தமிழர் தரப்பின் தீர்மானம் எப்போதோ முடிந்த காரியம்!


"எப்பவோ முடிந்த காரியம்' என்பது யாழ்ப்பாணம், கொழும்புத்துறையின் தவசீலர் சிவயோக சுவாமிகள் உதிர்த்த நான்கு மகா வாக்கியங்களில் பிரதானமான ஒன்று. சித்தாந்திகளும், வேதாந்திகளும் இந்த வாக்கியங்களுக்குள் ஆழப் பொதிந்து கிடக்கும் உட்பொருள் குறித்துப் பல்வேறு விளக்கங்கள், வியாக்கியானங்களைத் தருவர். ஆனால் சாதாரண வாழ்வியலிலும் இது அதீத கருத்துருவைத் தந்து நிற்பது அவதானிக்கத்தக்து.
இன்றைய அரசியல் நிலைவரத்தின்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிக்கத் தீர்மானித்துவிட்டது.

அதையடுத்து இப்போது ஆளும் தரப்பிலிருந்து இனத்துவேஷ கருத்துகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

தமிழ்க் கூட்டமைப்பு, பொன்சேகாவை ஆதரிக்கத் தீர்மானித்தபோதே, அரசுத் தரப்பு இத்தகைய நிலைப்பாட்டைத்தான் எடுக்கும் என்பது முடிவாகிவிட்டது. அதனால் அரசுத் தரப்பின் இந்தப் போக்கு யோகர் சுவாமிகளின் மகா வாக்கியம் போன்று, எப்பவோ முடிந்த காரியம்தான். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை.

இந்தத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை வளைத்துப் போடுவதற்காகக் கூட்டமைப்போடு குழைந்து பேசியவர்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரும் அவரது சகோதரர்களும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இதற்காக வெற்றிலை வைத்துக் காத்திருந்தமையை யாரும் மறைத்து விட முடியாது.

தப்பித்தவறி, அவர்கள் விரித்த வலையில் கூட்டமைப்பினர் விழுந்து, அவர்களுடன் இணக்கப்பாடு கண்டிருந்தால் கூட்டமைப்பினர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரது அணியினரதும் போற்றுதலுக்கு உரியவர்களாக இருப்பார்கள். தேசியப் பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஒரேயடியாகப் பாராட்டப்பட்டிருப்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் எதிரணிப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துவிட்டதால், நாட்டின் தேசிய நிலைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஆபத்தானவர்களாகச் சித்திரிக்கப்படுகின்றார்கள்.

எதிர்க்கட்சிப் பொது வேட்பாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமக்குள் கண்டிருக்கும் உடன்பாடு காரணமாக நாடு பேராபத்தை எதிர்கொண்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழங்கியிருக்கின்றார்.

வடக்கு கிழக்கை இணைக்கவும், தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கவும் ஜெனரல் பொன்சேகா உடன்பட்டு விட்டார் என்றும், இதன் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துத் தமது அரசு வென்றெடுத்த நாட்டின் முழுச் சுதந்திரம் இப்போது ஆபத்துக்குள் மூழ்கும் நிலைமை வந்திருக்கின்றது என்றும் ஜனாதிபதி எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

ஜனாதிபதியின் கூற்றில் இரண்டு விடயங்கள் வெளிப்பட்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும். ஒன்று வடக்கு, கிழக்கு இணைப்புக்கு பொன்சேகா சம்மதித்துவிட்டார். மற்றது தமிழருக்கு சுயாட்சி வழங்கவும் அவர் இணங்கிவிட்டார். இப்படித்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரைத்திருக்கின்றார்.

உண்மையில் இவற்றுக்கு பொன்சேகா உடன்பட்டாரா என்பது சந்தேகத்துக்குரியது. அப்படி அவர் உடன்பட்டார் என்பதை வெளிப்படுத்தும் எந்த ஒரு தகவலும், சமிஞ்ஞையும் எந்தப் பக்கத்திலிருந்தும் வரவேயில்லை. அது வெறும் கட்டுக்கதை என்பதும் தெரிந்ததுதான். தமிழர்களின் நீதியான அபிலாஷைகளின் அடிப்படையாக அமையும் இந்த இரண்டு விடயங்களையும் பொன்சேகா வழங்கத் தயாரோ இல்லையோ, அவற்றை இலங்கையின் ஆட்சிப் பீடத்தில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்றும் முழுதாக எதிர்க்கின்றார் என்பது அவரது பகிரங்கக் கூற்று மூலம் தெளிவாகிவிட்டது.

தமிழரின் பாரம்பரிய தாயகமான வடக்கு கிழக்கை நிரந்தரமாகப் பிளந்தே பிரித்தே வைத்திருப்பது என்பதில் மிக உறுதியாகவும், தெளிவாகவும், திடமாகவும் இருக்கின்றார் நாட்டின் தலைவர் ராஜபக்ஷ.

அவர் அதிகாரத்தில் இருக்கும் வரை தமிழர் தாயகம் ஐக்கியப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை அண்மைக்காலமாகத் திரும்பத் திரும்பத் தாம் மேற் கொண்டு வரும் அறிவிப்புகள், பிரகடனங்கள் மூலம் அவர் வெளிப்படையாகவே தெளிவுபடுத்தி வருகின்றார். இவ்வாறு நாட்டின் அதிபர் தமிழர்களின் அடிப்படை அபிலாஷை விடயங்களை அடியோடு நிராகரித்து வருகையில், இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் அவருக்குக் காட்டக்கூடிய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்? என்னவாக இருக்கவேண்டும்?

அதைத் தமிழர்கள் எப்போதோ தீர்மானித்து விட்டார்கள். யோகர் சுவாமியின் வாக்கியத்தில் கூறுவதானால் "அது எப்பவோ முடிந்த காரியம்!' அவ்வளவுதான்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment