமுறையின் உச்சியில் நிற்கும் ஆளும் தரப்பு, கூறுவதை செவிமடுப்பதைத் தவிர, தமிழர் தரப்புக்கு மீண்டும் எகிறுவதற்கு வேறு வழியில்லை நாதியில்லை என்ற நிலைமை.
எனவே தற்போதைய தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெல்வாராயின் அவர் இப்போது கோடிகாட்டி வெளிப்படுத்தியிருக்கும் யோசனைகளின் அடடிப்படையிலேயே தீர்வுக்கான எத்தனங்கள் ஆரம்பிக்கப்படும், முன்னெடுக்கப்படும் என்பதும் உறுதியானது.
தமிழர் தரப்பைப் பொறுத்தவரை அவர்கள் தமக்கு எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலாக்கம் என்பது அவர் களது நீதி, நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய் யும் தீர்வுத்திட்ட யோசனை என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது குறிப்பிடும் தீர்வுக்கான வெளிக்கட்டமைப்புக்கு கிட்டவும் கூடப் பொருந்தி வராதது என்பதும் தெளிவானது.
அப்படியானால், இவ்விடயத்தில் தமிழர்கள் என்ன செய்யமுடியும்....?
பொருந்தியே வரமுடியாத தரப்புடன் பொரு தாமல் இருப்பதற்கு என்ன மார்க்கம்.....?
தமிழர்களுக்கு அது தெரியும். அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு இவ்வளவு விரைவாகக் கிட்டியிருக்கின்றது.
தீர்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப் பிடும் அடிப்படைகள் தமது நீதியான அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யத்தக்கன என்று தமிழர்கள் கருதுவார்களேயானால் அவர்களின் பிரதிபலிப்பு ஒரு வடிவத்திலும், இல்லையேல் பிறிதொரு வடிவத்திலும் அடுத்த 26 ஆம் திகதி பிரதிபலிக்கும் என நாம் எதிர்பார்க்கமுடியும்.தமிழ்த் தேசியம், தமிழரின் தனித்துவம், தமிழர் களுக்கான சமவுரிமை ஆகிய வேணவாக்களை வலியுறுத்தி நிற்கும் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளைக் கூட, ஜனாதிபதியின் இந்தத் தீர்வுத்திட்ட முயற்சி தொட்டுச் செல்லவில்லை என்பதும் கூடத் தெளிவானதுதான்.
0 கருத்துரைகள் :
Post a Comment