தமிழர் திருநாள்: புதிய ஆண்டு; புதிய வழி; புதிய வாழ்வு

இன்று 'தமிழர் திருநாள்.'

அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள்; ஏனெனில் - 'தமிழரது திருநாள்' என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை.

மானிட வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடு இந்தத் திருநாள்.

இந்தத் திருநாளுக்கு முன்னதாவே - முதல் நாளே - பழையவற்றைத் தீயிடம் தின்னக் கொடுப்பதும் ஒரு வழமை; அது - பழைய துயர்களையும் தவறுகளையும் உணர்ந்து களைந்துவிட்டு, புதிய நம்பிக்கையோடு மனதைத் திறக்கிறோம் என்பதன் அடையாளம்.

தற்போது - 'மாவீரர் நாள்' என்பது தமிழருக்கு ஓர் அரசியல் அடையாள நாளாக இருப்பது போல - உலகெங்கும் தமிழர்கள் பரந்து வாழும் நிலையில் - தமக்கான ஒரு பண்பாட்டு அடையாள நாளை நாம் கண்டடைவதும் தேவையானதாகும்

பல்-தேசியத் தமிழர்கள் கூடிவாழும் ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆவுஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களில், அவர்கள் தமக்குள் இணைந்து கொள்வதற்கும், தமது பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் 'தமிழர் திருநாள்' மிகப் பொருத்தமானதாகும்.

அத்துடன் - வேற்றுப் பண்பாட்டு, வேற்று மொழிப் புறச் சூழலில் வளரும் தமிழரின் இளம் தலைமுறைக்கு - அவர்களது வேர்தேடும் பயணத்திற்கான தொடக்க நாளென்றும் இதனைக் கொள்ளலாம்.

மதம், வர்க்கம், நிலம், நாடு என்ற பிரிவுகளாகக் கிடக்கும் தமிழ்ச் சமூகம் ஒருத்துவம் கொள்வதற்கும், தமது தேசியத்தை வலுப்படுத்துவதற்கும் 'தமிழர் திருநாள்' போல் வேறொரு பொருத்தமான நாளில்லை.

நமது எதிர்கால இருப்பு என்பது - தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவதிலும் 'தமிழர்' என ஒருத்துவம் கொள்வதிலுமே தங்கியுள்ளது.

'தேசியம்' என்பது அதன் அர்த்தத்தில் உருவாக வேண்டுமானால் - அதற்கு "ஜனநாயகம்" என்பதே முன்நிபந்தனையாகும்.

"ஜனநாயகம்" என்றதும், வெறுமனே தேர்தல் நடாத்துதல் என்றே நம் சிந்தனையை சுருக்கி கொள்கிறோம்.

அதே போல் தான் - "தேசியம்" என்பதையும் சட்ட ரீதியான ஒர் அங்கீகாரத்திற்குள் நாம் சுருக்கிவிடுகிறோம்.

தேசியம், ஜனநாயகம் என்பது நவீன காலத்திற்கானது; புதுமையானது.

அவை - பரந்த மக்கள் திரளைத் திரட்டுவதுடன் அவர்களிடமே பொறுப்பையும் கையளிக்கின்றது என்பதில் நாம் தெளிவு பெற வேண்டும்.

தமிழீழத் தமிழரின் தாயக நிலப்பரப்பு இலங்கைத் தீவில் சட்ட ரீதியாக வடக்கு - கிழக்கு என இரண்டு அலகுகளாகப் பிரிக்கப்பட்டது பற்றி நாம் கவலை கொள்கிறோம்.

அதே வேளையில் - தமிழ் மக்களின் இரத்த ஆறை ஓட வைத்த இரண்டு பேரினவாதிகளும், அதே தமிழரின் வாக்குக்காக கையேந்தி நிற்க வேண்டிய 2010 ஆம் ஆண்டின் விநோத நிலையிலும் - "வடக்கு கிழக்கு இணைப்பில்லை" என்றே அவர்கள் அறிவித்துள்ளனர்.

பேரினவாதிகளின் சட்டங்கள் எமது நிலப்பரப்பைப் பிரிக்கட்டும், துண்டாடட்டும்; ஆனால், எமது தேசியத்தை அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது.

நிர்வாக அரசியல் அவர்களின் கைகளில் இருக்கட்டும்; ஆனால், எமது சமூகப் - பண்பாட்டு வாழ்வு நமது கையில் தான் உள்ளது.

தேசியத்தின் அடிப்படைகளில் ஒன்றான - பொருளாதார ரீதியாக நாம் தன்னிறைவு அடைதலும் கூட நமது கைகளிலேயே உள்ளது.

சட்ட ரீதியாக எம்மிடம் இருக்கும் எவற்றை எவர் பறித்துவிட்டாலும், பண்பாட்டு ரீதியாக எமக்குள் நாம் வளர்க்கும் தேசியத்தை யாரும் சிதைத்துவிட முடியாது.

அதனை நாம் பலப்படுத்த வேண்டும். அது தான் - நமது சுதந்திரத் தீயை அணைய விடாது காத்து - நாளை நமக்கான நி்ர்வாக அரசியலை எமது கைகளில் நாம் எடுப்பதற்கும் வழி.

தமிழ் தேசிய இனம் இன்று புகுந்துள்ள புதிய சூழலில் - இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப - எமது சமூக, பண்பாட்டு, பொருளாதார வாழ்வைக் காத்து மேம்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிவதே தமிழர் திருநாள் சிந்தனையின் தொடக்க புள்ளியாக இருக்க வேணடும்.

நடைமுறைக்கு ஒவ்வாத பழைய வழிகளைக் களைந்துவிட்டு, சாத்தியமான புதிய வழிகளி்ல் நாம் மனதைத் திறக்க வேண்டும்.

பழைய சிந்தனைகளுக்கு எரியூட்டுவோம்; புதிய சிந்தனைகளைப் பரிமாறுவோம்.

புதினப்பார்வை
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. நிங்கள் கூறியுள்ளவை உண்மை தான். நீங்கள் கூவது போண்டு ஈழத்தமிழர்கள் கொடுத்த விலைகளையும், வலிகளையும் சேர்த்து ஏரியுட்ட வேண்டியதுதான். உங்களின் புதிய சிந்தணை வடிவம் என்ன? இனக்க அரசியல் நடத்துவதா? பின்பு ஏன் 30 வருடமாக பிரபாகரன் சிந்தனை பாடினீர்கள். முன்போ டக்கிஸசுடன் சேர்ந்திருக்கலாமே?

    ReplyDelete