நியாயத் தீர்வே தமிழர்கள் கேட்பது தெற்கு விட்டெறியும் பிச்சையை அல்ல

"நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரம் அல்ல, நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்.'' என்பது சட்ட மற்றும் நீதித்துறை தொடர்பான ஓர் ஆன்றோர் மொழியாகும்.
இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினை தொடர்பான விடயத்துக்குத் தீர்வு காணும் விவகாரத்திலும் கூட அதுதான் நியாயம். அதுவே நிலைநாட்டaப்பட வேண்டிய முறையுமாகும். ஆனால் அதுபற்றி யாரும் சிந்திப்பவர்களாகத் தெரியவில்லை.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தரப்பு சிறுபான்மை யினரான தமிழர்கள்தாம்.

தமக்கு நீதி கோரி, நியாயம் வேண்டி, கௌரவ வாழ்வுரிமை தேடி, சுதந்திரம் நாடி பல்வேறு வழிகளிலும் போராடிய தமிழர் தரப்பு இன்றும் அடக்கப்பட்டிருக்கின்றது. ஆரம்பத்தில் காந்திய நெறியில் அஹிம்சைப் பாதையில் அறவழியில் அவர்கள் தமது உரிமைகளுக்காகத் தொடுத்த போராட்டமும், பின்னர் அதே இலக்கோடு அவர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட் டமும் ஆட்சி, அதிகாரத் தரப்பின் பலாத்கார வலிமை மூலம் அடக்கப்பட்டிருக்கின்றன.இதனால் துவண்டு கிடக்கும் தமிழினத்துக்கு நீதி செய்யவேண்டிய நியாயம் இயற்ற வேண்டிய தனது பொறுப்பைச் செய்யாது தட்டிக் கழிக்கின்றது தென்னிலங்கை.

நீதி, நியாயம் கோரும் தமிழர் தரப்புக்கு உரியதை அவர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்கின்ற ஒழுங்கு முறைகளை வழங்காது வேறு வியாக்கியானம் செய்ய முற்படுகின்றது தென்னிலங்கை.

போரியல் வெற்றிக்களிப்பின் உச்சத்தில் நிற்கும் கொழும்பு தான் தமிழர்களுக்கு எதை வழங்க முடியுமோ வழங்க விரும்புகின்றதோ அது மட்டுமே தீர்வாக இருக்கமுடியும் என்று கூறுகின்றது.

அதாவது, இலங்கைத் தமிழர்கள் இரப்பவர்கள் போலவும், கொழும்பு ஆட்சியாளர்கள் இரந்துவக்கின்றவர்கள் போலவும், தமிழர் பிரதேசத்துக்கு ஆட்சித் தரப்பு விட்டெறியக் கூடிய பிச்சை போன்ற விவகாரமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழருக்கு வழங்கப்படக்கூடிய சகாயங்கள், சலுகைகள் குறித்துப் பேசுகின்றது தென்னிலங்கை ஆட்சித் தரப்பு.
தமது பாரம்பரிய தாயகத்தில், தங்களைத் தாங்களே நிர்வகிக்கின்ற தமது கட்டமைப்பு முறையை காலங்காலமாகத் தமது பிரதேசத்தில் விளங்கி வந்த சுயாட்சி முறையை தமது வரலாற்று ரீதியான உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவது குறித்தே தமிழர்கள் பேசுகின்றார்கள். அதற்காகவே அவர்கள் போராடுகின்றார்கள். அதையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழர்களின் அந்த நீதியான அபிலாஷைகளைக் கருத்தில் எடுக்காது, தாங்கள் எதை விட்டுக் கொடுக்க முடியும் என்பதைப் பற்றியே தென்னிலங்கையும், அதன் ஆட்சித் தலைமையும் பிரபலாபிக்கின்றன.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனத்துக்கு இடக் கூடிய "பிச்சை' பற்றிய விடயம் போல கையாளப்படக்கூடாது. பெரும்பான்மையினரான சிங்களவர்கள் எதை விட்டுக்கொடுக்கத் தயாரோ, அதுவே இணக்கமான தீர்வாக இருக்கமுடியும் என அர்த்தப்படுத்தவும் கூடாது; அர்த்தப்படுத்தவும் முடியாது. எண்ணிக்கையின் ஆள் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகாரம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மாண்பு ஜனநாயகத்திற்கு உரியது.

ஆனால் நீதி, நியாயம் எது என்பதை எண்ணிக் கையை வைத்துத் தீர்மானிப்பது தப்பு. பெரும்பான் மையானோர் அநீதியை விரும்புகின்றார்கள் என்பதற்காக அது நீதியாகிவிட முடியாது; நியாயமாகிவிடவும் இயலாது.

எனவே, இனப்பிரச்சினையின் மூலங்களாகப் புதைந்து கிடக்கும் வரலாற்றுப் பின்புலங்களையும், சரித்திர உண்மைகளையும், பக்கம் சாராது உள்வாங்கி, இது வரையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்போது இணக்கம் காணப்பட்ட அம்சங்களையும் கருத்தில் எடுத்து, அவற்றின் அடிப்படையில் தமிழர் தரப்பு முன்வைத்திருக்கும் அவர்களின் அபிலாஷை பற்றிய வேணவாவையும் கவனத்தில் கொண்டு, அவற்றின் அடிப்படையில் தான் இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வு வகுக்கப்பட வேண்டும்.

அதை விடுத்து, பெரும்பான்மை இனம் என்ற பலத்தை வைத்துக்கொண்டு, அதன்மூலம் தனக்குப் பெற்றுக்கொள்ள முடிந்த இராணுவ வெற்றியின் சிகரத்தில் ஏறி நின்றபடி, தான் தூக்கி வீசுவதை சிறுபான்மை இனம் பவ்வியமாக அடங்கிப் பெற்றுக் கொள்வதே இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமைய முடியும் என்று கொழும்பு ஆட்சித் தரப்பு தனது வழமையான மமதைப் போக்கில் நம்புமானால் அது அபத்தமின்றி வேறில்லை.

அத்தகைய மமதைப் போக்கில் ஆட்சித் தரப்பு பிடிவாதமாக இருக்குமானால், இந்த நாட்டில் மற்றொரு விபரீதத்துக்கு வினை விதைக்க அது விரும்புகிறது என்பதே அர்ததமாகும் அல்லவா?
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment