ஒதியமலை படுகொலையின் 25ம் ஆண்டு நினைவு - 01.12.1984

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல்களில் தண்டனை பெற்ற சிங்களக் குற்றவாளிகளும் அவர்களின் குடும்பங்களும் இராணுவப் பாதுகாப்புடன் சிங்கள அரசு குடியேற்றி வந்தது. அந்த வகையில் கென்பாம், டொலர்பாம் போன்ற இடங்களைத் தொடர்ந்து ஒதியமலைப் பகுதியிலும் குடியமர்த்தப்பட்டார்கள்.

1984ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இருபத்தொன்பதாம் திகதியிலிருந்து மார்கழி இரண்டாம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. மார்கழி மாதம் முதலாம் திகதி பதவியாவிலிருந்து ஒதியமலை கட்டுக்கரை ஊடாக வந்த இராணுவத்தினர் ஒதியமலைக் கிராமத்தைச் சுற்றிவளைத்தனர். மக்கள் அதிகாலை வீட்டின் கதவுகளைத் திறந்தபோது பச்சை நிற உடைகளுடனும் ஆயுதங்களுடனும் இராணுவத்தினர் நின்றனர். 'நாங்கள் அபிவிருத்திச் சங்கக் கட்டடத்த்தினுள் கூட்டம் வைக்க்கப் போகிறோம் ஆம்ப்பிளைகள் மட்டும் வாங்க என சரளமாகத் தமிழில் கூறி, முற்பதிற்கும் மேற்பட்ட ஆண்களை கைது செய்து கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றனர். அவர்களின் கைகளை பின்னாற் கட்டி சித்திரவதை செய்து சுட்டும் வெட்டியும் படுகொலை செய்தனர். இராணுவம் சென்றபின் அங்கு சென்று பார்த்தபோது கைதுசெய்யப்பட்டவர்களில் இருபத்தேழு பேர் மிகவும் கோரமாக கொல்லப்பட்டு மண்டபத்தினுள் கிடந்தார்கள். இறந்தவர்களில் அனேகர் திருமணமாகிக் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர்கள். பலர் முதியவர்கள், சிலர் கிளிநொச்சி மாவட்டம், பளை, பச்சிளைப்பள்ளியிலிருந்து வயல் வேலைக்காக ஒதியமலை வந்தவர்கள், வேறு சிலர் அயல்க்கிராமமான பட்டிக்குடியிருப்பிலிருந்து உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக வந்தவர்களாவார்கள். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவத்தினை தொடர்ந்து ஒதியமலைக் கிராம மக்கள் இடம் பெயர்ந்து முல்லைத்தீவில் உள்ள பாடசாலைகளிலும் கோயில்களிலும் தஞ்சமடைந்தார்கள்.

கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் நா.கந்தசாமி இப்படுகொலை தொடர்ப்பாகக் குறிப்பிடுகையில்
'அன்றைய தினம் காலை 6.30 மணியளவிலே எமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை இராணுவத்தினர் எமது கிராமத்தை நான்கு பக்கத்தாலும் சுற்றிவளைத்து, எமது கிராம மக்களில் கண்ணிற்பட்டவர்களையெல்லாம் பிடித்து ஓரிடமாக்கி அவர்களது மேலங்கியைக் கழற்றி அதனைக்கொண்டு அவர்களது கைகளைப் பின்பக்கமாகக் கட்டி ஒதியமலைக் குளக்கட்டருகே கொண்டு வந்தனர். அந்த நேரத்திலே அவ்வீதியாற் சென்ற செல்;வராசா என்பவரது உழவு இயந்திரத்தை மறித்;து அதிலிருந்தவர்களையும் பிடித்து கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திற்குக் கொண்டு சென்றார்கள். சிறிது நேரத்தின் பின் அலறல் சத்தமும் அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச்சத்தமும் கேட்டது. அத்துடன், பிடித்தவர்களில் வயோதிபர்களாகப் பார்த்து கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சின்னையா, கனகையா, ஆகியோரைத் தங்களது பாதுகாப்பிற்காக அவர்களுடைய பண்ணைக்கு எனது உறவினர் ஒருவரின் உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

இராணுவம் வந்ததை அறிந்து காட்டுக்குச் சென்றிருந்த நான் பின்னர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தினுள் ஓடிச்சென்று பார்த்தபோது மூன்று நான்கு பேராக நிறுத்தி வைத்து இருபத்தி ஏழு பேரையும் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்திருப்பதைக் கண்டேன். நான் பார்த்த பொழுது குற்றுயிருடன் இருந்த சிலரும் தண்ணீர் தண்ணீர் எனக் கேட்டுக் கொண்டு இறந்ததையும் கண்டேன். பின்னர் அவர்களில் கால் வேறு, தலை வேறாக இருந்தவர்களை சீராக கட்டடத்தின் இரு மருங்கும் அடுக்கி விட்டு அங்கிருந்து கால்நடையாக முல்லைத்தீவு நோக்கி ஓடினோம்.

அந்த நேரம் இராணுவக் கெடுபிடிகள், ஊரடங்கு உத்தரவுகள் அதையும் மீறி பெரிய முயற்சியெடுத்து அரசாங்க அதிபர், காவல்த்துறை அதிகாரிகள், நீதியாளர்கள், உதவி அரசாங்க அதிபர், கிராம சேவையாளர்கள் என அனைவரையும் அழைத்து வந்து நடந்த சம்பவத்தைக் காட்டினோம். இறந்தவர்களது கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்களது கண்கள், காதுகள், மூளைகள் வெளியிலே வந்த கோரக்காட்சியைப் பார்த்து அவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பின்னர் முழுக் கிராமத்தினரும் சேர்ந்து கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு முன்பாக பெரிய மரங்கள் போட்டு அதன் மேல் அவர்களை அடுக்கித் தீ மூட்டினோம். அதன் பின்பு இறந்த உறவுகளை நினைத்து அழுது புலம்பிக்கொண்டிருக்கும் சமயம் முல்லைத்தீவிலிருந்தும் சிலோன் தியேட்டர், டொலர்பாம், கென்பாம்களிலிருந்தும் இராணுவத்தினர் ஒதியமலை நோக்கி வருவதாகக் கேள்விப்பட்டு எல்லோரும் பாதுகாப்பிற்காக நெடுங்கேணி நோக்கி வந்தோம்.'

வெலிஓயா சிங்க்களக் குடியேற்றத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒதியமலைக் கிராமம் தொடர்ப்பாக அக்கிராம வாசியான சிவசேகரம் சததியநாதன் அவர்க்களின் ஒதியமலைப் படுகொலைகள் தொடர்ப்பான சுருக்கக் குறிப்பு.

'நான் பிறந்து வளர்ந்த பூர்வீகக் கிராமம் வெலிஓயா எனச் சொல்லப்படும் சிங்களக் குடியேற்றத்தின் எல்லைக் கிராமமான ஒதியமலைக் கிராமம் ஆகும். அதற்கு அடுத்தாற்போல் பெரியகுளக் கிராமமும் காணப்படுகின்றது. 1984ம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம் திகதியன்று வெலிஓயாக் கிராமச் சிங்களக் காடையர்களும், சிறிலங்கா இராணுவத்தினரும் இணைந்து ஒரே இடத்தைச் சேர்ந்த இருபத்தேழு அப்பாவிப் பொதுமக்களையும், அதற்கு முதல் நாள் ஐந்து பொதுமக்களையும் கைதுசெய்து சென்றனர். கென்பாம் என்கின்ற இடத்தில் வைத்து இவர்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள். அதன் தொடராக இவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வருவதும் கண்ணிற்படுபவர்களைப் பிடித்துச் சுடுவதுடன், இங்கு வசித்த தமி;ழ் மக்களின் பொருட்களைக் கொள்ளையடிப்பதும், வழக்கமாக இருந்தது. குறிப்பாக விளைபொருட்களையும் விவசாய இயந்திரங்கள், துவிச்சக்கரவண்டிகளென என்னவாக இருந்தாலும் எடுத்துச் சென்றுவிடுவார்கள்.

இவ்வாறான அட்டூழியங்கள் இடம்பெற்று வரும்வேளை குறிப்பாக 1986ம் ஆண்டு பங்குனி மாதம் இருபத்தாறாம் திகதி காட்டுப் பகுதியால் வந்த இராணுவத்தினர் மாலை 3.00 மணியளவில் திருகோளம் என்று சொல்லப்படும் இக்கிராமத்தில் சுப்பிரமணியம் என்பவரின் கடைக்குள் வைத்து கார்த்திகேசு விசுவலிங்கம், பழனியாண்டி செல்லத்துரை என்ற இருவரையும் உயிருடன் கடைக்குள் வைத்துத் தீமூட்டி எரித்த சம்பவம் நடந்தது. இச்சம்பவம் நடந்ததால் பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த அப்புத்துரை என்பவர் அவருக்குச் சிங்களம் தெரியுமாதலால் அந்தக் காடையர்களிடம் சென்று 'ஏன் இவ்வாறான அநியாயம் செய்கிறீர்கள், யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது' என்று கேட்டதற்காக அவரின் வாய்க்குள் துப்பாக்கியாற் சுட்டு ஜெயம் என்பவரின் வீட்டிற்குள் போட்டு எரித்ததுடன், தொடர்ச்சியாக அப்பகுதியிலிருந்த பதினைந்திற்கும் மேற்பட்ட வீடுகளை எரித்த பின்னர் படையினர் காடுகளுக்குள் பதுங்கியிருந்தார்கள். அதற்கு அடுத்தநாள் விடியற்காலை பதவியாப் பகுதியிலிருந்து வாகனங்களில் இராணுவத்தினர் வந்ததைத் தொடர்ந்து நெடுங்கேணிப் பிரதேசத்தைச் சுற்றிவளைத்தனர். இதன்போது இராணுவம் கிராமத்துள் இருக்கிறதா இல்லையா எனத் தெரியாமல் வந்த பல அப்பாவி மக்கள் அதனிடம் மாட்டிக்கொண்டார்கள். அப்படி வந்தவர்களிற் பலர் சுடப்பட்டார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் வினாசிக்குளத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவரும் அவருடைய இளைய மகனும் என்னுடைய கடைக்கென வந்தவிடத்தில் அந்த நேரம் நானும் எனது உறவினரான இராஜரட்ணம் என்பவரும் ஓரிடத்தில் ஒளிந்திருந்தோம். என்னைத் தேடி வந்த பொன்னம்பலத்தின் மகனை இராணுவத்தினர் கலைத்துச் சுட்டார்கள்.

அதன் பின்னர் அவனைத் தேடி வந்த மூத்த சகோதரன் தம்பி இறந்து இருப்பதைப் பார்த்து அழுதுகொண்டிருந்த சமயம் அவரையும் சுட்டுவிட்டு வல்லிபுரத்தின் மகனான பேரின்பநாயகம் என்பவரையும் பழம்பாசிக் கிராமத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளையின் மகனான கைலையையும், சிவலிங்கத்தின் மகனையும் சுட்டுக் கொலை செய்தனர். ஈசன் என்பவருக்கு கையில் வெட்டுக்காயம் பட்ட நிலையில் உயிர் தப்பி வந்தார். இப்படியாக இரண்டு நாட்களாக பாரிய அட்டூழியங்கள் செய்தார்கள். கிட்டத்தட்ட பதின்நான்கிற்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொலை செய்திருந்தார்கள். இப்படியாக இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தவண்ணமிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளை நடத்தி இப்பிரதேச வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி அப்பிரதேசத்தை ஒரு சிங்களக் குடியேற்றப் பிரதேசமாக்குவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஏனென்றால் சிலோன் தியேட்டர் மற்றும் அங்கு காணப்பட்ட டொலர்பாம், கென் பாம் போன்ற பண்ணைகளிலும் தமிழர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு 1984ம் ஆண்டு காலப்பகுதியில் இவ்விடங்களை விட்டு வெளியேற வேண்டுமென்ற நேரடியான இராணுவ அச்சுறுத்தல் இருந்தது. அதாவது 1984ம் ஆண்டு ஆறாம் மாதமளவில் நேரடியாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் இதனைத் தெரிவித்து தமிழரை வெளியேற வைத்த சம்பவம் இடம்பெற்றது. அதன்பின்னர் தென்னிலங்கையின் சிறைகளிலிருந்த ஆயுட் கைதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி புனர்வாழ்வு என்ற பெயரில் இங்கு குடியேற்றி அவர்களையே இராணுவக் காடையர்களாகவும் பயன்படுத்தி வந்தனர். இவர்களது கொலைக் கொள்ளைச் சம்பவங்கள் 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் வரை நீண்டு சென்றது.

01.12.1984 அனறு;று; ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்;டோர் விபரம்
01. நாகமணி சின்னையா - 50
02. நாகரத்தினம் கேதீஸ்வரன் - 23
03. நல்லையா நவரட்ணம் - 17
04. கந்தையா கனகையா - -
05. கந்தையா பொன்னம்பலம் - 48
06. கந்தையா சிவசிதம்பரம் - 35
07. கிருஸ்ணபிள்ளை இராசலிங்கம் - 29
08. கறுபi; பயா தஙக் ராசா தொழிலாளி 18
09. கணபதிப்பிள்ளை சின்னையா - 35
10. கணபதிப்பிள்ளை சிவபாதம் - 28
11. தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை - 51
12. தாமோதரம்பிள்ளை சதாசிவம் - 46
13. தம்பிஐயா காசிப்பிள்ளை - 45
14. தம்பிஐயா வேலுப்பிள்ளை - 38
15. தம்பிஐயா சுப்பிரமணியம் - 26
16. தம்பிஐயா சிவஞானம் - 23
17. அழகையா ஜெககாதன் - 17
18. கோவிந்தர் கணபதிபப் pளi; ள - 55
19. பொனன் ம்பலம ; தேவராசா - 25
20. வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை - 36
21. சுப்பையா கெங்காதரன் - 26
22. சின்னையா இராசேந்திரம் - 21
23. சிதம்பரப்பிள்ளை இராசையா - 27
24. சங்கரப்பிள்ளை சபாரத்தினம் - 40
25. சங்கரப்பிள்ளை சண்முகசுந்தரம் - 25
26. சண்முகராசா இரவிச்சந்திரன் - 16
27. வீரகத்தி தில்லைநடராசா - 25

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.



Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment