வதந்தியும் வத்தி வைப்பும்


இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்பு அடுத்த வாரத்தில் நடைபெறப் போகின்றது.

தேர்தல் பிரசாரம் இன்னும்கூட தமிழ்ப் பகுதிகளில் சூடுபிடிக்கவில்லை. விறுவிறுப்பை எட்டவில்லை. ஆனால் தென்னிலங்கையோ தேர்தல் பிரசார ஜுரத்தில் தகிக்கிறது. தமிழர் பிரதேசத்தைப் பொறுத்தவரை அவர்களின் தீர்மானம் ஓரளவு புரிந்ததுதான். இனி நடக்கப் போகின்ற பிரசாரங்கள் அங்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. தமிழ் நாட்டில் தேர்தல்களை ஒட்டிப் பெரும் பண ஆறு புரண்டு ஓடும். கற்றை கற்றைகளாகக் காசு கைமாறும். பணத்தால் வாக்குகளை வாங்கும் கைங்கரியம் அங்கு என்றால், இலவச சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று வாரி வழங்கும் தாராளம் தமிழர் பிரதேசத்தில் குறிப்பாக வடக்கில் தற்சமயம் அரங்கேறுகின்றது.

தமிழகத்தில் ஆறாய் ஓடும் பணம் வாக்குகளாய்க் கைமாறுவதுபோல இங்கு இலவசமாக ஓடும் சைக்கிள்கள் வாக்குகளாய் மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.எது, எப்படியோ தமிழர் தரப்பின் தீர்மானம் எத்தகையது என்பது வெளிப்படையானது. அது இங்கே பகிரங்கப் படுத்திக் காட்டித்தான் தெரியவேண்டும் என்பதல்ல.

வழமையாகத் தமிழ்பேசும் சிறுபான்மையினருக்கு எதிராகப் பேரினவாதத்தைக் கிளப்பி, அதன்மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் தென்னிலங்கைத் தரப்புகள் இப்போதும் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அதே இனவாதப் பூதத்தைக் கையில் எடுத்திருக் கின்றமைதான் துரதிஷ்டவசமானதாகும்.

இந்தத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு பிரதான வேட்பாளர்களுடனும் திறந்த மனதுடன் பேசியது. ஒருபுறம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. மறுபுறம் ஜெனரல் சரத்பொன் சேகாவும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும்.

இருதரப்புகளுடனும் பேசிய பின்னரே, தாம் ஆட்சியில் தொடர்வதற்கு மீண்டும் ஒரு தடவை ஆணை தரக்கோரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுத்தது.

அவ்வளவுதான். அதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுக்காகக் கை நீட்டிய ஆளும் தரப்பு இனவாத அரசியலைக்கக்குவதற்குப் புறப்பட்டுவிட்டது.ஏதோ தமிழர்களுக்குத் தனிஈழம் பிரித்துக் கொடுக்க ஜெனரல் சரத்பொன்சேகா உடன்பட்டுவிட்டார் என்பது போலவும், அதற்கான உடன்படிக்கை ஒன்றில் கூட்டமைப் பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனோடு அவர் ஒப்பமிட்டிருக்கிறார் என்ற மாதிரியும் பிரசாரங்களைத் தென்னிலங்கையில் முடுக்கிவிட்டிருக்கின்றது ஆளும்தரப்பு.
தமிழர் தாயகத்தின் மீது வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகக் கொடூரமானதும், மிகக் குரூரமானதும், மிகக்கோர மானதுமான யுத்தத்தைத் தொடுத்துத் தமிழினத்துக்கு என்றுமில்லாதவாறு பேரழிவையும், போரழிவையும் ஏற்படுத்தி, அதன் தேசிய ஆன்மாவில் என்றும் ஆறாத ஆழமான வடுவை ஏற்படுத்தி, அந்த இனத்தை அடிமைப் படுத்திய மேலாதிக்க நினைப்பில் மிதக்கும் இந்த ஆட்சித் தரப்பு, அழிவின் விளிம்பில் அல்லாடும் இந்தச் சிறுபான்மை இனத்தோடு, இதன் பின்னரும் சமரசம் செய்து, நல்லிணக்கம் கண்டு, உடன்பட்டுப் போகும் தாராண்மைத்தனம் இல்லாமல் மேலாண்மைச் செருக்கோடுதான் விடயங்களைக் கையாள எத்தனிக்கின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் ஆதரவு தனக்கு இல்லை என்றதும், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா தமிழர்களுக்குத் தனிநாடு வழங்க இணங்கி விட்டார் என்ற இனவாதத்தைத் தூண்டி விடுகின்ற அரசியல் ஆயுதத்தைக் கையிலெடுத்துப் பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கும் ஆளும் தரப்பின் போக்கு அதனை துலாம்பரப்படுத்தி நிற்கின்றது.

ஆளும் தரப்பு இப்படித் தமிழீழத்தைத் தமிழருக்கு வழங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பொன்சேகா உடன்பாடு கண்டுவிட்டார் எனப் பிரசாரம் செய்ய, மறுபுறத்தில் தனது வேட்புமனு மூலம் ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிபடுத்தம் செயற்பாட்டில் துடித்துக்கொண்டு இறங்கியிருக்கும் சிவாஜிலிங்கமோ மறுவளமாகப் பிரசாரத்தை முன்னெடுக்கிறார்.

தமிழர் தாயகத்தை மூன்று துண்டுகளாக்கிவிட தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எதிரணியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் இரகசிய ஒப்பந்தம் செய்துவிட்டார் என்று புதுக்கதை அவிழ்த்து விடுகிறார் அவர். "சரத்பொன்சேகாவிற்கு விழக்கூடிய தமிழ் வாக்குகளை அவருக்கு விழவிடாமல் பிரித்து நான் சுருட்டிக் கொள்கிறேன். அதன்மூலம் உங்கள் தரப்பின் வெற்றியை உறுதிப் படுத்த உதவுவேன்' என்று ஆளும் தரப்போடு "இரகசிய உடன்பாடு' கண்டவர் யார் என்பது தமிழர்களுக்கு நன்கு தெரியும்.

ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதியின் வெற்றிக்காகத் தமிழ்த் தேசியத்தை விற்று, சரணாகதி அரசியல் நடத்தும் பிரகிருதிகள் யார் என்பதும் தமிழர்களுக்குப் புரியும். தனித்தமிழீழம் அமைக்க எதிரணிப் பொது வேட்பாளருடன் உடன்பாடு கண்டு விட்டது தமிழ்க் கூட்டமைப்பு என்ற தென்னிலிங்கை வதந்தி ஒருபுறம். தமிழர் தாயகத்தை மூன்று துண்டுகளாக்க அதே பொதுவேட்பாளருடன் தமிழ்க்கூட்டமைப்பு உடன்பாடு கண்டுவிட்டது என்ற வடபகுதியின் வத்திவைப்பு மறுபுறம். பேரினவாதத்தின் வதந்தி தென்னிலங்கையில் எடுபடுமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் வட பகுதியின் வத்திவைப்பு மட்டும் தமிழர்களிடம் பற்றிக் கொள்ளாது, பிசுபிசுத்து நூர்ந்து போகும் என்பது உறுதி.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment