மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......!

கார்த்திகை 27, தமிழ்மக்களின்விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேசியநாள். அந்நாளில், ஒவ்வொரு வருடமும் மாவீரர்துயிலும் இல்லங்களுக்குச் சென்று, மடிந்த வீரர்களின் கல்லறைகளில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி,  மாவீரர்களின் கனவு நனைவாகும் என்ற ஆறுதல் வார்த்தைகளைக்கூறி, கனத்த மனங்களுடன் திரும்பும் வேளை, இன்னும் உங்களின் கனவை நனவாக்கவில்லையே என்ற உறுத்தல் மனதைக் குடையும்.

இன்றைக்கு முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை, உங்களின் கனவை வாக்குவோம் என்றே விதைகுழிகளுக்குள் விதைத்துவிட்டோம். ஈழத்தமிழ்மக்களின் சுபீட்சமான எதிர்காலம் என்ற உன்னத இலட்சியத்திற்காக, கொள்கைக்காகப் போராடி மடிந்த இந்த மாவீரர்கள் தான் உண்மையான போராளிகள் என்பது தேசியத் தலைவனின் கருத்து. 2001ம் வருடம் தீச்சுவாலை எதிர்த்தாக்குதலுக்கு தயாராக இருந்தவேளை, களமுளைத்தளபதிகளுக்கான கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டிருந்தோம். அப்போது  தலைவர் பிரபாகரன் அவர்கள்  உண்மையான போராளி என்றால் யார், அவர் தான் கொண்ட கொள்கையில் வென்றிருக்க வேண்டும் அல்லது அந்த கொள்கைக்காக வீரச்சாவடைந்திருக்க வேண்டும், அவர் தான் உண்மையான போராளி. எனவே நான் என்னை ஒரு உண்மையான போராளி என்று சொல்லமாட்டேன். நான் என்னுடைய கொள்கையில் வெல்லவுமில்லை வீரச்சாவடையவுமில்லை என்று கூறினார்.  அந்தக் கர்மவீரனின் எண்ணத்தில் உயர்ந்து நிற்பவர்கள்தான் மாவீரர்கள்.

தமிழ்மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் முத்துக்கள் இவர்கள். அவர்களின் தியாகம், உழைப்பு, கனவு எல்லாம் விடுதலை மீதும் அதை வழிநடாத்திய தலைவன் மீதும் கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடுகள். லெப் சங்கர் தொடக்கம் எத்தனை மாவீரர்களின் தியாகங்களைத் தாங்கியிருக்கிறது இந்த விடுதலைப்போராட்டம். துப்பாக்கிச் சன்னம் துளைத்து விழுந்த வேளையிலும் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்திட்டுப் போங்கோ எனக் கூறி வீரச்சாவடைந்த லெப் சீலன், காந்தியவழியில், நிராகாரம் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து தியாகமரணமடைந்த தியாகி திலீபன், எதிரியின் குகைக்குள் கரும்புலியாய் வெடித்த கரும்புலி மில்லர், என எத்தனை எத்தனையோ தியாகங்களின் அடித்தளத்தில் வளர்க்கப்பட்டது இந்தப் போராட்டம். தமது வாழ்க்கையை அர்ப்பணித்த எல்லாப் போராளிகளும் நான் வீரச்சாவடைந்தாலும் எனது தலைமுறை போராடும்என்ற ஒரே நம்பிக்கையில்தானே போர்க்களம் போனார்கள். அதே நம்பிக்கையோடுதானே விதைகுழியில் தூங்குகின்றார்கள். ஒவ்வொரு போராளியையும் விதைக்கும் போது நெஞ்சு கனக்கும் தாயகக்கனவுடன் பிரிந்து செல்லும் இவனின் கனவை நனைவாக்குவோம் என விதைகுழி மீது உறுதியெடுத்துத்தானே விதைத்தோம்.

அவர்களின் தியாகங்கள் அளப்பரியவை. வர்ணிக்க முடியாதவை. தற்துணிவான வீரம்மிக்க செயல்களின் கதாநாயகர்கள் தான் மாவீரர்கள். எப்படி இவர்கள் இவ்வாறு தமது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தார்கள். ஒரேவிடயந்தான், இனத்தின் விடுதலை வேண்டுமாயின் போராடியேதான் ஆகவேண்டும் என்ற முடிவில் தெளிவாக இருந்தார்கள் அதற்காக எந்தக் கடினங்களையும் தாங்கும் துணிவுடன் செயற்பட்டார்கள். சத்தியத்திற்காகச் சாகத்துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப்பிறவியும் சரித்திரத்தைப் படைக்கமுடியும் என்ற தலைவனின் வழியில், சரித்திர புருஷர்களாக சத்தியத்தின் வழி நின்று தமது வாழ்வை அர்ப்பணித்த அவர்களின் நினைவு எழுச்சி தினத்தின் கனதி கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

தலைவராலும் தமிழ்மக்களாலும் உன்னதமாக மதிக்கப்படும் மாவீரர்களுக்காகக் கொண்டாடப்படும் மாவீரர்தினம் வெறும் அடையாள நிகழ்வோ, கேளிக்கை நிகழ்வோ அல்ல. வணங்குதலுக்குரிய, போற்றுதலுக்குரிய நன்நாள். தலைவரால் தேசிய நாளாகவே பிரகடனப்படுத்தப்பட்ட புனிதநாள்.

தமிழீழத்தின் புனிதநாளான மாவீரர்நாள், நினைவு எழுச்சி நாளாகத் தேசமெங்கும் பரந்து நிற்கும். களமும் புலமும் ஒரே குடையில் இணைந்து நின்று அந்த நாளை வரவேற்கும். தமிழீழத்தின் ஒவ்வொரு இடமும் புனிதமாக, மாவீரர் நினைவுகளைத் தாங்கி அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  வீதிகளும் வெளிகளும் பாதாகைகளுடன் நிமிர்ந்து நிற்க, தென்றலோடு கலந்துவரும் மாவீரர் கீதங்கள் நினைவுகளை மீட்டி, உணர்வுகளை உரசிச் செல்லும். காற்றுக்கூட அவர்களின் நினைவைச் சுமந்துவரும். துயிலுமில்லங்களில், அவர்களின் கல்லறை கண்ணீரில் நனைந்திருக்கும். வித்தாகிப்போன ஒவ்வொரு ஆத்மாவின் பெயரிலும் தனது சத்திய உரையை வழங்கும் தலைவன், நெஞ்சோடு நிறுத்தி உறுதியெடுப்பார். நிசப்தமாக ஏற்றப்படும் விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கும் அவர்களின் கல்லறை மீது ஒவ்வொரு தமிழனும் மானசீகமான உறுதியெடுப்பான் உங்கள் கல்லறை மீது எங்கள் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம். வித்தாகிப்போன அந்த ஆத்மாக்கள் அன்றைய உறுதி மொழிகளில் அமைதியாக உறங்கும்.

தற்போது ஈழத்தில் தமிழினம் கொடியவனின் கரங்களுக்குள் சிறைப்பட்டிருந்தாலும் ஆறாத வடுக்களுடன் அவல நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தாலும் இனத்தின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் போராடி மடிந்த மாவீரர்களை நினைவுகூரத் தயாராகி, வரப்போகும் கார்த்திகையை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.  போற்றப்பட்டு வந்த துயிலுமில்லங்களைக் கூட இடித்தழித்திருக்கிறது போர்ததர்மமும் மனிதாபிமானாமும் அற்ற சிங்கள இராணுவம். அடக்குமுறைச்சிறையில் இருந்தாலும், ஈழமக்கள், அமைதியாக ஆத்மார்த்தமாக வீடுகளில் நினைவுகூருவார்கள் என்பதில் ஜயமில்லை. மாவீரர்களின் நினைவுக்கான எந்தச் சுவடும் தமிழீழத்தில் இல்லை என்று சிங்களம் இறுமாப்புடன் இருந்தாலும், மக்கள் தமது மனங்களில் ஏந்தி மாவீரச் செல்வங்களை வணங்குவார்கள் என்பது திண்ணம்.

ஆனால், விடுதலைப்போராட்டத்தின் அடுத்தக்கட்டத்தைச் சுமக்கவேண்டிய புலம்பெயர்தேசம் குழப்பங்களில் சிக்கித் தவிக்கின்றது. தலைவனின் வழிநடத்தலில் ஒன்றுபட்டு நின்ற தேசம் இன்று  பிரிவுகளாக நின்று மாவீரர் தினத்தை நடாத்துமளவிற்குப் பிளவுபட்டு நிற்கின்றது. கொள்கைகள் கோட்பாடுகளில் முரண்பாடுகள் வரலாம். எங்களுக்காக மடிந்துபோன தியாகிகளான மாவீரர்களை நினைவு கூருவதிலுமா இழுபறி? ஆளாளுக்கு ஒரு மாவீரர் தினம்அதற்கான பாரிய விவாதங்கள், உரையாடல்கள் என மாவீரர்தினம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கின்றன. மாவீரர்களின் தியாகங்கள், அவர்களின் வரலாறுகள் பற்றிய உரையாடல்கள், செய்திகள் பரிமாறப்படுவதை விட, முரண்பாட்டின் விவாதங்களே மிகவும் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது தானா தலைவனிடத்தில் இதுவரையும் நாம் கற்றுக்கொண்டது. மாவீரர் தினத்தில் கூட ஒன்றிணைய முடியவில்லையென்றால் நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம் எமது போராட்டம் எங்கே செல்கின்றது. ஒற்றுமையாக முந்நகர்த்தப்பட வேண்டிய போராட்டம், உள்முரண்பாடுகளில் சிதைந்துபோகின்றது. இதனால் எத்தனை தமிழ்மக்கள் திசைதெரியாத குழப்பதோடு தவிக்கிறார்கள், பலர் ஒதுங்கிக் கொண்டு செல்கின்றார்கள். இழுத்த இழுப்பிற்கெல்லாம் எல்லாமக்களும் இழுபடுவார்கள் என்று நினைப்பது தவறானது.

தலைவரின் தலைமையில் பயணித்தவர்கள் இன உரிமைப் போராட்டத்தில் செலுத்தும் கவனத்தை விட விடுதலைப்புலிகளின் உரிமை யாருக்கு என்னும் தனி உரிமைப் போராட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப்போல தெரிகின்றது. மிகவும் கட்டுக்கோப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரால் அடையாளங் காணப்பட்டவர்கள், இன்று தங்களிற்குள்ளேயான தனிப்பட்டதாக்குதல்கள், வன்முறைகள், வசவுகள் என்ற வளையத்திற்குள் சிக்கி அமைப்பினதும் தலைவரினதும் கௌரவத்தை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இவையே மாவீரர் தின குழப்பங்களுக்கும் காரணமாகிவிட்டன. இவர்கள் யாரும் தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. குடும்பத்தலைவர் இருக்கும் போது ஒழுங்காக இருப்பதை விட அவர் வீட்டில் இல்லாத போதும் ஒழுங்காக இருப்பது தான் உன்னதமான ஒழுக்கம். விடுதலைப்புலிகளின் பெயரால் செய்யப்படும் ஒவ்வொரு விடயத்தாலும் அவமானப்படுவது நீங்கள் யாருமல்ல, ’தலைவர்தான்என்பது கூடப் புரியவில்லையா?. இந்த மாபெரும் இயக்கம் பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல்லின் ஆளுமையின் வெளிப்பாடு. அதைச்சுற்றித்தான் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டனர். அதை தலைவர் இலகுவாக கட்டியெழுப்பிவிடவில்லை. எத்தனையோ அர்ப்பணிப்புகள் தியாகங்களின் அடித்தளத்தில் தான் கட்டியெழுப்பினார். இதனால் அவரின் தலைமையின் கீழ் செயற்பட்டவர்கள் என்பதன் அடிப்படையில் அதை போட்டு உடைக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

தமிழீழம் என்ற ஒற்றைக் கனவுக்காக மடிந்துபோன ஆத்மாக்களிடம், எங்களுக்காக நீங்கள் ஆகுதியானீர்கள். ஆனால் உங்களை எங்களால் ஒன்றுபட்டு வணங்க முடியவில்லை என எவ்வாறு கூறமுடியும். அவ்வாறு கூறின் நெஞ்சிலே நெருஞ்சி முள்ளாள் குத்துவது போலாகாதா? உங்களிடம் தாழ்வான வேண்டுகோள் ஒன்றுதான். தயவுசெய்து தலைவரையும் மாவீரர்களையும் அவமானப்படுத்திவிடாதீர்கள். உங்களின் அணிப்பலத்தைக் காட்டுவதற்கான குறியீடாகவோ ஆதாரமாகவோ இந்தப் புனிதநாளைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் முரண்பாடுகளினால் மக்களைச் சோர்வடையச் செய்யாமல் ஒருமைப்பாட்டுடன் ஒரே வழியில் பயணிப்போம் என இந்த மாவீரர் தினத்திலாவது அவர்களின் கல்லறைகளின் மீது சத்தியம் செய்யுங்கள்.

முரண்பாடுகளில் சிதைக்கப்படும் இன்னொரு முக்கியமான புனிதம் தலைவரின் மாவீர்ர் தின உரை நேரம். வருடத்தில் ஒரு தடவைதான் தலைவர் தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பார். ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் தலைவர் தனது உரையில் கடந்த ஒருவருடத்தின் அடைவுகள், சிங்களத்தின்  கொடூரங்கள், தனது நகர்வுகள்தொடர்ந்து என்ன செய்யப் போகின்றேன் என்பதைப் பதிவு செய்வார். எனது தனிப்பட்ட பார்வையில், ”அந்தப்புனிதமான தினத்தில், தான் கடந்த வருடத்தில் என்ன செய்தேன், இனி என்ன செய்யப்போகின்றேன் என்பதை  ஆத்மார்த்தமாக மாவீரர்களிடம் கூறும் நிகழ்வாக அல்லது சத்தியம் செய்யும் உரையாகத்தான் தலைவர் கருதியதாகவேநான் நினைக்கின்றேன். எனவே அவர் உரையாற்றும் நேரம் முக்கியமானது, பெறுமதிவாய்ந்தது. எப்போதும் தலைவர் சொல்லுக்கு முன் செயல் இருக்க வேண்டும என விரும்புவார். வெற்று வார்த்தைகளை விட செயற்திறன்மிக்க செயற்பாடுகளைத்தான் வரவேற்பார். அதில் ஒன்றாகவே அவரது மாவீரர்தின உரையும் அமையும்.

கடந்த இரண்டுவருடங்களில், அந்த நேரத்தில் எத்தனையோ அபத்தங்கள் நடந்தேறிவிட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள், அவற்றில் முரண்பாடான கருத்துக்கள். தயவுசெய்து அந்த நேரத்தை களங்கப்படுத்தாதீர்கள். தலைவர் மாவீரர் தின உரையாற்றுவாரா! ஆற்றமாட்டாரா! என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் வருடத்தில் ஒரு தடவை மட்டுமே உரை நிகழ்த்தும் அந்த நேரம் தலைவருக்கு மட்டுமே உரியது. அவர் செய்யும் சத்திய உரை அது. தலைவரைத்தவிர யாராலும் அந்த நிமிடங்களுக்கு வலுச்சேர்க்க முடியாது. அந்த மாபெரும் தலைவன், தான் செய்தவற்றையும் செய்யப்போவதையும் தன்னை நம்பி வீரச்சரடைந்த மாவீரர்களுடனும் தன்னை நேசித்த மக்களுடனும் பரிமாறும் நிமிடங்கள்.

பெறுமதியான அந்த நிமிடங்களில் கண்டிப்பாக ஏதோ ஒரு உரையை வாசித்தே தீர வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் விதிக்கப்படவில்லை. அவை சம்பிரதாயமான உரைகளை வாசிப்பதற்கான நிமிடங்களும் அல்ல. எனவே, அந்த நிமிடங்கள் தலைவருக்குரியவை என்றே விட்டுவிடுங்கள். அதுதான் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை. தலைவருக்குரிய நிமிடங்கள் மௌனமாகவே கரையட்டும். அந்த நேரத்தில் மாவீரர்களை மௌனமாக வணங்கி நிற்கும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் தலைவர் நிசப்தமாக வலம்வருவார். அற்புத வீரனின் நினைவுகளுடன் கலந்திருக்கும் சிறப்பு நேரமாக இருப்பதுதான் பெறுமதியானது. அந்த நேரத்தில் தலைவனின் சிந்தனைகளைக் காற்றோடு கலக்கவிடுங்கள். அதில் மக்கள் இணைந்திருக்கட்டும். அந்த உணர்வுகளுடன் அவர்கள் மாவீரர்களின் கல்லறைகளில் விளக்கேற்றி, அந்த ஆத்மாக்களோடு உறுதியெடுப்பார்கள். அதன் பிற்பாடு உங்களின் அறிக்கைகளை வாசியுங்கள்.

மாவீரர் தினம் என்ற புனிதநாளிலாவது தலைவரின் பேரால் ஒன்றிணையுங்கள் என்பதுதான் விடுதலையை வேண்டிநிற்கும் மக்களின் விருப்பம். இலக்கும் அதற்கான பாதையும் தெளிவாக இருந்தால் முரண்பாடுகள் அர்த்தமில்லாதவை. பிளவுபட்டு நின்று எந்த முடிவையும் எட்ட முடியாது. ஒருகணம் மாவீரர்களின் தியாகத்தை மட்டும் எண்ணிப்பாருங்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கடந்து இணைந்து நில்லுங்கள். தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் அவருடைய ஆளுமையும் தமிழினத்தை என்றைக்கும் வழிநடாத்தும். தலைவரின் இடமும் உரையாற்றும் நேரமும் அவருக்கு மட்டுமே உரியவை. இதனை மனதில் நிறுத்தி, அவரின் சிந்தனைகளை பின்பற்றிச் செயற்படுவது தான் தலைவருக்கு கொடுக்கும் அதி உச்ச கௌரவம்.

அபிஷேகா
abishaka@gmail.com
Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment