தான் ஜனாதிபதியானால்....பொன்சேகா ஒப்பமிட்டு சம்பந்தனிடம் கையளித்துள்ள ஆவணம்

ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தாம் நீக்குவார் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்து கைச்சாத்திட்டு, சம்பந்தனிடம் கையளித்துள்ள ஆவணத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:

I. கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.

II. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும்.

இக்குழுவில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் பிரதேச செயலாளர்கள்
ஏனைய அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள் உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள் நீதித்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.

III. உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.

IV. தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.

V. பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.

VI. தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.

2. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.

I. அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.

II. பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.

III. படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.

3. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.

I. நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.

II. இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும், வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.

III. அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

4. நிலமும் விவசாயமும்

I. தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.

II. மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

III. கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.

* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.

(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.

(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.

(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.

(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.

அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில் வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.

5. மீன்பிடித்துறை

I. மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.

II. பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.

6. வியாபார, வர்த்தகம்

I. பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.

II. கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

7. போக்குவரத்து

I. ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.

II. கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.

III. பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

8. விசேட நிவாரணத் திட்டங்கள்

I. யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு

II. யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

9. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்

I. குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.

II. யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment