நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாகக் குறிப்பிட்ட இரு விடயங்களை இங்கு நினைவு கூர்வது பொருத்தமானது.ஒன்று விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தனது அரசுப் படைகளின் வெற்றியை அடுத்து அவர் அறிவித்த விடயம்."இந்த நாட்டில் இனிமேல் சிறுபான்மை இனம் என்று ஒன்று இல்லை.'' என்ற பிரகடனம் அடுத்தது தமது இரண்டாவது பதவிக் காலத்திற்கான தேர்தலை முற்கூட்டியே நடத்தும் அறிவிப்பை வெளியிட்ட கையோடு அவர் கூறியது.""கடந்த தடவை (2005 நவம்பர்) ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்கள் வாக்களிக்க முடியாத இக்கட்டு நிலவியது. அவர்கள் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் வாக்களிக்கக்கூடிய நிலைமை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டமையை அடுத்து இப்போது வந்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் ஜனாதிபதியை நாட்டின் தலைவரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் அவர்களையும் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை நான் அவர்களுக்கு வழங்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு வந்த உடனேயே நான் அதனை அவர்களுக்குத் தந்துள்ளேன்.'' என்றார் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ.
இரண்டாவது பதவிக் காலத்துக்கான தேர்தலை முற்கூட்டியே நடத்துவதற்கான பிரகடனத்தை விடுக்கும் அதிகாரம், அவரது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் திகதியே அவருக்கு வந்ததும், அந்த அதிகாரம் கிட்டி இரண்டு வாரங்களுக்குள்ளேயே தேர்தலுக்கான அறிவிப்பை அவர் விடுத்தமையும் இங்கு கவனிக்கத்தக்கவை.
ஜனாதிபதியின் மேற்படி இரண்டு அறிவிப்புகள் தொடர்பாகவும் தீர்க்கமான பதிலை வடக்கு கிழக்குத் தமிழர்கள் உட்பட்ட சிறுபான்மை மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படையாகவே காட்டி விட்டார்கள் என்பதே உண்மையான விடயமாகும்.
இந்த நாட்டில் இனிமேல் சிறுபான்மை இனம் என்ற ஒன்றே இல்லை என்று கூறிய நாட்டின் தலைவருக்குப் பெரும்பான்மை இன மக்கள் வாழும் பிரதேசம் எங்கும் பெருவெற்றி கிட்டியிருக்கின்றது. ஆனால் சிறுபான்மையினத்தவரான தமிழ் பேசும் மக்கள் தமிழர்களும், முஸ்லிம்களும் வாழும் பிரதேசங்கள் எங்கும் தோல்வி. இந்தப் பிரதிபலிப்பு நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் திட்டவட்டமாகவும், தெளிவாகவும், ஐயத்துக்கு இடமின்றியும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
ஆக, இந்த நாட்டில் சிறுபான்மை இனம் என ஒன்று இல்லை என்று வாயினால் கூறினால் மட்டும் போதாது, அத் தகைய வகையில் பெரும்பான்மையினர் போல சகல உரிமை களுடனும், கௌரவத்துடனும் தமது பண்பாட்டுக் கோலங்களையும் வாழ்வியல் விழுமியங்களையும் பின்பற்றி வாழக்கூடிய சூழலை சிறுபான்மை இனத்தவருக்கு உருவாக்கிக் கொடுத்த பின்னர், அப்படி நீங்கள் கூறுவதுதான் பொருத்தமானது என்ற பதிலை ஜனாதிபதிக்கு இந்த நாட்டில் சிறு பான்மை இனமக்கள் இந்த வாக்களிப்பு மூலம் உணர்த்தியிருக்கின்றார்கள் என்றே கொள்ளவேண்டும்.
அது மாத்திரமல்ல. கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்கள் வாக்களிக்க முடியாத நிலைமை இருந்ததால் அவர்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தைத் தம்மால் வழங்கக்கூடிய வாய்ப்பு வந்ததும் உடனேயே அதைத் தாம் வழங்கினார் என ஜனாதிபதி ராஜபக்ஷ பெருமிதம் கொள்வதில் நியாயம் உண்டு. அதை மறுப்பதற்கில்லை.
அந்த வடபகுதி மக்களில் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த முறைத் தேர்தலில் கூட வாக்களிப்பதற்கான ஒழுங்குகள், வசதிகள் போதியளவில் செய்யப்படவேயில்லை என்பதுதான் அதைவிட உண்மையும், யதார்த்தமுமாகும்.
அதையும் மீறி, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்புப் பெற்ற வடபகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையைத் தாங்கள் ஏற்று அங்கீகரிக்கவில்லை என்ற செய்தியையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதும் கல் மீது பொறித்த எழுத்துப்போலாகிவிட்டது.
இலங்கைத் தேசத்தை வழிநடத்த வேண்டிய அரசியல் தலைமை யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தைத் தீர்மானிப்பதில், சிறுபான்மையினத்தவர்களான தமிழ் பேசும் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களான வடக்கையும், கிழக்கையும் சேர்ந்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசத்தில் உள்ள பெரும்பான்மையினத்தவரிலிருந்தும் வேறுபட்ட முரணான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடைமலை.
அது மாத்திரமல்ல, அந்த வடக்கு கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் கருத்தியலுடன் தாங்களும் ஒன்றி நிற்கின்றார்கள் என்ற உண்மையை இந்திய வம்சாவளி மக்களாகிய மலையகத் தமிழரும் நுவரெலியா மாவட்டத் தேர்தல் தீர்ப்பு மூலம் வெளிப் படுத்தியிருக்கின்றார்கள்.
அதேபோன்றுதான், தென்னிலங்கையிலும் பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் சிறுபான்மைத் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவு அதிகம் உள்ள இடங்களிலும் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.
ஆக, மொத்தத்தில், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் களின் முடிவுகள், சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தகவர்கள் ஆகிய முத்தரப்பினரும் ஏதோ ஒரு கருத்தியலில் தங்களுக்குள் உடன்பட்டு நிற்கின்றார்கள் என்ற நிலைமையை வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதுபோல, தென்னிலங்கைப் பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த, பேராதரவு பெற்ற பெரும் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே என்ற கருத்து நிலைப்பாடும் சந்தேகத்துக்கு அப்பால் தெளிவாகவும், திடமாகவும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த வகையில் பார்த்தால், ஒருபுறம் இலங்கைத் தீவின் சிறுபான்மை இனத்தவர்கள் எல்லாம் கருத்தியல் ரீதியில் ஓரணி திரண்டும், மறுபுறம் தென்னிலங்கைச் சிங்கள மக்களின் தன்னிகரில்லாத் தலைவராகவும் நாட்டின் நிறைவேற்று அதிகார உச்சப் பதவிக்குரியவராகவும் மஹிந்த ராஜபக்ஷ பேரெழுச்சி பெற்றிருக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயம், நேர்மை மிக்க தீர்வு ஒன்றை எட்டுவதற்கு இதைவிட வேறு அபூர்வ அரிய சந்தர்ப்பம் கிட்டாது. சம்பந்தப்படுவோர், தனிப்பட்ட சுயலாபங்களை அரசியல் இலக்குகளை புறக்கணித்து, நியாயமாகச் செயற்பட்டு இந்த அருமையான வாய்ப்பை சந்தர்ப்பத்தை பயன்படுத்த முன்வருவார்களா?
வடக்கு கிழக்கு முழு இலங்கை விட வேறுபட்ட கருது கொண்டது என்பது நன்கு அறிந்த விடயம்.ஆனால் இத் தேர்தல் நேர்மையாக சிங்கள பகுதியில் கூட நடக்க வில்லை என்பதே உண்மை .இந்த தேர்தல் கடிச்சி ஈரானிய தேர்தல் மாத்ரி. எனினும் தமிழர்களுக்கு விடிவு இல்லை யார் வந்தாலும்!ஆனால் அரசாங்கத்துடன் இணைந்து அட்டுழியம் செய்யும் தமிழ் நாய்களை தோற்கவே மகிந்தவின் எத்ரியை ஆதரித்தோம் !
ReplyDelete