நாய்க்குக் கல் எறிந்தால், அந்தக் கல் நாயின் எந்த உடல் பாகத்தில் பட்டாலும் நாய் தனது காலைத்தான் தூக்கிக்கொண்டு ஓடும் என்பார்கள்.அது போலத்தான் தென்னிலங்கை அரசியல் தலைவர்களும். அவர்களுக்கு இடையேயான ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி என்று வந்தவுடன் அவர்கள் உருட்டுவது சிறுபான்மையினரான தமிழ்ப் பேசும் மக்களின் விவகாரத்தைத்தான்.
தென்னிலங்கையின் இனவாத அரசியல் அணுகுமுறையில் மாறி மாறி நிகழும் ஒரு வரலாற்றுப் பாங்காக, மாற்றமுடியாத ஒரு நடைமுறைச் செயற்பாடாக, இந்த உண்மையை நாம் கண்டுகொள்ள முடியும்.
தமிழர் தரப்புக்கு நியாயம் செய்யும் எத்தனங்களை முறியடிப்பதில் முழுப்பிரயத்தனம் மேற்கொள்பவர்களாகத் தங்களை வெளிப்படுத்துவதன் மூலம், சிங்களத் தேசியப் பற்றாளர்களாகத் தம்மை இனம் காட்டி எதிராளிக் கட்சிக்காரரைக் காட்டிலும் சிங்களத் தேசியத்தை இறுகப் பற்றி நின்று அதைப் பேணிப் பாதுகாத்து, மேம்படுத்துபவர்கள் தாமே என உயர்த்திப் பிடித்து அதன் வாயிலாக அரசியல் லாபம் தேடும் கீழ்த்தரமான இனவாத அரசியல் நடைமுறை இங்கு நிரந்தர அம்சமாகி விட்டது. இந்த அரசியல் பம்மாத்துக்குத் தென்னிலங்கை அரசியலில் இன்னும் விசாலமாக இடமிருப்பது நமது துரதிஷ்டமே. இப்போதும் கூட இந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்திலும் அதுவே அரங்கேறுவது தமிழர்களின் பேரவலமே.
தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தத் தேர்தலை ஒட்டி, அதில் போட்டியிடும் இரு பிரதான தரப்புகளுடனுமே திறந்த மனதுடன் பேச்சுகளை நடத்தியது. இரண்டு தரப்புத் தலைமைகளுடனும் விசாலமான கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்டது. பின்னர் தனது உறுப்பினர்களிடையே கூடி ஆராய்ந்து ஒரு முடிவை அது எடுத்தது.
அவ்வளவுதான். தமிழர் தரப்பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தன்பக்கம் இல்லை என்றதும் அரசுத் தரப்பு மேற்படி கைங்கரியத்தில் இறங்கிவிட்டது.
அரசுத் தரப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க மறுத்த வாக்குறுதிகளை எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா வழங்கிவிட்டார் என்றும், இதனால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்படப்போகின்றது என்றும் அரசுத் தரப்பு பெரும் எடுப்பிலான பிரசாரத்தை ஆரம்பித்து விட்டது.
"பத்து அம்சக் கோரிக்கைகளைத் தமிழ்க் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் முன்வைத்தது. அதை ஜனாதிபதி ஏற்க மறுத்துவிட்டார். அவற்றை ஏற்பது நாட்டைக் காட்டிக் கொடுப்பது போலாகும் என்று கருதியே ஜனாதிபதி அவற்றை நிராகரித்தார். தமிழ்க் கூட்டமைப்பின் கோரிக்கைகள், அரசியல் நடவடிக்கைகள் ஊடாக ஈழத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவை. முப்பது வருடங்களாகப் பல்லாயிரம் உயிர்களை இழந்து போராடி மீட்ட தாய்நாட்டின் சுதந்திரத்தை அடகு வைத்துத் துரோகியாக ஜனாதிபதி விரும்பவில்லை.
ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் எதிரணிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா ஒப்பமிட்டு விட்டார். இது, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வேலை.'' என்று "சிங்களத் தேசிய வாதம்' பேசியிருக்கின்றார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் விவசாய, விவசாய சேவைகள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன. கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றிலேயே இக்கருத்தை அவர் வெளியிட்டிருக்கின்றார்.
அவரது இந்தக் கருத்துப்படி தமிழர் தரப்போடு இணங்கிப் போனால் அது நாட்டைக் காட்டிக் கொடுக் கும் நடவடிக்கை என்று அர்த்தமாகின்றது.அதாவது, தமிழர் தரப்போடு சேர்ந்து இணங்கிப் போகின்றவர் சிங்களத் தேசியத்தின் எதிரி என்று காட்டுவதன் மூலம் பெரும்பான்மையினரான பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளைச் சுருட்டும் இந்தத் தந்திரோபாயம் தென்னிலங்கை அரசியல் தலைமைத்துவத்தின் குள்ளநரித்தனமாகத் தொடர்ந்தும் இப்போதும் கட்ட விழ்வது கண்கூடு.
அதேசமயம், ஆளும் தரப்பு தனது வெற்றியை மீள உறுதிப்படுத்துவதற்காகப் பயங்கரவாதப் பூச்சாண்டி யை யும் மீளக் கிளப்பப் பின்நிற்கவில்லை என்றே தோன்றுகின்றது.ஈவு, இரக்கமற்ற முறையில் யுத்தத்தைத் தமிழர் தாயகம் மீது தொடுத்ததன் மூலம் புலிகளின் ஆயுத வலி மையைச் சிதறடித்த தமது அரசின் அந்த ஒரே சாதனையை மட்டும் மூலதனமாக வைத்துக்கொண்டு, முற் கூட்டியே தேர்தலைச் சந்தித்து வெற்றிபெறலாம் என்று திட்டம் போட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இப்போது அந்த எதிர்பார்ப்பில் நம்பிக்கையில் மண் விழலாம் என்ற சந்தேகம் தோன்றியதும், தமது அந்த முன்னைய சாதனையை ஒட்டிய விடயத்தை நாட் டுக்கு மீண்டும் தவிர்க்க முடியாமல் அவசியப்படும் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாற்றுவதன் மூலம், தம் மைத் தவறாது மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை மக்கள் மத்தியில் உரு வாக்க அவர் எத்தனிக்கின்றாரோ என்ற சந்தேகம் தோன் றுகின்றது."பயங்கரவாதத்துக்கு ஆதரவான சில குழுக்கள் மீண் டும் ஈழப் போராட்டத்துக்கு வழி அமைக்க முயற்சி'' என்ற சாரப்பட அவர் கிளப்பியிருக்கும் எச்சரிக்கை பயங்கரவாதப் பூச்சாண்டி இத்தகைய சந்தேகத்தைத் தான் தந்து நிற்கின்றது.
0 கருத்துரைகள் :
Post a Comment