Pages

0 பிரிவினை நெருப்பில் குளிர்காயும் அரசு




பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்ட சர்வதேச மருத்துவ மாநாடொன்றில் ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் இலங்கை நாட்டு வைத்தியர்கள் மூவர் சந்தித்துக் கொண்டனர். தத்தமது நாடுகளின் சிறப்புக்கள் குறித்து பெருமையுடன் அவர்கள் பேசிக்கொண்டனர். "எமது நாட்டில் ஒரு மனிதனது இதயத்தின் பாதியைப் பிரித்தெடுத்து இன்னொரு மனிதனுக்குப் பொருத்தி வெற்றி கண்டுள்ளோம்'' என்றாராம் ஜேர்மனி வைத்தியர். "இதுவென்ன பிரமாதம், அமெரிக்காவில் ஒரு மனிதனின் மூளையில் சரிபாதியை பிரித்தெடுத்து இன்னொரு மனிதனுக்குப் பொருத்தியுள்ளோம். இப்பொழுது அந்த இருவருமே நலமாக இருக்கிறார்கள்.'' என்றாராம். அமெரிக்க வைத்தியர்.
 
இலங்கையரான மற்றைய வைத்தியரோ, "இந்த விஷயத்தில் நீங்கள் எமது நாட்டை விட மிகமிகப் பின்தங்கியுள்ளீர்கள். ஏழு வருஷங்களுக்கு முன்னால் மூளையே இல்லாதிருந்த ஒரு மனிதரைப் பிடித்து நாட்டின் தலைவராக்கி வைத்திருக்கிறோம்'' என்றாராம். அந்தக் கதையை அப்படியே விட்டுவிடுங்கள். அது ஒரு கதை. அவ்வளவுதான். நாம் அரசியலுக்குச் செல்லலாம்.
 
ஒரு புறம் வேடிக்கைக் கதை போலிருந்தாலும், இன்றைய எமது நாட்டின் நிலை குறித்துச் சிந்தித்தால், தெளிவற்ற அரசியல் கொள்கையில் நாட்டு மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்பதே யதார்த்தம். 
 
சம்பள உயர்வு கோரி மின்சார, பெற்றோலிய மற்றும் நீர் வழங்கல் துறை தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு தலை சாய்த்து அவர்களது கோரிக்கைகளை அரசு ஏற்றது. அதேவேளை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அரசுக்குத் தெரிவித்துள்ளது.
 
ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதற்கு, பல வழிகளிலும் இடையூறு விளைவிக்கப்பட்டது. தனியார் பல்கலைக்கழக சட்ட மூலத்தை நிறைவேற்ற அரசு மேற்கொண்ட தீர்மானம் மாணவர்களின் எதிர்ப்புக் காரணமாகக் கைவிடப்பட்டது. அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வு நீறு பூத்த நெருப்பாக மக்கள் மனங்களில் கனன்று கொண்டுதான் உள்ளது. அவை இந்தப் போராட்டங்களுடன் நின்றுவிடப் போவதில்லை.
 
தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது என்ற போர்வையில் ஊழியர் சேமலாப நிதியிலுள்ள பெருந்தொகைப் பணத்தை அரசு பயன்படுத்த முயன்றமை, தனியார் பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் என்பன மக்களது எதிர்ப்புக் காரணமாக பிற்போடப்பட்ட தென்னமோ உண்மை தான். ஆயினும் பிரச்சினைகள் முடிந்து விடவில்லை. நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் அந்தப் பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கத்தான் போகின்றன.
 
அரச உயர் மட்டத்தின் அடக்கு முறைப் போக்கு, அரச நிறுவனங்களை அரசியல் மயப்படுத்தி தகுதியற்றவர்களை தலைமைப் பதவிகளில் அமர்த்துவதன் மூலம் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை அடக்கி ஒடுக்குதல் போன்றவற்றால் இந்தத் தீயை அணைத்துவிட இயலாது. கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இடம் பெற்ற கைதிகளின் போராட்டம், போதைப்பொருள் பாவனையாளர்களால் மேற்கொள்ளப்பட்டது என ஊடகங்கள் மூலமாகச் சித்திரிக்கப்பட்டது. ஆயினும் சிறைச்சாலை அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான முடிவுகளால் அதிருப்தியுற்று, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோரால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் போராட்டமே அது என்பது தெளிவாகியுள்ளது.
 
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவோர் நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்படும் வரை குற்றவாளிகள் என அடையாளப்படுத்தப்பட இயலாது. கைதிகளும் மனிதர்களே என சிறைச்சாலை மதிற்சுவர்களில் சிறைக்கைதிகளால் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள், சிறைச்சாலை நிர்வாகத்தரப்பினர் "சந்தேக நபர்களும் குற்றவாளிகள்' என்ற முடிவின் அடிப்படையில் கைதிகளை நடத்திவருகின்றமையை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியம்.
 
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெறுமானால் அதனை ஒழிப்பதற்குரிய பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் சிறைக் கைதிகளுக்கு அவர்களது உறவினர்கள் தின்பண்டங்கள் கொண்டு வந்து வழங்குவதைச் சிறைச்சாலை நிர்வாகம் தடை செய்துள்ளது. இத்தகைய விடயங்களில் அரசின் உயர்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பலாத்காரப் பிரயோகத்தை மேற்கொள்வது வழக்கமாகி விட்டுள்ளது.
 
பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையோர் காணாமல் போவது தொடர்பாக தம்மால் பொறுப்பேற்க முடியாது என்று, மக்களது வரிப்பணத்தில் பெரும்பகுதியைப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் இந்த நாட்டு அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறி இருந்தார்.
 
அரசின் உயர்மட்டத்தினரே பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் போது, சிறைச்சாலை அதிகாரிகள் தம் மனம் போன விதத்தில் நடந்து கொள்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லையே? தற்போது தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் போன்றே சிறைச்சாலைக் கைதிகளும் கூட அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் நிலை உருவாகியுள்ளது.
 
சகல மட்டங்களிலும் அரசுக்கு எதிரான இத்தகைய எதிர்ப்பு, அதிருப்தி, குழப்பநிலை என்பன தலைதூக்கியுள்ளன. அரச தரப்பினரும் இது குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இத்தகைய எதிர்ப்பலையைத் திசை திருப்ப வேண்டுமானால், வேறொரு அரசியல் எதிர்ப்பலையின் பக்கம் பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டியுள்ளதை அரசு நன்கு கணித்து வைத்துள்ளது. 
 
அதற்கான பொருத்தமான விடயம் இனவாதத்தை வளர்த்து விடுதலாகும். இனங்கள் மத்தியில் இனவாதப் பிரிவுகளை வளர்த்துவிட அரசு விரும்புகிறது. அதன் மூலம் ஏனைய பல விடயங்கள் தொடர்பான மக்களின் எதிர்ப்புணர்வைத் திசை திருப்பிவிட இயலுமென அரசு நம்புகிறது.
 
"தமிழ் மக்கள் மீதான அரசின் ஏமாற்றும் உத்தி, எல்லை தாண்டுமானால் நாடு பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்'' என அண்மையில் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். அவரது இத்தகைய கருத்து வெளிப்பாடு மூலம் கடந்த 65 ஆண்டு காலமாக இந்த நாட்டை மாறிமாறி நிர்வகித்த ஐ.தே.கட்சி, மற்றும் சுதந்திரக் கட்சி அரசுகள் இந்த நாட்டின் தமிழ் மக்கள் தொடர்பாக இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கை நிலைப்பாட்டை தெட்டத் தெளிவாகப் புலனாக்குகின்றது. 
 
தமிழ் மக்களை எப்போதுமே ஏமாற்றிக் கொண்டேயிருக்க வேண்டுமென்றே இவ்விரு தரப்பினரும் கருதுகின்றனர். அதன் மூலம் தமிழ் மக்களது பிரச்சினையைத் தமது அரசியல் பலப் பரீட்சைக்கான விடயமாக அவர்கள் பயன்படுத்த முனைகின்றனர். இத்தகைய போக்கு மீண்டும் நாட்டில் இரத்த ஆற்றையே ஓட வைக்கும். ஜனாதிபதிக்கோ 13+ விடயம் இருந்தாற்போலிருந்து ஞாபகத்துக்கு வருகிறது. ஆகக் குறைந்தது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசமைப்பைக் காத்துப் பேணவேண்டிய பொறுப்பு அரசுக்குண்டு. ஆனால் ராஜபக்ஷ குடும்ப அரசு நாட்டின் அரசமைப்பையே சீர்குலைத்து வருகிறது. 

நாட்டின் வடபகுதித் தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் எதுவும் கிடையாது. ஆள்கடத்தல், அச்சுறுத்தல் என்பவை அங்கு சாதாரண சம்பவங்களே என்ற விதத்தில் அரசின் அணுகு முறை அமைகிறது.  மொத்தத்தில் வடபகுதித் தமிழ் மக்களது உயிர்வாழும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரம் கூட வடபகுதியில் மறுக்கப்படுகிறது. காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் எதனையும் அத்தகையோரின் பெற்றோராலோ, உறவினர்களாலோ பெற்றுக்கொள்ள இயலவில்லை. கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களது அடிப்படை உரிமைகள்கூட சவாலுக்கு உள்ளாகியுள்ளன. இவற்றை யெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதென்பது எவ்வாறு சாத்தியமாகும்?
 
இதன் பின்னணியில் உள்ளதும் ஏமாற்றும் முயற்சியே. "13+'' எனக் கூறியதும் அலிபாபாவின் குகையை மூடியுள்ள கல்வாசல் திறந்து கொள்வதற்கு அது மந்திரவார்த்தையா என்ன? இது இரு இனத்தவர்கள் மத்தியிலும் குரோதத்தை வளர்த்து விடும் ஒரு முயற்சியே. அரசு தமிழ் மக்களுக்கு விசேட சலுகைகளை வழங்க முயல்வதாக சிங்கள மக்களை சந்தேகப்பட வைக்கவே இது உதவும். அதேவேளை தமக்கு உரிமைகளை வழங்க சிங்கள மக்கள் குறுக்கே நிற்கின்றனர் என்ற அவநம்பிக்கையையும் குரோதத்தையும் இது தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கத் தவறாது. 

தமிழ் மக்களுக்கு அரசு வழங்கத் தயாராகவுள்ள உரிமைகள் எவை என வரையறுத்துக் கூறாது, ""13 மற்றும் அதற்கும் மேலாக'' என்ற விதத்தில் தெளிவற்ற கருத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அரசு இவ்விரு இனங்கள் மத்தியில் அவநம்பிக்கையையும் குரோதத்தையும் தூண்டி வளர்த்து விட முயல்கிறது. ஜனாதிபதியின் அந்த இரு வார்த்தைகளால் நாட்டு மக்களது கவனம் மற்றெல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் திசை மாறி 13+ பக்கமே குவியும் நிலை தோற்றிவிக்கப்பட்டுள்ளது. அரசின் எதிர்பார்ப்பும் அதுவே.
 
அரசு இத்தகைய தனது ஏமாற்றுப் போக்கை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களது நியாயமான பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இதற்குமேல் பேச்சு அவசியமில்லை. இந்த விடயம் குறித்து வடபகுதி மக்களது கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும். அவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமானால் அவர்களுக்கு ஜனநாயக சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும். அவர்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்தத்தக்க ஜனநாயகச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே அவர்களது அபிலாஷைகள், தேவைகள் எவை என்பதைத் தெளிவாகக் கண்டறிய இயலும்.
 
அவ்வாறமையாத விதத்தில் முன்வைக்கப்படும் தீர்வு யோசனைகள் வெறும் ஏமாற்றுத் தந்திரமாகவே அமையும். வீதியில் இறங்கி எதிர்ப்பை வெளிப்படுத்துவதால் மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு விட இயலாது. நாம் எந்த வித அணுகு முறையூடாக பிரச்சினைக்குத் தீர்வு காண இயலும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மக்களின் இன்றைய அவசிய, அவசர தேவையாகியுள்ளது.

 "ஜனரள' சிங்களப் பத்திரிகையில் விதர்னி எழுதிய கட்டுரையிலிருந்து தமிழ் மொழியாக்கம்

நன்றி உதயன்
[Read More...]


0 தமிழ்மக்கள் எப்போதும் உரிமைக்காகவே வாக்களிப்பவர்கள்




தமிழ் மக்கள் ஒருபோதுமே அரிசிக்கும் பருப்புக்கும் வாக்களித்தவர்கள் அல்ல. எப்போதுமே தமது உரிமைகளுக் காகவே வாக்களித்து வந்துள்ளனர். நாடு சுதந்திரமடைந்த காலத்தின் பின்னர் அநேகமாக எதிரணியிலிருந்த தமிழ் அரசுக்கட்சிக்கே அவர்கள் வாக்களித்துள்ளனர் என்று ஆங்கில வார இதழொன்றுக்கு நேற்று வழங்கியுள்ள பேட்டியிலே, யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.  

அரசாங்கம் தமிழ்ப்பகுதிகளில் அபிவிருத்தி வேலைகளை செய்து வருகின்ற போதிலும் அவை வீதிகளை அமைத்தல், மின்சாரம் வழங்குதல் போன்ற உள்சார் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளையே கொண்டுள்ளன. அரசாங்கம் எமக்கு அதிகாரத்தை வழங்கினால் எம்மை நாமே பார்த்துக் கொள்வோம். எமது பகுதிகளை அபிவிருத்தி செய்வோம். புலம் பெயர்ந்தோரிடம், சர்வதேச சமூகத்திடம் எம்மால் உதவியைப் பெற முடியும் என்று எமது மக்கள் கூறுகின்றனர். இந்த சகல விடயங்களுக்குமே எமக்கு அதிகாரங்கள் வேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும். மக்களின் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

இப்போதும் முரண்பாடு இருக்கின்றது. முரண்பாடு நீடித்திருக்கும் வரை வெறுமனே இந்த அபிவிருத்தியில் மக்கள் திருப்தியடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தமிழ் மக்கள் விரும்புகின்றனர். தமது அடையாளத்தை பேணுவதற்கு அவர்கள் விரும்பு கின்றனர்.  இலங்கை அரசு செய்ய முடியாமலிருக்கும் முக்கிய விடயங்கள் இவை. யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் அரசாங்கத்துக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு பலவழிகளில் இருந்து கொண்டிருக்கிறது.

பல வழிகளில் தமிழ் மக்கள் நசுக்கப்படுகின்றனர். அந்த முரண்பாடு இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. இதனை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர முடியும். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் இணக்கப்பாட்டுக்கு அரசாங்கம் வரமுடியும்.  இந்த நாட்டின் சகல மக்களையும் அரசாங்கம் உள்ளீர்க்க முடியும். ஆனால் இந்த நாட்டிலிருந்து தமிழ் மக்களை துரத்த அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் முழுமையான இராணுவமயமாக்கலின் கீழும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழும் இருக்கிறோம்.

இந்த நாட்டில் வாழ முடியாது என்று மக்கள் உணர்ந்து கொண்டால் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறவே முயற்சிப்பார்கள். இந்த நாட்டில் தமிழ் பிரஜைகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. வடக்கு, கிழக்கை, அபிவிருத்தி செய்ய எங்களால் ஆதரவை பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால் அந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். 10 இலட்சம் புலம் பெயர்ந்த சமூகம் என்பது சிறிய தொகை அல்ல. அவர்கள் பெருந்தொகை பணத்தை முதலீடு செய்வதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

ஆனால் தமிழ்க் கூட்டமைப்பை புலிகளின் பிரதிநிதிகள் என உலகத்துக்கு கூற அரசு முயற்சிக்கிறது. புலிகள் கோருவதை தமிழ்க் கூட்டமைப்பு கோருவதாக கூற முயற்சிக்கிறது. இது முற்றுமுழுதாக அபத்தமான பேச்சு. புலிகள் தனிநாடு கோரினர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகாணப் பட வேண்டும் என்று நாங்கள் திரும்பத்திரும்பக் கூறுகின்றோம். இதனை அவர்கள் புரிந்து கொள்ளமுடியாவிடில் எங்களால் எதனையும் செய்ய முடியாது. தப்பிச் செல்ல அரசு விரும்புகிறது. அதனாலேயே தமிழ்க் கூட்டமைப்பை புலிகள் என அவர்கள் வடிவமைக்கின்றனர்.  புலம்பெயர்ந்த சமூகம் முழுவதையும் புலிகள் என்று அவர்கள் வடிவமைக்கின்றனர்.

இந்த நாட்டில் முறையான அரசியல் இணக்கப்பாடு இருக்குமானால் தனிநாட்டுக்காக புலம்பெயர்ந்த சமூகம் போராடாது. முறையான தீர்வுக்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் பெரும்பான்மையினர் ஆதரவளிப்பார்கள், ஆனால் அரசியல் தீர்வு இல்லாத போது இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்றே புலம்பெயர் சமூகம் பார்க்கும். அவர்களால் எது முடிந்ததோ அதனை அவர்கள் செய்வார்கள். 

நன்றி தினக்குரல் 
[Read More...]


0 காதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு




அதிபார குத்துச்சண்டை வீரர் எவென்டர் யஹாலி பீல்ட் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கைக்கு வருகை தந்த அவரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ­ சந்தித்தார். 1997ஆம் ஆண்டு நடந்த குத்துச்சண்டை ஒன்றின் போது யஹாலி பீல்டுடன் சண்டையிட்ட மைக் டைசன், அவரின் காதைக் கடித்து துண்டாடி இருந்தார். சம்பவம் நடந்து 15 வருடங்களுக்குப் பின்னர் கடிபட்ட காதை எங்கள் நாட்டு ஜனாதிபதி தொட்டுப் பார்த்தார். துயரம் பகிர்ந்து கொண்டதாகத் தகவல். குத்துச் சண்டைக்குப் போய் காது அறுபட்டவரின் விடயத்தில் காட்டப்பட்ட கரிசனையைக் கேட்டபோது, எங்கள் மண்ணில் நடந்த யுத்தத்தில் தமிழ் மக்கள் பட்ட அவலங்கள், அங்கவீனங்களை நினைத்துப் பார்த்தேன்.

கடவுளே! இரண்டு காலும் இல்லாதவர்கள் எத்தனை பேர்? கை இழந்தவர்கள், கண் இழந்தவர்கள், எழுந்து நடக்க முடியாதவர்கள் இப்படி பெரும் துயரத்தை அனுபவித்துக் கொண்டு குடிசைக்குள் குந்தியிருந்து சதா அழுகின்றவர்களை ஆட்சி பீடத்தினர் யாருமே பார்த்ததாக -அனுதாபம் தெரிவித்ததாக இல்லை. நடந்தது நடந்தாயிற்று. யுத்தத்தில் அகப்பட்டு உயிரை இழந்த குடும்பங்களை, அங்கவீனமானவர்களை சந்தித்து ஒரு சில ஆறுதல் வார்த்தை கூறி ஆற்றுப்படுத்த ஆட்சிப்பீடத்தினருக்கு அறவே விருப்பமில்லை. ஆறுதல் கூறுவதை விட, போரின்போது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதிலேயே அரசு அதிதீவிரமாக உள்ளது. உலக வரலாற்றை எடுத்துக் கொண்டால் நடந்த யுத்தங்கள், அழிவுகள், இழப்புக்காக மன்னிப்புக் கேட்கின்ற மரபு இருந்து வருவதை அறிய முடியும்.

செய்த தவறுக்காக காலங்கடந்தேனும் மன்னிப்புக் கோரிய சம்பவங்கள் நிறையவே உண்டு. ஆனால், இலங்கையில் அப்படியயதுவுமே இல்லை. வன்னி யுத்தத்தில் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவலைக் கூறினால், சிங்களவர்களும், முஸ்லிம்களும் இறந்துள்ளார்கள் என்று பதிலளிக்கும் பன்னாடைப் பண்பாடே இந்த நாட்டின் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. வன்னி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான  அப்பாவித் தமிழர்கள் இறந்துள்ளனர் என்றால் அதனை நியாயப்படுத்துவதுபோல சிங்கள மக்களும் இறந்தார்கள் என்று கூறும் அநாகரிகம் இலங்கையில் மட்டுமே இருக்க முடியும்.

ஒரு இனத்திற்கு ஏற்பட்ட இழப்பை நியாயப்படுத்த இன்னொரு இனம் இழக்காத இழப்பை இழந்ததாக கூறுவது மிகப்பெரும் துரோகத்தனம். போரில் சிங்கள, முஸ்லிம் மக்கள் இறந்தார்கள் என்பதற்காக தமிழ் மக்கள் இறக்கலாம் என்றோ அல்லது தமிழ் மக்கள் இறந்தமைக்காக சிங் கள, முஸ்லிம் மக்கள் மரணிக்கலாம் என்றோ கூறுவது ஒருபோதும் நியாயத்துவமானதல்ல. ஆட்சியாளர்கள், எப்போதும் மக்களின் காவலர் களாக-துணையாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் இங்கோ வேண்டாத அனுதாபங்களை தெரிவித்து உலகில் நல்ல பெயர் வேண்ட நினைக்கும் ஆட்சியாளர்கள், தங்கள் நாட்டில் இருக்கக்கூடிய பேரழிவைச் சந்தித்த மக்களை ஒரு பொருட்டாக நினைக்காமை பொல்லாப்பின் வெளிப்பாடென்றே உணர்தல் வேண்டும்.

நன்றி வலம்புரி
[Read More...]


0 யாழ் மக்களின் புன்னகைக்குப் பின்னால்....




யாழ்ப்பாணத்தில் நான் கண்ட காட்சி மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. எல்லோர் முகத்திலும் புன்னகை இருந்தாலும், அவர்களது புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத ஏதோ ஒரு துன்பரேகை இழையோடுவதை கண்டுணர்ந்தேன். இலங்கையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இலங்கைத்தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டில், மதிப்புடனும், சுயமரியாதையுடனும் வாழ தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க என்னுடைய இலங்கைப் பயணமானது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறேன். 13 பிளஸ் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளேன்.
 
இவ்வாறு இந்திய முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், தனது அமைதிப்பயணம் குறித்து தமிழக நாளேடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும், ஓரு சில சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெறவேண்டுமானால் பல புயல்களைக் கடக்கும் மன உறுதியைப் பெறவேண்டும்.கடந்த 21ஆம் திகதி இரவு இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தபோது இரண்டு முக்கியமான விடயங்களைப் பற்றி அவரிடம் பேசினேன்.
 
அதாவது, மும்மொழித் திட்டத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் செயற்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவைத் தெரிவித்து விட்டு, இலங்கையின் 13 ஆவது அரசமைப்புத் திருத்த சட்டத்தை மேம்படுத்தி, 13 பிளஸ் என்ற அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை விரைவில் இலங்கையில் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினேன்.
 
இலங்கையில் உள்ள எல்லா மாகாணங்களையும், அதாவது, வடக்குக் கிழக்கு, தெற்கு, மத்திய, மேல் மாகாணங்களையும் மற்ற மாகாணங்களையும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயநிர்ணய அதிகாரம் கொண்ட மாகாணங்களாக மாற்றியமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும்  வலியுறுத்தினேன் என்றார்.

நன்றி உதயன்
[Read More...]


0 இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை – மீண்டும் குத்துக்கரணம் அடித்தார் மகிந்த




13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, அண்மையில் கொழும்பு வந்து சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக மகிந்த ராஜபக்ச தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறியிருந்தார். 

அந்தக் கருத்தையே சிறிலங்கா அதிபர் நேற்று நிராகரித்துள்ளார்.   இந்தியாவுக்கு தாம் இத்தகைய வாக்குறுதியைக் கொடுக்கவில்லை என்றும், இந்தியாவுடன் இதுபற்றிக் கலந்துரையாடல் மட்டுமே நடத்தியுள்ளதாகவும், நேற்று அலரி மாளிகையில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போது கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் ஊடகங்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபர் - " நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. 

விடுதலைப் புலிகள் நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன்வைக்காமல், அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். 

சம்பிக்க ரணவக்கவின் ஹெல உறுமய கட்சியும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் 13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு குறித்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்தும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பது மேயாகும். அதற்கு நானும் என்னுடைய அரசாங்கமும் ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை.  தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும், பிரிவினைவாதக் கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டே காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அவசியம் என்று கேட்டு வருகின்ற போதிலும, வட பகுதியில் உள்ள மக்களும், இளைஞர்களும் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை. அவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி வசதி ஆகியனவே தேவையென்று எங்களிடம் கேட்கிறார்கள். 

இந்நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும். 30 ஆண்டு காலம் யுத்தத்தை நடத்தி ஏற்பட்ட மனித மற்றும் சொத்துக்களின் அழிவு போதாதா? நாம் தொடர்ந்தும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்கிறது. அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்லது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பும், விடுதலைப் புலிகளைப் போன்று பேச்சு மேசையில் இருந்து அடிக்கடி தன்னிச்சையாக வெளியேறுகின்றனர். இந்தத் தடவையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களில் இருந்து வெளியேறிய போதும், நாம் எமது நல்லெண்ணத்தை காட்டும் முகமாக மீண்டும் பேச்சுக்கு அழைத்தோம். அவர்களை எப்படியாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழியச் செய்வதற்கு இணங்க வைப்பதற்காகவே இந்த பேச்சுக்களை நடத்துகிறோம். 

செனட் சபை உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் நாங்கள் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக பணிகளை செய்கிறோம். 

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சரவை குழுவொன்றை அமைத்து, இந்த யோசனைகளை எவ்விதம் சுமுகமாக நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆணைக்குழு தெரிவித்த சில குற்றமிழைப்பு சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் பொறுப்பு இப்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை நன்கு ஆராய்ந்து சம்பந்ப்பட்டவர்களை தண்டிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும். 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்ற தவறிவருவதாக சில வெளிநாட்டு சக்திகள் எங்களை கண்டிக்கின்றன. அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் 24பேரை கொலை செய்த வழக்கு 7 வருடங்களுக்கு பின்னர் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைப்பற்றி யாரும் பெரிதுபடுத்தி பேசுகிறார்களா? 

அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது என்று சில ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சரியல்ல. சகல கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து கொண்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். 

13 திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதை நாம் எதிர்க்கவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவிடம் இந்தத் தடவை கூறியதை ஏற்கனவே புதுடில்லியில் நடந்த அரச தலைவர்கள் சந்திப்பிலும் தெரிவித்திருந்தேன். இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. 

13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றிய எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து ஊடகங்கள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தனிக்கும். நாட்டின் அதிபராக இருந்தாலும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஒருமனதான முடிவை எடுப்பது அவசியம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஆதரித்து நடைமுறைப்படுத்துவேன். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை நடைமுறைப்படுத்துவது முடியாத காரியம். 

நிச்சயமாக மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பெந்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும். காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. அது பிரச்சினைக் குரிய விடயமல்ல. அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல. 

ஊடகவியலாளர்கள் அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உள்நாட்டு பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 வது திருத்துக்கு அப்பாற்பட்ட திருத்தம் போன்ற விடயங்களில் ஊடகவியலாளர்கள் நடுநிலையில் இருந்து பக்கச்சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். சில தமிழ் நாளிதழ்கள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியம். சிலர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தவறான அரச எதிர்ப்பு பரப்புரைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் செய்து வருகின்றனர். இது உண்மையில் நாட்டுக்கே தீங்கிழைக்கிறது. தேர்தல் காலத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பரப்புரைகளை செய்து அதில் வெற்றி காணலாம். அதை விடுத்து இப்போது நாட்டுக்கு தீங்கிழைப்பது நல்லதல்ல." என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நன்றி புதினப்பலகை 




[Read More...]


0 வடுக்களைச் சுமந்து பரிதவிக்கும் மூத்தகுடிகள்




இலங்கையின் மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதை தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகள் வாயிலாக அறிய முடிகிறது. அதேசமயம் முதியவர்களில் அதிகளவு எண்ணிக்கையானோர் கவலை, குழப்பம், ஆவல் என்ற மன ஒழுங்கின்மைக்கு உள்ளாகியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இலங்கையில் வட, கிழக்கைப் பொறுத்தவரை முதியவர்கள் எதிர்நோக்கும் இந்த உளவியல் பாதிப்புகள் வயது முதிர்ந்தவுடன் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டவையென்பதை நேரில் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு பிரதான காரணம் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தமாகும். போரினால் குடும்ப உறுப்பினர்களை இழந்தோ அல்லது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு தனிமையுடன் தவித்துக்கொண்டோ அல்லது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த துன்பப்பட்டு மீண்டும் இருப்பிடங்களுக்கு திரும்பியும் அடிப்படை வசதிகளின்றி அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியாமல் தவித்துக்கொண்டே அதிகளவான முதியவர்கள் இருக்கின்றனர்.

சமூக ரீதியான குழப்பங்கள், பயத்தால் ஏற்பட்டுள்ள குழப்பநிலை, கொள்கைப் பிடிவாத நிர்ப்பந்தத்தால் ஏற்படும் குழப்பங்கள், தேவையற்ற பயப்பிராந்திகள் மற்றும் பல்வேறு விதப்பட்ட கவலைகள் முதியவர்களை நலிந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இது வயது மூப்பினால் ஏற்படும் இயல்பான விடயம் தானே என்று முதியவர்கள் பலர் இந்த ஒழுங்கின்மை தொடர்பாக அலட்சியப்படுத்திவிட்டு மனக்கவலைகள், குழப்பங்கள், கடும் ஆவல் தொடர்பானவற்றுக்கு சிகிச்சையை நாடுவதில்லை. பெரும்பாலான முதியவர்களுக்கு இதற்கான வசதி வாய்ப்புகளோ, வலுவூட்டல் வசதிகளோ சிறிதளவும் கிடைப்பதில்லை.

ஆனால், இந்த மனக்கவலைகள், குழப்பங்கள் சிறப்பான வாழ்க்கையை மோசமாகப் பாதிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது வித்தியாசமான உலகத்திற்கு இந்த முதியவர்களைக் கொண்டு செல்லும் அதேசமயம் இங்கு முக்கியமான விடயமாக காணப்படுவது முதியவர்களுக்கு ஏற்படும் இந்தக் குழப்பம், கவலை, ஆவல் என்பன வயது மூப்படைவதாலா அல்லது கவலை, குழப்பம், ஆவல் என்ற ஒழுங்கீனங்களால் ஏற்பட்ட ஒழுங்கீனமா என்பதை அடையாளம் கண்டுகொள்வதாகும். இதற்கு தகைமை பெற்ற மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள், முதியோர் மருத்துவப் பராமரிப்பியல் நிபுணர்கள் நிச்சயமாக உதவ முடியும்.

முதியோருக்கு ஏற்படும் ஆவல், குழப்ப ஒழுங்கின்மைக்கு பலர் குடும்ப மருத்துவரை அல்லது ஆஸ்பத்திரிகளில் உள்ள சாதாரண மருத்துவர்களை நாடுவது வழமை. இங்கு பொருளாதாரமே முக்கிய காரணியாக உள்ளது. பொருத்தமில்லாத மருத்துகளைப் பெற்றுக் கொண்டு சிலருக்கு நிலமை மேலும் மோசமடைவதும் உண்டு. முதியவர்கள் சிலர் அளவுக்கு அதிகமாக இந்த அபரீதமான கவலைகள், குழப்பங்களுக்கு மருந்துகளை எடுப்பதால் அதற்கு அடிமைகளாகிவிடுவதும் காணப்படுகிறது. அதீத ஆவல் குழப்பமானது வயிற்றுப் பொருமல், அதிகளவாக வியர்த்துக்கொட்டுதல், தோலில் கொப்புளங்கள், சிவப்பு படைகள், கை, கால் நடுக்கம், மூச்சிழைத்தல், உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, சிறிய விடயங்கள் குறித்தும் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருத்தல் போன்றவற்றைத் தோற்றுவிக்கிறது. தொடர்ந்து நீடித்திருக்கம் கவலைகள் முதியவர்கள் மத்தியில் அதீக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இடம், பொருள், விடயம் தொடர்பாக ஒருவர் அதிகளவு அச்சம் கொண்டிருப்பது பயப்பிராந்தி நோயால் அவர் பீடிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். அதீத ஆவல், பயம் என்பன மார்பு வலி, மூச்சுத்திணறல், மூக்கோட்டம் போன்றவற்றின் மூலம் வெளிப்படுகின்றது. இதனால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அண்மையில் இந்தியாவில் பத்மபூஷணம் விருது பெற்ற டாக்டர் வி.எஸ்.நடராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனக்குழப்ப வியாதியானது மன அழுத்தத்துடன் உடல் ரீதியான பாதிப்புக்கும் இட்டுச் செல்கிறது. முதியவர்கள் தத்தமது வாழ்க்கைத் துணையை இழக்கும் போது அல்லது பிள்ளைகள் பிரிந்து சென்றுவிடும்போது அதிகளவு மனக் குழப்பத்துக்கு உள்ளாகின்றனர்.  இவை யாவற்றுக்கும் மேலாக “இறப்பு’ பற்றிய சிந்தனைகள் முதியவர்கள் மத்தியில் அதிகளவுக்கு காணப்படுவது பற்றி புரிந்துகொள்ளுதல் இங்கு அவசியமானதாகும். முடிவு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற சிந்தனை சதா காலமும் அவர்களின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும்  என்பது விளங்கிக் கொள்ள வேண்டிய விடயமாகும். மேற்குலகைப் பொறுத்த வரை மரண பயணம் சிரேஷ்ட பிரஜைகளிடம் சாதாரணமாக காணப்படுகிறது. ஆனால், இலங்கை போன்ற கீழைத் தேசங்களில் சுதந்திரமான முறையில் மரணிக்க வேண்டுமென்ற விருப்பமே அதிகளவில் முதியவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

முதியவர்கள் மத்தியில் காணப்படும் மனக்குழப்பத்தை அகற்றுவதற்கு சமூகத் தொண்டர் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியமானதாகக் காணப்படுகிறது. அத்துடன் குடும்பத்திலுள்ள இளைய சமூகம் முதியவர்கள் பற்றிய அக்கறையை அதிகளவில் வெளிப்படுத்த வேண்டும். தனிமையாக இருக்கும் இந்த மூத்தவர்கள் அசட்டையீனத்தால் போஷாக்கான உணவு வகைகளைப் புறக்கணித்துவிடுவதுண்டு. உண்மையிலேயே முதியவர்களுக்கு சிறப்பான போஷாக்கு தேவைப்படுகிறது. மேலும் பலர் குறைவாகவே வழங்குகின்றனர். அதிகாலையில் விழித்தெழுந்துவிடுவதால் மன அமைதியீனம் ஏற்பட அது வழிவகுக்கிறது. சிறப்பான உறக்கம் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சிறப்பான தூக்கம், தியானம், சிறியளவிலான பயிற்சிகள் என்பன பாரியளவுக்கு மனதை இலகுவாக்கும். அத்துடன் செய்வதற்கு எந்த வேலையும் இல்லையென விட்டுவிடாமல்  எதனையாவது செய்துகொண்டிருப்பதன் மூலம் மனதை இலகுவாக்கிக் கொள்ள முடியும். 

அத்துடன் சமூகத்துக்கு நான் பயனுள்ளவனாக இருக்கிறேன் என்ற உணர்வை ஏற்படுத்த குறைந்தது வாரத்தில் ஒரு தடவையாவது சமூக மற்றும் மனித நேயப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வதும் மனக் குழப்பம், கவலை, ஆவல் என்ற பிரச்சினைகளிலிருந்து முதியவர்கள் விடுபட முடியும். இந்த விடயம் நாட்டிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு பொதுவானதாக இருக்கும் அதேசமயம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வட, கிழக்கிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளைப் பொறுத்தவரை அவர்களின் உள ரீதியான பிரச்சினைகள் வேறுபட்டவையாகும். சமூகக் கட்டமைப்புகள் சிதறிச் சின்னாபின்னமாகியிருக்கும் நிலையில் அங்குள்ள முதியவர்களின் மனக் குழப்பங்கள், கவலைகள், வேறுபட்ட தன்மையைக் கொண்டவையும் அடிப்படை உரிமைகள் பற்றியவையாகவும் இருக்கின்ற நிலையில் அங்குள்ள சிரேஷ்ட பிரஜைகளின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு பரிகாரம் காணப்பட வேண்டும்.

நன்றி தினக்குரல் 
[Read More...]


0 பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தீராத கோபம் யாருக்கென்ன இலாபம்?




ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுக்கு தமிழ் மக்கள் மீதான பகைமை இன்னமும் தீரவில்லை என்பதை உணரமுடிகின்றது. விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டது, அந்தப் போரால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தது, அவர்கள் இன்னமும் இழப்புகளில் இருந்து மீட்சிபெற முடியாமல் தவிப்பது, இப்படியான இடுங்கண்களை தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற வேளையிலும் அவர்கள் மீதான ஆத்திரமும் கோபமும் ஜனாதிபதியிடம் தணியவில்லை என்பதை உணர முடிகின்றது.

உண்மையில் வன்னியில் நடந்தது போன்ற போரை வேறொருவர் நடத்தியிருப்பாராயின் அந்தப் போரில் வன்னியில் நடந்த மிகக் கொடூரமான மனிதப் பேரழிவுகள் ஏற்பட்டிருக்குமாயின் போரை நடத்தியவர், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என எண்ணியிருப்பார். அதுவே மனித இயல்பும் கூட. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவோ மேலும் மேலும் தமிழ் மக்கள் மீது கடும் கோபம் அடைபவராக இருக்கின்றார். இதனை நினைக்கும்போது ‘பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். தீராத கோபம் யாருக்கென்ன இலாபம்’ என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன. இந்த நாட்டின் ஜனாதிபதி என்பவர் எல்லா மக்களையும் சம கண் கொண்டு பார்ப்பவராக இருக்க வேண்டும்.

அவரிடம் இனம், மதம், மொழி என்ற பிரி பாடல் இம்மியும் இருத்தல் ஆகாது. ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் இன மத மொழி அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். இதன் காரணமாக இந்த நாட்டில் இனத்துவ ஒற்றுமை என்பது விரிசல் அடைவதாகவே இருக்கின்றது. இவ்வாறானதொரு பகைமை உணர்வுக்கு விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்து காரணமா? என்ற வாதப் பிரதிவாதங்களின் மத்தியில், இந்த நாட்டில் சிங்கள மக்கள் ஆளப் பிறந்தவர்கள், தமிழ் மக்கள் வந்தேறு குடிகள். எனவே உண்மையான பெளத்த சிங்களவர் ஒருபோதும் தமிழ் மக்களை உரிமையுடையவர்களாகப் பார்க்க மாட்டார்கள்.அவர்களுக்கு உரிமை கொடுப்பதையும் விரும்ப மாட்டார்கள்.

மேலும் இலங்கையின் ஆட்சியாளர் சிங்கள மக்களின் முழுமையான ஆதரவைப் பெறவேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களை அதிஉச்ச பட்சமாக நசுக்குபவராக இருக்க வேண்டும் என்ற கோட்பாடும் நடைமுறையில் உண்டு. எதுவாயினும் இலங்கை என்ற இந்த நாடு அனைத்து வழியிலும் அபிவிருத்தியடைய வேண்டுமாயின்,எதிர்காலத்தில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டுமாயின், வன்னிப் போர் போன்று இன்னோர் போர் இடம்பெறாமல் இருக்க வேண்டுமாயின் இலங்கைத் தீவில் இருந்து பேரினவாதப் பேய் துரத்தப்பட வேண்டும். பெளத்த சிங்களப் பேரினவாதப்பேய் ஆட்சியாளர்களிடமும், சிங்கள மக்களிடமும் இருக்குமாயின், கெளதம புத்த பிரான் வந்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பது சர்வ நிச்சயம். ஆக, பகையும் தீராத கோபமும் அழிவைத் தருமேயன்றி ஒருபோதும் அவை ஆக்கத்திற்கு உதவுபவை அல்ல என்பது உணர்தற்குரியது.

நன்றி வலம்புரி 
[Read More...]


0 மோசமாக அதிகரித்துவரும் சிறுவர் மீதான வல்லுறவுகள்




நாட்டில் தினமும் 35 பிள்ளைகள் பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்படுவதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்திருக்கிறது. பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக நாளாந்தம் பல சம்பவங்கள் பதிவு செய்யப்படும் நிலையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படும் பிள்ளைகளின்   எண்ணிக்கை சராசரி மூன்று என்று பொலிஸ் பேச்சாளர் கூறியிருக்கிறார். பொலிஸ் பதிவுகளுக்கு உட்படாத பாலியல் துஷ்பிரயோகங்களும் அதிகளவில் இருப்பதாக பிள்ளைகள், பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தப் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் அதிகளவுக்கு வெளிவரவில்லை. அதேசமயம் ஊடகங்களும் இந்தச் சமூகச்சீர்கேடு குறித்து அதிகளவுக்கு முன்னுரிமை காட்டியதும் இல்லை. ஆனால் இப்போது சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், வல்லுறவுகள் குறித்து உடனுக்குடன் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கு தமக்குரிய பங்களிப்பை செய்து வருகின்ற போதிலும் இந்த படுபாதகமானதும் வக்கிரமானதுமான நடவடிக்கைகளை முற்றாக கட்டுப்படுத்தவும்  இதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து பரிகாரம் காணவும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தவில்லையே என்று தோன்றுகிறது.

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்திருப்பதே பெண்கள், பிள்ளைகள் மீதான வல்லுறவுகள் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்று பெண்கள்,  ஊடகங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சே பாலி கொட்டேகொட சாடியுள்ளதை சம்பந்தப்பட்ட அரச முகவரமைப்புக்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகள் , பெண்கள் மீதான வல்லுறவுகள், பாலியல் துஷ்பிரயோகங்ளுக்கு போதைவஸ்து பாவனை மதுபாவனை, அதிகரிப்பு என்பனவும் காரணங்களாக  இருக்கின்ற போதிலும் இந்த தார்மீக நெறிப்பிறழ்வுக்கும் வக்கிர உணர்வு அதிகரிப்பிற்கும் மூல காரணமாக இருப்பது சமூக நீதி, சமூக நியதி என்பன பற்றிய போதிய அறிவில்லாமை என்று கூறமுடியும். இந்த நாட்டிலுள்ள சகல பிள்ளைகளும் எமது மகள்மார் எமது சகோதரிகள் என்ற உணர்வை நாட்டிலுள்ள உயர்மட்டத்திலிருந்து தாழ்ந்த மட்டம் வரை கொண்டிருந்தால் சிறு பிள்ளைகள், பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் அறவே ஏற்படாது.

இங்கு மற்றொரு விடயத்தையும் கவனத்திற்கு எடுக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்த போதிலும் “நல்லிணக்கம்’ என்பது வெறும் கனவாகவே தொடரும் நிலையில் போர்க்காலத்தில் பாலியல் வல்லுறவு, துஷ்பிரயோகம் போன்ற பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பிவிட்டதுடன் மீண்டும் இந்த ஈனச் செயற்பாட்டை மேற்கொண்டுவிட்டு இலகுவாக தப்பிவிடும் தன்மை காணப்படுகிறது. சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், சமூக நீதி, சமூக ஒழுங்கு, கலாசாரம் கலாசார மரபுரிமை போன்றவை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் இவற்றை அலட்சியத்துடன் தூக்கிவசீவிட்டு "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற சிந்தனையில் வாழும் சமூக உறுப்பினர்களின் தொகை அதிகரித்து வருவதும் இந்த பாரதூரமான பிரச்சினைக்கு முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது. இங்கு பெரும் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தும் விடயமாக காணப்படுவது பாதுகாவலர்களாக கருதப்படும் பாட்டன்மார், மாமன்மார் மற்றும் நெருங்கிய உறவினர்களால் சிறு பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் விடயமாகும். இப்போது ஆசிரியர்களும் இந்த வரிசையில் இடம்பிடித்துக்கொண்டிருப்பது அதிகரித்து வருவதாக சேவ் த சில்ரன் அமைப்பின் ஆலோசனைப் பணிப்பாளர் மேனகா கல்யாணரட்ண கூறியுள்ளார். வெளியார்கள் பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எப்போதும் பிள்ளைகளுக்கு நாம் அறிவுரைகூறி வருகின்றோம்.  ஆனால் இப்போது சமூகத்திற்குள்ளேயே ஆசிரியர்கள், தகப்பன்மார், பேரன்மார் இந்தக் குற்றங்களை செய்வோராக இருக்கின்றனர் என்று அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை போன்ற அரச முகவரமைப்புகளும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பலவும் சிறுவர், பெண்கள் உரிமைகள் குறித்தும் பாதிப்புகள் இடம்பெறும் போது கொள்ளவேண்டிய சட்ட ரீதியான வழி முறைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் இத்தகைய தீய செயல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் கருத்தரங்குகளை நடத்தியும் கையேட்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் கூட்டங்களை நடத்தியும் விழிப்பூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதேசமயம் அரசும் பல்வேறு சட்டங்களை அறிமுகப்படுத்தி இந்தக் குற்றச் செயல்களை தடுத்துநிறுத்த முயற்சிக்கின்றதென்னவோ உண்மைதான். ஆனால் சட்டத்தின் துவாரங்களினூடாக குற்றவாளிகள் தப்பிப் பிழைப்பதும் சட்டத்தில் சிக்கிடாமல் இருப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிறுவர் துஷ்பிரயோகம் தற்போது அதிகரித்திருப்பதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய காரணம் என்று மனித உரிமைகள் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாட்டாளர் சிறில்ராஜ் கூறுகிறார். பாலியல் விடயங்களை வெளியிடும் இணையத்தளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் அந்தத் தளங்களை சென்றடைவதற்கான இதரவழிகள் இருந்து வருகின்றன. அவற்றை தடை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வீட்டிலும் வீதியிலும் சமூகத்திலும் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாவிடின் இதற்கான தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்தினுடையதேயாகும். எந்தவித தயவுதாட்சண்யமுமின்றி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்குரிய போதிய சட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இந்த சமூக நெறிப்பிறழ்வுக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணவேண்டும். யுத்த காலத்தில் எந்தவொரு பாரிய குற்றத்தையும் இழைத்துவிட்டு அதற்கான பொறுப்பையும் வேறு தரப்பினர் மீது சுமத்தி விட்டு சிறப்பு விடுபாட்டு உரிமை பெற்றவர்களாக இருப்போர் பலர் இத்தகைய சமூக சீர்கேடுகளுக்கு முன்னுதாரணங்களாக இருப்பதற்கு எந்த விதத்திலும் இடமளிக்கக்கூடாது. பணபலம், அரசியல் அதிகார பலத்தின் போஷிப்பு என்பனவும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பலவற்றுக்கு பின்னணியில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வல்லுறவு குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் தொடர்பான சந்தேகநபர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளையும் அரசாங்கம் விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். தினமும் 5 பிள்ளைகள் வரை வல்லுறவுக்குட்படுத்தப்படுவது என்பது இங்கு சாதாரண செய்தி அல்ல. சாக்கடைக்குள் சமூகத்தை ஓட்டுமொத்தமாக தள்ளிவிடும் பஞ்சமா பாதகங்களிலும் பாரிய பாதகம்.

நன்றி தினக்குரல் 
[Read More...]


0 காலங்கடந்த ஞானம் - நிறைவேற என்ன செய்ய வேண்டும்




இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேச மத்தியஸ்தம் தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானதென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலங்கடந்தே உணர்ந்து கொண்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் இனப்பிரச்சினை தொடர்பில் அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த் தையை ஆரம்பிக்க இருந்தவேளை, அரசுடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்ற கருத்தை இதே பத்தியில் எழுதியிருந்தோம்.

தேவையாயின் அதனை ஆதாரபூர்வமாகவும் நிரூபிக்க முடியும் என்பதையும் இவ்விடத்தில் கூறித்தான் ஆகவேண்டும். இலங்கை அரசுடன் எந்தத் துணையும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் சென்றமை மகாதவறு. கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்கள்தான் என்பதை நிரூபிப்பதை மட்டுமே அது கருத்தில் கொண்டது. சர்வதேச மத்தியஸ்தம் பற்றி தாம் ஏதும் கதைக்கப்போய் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை இழக்க வேண்டியதாகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அவசர அவசரமாக அரசுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்பட்டது.

முழுக்கமுழுக்க பாராளுமன்றக் கதிரை மீது கொண்ட ஆசை காரணமாக கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்தால் இன்று நிலைமை மோசமாகி விட்டது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலப் பகுதியில் சர்வதேசத்தின் போக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. ஆனால் இப்போது அதன் வலிமை குறைவடைந்து செல்கிறது. இந்நிலையில், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு கிடைக்கக்கூடிய முடிபு சாதகமாக அமைவது சந்தேகத்திற்குரியதே.

பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் இத்த கையதொரு கோரிக்கையை விட்டிருந்தால் அதனை அரசும் சர்வதேச சமூகமும் சாதகமாகப் பரிசீலித்திருக்கும். அத்தகைய சூழமைவில் பேச்சுவார்த்தை ஒரு படிமுறையில் நகர்வதற்கான சாத்தியம் இருந்திருக்கும். ஆனால், கேட்கவேண்டிய நேரத்தில் கேட்கத் தவறியமைக்கு கூட்டமைப்பின் குறுகிய நோக்கமே காரணம் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். எனவே,  இப்போது கூட சர்வதேச மத்தியஸ்தத்தை கேட்கும் கூட்டமைப்பு அதற்காக காத்திரமான அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கும். இதற்கு மேலாக, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதும் கட்டாயமானதாகும். இதனைச் செய்யாமல் வெறும் வார்த்தை வடிவில் கோரிக்கை இருக்குமாக இருந்தால், பாவம் தமிழ் மக்கள் என்று கூறுவதை தவிர வேறெதுவும் இருக்காது.

நன்றி வலம்புரி 
[Read More...]


0 கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள்.




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும், செயற்பாடுகளும் தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். அந்த உரையில் அவர் கூறுகின்ற ஒருசில விடயங்கள் தொடர்பாக இந்த பத்தி ஆராய உள்ளது. இதற்கு காரணம் சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பில் மிகவும் அனுபவம் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இவருக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தினை நோக்கினால் அவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்கள் அனைவரையும்   விட கூடுதல் அதிகாரமும் முக்கியத்துவமும் உடைய ஒருவராக கருதப்படுவதாலேயாகும். காரணம் உத்தியோக பூர்வமான அழைப்புக்களின் பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்ற சந்திப்புக்களில் அவர்களுக்கு இணையாக சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்வதுண்டு.

அது மட்டுமன்றி வேறு சந்தர்ப்பங்களில் ஏனைய தலைவர்கள் அழைத்துச் செல்லப்படாது சுமந்திரன் அவர்களை  மட்டும் சந்திப்புக்களுக்கு சம்பந்தன் அவர்கள் அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுக் குழுவின் உறுப்பினராகவும் சுமந்திரன் அவர்கள் உள்ளார். அந்த அடிப்படையிலேயே கனடாவில் அவர் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த உரையின் ஆரம்பத்தில் தற்போது தாயகத்திலுள்ள களநிலைவரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். குறித்த உரையில் பல்வேறு கோணங்களில் மக்கள் அனுபவிக்கும் மனிதஉரிமை மீறலகள், துன்பங்கள், துயரங்கள், தாயகத்தில் சிறீலங்கா அரசு புரியும் சிங்கள மயப்படுத்தல், இராணுவமயப்படுத்தல் போன்ற அக்கிரமங்கள் அநியாயங்கள் அனைத்தையும் குறுகிய நேரத்தினுள் சுருக்கமாகவும் ஆனால் மிகத் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே சிறீலங்கா பாராளுமன்றத்தில் 2011 யூலை 7ம் திகதியும், 2011 அக்டோபர் 21 ம் திகதியும் சிறீலங்காவின் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் நிலவர அறிக்கை என்ற தலையங்கத்தில் இரண்டு அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார். அவரது இந்த முயற்சி ஏற்கனவே தமிழினத்திற்கு எதிராக தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் இன அழிப்புச் செயற்பாடுகளை ஆவணப்படுத்துகின்ற வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், மனிதாபிமான அமைப்புக்களும் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் அநியாயங்களை ஆவணப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள விபரங்களை நாம் வரவேற்பதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவரது பேச்சின் இரண்டாவது கட்டமாக மேற்சொன்ன பாதிப்புக்கள், அநியாயங்கள் இடைநிறுத்துவது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் உரையாற்றினார். இந்த நடவடிக்கை அவசரமாக எடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால், தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயங்கள் உரிய முறையில் இடம்பெறுவதற்கு, அதாவது நடைபெற்றதற்கும் நடைபெறுவதற்கும் மீள்நல்லிணக்கம் அவசியம் என்று கூறுகின்றார். இவற்றிற்கெல்லாம் இனப்பிரச்சினைக்குரிய அடிப்படையான காரணங்கள் கண்டறியப்படல் வேண்டும் என்றும் அதற்கு தீர்வும் காணப்படல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். முரண்பாடுகளை களைந்து மீள்நல்லிணக்கத்தை (Reconciliation)  ஏற்படுத்துவதென்பது என்பது நடைபெற்ற அநியாயங்களுக்கு நீதி பெற்றுக் கொள்ளுதலும் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்ளுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும்போதே உண்மையான மீள்நல்லிணக்கம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். தத்துவரீதியாக சுமந்திரன் அவர்கள் மேலே கூறியுள்ள விடயங்களுடன் முரண்பட முடியாது. ஆனால் அவர்கூறும் இன மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்பதன் பிரதான இரு விடயங்களான, நீதி நியாயங்களை அடைந்து கொள்ளுவது தொடர்பாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைந்து கொள்வது தொடர்பாகவும் அவர் முன்வைத்துள்ள ஆபத்தான அணுகுமுறைகள் பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

உலகின் ஏனைய இடங்களில் இனங்களுக்கிடையில் மீள்நல்லிணக்கம் ஏற்பட்டுள்ள இடங்களை எடுத்துப் பார்த்தால், அநியாயங்கள் செய்த ஆட்சி கவிழ்ந்து, அநியாயங்கள் செய்த ஆட்சியாளர்களது கொள்கையை நிராகரிக்கும் புதிய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரே அத்தகைய முரண்பாடுகளை களைந்து மீள்நல்லிணக்கத்தை (Reconciliation)  ஏற்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த விடயத்தை சுட்டிக்காட்டியவாறு தொடர்ந்து அவர்கூறும் விடயம் யாதெனில், இலங்கையை பொறுத்தவரை அநியாயங்கள் செய்த ஆட்சியே தற்போது அதிகாரத்தில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வகையில் உங்களுக்கு (புலம்பெயர் தமிழர்களுக்கு) ஓர் விடயத்தினை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்த விடயத்தினை நீங்கள் ஆழமாக கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கூறி பின்வரும் கருத்தை முன்வைத்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும், ராஐபக்சவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இராணுவத் தளபதிகளுகு எதிராகவும், மேற்கொள்ளும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளும், ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளும், சர்வதேச சமூகத்திடமிருந்து வரும் அழுத்தங்களும் சிறீலங்கா அரசாங்கத்தினதும், ராஐபக்கசவின்தும் செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரிக்கவே  செய்கின்றது என்றும் கூறியுள்ளார். இந்த விடயத்திற்கு நாம் ஓர் தீர்வு காணவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரது  உரையூடாக அவர் கூற முற்படும் விடயம் நீதிநியாயம் பெறுவதற்கும் தீர்வு பெறுவதற்கும் முதற்கட்டமாக ஆட்சி மாற்றம் தேவை என்பதாகும். அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஆட்சியிலுள்ள ராஐபக்சவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது. ஆனால் புலம்பெயர் தமிழ் மக்களது செயற்பாடுகள் ராஐபக்சவின் செல்வாக்கை வளர்ப்பதாகவே அமைக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு செயற்பட்டால் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி பெறும் நோக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கருத்துக்களை கூறுவது இது முதற் தடவையல்ல.

கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலண்டன் கிளை ஒழுங்கு செய்த கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது, போர்க் குற்ற விசாரணைகளை வலியுறுத்தும்போது புலம்பெயர் தமிழ் மகக்ள் நிதானமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் போரில் ஈடுபட்டது இராணுவம் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர். சிறீலங்கா அரசுக்கு எதிராக மட்டும் விசாரணையை கோரமுடியாது புலிகளுக்கு எதிராகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு நீங்கள் தயாரா? இல்லை என்றால் நீங்கள் அதனை வலியுறுத்துவதனை பற்றி சற்று சிந்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனை விடவும், ஏப்ரல் 2ம் திகதி, 2010 அன்று யாழ்ப்பாணம் டேவிட் றோட்டில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் சுமந்திரன் அவர்களுக்கும் எனக்கும் இடையில் நேரடி விவாதம் ஒன்று புத்திஜீவிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன் அவர்கள், புலிகள் அழிக்கப்பட்டமை தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், தன்னைப் பொறுத்தவரை ஆயுதப்போராட்டம் தவறு என்றும், ஆயுதப் போராட்டத்தை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார். தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டமையை மகிழ்ச்சியுடன் வரவேற்பது போலவே அக்கருத்துக்கள் அமைந்திருந்தன.

அத்துடன், விக்கிலீக்ஸ்(Wikileaks) ஊடாக நாம் அறியக்கூடியது யாதெனில், சிறீலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ் அவர்கள், திரு.சம்பந்தன் அவர்களுடனான சந்திப்பொன்றில் போர்க்குற்றம் தொடர்பாக எத்தகைய கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும் என மீண்டும், மீண்டும் வினாவியதற்கு, சம்பந்தன் அவர்கள் பதிலளிக்காது தொடர்ச்சியாக மௌனம் காத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து விடயங்களையும் தொகுத்துப் பார்க்கையில், போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்றும்,  நீதி நியாயங்கள் வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் கூறிவருவது  போர்குற்றம் போன்ற விடயங்களில் தாம் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பது போன்று தமிழ் மக்களை ஏமாற்றி நம்பவைத்து பிறசக்திகளின்   நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றவுமே ஆகும்.  அத்துடன், நடைமுறை ரீதியில் போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீனமான விசாரணையை இல்லாமல் செய்வதே கூட்டமைப்பினரின் இரகசிய நிகழ்ச்சி நிரல் என்பதும் தெளிவாகின்றது.

போர்க்குற்ற விசாரணையை கைவிடும் பாதையில் தாமும் செல்வதுடன், தமிழ் மக்களையும் விரும்பி கைவிடச் செய்யும் பாதையில், கொண்டு செல்வதே கூட்டமைப்பினரின் மறைமுக நோக்கம் என்பதனை எமது  மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.  தமிழ் மக்களாக விரும்பி சுயாதீனமான சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கைவிடச் செய்வதற்கு இன்னும் பலகாரணங்களை கூறிக் கொண்டு, கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்காலத்தில் பல்வேறு கோணங்களில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு அவர் கூறும் இன்னுமொரு விடயம் யாதெனில்,  தமிழ் மக்கள் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டுமாம். அதாவது நேரடியாக சிங்கள மக்களிடம் சென்று தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது, என்ன வேண்டும் ஏன் வேண்டுமென்ற நியாயங்களை தெளிவுபடுத்த வேண்டுமாம். தமிழ் மக்கள் நாட்டைப் பிரிப்பதற்கு முற்படுகின்றார்கள் என்று சிங்கள தலைவர்கள் சிங்கள மக்களுக்கு பொய்களை கூறி வருகின்றனர். அதனால் தற்போதுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்;வைக்காண வேண்டும் என்பதாகும் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளோம்  என்றும் கூறியுள்ளார். அத்துடன் இவ்விடயங்களை நேரடியாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தானது சிங்கள மக்கள் முட்டாள்கள், அவர்களுக்கு தமிழ் மக்களுக்கு என்ன நடந்ததென்பதும், நடைபெறுகின்றதென்பதும், என்ன வேண்டும், என்பதும் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. அத்துடன், இது வரை காலமும் தலைமை வகித்த தமிழ் தலைவர்களுக்கு (தந்தை செல்வா உட்பட) சிங்கள மக்களுக்கு எமது பிரச்சினையை விளக்கும் எந்தகைய திறமையும்;, ஆற்றலும் இல்லை என்பது போலவும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள  உறுப்பினர்களை விட திறமையான சிங்கள அறிவும் அரசியல் அறிவும் இருக்கும் விக்கிரமபாகு கருணாரட்ண போன்ற நபர்களால் கூட புரிய வைக்க முடியாததை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்கப்போகின்றார் என்ற தொனிப்படவே அவரது கருத்துக்கள் தென்படுகிறது. இக்கருத்தானது, தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். தமிழர்கள் தனிநாடு கேட்கின்றனர் என்றே சிங்கள மக்கள் கருதுகின்றனர் என்றும், தனிநாட்டுக்குப் பதிலாகவேறு தீர்வை ஏற்றுக் கொள்ள தமிழ் மக்கள் தயாராக உள்ளனர் என்பது சிங்கள மக்களுக்கு தெரியாது என்றும்  அதனை நாம்(த.தே.கூ) சிங்கள மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

இக்கருத்து சுமந்திரன் அவர்களது தனிப்பட்ட கருத்து என்றால், அவரது அரசியல் அனுபவம் இன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இதுவே கூட்டமைப்பினரின் கருத்தாக இருந்தால் அது பாரதூரமான விடயமாகும். ஏனெனில், 1970 ஆம் ஆண்டு,  தேர்தலில் போட்டியிடும் தனிநாட்டை வலியுறுத்தும் நபர்களையும் கட்சிகளையும்  நிராகரிக்குமாறும் சமஸ்டியை வலியுறுத்தும் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரிக்குமாறும் தந்தை செல்வா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி வெளிப்படையாக அதன் தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தி போட்டியிட்டு, வெற்றியும் பெற்றிருந்தது. இது சிங்கள மக்கள் அறியாத விடயமல்ல. சமஸ்டி தனிநாடு இல்லை என்பது சிங்கள மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. அத்துடன் 70 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துபவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் சமஸ்டியை வலியுறுத்தும் தம்மை வெற்றிபெறச் செய்யுமாறும் கோரி போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வநாயகம் அவர்கள் பற்றி சிங்கள மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தனிநாட்டுக்கு முற்றிலும் எதிரானவரும்  சமஸ்டியை கூட கொடுக்க தயாரில்லாதவருமான ரணில் விக்கரமசிங்க புலிகளுடன் ஒப்பந்தம் செய்தமைக்காக, அவர் சமஸ்டியை கொடுக்கப்போகிறார் என்று கருதிய சிங்கள மக்கள் அவரை தேர்தலில் தோற்கடித்து, இன்றுவரை அவரை ஓரம் கட்டியுள்ளனர். தமிழ் மக்களுக்கு உள்ள உரிமைகள் மதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படல் வேண்டுமென்றும் தனிநாடு உருவாககுவதனை தான் விரும்பவில்லை என்றும் கூறிவரும் விக்கிரமபாகு கருணாரட்ண தோற்கடிக்கப்பட்டுள்ளார். மேற்கூறிய இரு சம்பவங்களுக்கும் காரணம் ஒன்றாகவே உள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம் சிங்கள மக்கள் தனிநாட்டை விரும்பவில்லை என்பது  மட்டுமல்ல. தமிழ் மக்களுடன் அதிகாரங்கள் பகிரப்படுவதனை அவர்கள் விரும்பவில்லை. இதற்குக் காரணம் இலங்கை ஓர் பௌத்த சிங்கள நாடு என்றும், அதிகாரங்கள் பௌத்த சிங்களவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டுமென்றும் சிங்கள மக்கள் விரும்புகின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் இலங்கைத் தீவின் ஏதாவதொரு பகுதியிலாவது உரிமைகோர இடமளித்தால், பிராந்தியத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்கள் பிராந்தியத்தில் சிறுபான்மையாக உள்ள சிங்கள பௌத்தர்களை விழுங்கிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.

நான் ஏற்கனவே எனது முந்தைய பத்திகளில் குறிப்பிட்டது போல, அதாவது சிங்களவர்களை பொறுத்தவரையில், இலங்கைத் தீவில் தமிழருக்கு உரிமையை எப்பொழுது அங்கீகரிக்கின்றார்களோ, அன்றய தினம் அவர்களது இனத்தின் இருப்பின் அழிவுக்கு முதற்படியாக அமையுமென அஞ்சுகின்றனர். ஆகவே, அவர்களை மாற்றுவதற்கான நிர்ப்பந்தத்தை உண்டாக்கினாலே தவிர, எந்த நியாயத்தை கூறினாலும் அவர்களாகவே விரும்பி தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இந்த விடயத்தினை கூட்டமைப்பினர் புரிந்தும் புரியாதது போல செயற்படுவது மிகவும் ஆபத்தான விடயமாகும். தனது உரையின் ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநியாயங்கள் தொடர்பாகவும், சிங்கள அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக  வெளிபடையாகவும், கடுமையாகவும் கூறுவதன் மூலம், தாம் தமிழ் மக்களது நலனில் அக்கறையுள்ளவர்கள் என்று தமிழ் மக்களை நம்பவைத்து, இவ்வாறு தம்மை  நம்பிய மக்களை ஏமாற்றி, தாம் பிறசக்திகளது நலன்களை நிறைவேற்றும் பாதையில் கொண்டு செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஓராணியாக நின்று முயல்வது பற்றி தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மீள்நல்லிணக்தின் அடுத்த கட்டம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதற்கான அணுகுமுறைகள் என அவரது உரையில் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பாக அடுத்த பத்தியில் ஆராய்வோம்.

 - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

[Read More...]


இவ்வாரம் பிரபல்யமான பதிவுகள்

SRILANKATRUTH செய்திகள்

ICG report fails to cover genocide-intended sexual violence

The International Crisis Group report titled ‘Sri Lanka: Women’s Insecurity in the North and East’ that was released on Tuesday touched upon problems faced by the Eelam Tamil women .....
Read More

No infrastructure to take care of floods displaced genocide victims of Vanni

11,000 people belonging to 2,556 families have been displaced from the low-lying lands of Ki'linochchi district this week following heavy rain and floods, according to District Secretariat officials in Ki'linochchi.
Read More

Tragedy of US policy on Sri Lanka's war crimes

The Obama Administration has repeatedly affirmed its commitment to human rights and dignity and rule of law and has largely delivered on its promise -- most notably in the context of the Arab Spring.
Read More

 

இன்டலி

மொத்த விருந்தினர்

Blogger Themes

   

VISITOR COUNTER

பதிவுகள்

Return to top of page Copyright © 2010 | Platinum Theme Converted into Blogger Template by HackTutors