இந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் அத்தகைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துகொள்வது தொடர்பானதாக இருந்தாலும், சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியாவும், அமெரிக்காவும் அது தொடர்பாக விசேட அக்கறை செலுத்தி வருகின்றன என்பது இரகசியமல்ல. அந்த நாடுகள் இலங்கையின் அரசியல் போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றன. நிலைப்பாடு மற்றும் அந்தப் பின்புலம் சம்பந்தமாக கண்ணோட்டம் செலுத்தும் விமர்சனம் இது. சீ. ஜே. அமரதுங்கவின் இந்த அரசியல் விமர்சனம் 2009 டிசெம்பர் 27 ஆம் திகதிய "லங்காதீப" பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இது.
பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிலைப்பாட்டுடன் இணைந்த ஒன்றாக இலங்கையின் உள்ளக அரசியலும் பின்னிப்பிணைந்திருப்பது, இக்கால கட்டத்தில் நாம் அனுபவத்தில் கண்டுவரும் யதார்த்தமாகும். எமது நாட்டின் உள்ளக அரசியலா னது சர்வதேச நிலவரங்களின் அடிப்படையின் மீதே தீர்மானிக்கப்படுவதும் கூட புதியதொன்றல்ல. அதேபோன்று, நாட்டின் உள்ளக அரசியல் மாற்றங்கள் தொடர்பாக சர்வதேசத்தின் கவனம் செலுத்தப்படுவதும் கூட இன்று சாதாரணமான ஒரு விடயமே.
இந்திரா காந்தியின் செயற்பாடுகள் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் என்ற காலகட்டத்துக்கு முன்னர் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சி இந்தியாவில் இருந்தபோது, இலங்கையில் செயற்பட்ட தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா தனது நாட்டிலேயே ஆயுதப் பயிற்சிகளை வழங்கிய தோடல்லாது, போராயுதங்களையும் கூட வழங்கியிருந்தமை இரகசியமல்ல.
இலங்கையின் அன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அமெரிக்கச் சார்புக் கொள்கை வழியில் அதாவது, அமெரிக்காவோடு சார்ந்து நிற்கும் வெளியுறவுக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தி நின்றமையே அதற்குக் காரணமாகியிருந்தது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்து வெளிப்பாடாகும். முன்னாள் இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்த மொன்றைக் கைச்சாத்திட்டு இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் விதமாகச் செயற்பட்டார். இந்தியச் சிப்பாய்கள் ஆயிரக்கணக்கில் மாண்டுபோன அந்த யுத்த மோதல் போராட்டமானது, இந்தியாவுக்கு இலங்கையின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இருந்த காத்திரத்தை அக்கறையை வெளிப்படுத்தி நின்றது.
பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்வதற்கு உந்தித் தள்ளப்பட்டதும் கூட அச்செயற்பாட்டின் ஓர் அங்கமேயாகும். இந்த அனைத்துக் காரணிகளிலிருந்தும் தெரிவது, இந்தியா தனது அண்டை நாடான இலங்கையின் அரசியல் சம்பந்தமாகக் காட்டிநிற்கும் எண்ணக்கருவேயாகும். இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் இந்தியாவைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் பெறுகின்றன. விசேடமாக நாட்டின் ஸ்திரத்தன்மை, வெளியுறவுத் தொடர்பாடல் போக்குகள் போன்றே இனப்பிரச்சினை சம்பந்தமாக இலங்கை பின்பற்றும் நடைமுறைகள் தொடர்பாகவும் இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. அதன் காரணமாகவே இந் நாட்டின் முக்கியமான தேர்தல்கள் போன்றே தேர்தல் பெறுபேறுகள் சம்பந்தமாகவும் இந்தியா அக்கறைகாட்டி நிற்கிறது.
பொன்சேகாவின் கல்தாவுக்கு இந்தியாதான் பின்னணியா?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் இந்தியா சென்று முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அண்மையில் குறுகிய நாள்களுக்குள் இரு தடவைகள் இந்தியாவுக்குச் சென்று கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பாகவும் பஸில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியா சென்று கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இவற்றிடையே, உறுதி செய்யப்படாத சில தகவல்களுக்கு அமைய, வடபுலத்து யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை கூட இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இடம்பெற்றுள்ளது என்பதாகும். அது அப்படியாயின், இலங்கையின் அரசியலுக்கு இந்தியா விடுக்கும் அழுத்தத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
எனவே, இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே அதன் பெறு பேறு குறித்தும் இந்தியாவினால் உன்னிப்பாகக் கவனம் செலுத்தப்படுகிறதென்பது இரகசியமல்ல. இந்தியத் தரப்பு திரைமறைவில் இருந்தவாறே இலங்கையின் அரசியலுக்கு அழுத்தங்களை விடுத்து நிற்பதும் கூட சாதாரணமான தொரு விடயமேயாகும். எவ்வாறான போதிலும், முக்கியத்துவம் பெறும் தேர்தலொன்றின்போது இந்தியாவால் விடுக்கப்படும் அழுத்தத்தைக் கணிப்பிட்டுக்கொள்ள இயலாதது போன்றே அது புறமொதுக்கிவிட இயலாததொரு விடயமுமாகின்றது.
இங்கு அமெரிக்கா போன்றே, ஐரோப்பிய ஒன்றியமும் கூட இலங்கையின் அரசியல் பற்றிக் கவனம் செலுத்தி வருவது அக்கறை கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நாடுகள் இலங்கையின் உள்ளக அரசியல் நிலைவரங்கள் குறித்து பலதரப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன என்பதோடு, இலங்கை அரசும் கூட அவற்றுக்கான தனது பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஈடுபாட்டை குறைத்து மதிப்பிட முடியாது
இலங்கை விவகாரம் சம்பந்தமாக அமெரிக்கா காட்டி நிற்கும் எண்ணக் கருவானது, ஏனைய மூன்றாம் உலக நாடொன்றுடன் தொடர்புபட்டமையை விட மாறுபட்டதென்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, சிம்பாப்வே இராச்சியத்தில் அல்லது ஆபிரிக்க நாடொன்றில் இடம்பெறும் அரசியல் செயற்பாடொன்று குறித்து வெளிப்படுத்தி நிற்கும் அக்கறையை விட ஆழ்ந்த அக்கறையை அமெரிக்கா இலங்கை விடயத்தில் காட்டி நிற்கிறது. அதற்குக் காரணமாகக் கருதமுடிவது, இலங்கை இந்தியாவை அண்டிய நாடாக அமைந்திருப்பது மட்டுமல்ல. சீனா, இந்தியா போன்ற பலம் பொருந்திய இராச்சியங்கள் உலகமய அரசியலினுள் பெரிதும் பலம் பெறுவது கூட இலங்கை போன்ற நாடுகளுக்கு அதிகரித்த முக்கியத்துவம் கிட்டுவதற்குக் காரணமாகியுள்ளது.
இந்த நாட்டில் தொடர்ச்சியாக ஜனநாயக அரசியல் முறைமையொன்று நடை முறையில் இருந்து வந்துள்ளமை கூட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கை சம்பந்தமாக அதிகரித்த அக்கறை செலுத்துவதற்குக் காரணமாகிறது.
இலங்கையின் பூகோள ரீதியிலான அமைவு, அமெரிக்காவுக்கு முக்கியமானதொரு சாதக நிலை என்பதே சில அரசியல் ஆய்வாளர்களின் கருத்து வெளிப்பாடாகும். அவர்களது கடற்படைப் பிரிவுகளுக்கு வசதி வாய்ப்புகளைச் சம்பாதித்துக்கொள்ளல் போன்ற அனுகூலங்கள் காரணமாக அந்த முக்கியத்துவம் அமைவதாகவும் நம்பப்படுகிறது. இதற்கு மாறுபட்ட கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள ஆய்வாளர்களின் கூற்றாகியிருப்பது, தற்கால உலகின் வளர்ச்சியுற்றுள்ள போரியல் தொழில் நுட்பத்தின் காரணமாகக் கடற்படைச் செயற்பாடுகள் மற்றும் துறைமுக வசதி வாய்ப்புகள் போன்றவற்றின் முக்கியத்துவம் குறைந்துபோயுள்ளது என்பதாகும். அதுபோன்றே அமெரிக்கா மற்றும் ஆசிய வட்டகைப் பலவான்களான இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கிடையில் வளர்ச்சிகண்டுவரும் உறவாடல்களின் காரணமாகவும் அந்த முக்கியத்துவம் குறைந்துள்ளது என்பதும் அவர்களது கருத்து வெளிப்பாடாகிறது.
எவ்வாறான போதிலும் ஆப்கானிஸ்தானின் தலிபான் மற்றும் அல் குவைதா போன்றவற்றின் செயற்பாட்டுக்கு எதிராகக் கொண்டு செல்லப்படும் போராட்டம், ஈரானுடன் அமெரிக்கா நடத்திவரும் பனிப்போர் என்ற காரணிகளாலும் இலங்கைக்கு முக்கியத்துவமொன்று கிட்டக் கூடுமெனக் கருத இடமுள்ளது.
அமெ. செனட்சபையின் இலங்கை பற்றிய அறிக்கை
முக்கியமாக, அமெரிக்க செனட்சபையின் வெளியுறவுத் தொடர்பாடல்களுக்கான குழுவின் தலைமைப்பதவியிலிருப்பவர் பலமிக்கதொரு செனட்சபை உறுப்பினரான ஜோன் கெரியாவார். அவரது தலைமையிலான மேற்படி குழு அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், இலங்கையைத் தமது நாட்டின் நேச நாடொன்றாகக் கருதவேண்டியுள்ள தெனவும் மற்றும் இந்த நாட்டுடன் மோதிக்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையொன்றுக்கு அமெரிக்கா செல்லாதிருக்கவேண்டியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்தும் கூட இலங்கை குறித்த அமெரிக்காவின் எண்ணக்கரு தெளிவுபடுத்தப்படுகிறது.
இந்த நிலைப்பாட்டின் மீது, இலங்கையில் தற்போது களத்திலிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் அமெரிக்கா அக்கறை செலுத்தி வருகிறது என்பதை நம்பமுடிகிறது. தென்னாசிய வட்டகைக்குப் பொறுப்பான அமெரிக்காவின் பிரதி ராஜாங்கச் செயலாளரான ரொபர்ட் ஓ பிளேக், அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்டி ருந்த விஜயமும் கூட அதற்கு மேலு மொரு சான்றாகும். தமது அந்த விஜயத்தின் போது இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளைச் சந்தித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் அவர் தவறவில்லை. அவரது அச்சந்திப்பின் நோக்கம், இந் நாட்டு அரசியலில் ஏற்படவிருக்கும் மாற்றத்தைப் புரிந்துகொள்வதாகவோ அல்லது தமது சர்வதேச அவசியப்பாடுகளுக்கு ஒவ்வாத எதுவும் நிகழுமானால் அதைத் தடுத்து விடுவதற்கு நுட்பமாகச் செயற்படுவதாகவோ இருக்கக்கூடும்.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் வினா
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்த்துவிடும் அவரைப் பதவியிலிருந்தும் அகற்றிவிடும் சர்வதேசச் சதியொன்றே இங்கு கட்டவிழ்ந்துள்ளதாக அரசுத் தரப்பின் பிரசாரங்களில் கூறி வருகின்றனர். அது வெறும் அரசியல் இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்காகப் புனையப்பட்டுள்ளதொரு கதை என்பதே எதிர்க்கட்சியின் வாதமாகியுள் ளது. அத்தோடு, இன்னமும் இரண்டு ஆண்டுகளுக்கான கால அவகாசம் இருக்கையில், அவசர அவசரமாக ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்துவது அந்த சர்வதேச சதியின் ஓர் அங்கமாகவா என எதிர்க்கட்சி வினாவொன்றை எழுப்பி வருகிறது. எனவே, சர்வதேச சதியொன்று நிலவுகிறது எனத் தெரிவிப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் எம்மிடம் இல்லாதிருப்பினும் கூட, சர்வதேசத் தலையீடுகள் இல்லையென்பதாக மறுத்துரைப்பதற்கும் கூட காரணிகள் இல்லை.
எவ்வாறான போதிலும் ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, எமது அண்டை நாடான இந்தியாவும், உலகப் பலவானாக வலம் வரும் அமெரிக்காவும் இலங்கையின் அரசியல் வளர்ச்சிகள் தொடர்பாக உன்னிப்புடன் அவதானித்து வருகின்றன என்பதே அதுவாகும். அந்த வளர்ச்சியைத் தமக்கு இலாபகரமாகக் கையாள்வதற்கும் கூட இத் தீவிர சக்திகள் முயற்சிகளை மேற்கொள்ள மாட்டாதெனவும் கூற இயலாது.
0 கருத்துரைகள் :
Post a Comment