திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்ப் பிரதேசச் செயலர் பிரிவில் அமைந்துள்ளது கிளிவெட்டி என்றும் தமிழ்க்கிராமம். தமிழர் தாயகத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து நடந்தேறி வந்துள்ள சிங்களக் குடியேற்றத் திட்டங்களின் ஒரு செயற்பாடாக 1977 ம் ஆண்டு கிளிவெட்டிக் கிராமமும் சேருவல என்ற சிங்களத தேர்தல் தொகுதியோடு இணைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இக்கிராம மக்களை அங்கிருந்து விரட்டும் நோக்கத்துடன் சிறிலங்கா இராணுவமும் சிங்களத் தலைவர்களும் இம்மக்களைத் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கினர். இதன் விளைவாக மக்களும் பலர் இக்கிராமத்தை விட்டு வெளியேறினர்.
01-01-1985 அன்று பி.ப 2.00 மணியளவில் சிறிலங்கா இராணுவமும், அதனோடு இயங்கும் ஊர்காவற் படையினரும், சிங்களக் காடையர்களும் ஒன்றாக கிளிவெட்டி கிராமத்தினுற்குள் வந்தனர். அக்காலப்பகுதியில் கனகசபை என்பவர் அப்பிரதேசத்தின் மரணவிசாரணை அதிகாரியாகக் கடமையாற்றினார். கடமையின் நிமித்தம் அப்பிரதேசத்தில் பல இடங்களுக்கும் அவர் சென்று வருவார். அன்றைய தினமும் அக்கிராமத்திற்கு சென்றபோது அச்சிங்களக் கூட்டம் கிராமத்தில் நுழைந்த போது அச்சமடைந்த அவர் ஒரு வைக்கோல் பட்டடையினுள் ஒடி ஒழித்திருந்தார். அச்சிங்களக் கூட்டத்தில் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அயல் சிங்களக் கிராமமான தெகிவத்தவில் வாழும் மக்கள் என்பதை அவரால் அடையாளம் காணமுடிந்தது.
அன்று அக்கொலைகாரக் கூட்டத்தால் 04 பெண்கள் உட்பட 10 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125 வீடுகள் அழிக்கப்பட்டன. கிராமத்தை அழித்துவிட்டு திரும்பும்போது 08 ஆண்களையும் 05 பெண்களையும் தெகிவத்த கிராமத்திற்கு கூட்டிச்சென்றது அக்கும்பல். அங்கு எட்டு ஆண்களும் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இச் சம்பவத்திற்கு அடுத்தநாள், 02-01-1985, திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேரூந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியது. அதில் 13 தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தனர். 09 பேர் காயமுற்றனர்.
03.06.1985 அன்று சிறிலங்கா இராணுவத்தின் துணையுடன் பல ஊர்காவற்படையினர் மூதூருக்கும் கிளிவெட்டிக்கும் இடையே உள்ள பல கிராமங்களைத் தாக்கினர். இதில் 35 பொதுமக்கள் உயிரிழந்ததுடன் 200 பேர் வரையில் கடத்தப்பட்டனர். மேன்காமம், கங்குவெளி,பட்டித்திடல், பாலத்தடிச்சேனை, அரிப்பு, புநகர், பெருவெளி, பாரதிபுரம், லிங்கநகர், ஈச்சிலம்பற்று, கருங்கல்முனை, மாவடிச்சேனை, முத்துச்சேனை, வாழைத்தோட்டம் ஆகிய கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
14-06-1985 இல் வரை தொடர்ந்து நடைபெற்ற இனஅழிப்பு நடவடிக்கையில் 150 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரம் வீடுக்ள் வரை தீக்கிரையாக்கப்பட்டன. மூவாயிரம் பொதுமக்கள் தம் கிராமங்களை விட்டு வெளியேறினர்.
அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தங்கதுரை அவர்கள் கிளிவெட்டிச் சம்பவத்தைப்பற்றி டெய்லிமிறர் பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்திருந்தார். இது பின்னர் சர்வதேச ஊடகங்களிலும் பரவாலாக பிரசுரிக்கப்பட்டது. அன்றைய சிறிலங்கா அரசு தங்கதுரை பொய்ப்பிரச்சாரம் செய்வதாக குற்றஞ்சாட்டியது மட்டுமல்லாமல், அவரைக் கைது செய்யும்படி பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு கொடுத்தார். இதனைக் கேள்விப்பட்ட தங்கதுரை அவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment