பதவிக் காலம் குறித்த சர்ச்சை


தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவிக் காலத்தை எப்போது ஆரம்பிக்கப் போகின்றார்? அது எப்போது ஆரம்பித்து, எப்போது முடியும்? இந்தத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தினமான 2010 ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகுமா? அல்லது 2010 நவம்பரில் தொடங்குமா? அப்படியும் அல்லாமல் 2011 நவம்பரில்தான் ஆரம்பமாகுமா? இதுவே இப்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எழுப்பப்படும் கேள்விகள்.

அதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலம் 2016 ஜனவரியிலா, 2016 நவம்பரிலா அல்லது 2017 நவம்பரிலா முடிவடையும் என்பதுதான் சர்ச்சை.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் தாம் ஆலோசனை கோரவிருக்கின்றார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்.இந்த சர்ச்சையை சற்று ஆழமாக நோக்குவது பொருத்தமானது.

1978 அரசமைப்பின்படி ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். ஒருவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு பதவி வகிக்க முடியும். ஆக, ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு தடவை ஜனாதிபதித் தேர்தல் என்பதுதான் இந்த அரசமைப்பின் மூல ஏற்பாடு.

ஆனால் 1982 இல் அரசமைப்பின் மூன்றாவது திருத்தம் மூலம் அதனை மாற்றியமைத்தார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா.அதன்படி, தமது முதலாவது பதவிக் காலத்தில் ஆட்சியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி தமது நான்கு ஆண்டுகால ஆட்சி முடிந்த பின்னர் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தாம் விரும்பியபடி முற்கூட்டியே அடுத்த தேர்தலுக்கு உத்தரவிடலாம்.

அந்தத் தேர்தலில் அவர் தோற்றால், மறுபுறத்தில் வெற்றி பெற்றவர் உடனடியாக ஜனாதிபதியாகிவிடுவார்.அப்படியில்லாமல், தேர்தலுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதியே வெற்றி பெறுவாரானால் அவரது இரண்டாவது பதவிக் காலத்தை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து அந்த அர சமைப்பின் 3 ஆவது திருத்தம் தெளிவுபடுத்தியிருந்தது.

அதன்படி, அந்த ஜனாதிபதியின் முதலாவது பதவிக் காலம் எப்போது தொடங்குகின்றதோ, அதற்கு நேரொத்த திகதி , புதிய தேர்தலின் பின்னர் எப்போது வருகிறதோ அதனையே அடுத்த பதவிக் காலத்துக்கான ஆரம்பமாகக் கருதவேண்டும் எனத் தெளிவுபடுத்துகின்றது அத்திருத்தம்.

இதனையே சற்று விளக்கமாகப் பார்ப்பதானால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிக் காலம் 2005 நவம் பர் 19 ஆம் திகதி ஆரம்பமானது. தற்போதைய இரண்டாவது பதவிக்காலத்துக்கான தேர்தல் 2010 ஜனவரியில் நடந்தது. ஆக, முதலாவது பதவிக் காலத்துக்கு நேரொத்த திகதி 2010 நவம்பர் 19 இல் வருகிறது. அன்றுதான் அவரது இரண்டாவது பதவிக் காலம் ஆரம்பமாகின்றது என்கிறது அரசமைப்பின் மூன்றாவது திருத்தத்தின் வாசகம்.

ஆனாலும், இந்த சட்ட வியாக்கியானத்துக்கு ஆதரவாகவும், முரணாகவும் சில சட்ட ஏற்பாடுகளும், முன் நிகழ்வு உதாரணங்களும் இருக்கின்றமையையும் கூட நாம் மறுப்பதற்கில்லை.

அதாவது
அரசமைப்பின் மூன்றாம் திருத்தத்தின் மூன்றாவது பிரிவின்படி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் அத்தெரிவுக்கான பதவியை அடுத்த இரண்டு வாரத்துக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேசமயம், இவ்வாறு ஜனாதிபதி ஒருவர் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியை ஏற்பது தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர்கள் இருவரின் வழிகாட்டுதல் நடவடிக் கைகளும் இங்கு அவதானிக்கத் தக்கவை.

அவர்களில் ஒருவர் எழுபதுகளின் பிற்பகுதியிலும் எண்பது களின் ஆரம்பத்திலும் பிரதம நீதியரசராக இருந்த நெவில் சமரக்கோன். அடுத்தவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா.

இந்த நாட்டின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக் காலம் 1978 பெப்ரவரி 4 ஆம் திகதி தொடங்குகின்றது என அரசமைப்பின் 160ஆவது பிரிவு கூறுகின்றது. அதன்படி முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் முதலாவது பதவிக் காலம் 1978 பெப்ரவரி 4இல் ஆரம்பமா யிற்று. அவர் 1984 பெப்ரவரி வரை அப்பதவியில் நீடித்திருக் கலாம். ஆனால் அவர் 1982 ஓகஸ்டில் அரசமைப்பின் 3ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வைத்து, அதனைப் பயன்படுத்தி அடுத்த ஜனாதிபதித் தேர்தலை 1982 ஒக்டோபரில் அவர் நடத்தி அதில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், அவரது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு வைபவத்தை 4 மாதங்கள் கழித்து முதலாவது பதவியேற்பு தினத்துக்கு நேரொத்த திகதியில் 1983 பெப்ரவரி 4 ஆம் திகதி அப்போதைய பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோன் நடத்தி வைத்தார்.

அதை முன்வழிகாட்டுதலாக இப்போது கொள்வோமாயின், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அடுத்த பதவிக் காலத்தை 2010 நவம்பரில் இன்னும் பத்து மாதங்கள் கழித்து ஆரம்பிக்க முடியும்.

ஆனால் ஜனாதிபதி சந்திரிகா விடயத்தில் அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவோ வேறு விதமாகச் செயற்பட்டு முன்மாதிரித் தீர்ப்பு ஒன்றை எழுத்தில் வடித்து வைத்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

அரசமைப்பின் மூன்றாவது திருத்தத்துக்கு பொருள் கோடும் விடயத்தில் அவர், அந்த வாசகத்தில் உள்ள சட்ட ஏற்பாட்டுக்கு வியாக்கியானம் கொடுக்காமல் இயற்கை நீதிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தீர்ப்பளித்திருக்கின்றார்.

இரண்டாவது பதவிக்காலத்துக்கான தேர்தலை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எப்போது நடத்தி வெற்றி பெற்றாரோ அன்றிலிருந்தே அவரது இரண்டாவது பதவிக் காலம் ஆரம்பிக்கின்றது. பின்னர் வரும் ஒரு நாளில் அது ஆரம்பமாவதாகக் கொள் வது தவறானது, இயற்கை நீதிக்கு மாறானது, பொருத்தமற்றது என்று அவர் ஏனைய இரு நீதியரசர்களுடன் சேர்ந்து தீர்ப்பு எழுதி வைத்துள்ளார். இத்தீர்ப்புக் காரணமாக ஜனாதிபதி சந்திரிகா மேலும் ஓராண்டு பதவியில் நீடிக்க முடியாமல் 2005 நவம்பரிலேயே பதவியிலிருந்து வெளியேறத் தக்கதாக அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடக்க வேண்டியதாயிற்று.

சரத் என்.சில்வாவின் முன் உதாரணத் தீர்ப்பை இப்போது பின் பற்றுவதாயின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் இப்போதே ஆரம்பமாகின்றது என்பதுதான் பொருள்.

இந்த சர்ச்சைக்குத் தற்போதைய உயர்நீதிமன்றம் எப்படித் தீர்வு கூறப் போகின்றது? முன்னைய பிரதம நீதியரசர்கள் மற்றும் மூன்று நீதியரசர்கள் கொண்ட உயர் நீதிமன்ற ஆயம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களைப் பரிசீலித்து முடிவு செய்யவேண்டியிருப்பதால், இந்த சர்ச்சை குறித்து இப்போது மூன்றுக்கு மேற்பட்ட நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதி மன்ற ஆயம் விசாரிக்கக் கூடும் என எதிர்பார்க்கலாம்.

உயர்நீதிமன்றம் தனது ஆலோசனையை வழங்கி, அது வெளியாகும் வரை இச்சர்ச்சை தொடரவே செய்யும்.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment