தேர்தல் வெற்றியை ஈட்டுவதற்காகக் கண்மண் தெரியாமல் வாக்குறுதிகளையும், நம்பிக்கை அறிவிப்புகளையும் அள்ளிவீசி வரும் அரசியல் தலைமைத்து வங்களுக்கு ஆட்சி, அதிகாரத் தரப்புகளுக்கு "சந்தேகம்" என்ற பெயரில் நீண்டகாலம் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவலப்பட்டு, வாழ்வைத் தொலைத்து நிற்கும் சுமார் இரண்டாயிரம் தமிழ்க் கைதிகளின் துயர நிலைமை கண்ணுக்குப்படாமல் இருப்பது பெருவிசனத்துக்குரியது.
வன்னி யுத்தத்தின் இறுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெயரில் சுமார் பன்னீராயிரம் பேரை வளைத்துப் பிடித்து தனிமுகாம் அடைப்புக்குள் தள்ளியது அரசு. இப்போது அவர்களை விடுவிக்கும் படலத்தை அரசியலாக்கி முன்னெடுக்கின்றது ஆட்சித் தலைமை.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று தான் நேரடியாக அடையாளம் கண்டவர்களில் பெரியளவில் குற்றமிழைக்காதவர்களை வகைப்படுத்தி, அவர்களைப் புனர்வாழ்வளித்து விடுவிக்கும் செயற்பாட்டை அரசு முன்னெடுப்பதாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இந்த வரிசையில் நேற்றுமுன்தினம் கூட எழுநூறுக்கும் அதிகமான "புலி உறுப்பினர்கள்" அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். இது பற்றிய ஆரவார அறிவித்தல்களும் அரச ஊடகங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்பட்டன. இப்படி வன்னி யுத்த முடிவில் சிக்குண்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பெரிய எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக விடுவிக்கும் "திருவிழா" எதிர்வரும் 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு உற்சவம் நடந்தேறும் வரையில் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
அப்படித் தொடர்வதும் நல்லதே. அரசுத் தரப்பின் தடுப்பு முகாம் சிறைக்குள் சிக்குண்டு தமது எதிர்கால வாழ்வைத் தொலைத்து நிற்கும் அவர்களுக்கு இத்தகைய மீட்சியை வழங்க அரசுத் தலைமை முன்வந்தமை வர வேற்கவும், பாராட்டவும் தக்கது. அது மேலும் விஸ்தரிக் கப்படவேண்டும் என்று கோருவதும் தவறாகாது.
ஆனால், இந்தத் "தாராளம்" பக்கச்சார்பானதாகவோ அல்லது "ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு" என்ற பாரபட்சப் போக்கிலோ அமையக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகின்றது.
வன்னி யுத்தத்தின் முடிவில் தான் மடக்கிய புலிகளின் சுமார் பன்னிரண்டாயிரம் உறுப்பினர்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோரை அவர்கள் சம்பந்தமான விசாரணைகளை இவ்வளவு விரைவாக முடித்து எந்த நீதிமன்றங்களிலும் அவர்களை முன்நிறுத்தாமல் தற்றுணிபில் ஆட்சித் தலைமையினால் விடுதலை செய்யமுடியும் என்றால் அதுவும் "புலிகளின் உறுப்பினர்" என்று தான் வகைப் படுத்தியவர்கள் விடயத்திலேயே அரசுத் தலைமையால் இவ்வளவு "தாராளம்" காட்டமுடியும் என்றால் வெறும் "சந்தேக நபர்கள்" என்ற பெயரிலும் "புலிகளின் நடவடிக்கைகளுக்கு உதவியவர்கள்" என்ற சந்தேகத்திலும் அவசரகாலச் சட்டவிதிகள் மற்றும் பயங்கரவாதச் சட்டவிதிகள் போன்றவற்றின் கீழும் பல ஆண்டுகளாகப் பல்வேறு சிறைகளிலும் உரிய சட்ட விசாரணைகளின்றித் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகள் அரசியல் கைதிகள் விடயத்தில் ஏன் அந்தத் தாராளத்தைக் காட்டமுடியாதிருக்கின்றது என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
இப்படி நாட்டின் பல்வேறு சிறைகளிலும், தடுப்பு முகாம்களிலும் "சந்தேக நபர்கள்" என்ற வகைப்பாட்டின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளின் தடுப்புக்காவல் உத்தரவுப்படி உரிய விசாரணைகளின்றி ஆண்டுக்கணக்கில் ஆயிரத்தி ஐந்நூறுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை தமிழினத்துக்கு இழைக்கப்படும் மற்றொரு கொடுமையாகும்.
ஏற்கனவே தமிழினம் தனது ஒரு சந்ததியை குறிப்பாக இளம் சமூகத்தை யுத்தப் பேரழிவுகளில் இழந்து பரித வித்து நிற்கின்றது. அந்தச் சமூகத்தில் மற்றொரு பிரிவை, அவர்களின் இளம் வயதை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தொலைக்கச்செய்யும் வகையில் தனிமைப்படுத்தித் தடுத்து வைத்திருக்கின்றமை கூட ஒருவகையில் இன அடக்குமுறைதான். தமக்கு இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக நீதி, நியாயம் வேண்டி அந்த அரசியல் கைதிகள், ஒரே சமயத்தில் பல்வேறு சிறைகளிலும் இருந்தபடி சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
இவர்களுக்கு எதிரான அல்லது இவர்களை "சந்தேக நபர்கள்" ஆகக் குறிப்பிடுகின்ற ஆவணங்களையும், ஏனைய கோவைகளையும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்க விட்டுவிட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகளைக் கிடப்பில் போட்டுவிட்டு வெறும் வழக்குத் தவணைகளை எடுத்தபடி தமது காலத்தைக் கழிக்கும் அதிகாரிகளின் மனதையும் இந்த அதிகாரிகளை வழிப்படுத்தி, இக்கைதிகள் விடயத்தில் விரைந்து செயற்பட்டு அவர்களுக்கு நியாயம் செய்யுமாறு அதிகாரத் தரப்பைத் தூண்டவேண்டிய கடமையைச் செய்யாமல் இருக்கும் ஆட்சித் தரப்பினரது மனதையும் இந்தக் கைதிகள் ஆரம்பித்திருக்கும் இந்த காந்தீய வழிப்போராட்டம் தொடுமா? அந்தக் கைதிகளுக்கு நியாயம் இனியாவது காலம் பிந்தியாவது கிட்டுமா?
0 கருத்துரைகள் :
Post a Comment