வன்முறைத் தேர்தல் பூர்த்தி


இன்று காலை இந்தப் பத்தி வாசிக்கப்படும்போது, இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியில் இருக்கப் போகின்றவர் யார் என்பது பெரும் பாலும் ஓரளவுக்கு முடிவாகியிருக்கும்.

யார் வென்றாலும், யார் தோற்றாலும், இத் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களுமே சளைக்காமல் ஏட்டிக்குப் போட்டியாகக் களத்தில் மோதினர் என்ற பதிவை மட்டும் அவர்கள் விட்டுச் செல்வர் என்பது உறுதி.

இந்தத் தேர்தலில் பிரசார காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான வன்முறைகளைப் போலவே வாக்களிப்பு சமயத்திலும் பரவலாக வன்முறைகள், குளறுபடிகள், அடாவடித்தனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற தகவல், இத் தேர்தல் ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறைக் களத்திலேயே அரங்கேறி முடிந்திருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தி நிற்கின்றது. எது, எப்படியென்றாலும், வடக்கில் யாழ். குடா நாட்டில் அச்சுறுத்தல்கள் மூலம் வாக்களிப்பைத் தடுப்பதற்குத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரிய பலனைத் தரவில்லை என உள்ளூர்த் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். குடாநாட்டு மக்களைப் பொறுத்த வரை குண்டுச் சத்தங்களும், அதிர்வுகளும் அவர்களுக்குப் புதியவை அல்ல. அவர்களின் வாழ்வின் பெரும் பகுதியே யுத்த களத்துக்குள்தான் கழிந்தது என்பது நிஜம்.

அவர்களைப் பொறுத்தவரை குண்டுச் சத்தங்களும், கடலிலிருந்து வெடிக்கும் பீரங்கிகளின் அதிர்வும், அநாமதேயங்கள் புரியும் வேலி எரிப்பு அடாவடித்தனங்களும் அவர்களைப் பெரும் அச்சத்துக்குள் ஆழ்த்தப்போவதில்லை. சுருக்கமாகக் கூறுவதானால், குடாநாட்டு மக்களைப் பொறுத்தவரை அவர்கள் பனங்காட்டு நரிகள். (குண்டுச் சத்தம் என்ற) சலசலப்புக்கு அஞ்சமாட்டார்கள்.

இலங்கையின் பிற இடங்களோடு ஒப்பிடுகையில் குடாநாட்டையும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நேற்றைய தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாகவே இருந்தது என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. வாக்காளர் பதிவுப் பட்டியல்கள் நேர்சீர் செய்யப்படாமை, வடபகுதியைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான வாக்காளர்கள் வெளிநாடுகளுக்கும், வேறிடங்களுக்கும் சென்றுள்ளமை, பெரும் எடுப்பில் இடம்பெற்ற இடப்பெயர்வு, இடம் பெயர்ந்த மக்களின் வாக்களிப்புக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாமை எனப் பல்வேறு காரணங்களினால் வடக்கில் இம்முறையும் வாக்களிப்பு மிகமிகக் குறைந்த வீதமாகவே இருக்கும் என்பது நேரத்துடனேயே எதிர் பார்க்கப்பட்ட ஒன்றே.

அதுவே எதிர்பார்த்தபடி நடந்திருப்பதாகக் கருதப்படுகின்றது. குண்டுவெடிப்பு, பீரங்கி அதிர்வு ஆகியவை மூலம் ஏற்படுத்தப்பட்ட செயற்கைப் பதற்றமோ அல்லது இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தம்பாட்டில் விரும்பிய பெயர்களில் சில தரப்புகள் வெளியிட்ட கடைசி நேரத் துண்டுப் பிரசுரங்களோ எந்தத் தாக்கத்தையும் உண்டுபண்ணவில்லை என்று களநிலைத் தகவல்கள் தெரிவித்தன.

தேர்தல்கள், வாக்களிப்பு விடயங்களில் அதிகாரத் தரப்புகளின் ஏவலாட்களாக மாறி சீருடைத் தரப்புகள் சட்டத்துக்கு மாறாக இழைக்கும் நடவடிக்கைகள் இலங்கையின் நீதித்துறையால் பாரதூரமாக நோக்கப்படும் என்பது இலங்கையின் சட்டத்துறையின் பட்டறிவாகும். அதைப் புரிந்து கொள்ளாமல் வடக்கிலும், பிற சில இடங்களிலும் சீருடைத் தரப்பினர் நடந்துகொள்ள முயன்றிருக்கின்றமை கவலைக்குரியதாகும்.

2001 டிசெம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டுப் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வவுனியாவில் கொத்தணி வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் டிசம்பர் 5ஆம் திகதி வாக்களிப்புத் தினத்தன்று அந்த மக்கள் அங்கிருந்து வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிப்பதைத் தடுக்கும் விதத்தில் தாண்டிக்குளம் ஊடான போக்குவரத்துப் பாதையை இராணுவம் மூடி அட்டூழியம் பண்ணியது. இதற்காகப் பின்னர் ஐந்து வாக்காளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இராணுவத்தின் அந்த நடவடிக்கைக்காக அப்போதைய இராணுவத் தளபதியைக் கடுமையாகக் கண்டித்ததுடன் மனுதாரர்கள் ஐவருக்கும் இராணுவத் தளபதி தமது சொந்தப் பணத்திலிருந்து தலா ஐம்பதினாயிரம் ரூபா வீதம் மொத்தம் இரண்டரை லட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அன்று ஆட்சியில் அதிகாரத்தில் இருந்த ஜெனரல் அனுருத்த ரத்வத்தையின் இசைவுக்கு ஏற்ப சட்டத்துக்கு முரணாக நீதி, நியாயத்துக்கு மாறாக நடந்து கொண்டமைக்காக அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் லயனல் பலகல்ல தண்டிக்கப்பட்டார். அத்தண்டனைக்குரிய குற்றச்சாட்டு வாக்காளர்களின் வாக்குரிமையைத் தடுத்த செயல் மனித உரிமை மீறல் விவகாரமாக அர்த்தப்படுத்தப்பட்டதனால் பாவம் ஜெனரல் பலகல்ல, தமது இராணுவப் பதவி ஓய்வுக்குப் பின்னர் இராஜதந்திரப் பதவி எதையும் பெற்றுக்கொள்ளத் தகுதி இல்லாதவராக சர்வதேசத் தரப்புகளால் ஒதுக்கப்பட்டவராக பொது வாழ்விலிருந்து நீங்கி அஞ்ஞாதவாசம் செய்பவராக தனித்து விடப்பட்டார். நாட்டின் இராணுவத் தளபதிப் பதவிநிலையிலிருந்து ஓய்வு பெறும் ஒவ்வொருவரும் அதன் பின்னர் கௌரவமான இராஜதந்திரப் பதவிக்குச் செல்லும்போது ஜெனரல் பலகல்ல மட்டும் அதைப் பெற இயலாமல் ஒதுங்கியமையின் பின்புலம் இதுதான்.

இத்தகைய அனுபவத்தின் பின்னரும் படைத்தரப்பினர் சீருடையினர் தேர்தலை ஒட்டிய அரசியல் வாதிகளின் "சித்து' விளையாட்டுக்குத் தங்களைக் கருவிகளாக்கிக்கொண்டு ஏவல் செய்ய முன்வருகின் றமை இலங்கையின் துரதிஷ்டமின்றி வேறில்லை.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment