திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கேணல் புலேந்தியம்மான் காலம் தொடக்கம் அந்த மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை வைத்து, பல உதவிகளைச் செய்து, போராட்ட அமைப்பு வளர்ச்சியடைய காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த கிராமத்தின் பெரும்பான்மையானோர் இறுதிவரை விடுதலைப்போராட்டத்தோடு பயணித்திருக்கின்றார்கள். அதற்காக அவர்கள் இழந்தது ஏராளம்.
இக்கிராமத்தில் ஒரு போராளி குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தில் தந்தை, தாய், மூன்று பெண்பிள்ளைகள் இரண்டு ஆண்கள் என ஏழுபேரைக் கொண்ட குடும்பம். அதில் மூன்றாவது மகன்தான் தன்னைப் போராட்டத்தில் (காந்தன் புனைபெயர்) இணைத்திருந்தான்.
2002 இற்குப் பின்னரான சமாதான காலப்பகுதி, போராளிகள் தங்களைத் அடுத்த கட்டத்திற்கு தயார்ப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை தங்களுக்குத் தெரிந்த போராளிகளின், மாவீரர்களின் வீடுகளுக்குச் சென்று வருவார்கள்.
அவ்வாறே காந்தனின் வீட்டிற்கும் போராளிகள் சென்று வருவார்கள். அந்தக் குடும்பத்தினரும் போராளிகள் வரும்போது அன்பாக உபசரிப்பார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அக்குடும்பத்தின் மூத்த இரண்டு பெண்கள் மீது இரண்டு போராளிகள் காதல் வயப்பட்டனர். சம்பந்தப்பட்ட போராளிகளான வேலவன், குமரன் (புனைபெயர்) தலைமையிடம் தாம் காதலிப்பது பற்றிய விடயத்தைத் தெரியப்படுத்தினர். இயக்கத்தின் விதிமுறைகளுக்கு இணங்க காதலை ஏற்றுக்கொண்டதுடன் அவர்களுக்கு உரிய காலத்தில் திருமணம் செய்துவைப்பதாகவும் சொல்லப்பட்டது.
காலம் நகர்ந்து கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு நாலாம்கட்ட ஈழப்போர் திருமலையிலிருந்து தொடங்குகின்றது. சிங்களப்படை சம்பூர் பிரதேசத்தின் மீது கிபிர் விமானம், ஆட்லறிப் பீரங்கிகளைக் கொண்டு கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. இந்தக் கோரத்தாக்குதலில் பல மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர். சம்பூர், கூனித்தீவு, ஈச்சிலம்பற்றை உள்ளடங்கலாக அப்பகுதியைச் சேர்ந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்து, வாகரையில் அமைந்திருந்த வைத்தியசாலையில் அடைக்கலம் தேடிக்கொண்டனர். அங்கு அடைக்கலம் தேடியவர்களில் காந்தனின் குடும்பமும் ஒன்று.
வாகரையிலும் அசாதாரண சூழலே நிலவிக் கொண்டிருந்தது. இராணுவம் வாகரைப்பகுதியைக் கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல்களை ஆரம்பித்தது. தொடர்ச்சியான செல்த்தாக்குதல்கள், உணவுத்தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என இறுகிப்போயிருந்த அந்தச்சூழலில், நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வைத்தியசாலையின் குறுகிய நிலப்பரப்பிற்குள் தொடர்ந்திருப்பது கடினமாகியது. தொற்று நோய் அபாயம் என பல அடிப்படை வாழ்வியல் அசௌகரியங்களைச் சந்தித்தனர். எனவே பலர் மீன்பிடி வள்ளங்களில் மட்டக்களப்பு வாழைச்சேனைப்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
காந்தனின் குடும்பமும் மீன்பிடி வள்ளத்தில் இடம்பெயர்ந்து வாழைச்சேனைக்குச் செல்லத் தீர்மானித்தது. கடல் சீரற்று இருந்த போதும் உயிரைக்காப்பாற்ற வேறுவழியில்லாததால் ஆபத்தான கடற்பயணத்தை எதிர்கொள்ள தயாராகினர்.
எல்லோரையும் ஏற்றிக் கொண்டு வள்ளம் அலைகளுடன் போராடிச் சென்று கொண்டிருந்தது. திடீரென எழும்பிய இராட்சத அலை வள்ளத்தை கவிட்டு விட்டது. பக்கத்தில் வந்தவர்கள் பாய்ந்து, கவிழந்துபோன வள்ளத்தில் இருந்தவர்களைக் காப்பாற்றினர்கள். ஆனால் காந்தனின் தந்தையும் தாயும் கடலுக்குள் மூழ்கிவிட்டனர். நீண்டு விரிந்துபோய் இருந்த அந்தக்கடலின் எந்தப்பகுதியிலும் அவர்களின் தலைதெரியவில்லை. அந்தக் குடும்பத்தில் மீதமிருந்த மூன்று பெண்களையும் ஒரு பையனையும் காப்பாற்றி வாழைச்சேனையில் விட்டுவிட்டனர்.
தந்தையையும் தாயையும் இழந்து திக்குத் திசை தெரியாமல் உறைந்துபோய் இருந்த அந்த நால்வரும் வாழைச்சேனையின் அகதிமுகாம் ஒன்றில் அடைக்கலம் தேடினர்கள். சம்பூரைச் சேர்ந்தவர்கள் அந்த நால்வரையும் அகதிமுகாமிற்கு அழைத்துச் சென்றிருந்தனர். அவர்களின் பாதுகாப்பில்தான் நால்வரும் முகாமில் இருந்தார்கள்.
தாய், தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்த அவர்களால் அநாதரவாக நிற்கின்றோம் என்பதை சீரணிக்க முடியவில்லை. பெற்றோர்கள் அற்ற நிலையில் அடுத்தகட்டம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாத ஒரு சூனியத்திற்குள் தள்ளப்பட்டிருந்தார்கள்.
அதேவேளை சம்பூர், வாகரைப் பகுதிகள் இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்ததைத் தொடர்ந்து, திருமலையில் இருந்த படையணிகள் பின்வாங்கி வன்னியை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. இதனால் காந்தனுடனோ அல்லது வேலவன் குமரனுடனோ தொடர்பு கொள்ள முடியவில்லை.
முகாமில் ஒரு பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழ வேண்டியிருந்தது. ஏனெனில் இராணுவப் புலனாய்வாளர்கள் போராளி, மாவீரர் குடும்பங்களை இனம் காணும் வேலைகளிலும் ஈடுபட்டனர். இதனால் யாராவது சொல்லிக்கொடுத்துவிடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக, நால்வரும் அவசியமற்று வெளியில் தலைகாட்டுவது கூட இல்லை. பெற்றோரின் இழப்பு ஒருபுறம், காந்தன், வேலவன், குமரன் எப்படியிருக்கிறார்கள் என்ற நிலைதெரியாது நிம்மதியற்று, உறக்கமற்று ஏக்கத்துடன் தவித்தார்கள். அவர்களைச் சந்திப்போமா? இல்லையா? இனி எப்படி எதிர்காலத்தைச் சந்திக்கப்போகின்றோம்? போன்ற கேள்விகளிற்கு விடை தெரியாமல் அவர்களின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
மறுபுறம், சம்பூர், வாகரையில் இருந்து புறப்பட்ட அணிகள் வன்னிக்கு வருவதில் பாரிய சவால்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன. இரண்டு இரவுகள், இரண்டு பிரதான வீதிகளைக் கடந்து திரியாய்ப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். திருமலை அணியுடன் மட்டக்களப்பு அணிகளும் வந்து சேர்ந்துவிட்டது. எனவே பெரியளவிலான அணிகள் வன்னிக்கு செல்வதைத் தடுப்பதற்கு கடற்படைக் கலன்களும் புல்மோட்டைக் கடற்பரப்பை நிறைத்திருந்தன. அணிகளை ஏற்ற வந்த கடற்புலிப்படகுகள் கடுமையாகச் சண்டையிட்டு அணிகளை ஏற்றி வன்னியில் இறக்கிக் கொண்டிருந்தன.
அதேவேளை, ராடர்களில் கடற்புலிகளின் படகுகள் எந்த இடங்களில் அணிகளை ஏற்றுகின்றன என்ற தகவலை எடுத்து அப்பகுதிகளுக்கு இடைவிடாத செல்தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்தது இராணுவம். இந்த இக்கட்டான கடற்பயணத்தில்தான் காந்தன், வேலவன், குமரன் ஆகியோரும் வன்னியை நோக்கிப் புறப்பட்டிருந்தார்கள். வேலவன் மற்றும் குமரன் பயணித்துக்கொண்டிருந்த கடற்புலிப்படகு இடையில் டோறாப்படகின் தாக்குதலை எதிர் கொண்டது. கடுமையாக சண்டையிட்டுக் கொண்டே வன்னிக்கடற்பரப்பிற்கு வந்துசேர்ந்துவிட்டனர்.
காந்தன் சொர்ணம் அண்ணையுடன் நின்றவர். அவர்களும் அதன் பின் புறப்பட்ட வண்டியில் கிளம்பிவிட்டார்கள். வழக்கம்போலவே அவர்களின் படகும் கடற்படையின் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டு வன்னியை வந்து கொண்டிருந்தது. இடையில் நடந்த உக்கிரமான கடற்சண்டையில் காந்தன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். தாயும் தந்தையும் உறங்கிப்போன கடலோடு காந்தனும் சங்கமமாகிவிட்டான்.
வன்னிக்கு வந்த பின்னர், காந்தனது குடும்பத்தின் நிலைமையை அறிந்த தளபதி சொர்ணம் அண்ணை, சில ஆதரவாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த நான்கு பேரையும் வன்னிக்கு வரவழைத்தார்.
அவர்களிற்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைந்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தளபதி சொர்ணம் அண்ணைக்கு ஏற்பட்டது. தாய், தந்தையை இழந்த அவர்களிடம் சகோதரன் காந்தனுக்கு என்ன நடந்தது? என்று சொல்ல முடியாத இக்கட்டான நிலை. எனவே, அவரையும் வேறு சிலரையும் திருமலைக் காட்டிற்குள் ஒருவேலையாக விட்டுவிட்டு வந்திருக்கிறன் என்று ஒரு பொய்யைச் சொல்லிவைக்கவேண்டிய கட்டாயம்.
பின்னர் தலைவருடன் கதைத்து அவர்கள் மூத்தவர்கள் இருவருக்கும் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டது. அது ஒரு வகையில் சிறிய ஆறுதலையும் பாதுகாப்பையும் கொடுத்தது. என்றாலும் அண்ணா எப்பவருவார் என திருமலைப் போராளிகளைக் காணும்போது மட்டுமல்ல தளபதி சொர்ணம் அண்ணையிடமும் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அந்தப் பொய்யைச் சிலகாலமே தக்கவைக்க முடிந்தது.
குடும்பத்தைப் பொறுப்பெடுத்த, வேலவன் நிர்வாக வேலைத்திட்டத்திலும் குமரன் பயிற்சி வழங்கும் வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
2008 போர் வன்னியிலும் உக்கிரமடையத் தொடங்கியது. மன்னாரில் சண்டையைத் தொடங்கிய இராணுவம் தொடர்ந்து முன்னேறி பூநகரி வரை கைப்பற்றி, பின் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. பெரிய நிலப்பரப்பில் நகர்ந்த படையினரைத் தடுப்பதற்காக எல்லாப்போராளிகளும் களத்தில் இறக்கப்பட்டனர்.
அந்தச்சமயம் நிர்வாக வேலைத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த வேலவனுக்கும் அறிவியல் நகர்ப்பகுதியில் இராணுவத்தை தடுத்து நிறுத்தும் அணியில் தளபதியுடன் இணைந்து செயற்படுதவற்கு அழைப்பு வருகின்றது.
02.
களத்தளபதியின் கட்டளைப்பீடம் பாதுகாப்பு வேலியில்(லைனில்) இருந்து வெகு அருகில் அமைந்திருந்தது. அடிக்கடி சண்டை நடக்கும் அந்த லைனுக்குரிய கள நிர்வாக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார் வேலவன். அப்போது அங்கு நடைபெற்ற ஒரு சண்டையில் எதிரியின் ஆர்.பி.ஜீ செல் இவர் இருந்த இடத்திற்கு அருகில் பட்டு வெடித்தது. அதில் பறந்த செல்லின் பீஸ் தலையில் பட்டு லெப் கேணல் வேலவன் வீரச்சாவடைந்தார்.
வழமையாக வேலவன் வெள்ளிக்கிழமை பிந்நேரம் வீட்டிற்குச் சென்று திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் பணிக்குத் திரும்புவார். சிலவேளைகளில், வேலை அதிகமாக இருந்தால் சனிக்கிழமை வீட்டிற்கு வருவார். வேலவன் வீரச்சாவடைந்தது வெள்ளிக்கிழமை. வேலவனது மனைவிதான் வீட்டிற்கு மூத்தவர். அவரது தங்கைகுடும்பமும் வேலவன் வீட்டிற்கு அருகிற்தான் வசித்துவந்தார்கள். அந்தக்கிழமை வேலவன், குமரன் இருவரும் வரவில்லை. எனவே ஏதோ முக்கிய வேலையாக வரவில்லை என நினைத்து எப்படியும் நாளை வருவார்கள் என்ற நம்பிக்கையில் நல்ல சாப்பாடு கொடுக்க எண்ணி சமைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தநேரங்களில் களமுனைகளில் சாப்பாடு சீராக இருக்காது
.
மதியச்சாப்பாட்டை தயார்செய்து கொண்டிருக்கும் போது குமரனும் வேறு சிலரும் வீட்டிற்கு வந்தனர். அங்கு வழமையாகப் போராளிகள் சென்று வருவதால் வழமையாக உபசரிப்பதைப்போல் ‘வாங்கோ என வரவேற்ற குமரனின் மனைவி எங்கை வேலவன் அத்தான் வரவில்லையோ? ஏன் ஏதேனும் வேலையாக நிற்கின்றரா?’ எனக் கேட்டார்.
குமரனும் வேலவனும் நல்ல நண்பர்கள். குமரனின் மௌனமும் அவரது கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரையும் பார்த்த வேலவனின் மனைவி அதிர்ச்சியடைந்து மூர்ச்சையாகி விழுந்து விட்டார்.
ஏனெனில் இது அவர்களுக்கு நாலாவது இழப்பு. அதுவும் இரண்டு ஆண்டுகளில். வேதனையில் துடித்தார். அடுத்தடுத்த மரணம், இடப்பெயர்வு, இழப்பு. அதுவும் தமிழ்ப் பெண்களில் சிலர் ஆண்களைச் சுற்றியே தங்களிற்கான வாழ்க்கையின் நம்பிக்கைகளையும் சந்தோசங்களையும் கட்டிவைத்திருப்பார்கள். அது உடையும்போது வெடிக்கும் அழுகையையும் வேதனையையும் துடைப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது. அவருக்கு ஒரு குழந்தையுமிருந்தது. இந்த சமூகத்தில் தனதும், தனது குழந்தையினதும், தங்கை, தம்பியினதும் எதிர்காலம் என்ன? என்ற விடையில்லாக் கேள்விகள் அவரை மூர்ச்சையடைய வைத்துவிட்டது.
ஆற்ற முடியாமல் அழுதுகொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் ‘எங்கட குடும்பத்தின்ர நிலை தெரிஞ்சும், ஏன் அவரை கொண்டு போய் சண்டையில விட்டனீங்கள், நாங்கள் என்ன செய்வோம்’ என்று ஆற்றாமையில் கதறியபோது, அவரின் தவிப்பின் உச்சம், அதில் இருந்த எல்லோரது மனங்களிலும் ஆழமாக இறங்கியது.
இராணுவம் தொடர்ந்து முன்னெறிக் கொண்டிருந்தான். குமரன் மாஸ்டர் சண்டைக்களங்களில் நேரடியாக இல்லாவிட்டாலும் தொடந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.
புதுக்குடியிருப்புப் பகுதியைத்தாண்டி, மாத்தளன் பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. சண்டை இறுதிக்கட்டத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. இந்த தருணத்தில் வேலவனின் மனைவி, பிள்ளை, தங்கையை திருலைக்கு கப்பலில் அனுப்பி வைத்தனர். அவர்கள் அங்கு முகாமில் தஞ்சமடைந்தனர். குமரனுடன் மனைவி பிள்ளை, தம்பியும் நின்றனர்.
அந்தச்சமயத்தில் திருமலைக்குச் சில படையணிகளை நகர்த்துவதற்கான திடீர் முடிவு எடுக்கப்பட்டது. படையணிகள் செல்லும் போது அணிகளை இறக்கும் ஒழுங்கு, தங்கவைப்பது, உணவுகள் ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை ஒழுங்கமைப்பதற்கு அனுப்பவிருந்த அணியில் குமரனும் இடம்பெற்றிருந்தார்.
குமரனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் அது கடினமானதொரு தருணமாக இருந்தது. இப்போது அந்த குடும்பத்திற்கு இருக்கும் ஓரே ஆறுதல் அவர் மட்டுந்தான். குமரனுக்கும் ஒரு குழந்தை. முள்ளிவாய்க்காலை இராணுவம் நெருங்கிய நேரம் கடுமையான செல்லடி, பங்கருக்குள்ளேயே வாழ்க்கையை நடாத்தவேண்டியிருந்தது. பங்கரை விட்டு வெளியில் சென்று திரும்பி பங்கருக்கு வரும் வரையிலும் உயிர் இருக்குமா! என்பது உறுதிப்படுத்த முடியாத நிலையிருந்த காலப்பகுதி.
குமரனுக்கும் சங்கடமான நிலை. நான் திருமலை போனால் இவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள். ஏதாவது நடந்தாலும் உடனடியாக ஒன்றும் செய்ய முடியாது. தான் போகலாமா! வேண்டாமா! என்று முடிவெடிக்க முடியாமலிருந்தார். மனைவியின் கண்களில் ஏக்கம். காந்தனின் வீரச்சாவு சிலகாலத்தின் பின் தெரிவிக்கப்பட்டிருந்ததால், குமரனுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ? எனப்பயந்தார்.
ஆனால் சொர்ணம் அண்ணையோ தைரியமாக ‘நீ போ, இந்த வேலையை உன்னால மட்டும் தான் சரியாக ஒழுங்குபடுத்த முடியும், அதோட இங்க நிலைமை சிக்கலாகிக் கொண்டு போகுது, உன்ர குடும்பநிலைமையும் எனக்கு விளங்குது. நான் முயற்சி செய்து, அவர்களை வள்ளத்தில் ‘றிங்கோ’ அனுப்பி விடுறன்’ என்றார்.
முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் விடுதலைப்போராட்டம் நின்று கொண்டிருந்தது. தனக்கான பொறுப்பின் அவசியத்தை உணர்ந்த குமரன் தனக்குத் தரப்பட்ட கட்டளையை நிறைவேற்றத் தயாரானார். கடலில் பயணித்து திருமலை செல்வது சுலபமானதல்ல என்பதும் தெரியும். அதேவேளை தனக்கான பணியை முதற்கடமையாகக் கொண்டார்.
எனவே குடும்பத்திற்கு நம்பிக்கையூட்டிவிட்டு மனைவியிடம் விடைபெற்று, தாடியை இழுத்து விளையாடிக் கொண்டிருந்த கைக்குழந்தையிடம் முத்தத்தில் பிரிவைச் சொல்லிப் புறப்பட்டார். அவரை கண்ணீருடன் வழியனுப்பி விட்டு, கவனமாக போய்ச் சேரவேண்டும் என்று பங்கருக்குள் கோணேஸ்வரக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டு, தூக்கமற்றிருந்தன அந்த உயிர்கள்.
வழமையாகத் திருமலைக்குச் செல்லும்போது, கடற்புலிகளின் தாக்குதல் படகுகளும் இணைந்து சென்று அணிகளை இறக்கி விட்டுவரும். அந்த நேரத்தில் அதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. முள்ளிவாய்க்காலின் இறுதிக்கிழமைகளில் நின்று கொண்டிருந்தன அணிகள். எனவே ராடரில் தெரியாது என நம்பப்படும் படகில் தான் அவர்கள் புறப்பட்டார்கள். அந்த நேரத்தில் பல மக்கள் மீன்பிடிப்படகுகளில் திருமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். எனவே சாதாரண படகிலேயே இவர்களும் புறப்பட்டார்கள். ஆனால், அடுத்தநாள் வரை படகுகளில் சென்ற போராளிகளின் தொடர்பு கிடைக்கவேயில்லை. லெப்.கேணல் குமரனும் ஏனையோரும் வீரச்சாவடைந்துவிட்டனர் என ஊகிக்க முடிந்தது. மறுநாள் காலை குமரனின் மனைவி குழந்தையை தம்பியுடன் விட்டு விட்டுகடுமையான செல்லடிக்கு மத்தியிலும் முகாமிற்கு வந்து, ‘குமரன் றிங்கோ போய்ச் சேர்ந்து விட்டாரா’ என பரிதவிப்புடன் கேட்டார்.
என்ன பதில் சொல்வது, சங்கடத்துடன் ‘போட் போயிட்டுது, இன்னும் தொடர்பு கிடைக்கவில்லை’ என்று சொன்னார்கள். அவர் அவர்களை ஆழமாகப்பார்த்தார். மௌனத்தைப் பதிலாக்கினாள். அவரின் பார்வையின் ஆழத்தையும் மௌனத்தையும் அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. கண்ணீர் கண்களை நிரப்ப, உதடுகள் துடிதுடிக்க, பெருமூச்சை விட்டு விட்டு, கீழே வெறித்துப்பார்த்தார். சாவுகள் மலிந்த பூமியாக விளங்கிய முள்ளிவாய்க்காலின் மரண ஓலங்கள் மனதைக் கடுமையாக்கியதோ என்னவோ மீண்டும் தலையை நிமிர்த்தி தழுதழுத்த குரலில் தமது இருப்பிடத்தைச் சொல்லி ‘தொடர்பு கிடைத்தவுடன் சொல்லுங்கோ அண்ணா’ என சொல்லிவிட்டுச் செல்லத்திரும்பினார். ‘செல் கடுமையாக அடிக்கிறான் பார்த்துப்போங்கோ’ எனகூறிய போது ‘சரி’ என விரக்தியுடன் தலையாட்டிச் சென்றார்.
தாய், தந்தையை இழந்த பின், நால்வரும் பெரிய கனவுகளோடும் எதிர்பார்ப்புக்களோடும் வன்னிக்கு வந்து வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். வன்னியில் இருந்து திரும்பும் போது முள்ளிவாய்க்கால் வரை பட்ட கடினங்கள், வேதனைகளுடன் இரண்டு கைக்குழந்தைகளையும் கொண்டு அகதிமுகாமில் தஞ்சமடைந்தனர். குமரனுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டபோது அழுவதற்கு கண்ணீரும், திராணியும் இருந்திருக்குமோ! தெரியவில்லை.
இன்று ஈழத்தின் ஒரு ஓரத்தில் தங்களது காதலின் அன்புப்பரிசாக, நினைவுகளாக இருக்கும் அந்தக் குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர் அந்தச் சிறுவயது விதவைகள். அவர்களின் அமைதியான ஆனந்தமான வாழ்க்கையை நான்காம் ஈழப்போர் நிரந்தரமானதொரு துன்பியல் நிலைக்குள் தள்ளிவிட்டது. தாய், தந்தையின் உடல்கள் வாகரைக்கடலிலும் காந்தன், குமரனது உடல்கள் புல்மோட்டைக்கடற்பரப்பிலும் சங்ககமாகிவிட்டன. வேலவனின் உடல் வன்னி மண்ணில் அடையாளமிழக்கப்பட்ட துயிலுமில்ல விதைகுழி மண்ணில் விதைக்கப்பட்டிருக்கின்றது.
ஒரு புலம் பெயர் தமிழ் உணர்வாளர் தன்னாலியன்ற உதவிகளைச் செய்து அந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதாக கேள்விப்படுகின்றேன். அந்த நல்ல உள்ளத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
நினைவழியாத்தடங்கள் - 04
நினைவழியாத்தடங்கள் - 04
0 கருத்துரைகள் :
Post a Comment