அமரர் வேலுப்பிள்ளையின் இறுதி ஊர்வலம் - தாரக மந்திரத்தின் மௌன ஊர்வலம்.

இவ்வாண்டு பிறந்து முதல் வாரத்தினுள் இலங்கை அரசுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றை கூறிச்சென்ற ஒருமரணம் தமிழ்மக்களின் உணர்வலைகளின் அடிநாதமாக ஒலித்திருந்ததை எம்மில் பலர் அவதானித்திருக்கலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலங்களில் தேசியத் தலைவரின் தந்தையாரின் மரணம் நிகழ்ந்திருந்தால் எப்படியிருக்கும் என்பதற்கும், அதுவானது இப்போது நிகழ்ந்தமைக்கான நிலையை உற்று நோக்குமிடத்து உண்மை புரிந்திருக்கும்.

எந்த வகையான மிகைப்படுத்தலுமின்றி கூறின், தலைவர் பிரபாகரனின் குடும்பம் என்ற சுற்றுவட்டத்தை நோக்கின், சாதாரண ஒரு தமிழ்க்குடிமகன் அனுபவித்த சுகங்களில் கடுகளவேனும் இவர்கள் அனுபவிக்கவில்லை என்பது உண்மையாகும். 'பிரபாகரன்', 'விடுதலைப்புலிகள்' என்ற சொற்பிரயோகமின்றி ஐரோப்பிய நாடுகளில் எந்த ஒரு தமிழனும் தனது இருத்தலுக்கான பதிவை ஏற்படுத்தியே இருக்கமுடியாது. எந்தவிதமான சொகுசுவாழ்வின் காற்றுக்கூட அவர்கள்மேல் பட்டிருக்க முடியாது. தமிழுக்காகவும், தமிழ்மக்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் சகல சுக துக்கங்களையும் துறந்த அந்தக் குடும்பத்தவர்கள் ஒவ்வொருவரையும் உயிருடன் உள்ள தெய்வங்களாக ஒவ்வொரு தமிழனும் நெஞ்சில் வைத்து பூஜிக்க வேண்டியவர்களாவார்.

அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணமானது, தமிழ்மக்கள் அனைவரும் அந்த தியாக குடும்பத்தை தெய்வமாக்கியுள்ளர்கள் என புரியவைத்துள்ளது. அன்னாரின் இறுதி யாத்திரையானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயத்தின் போது நடைபெற்றதென்பது அவரின் ஆட்சி அஸ்தமத்தின் நிகழ் தகவு ஆகும், அதாவது தமிழ்மக்களின் வாக்குகள் அவருக்கு கிட்டாதென்பதற்கான கட்டியமும் ஆகும்.

ஆகவே, தமிழ்மக்கள் மகிந்த ராஜபக்ச அவர்களின் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை இப்போதே அறிவித்துவிட்டார்கள். தென்னிலங்கையில் தமிழருக்கெதிரான எந்த கோஷத்தை முன்வைக்கலாம் என்று அவரின் 'எடுபிடிகளோடு' மந்திர ஆலோசனை செய்வதுதான் பொருத்தம்.


சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெற்ற அமரர் வேலுப்பிள்ளையின் மரண வீடானது வரலாறு காணாத ஜனங்கள், பேதங்களுக்குமப்பால், அதுவும் புளொட் இயக்க தலைவர் சித்தார்த்தன் அவர்கள் பகைமை மறந்து கலந்துகொண்ட நிகழ்வானது பெரும் செய்தியை கூறிச்சென்றுள்ளது.

விடுதலைப்புலிகள் பலத்தில் இருக்கும் போது இது நடைபெற்றிருந்தால் எதோ ஒரு அழுத்தத்தின் பேரில் மக்கள் கலந்துகொண்டதாக கருத்துக்கொள்ளலாம். தற்போதைய நிலையில் கலந்துகொண்ட மக்கள் எந்த அழுத்தமோ, அச்சுறுத்தலுக்குமோ பயப்படாமல் 'விடுதலைத் தீ' யை மனதில் ஏந்திக்கொண்டு, 'விடுதலைப்புலிகள் தான் மக்கள்! மக்கள் தான் விடுதலைப்புலிகள்' என்ற கோசத்தை மனதில் உச்சாடனம் செய்தவாறு கலந்துகொண்டவர்களாகவே இருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

இதிலிருந்து புரிவது என்னவென்றால், விடுதலைப்புலிகளை என்றுமே அழிக்கமுடியாது - தமிழ்மக்களிலிருந்து பிரிக்கமுடியாதது என்பதாகும். தமிழ்மக்களின் விடிவுக்காக இன்னுயிரை ஈந்த குருத்துக்களின் இலட்சிய 'உயிர்த்தியாகம்' ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் கனல் விட்டு எரிகின்றது. இது அணைந்துவிடும் தீபமல்ல!! பலகோடி தீபங்களை ஏற்றிவைக்கும் தூண்டாமணி தீபங்கள்!!

குமுறும் உள்ளங்களின் கொதிப்பலைகள்தான் அமரர் வேலுப்பிள்ளையின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்கள் வெள்ளத்தின் பிரதிபலிப்பு. இது கூறும் செய்தி யாதெனில் எந்த நிலையிலும் சிங்கள அரசுக்கு ஆதரவோ அல்லது சிங்கள இனத்துடனோ சேர்ந்து வாழ்தல் என்பது பிளந்து கிடக்கும் இரு கற்பாறைகளுக்கு ஒப்பாகும் என்பதே.

இலங்கை தேசம் இரண்டுதான். அதில் ஒன்று தமிழ் தேசம் தான்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தாரகமந்திரம்!

தமிழ் மக்களின் மனங்களிலிருந்து மாறாத மந்திரம்!

அதுவே இன்னுயிர்களுக்கான அர்ப்பணிப்பு மந்திரம்!


"தணல்" தசக்கிரீவன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment