தமிழ் தேசிய கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாகக் கூறி இன்றோடு நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. 'மகிந்த கொம்பனிக்கு' அடிவயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்துவிட்டது. வன்னிமக்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராக மகிந்த அரசு நடத்திய இறுதி யுத்தம் முடிவடைந்து 9 மாதங்களை நெருங்கிக் கொண்டிருந்த போதிலும் இதுவரை தடுத்து வைக்கப்பட்டவர்கள் நிலைபற்றியோ, A9 பாதை திறப்பது பற்றியோ, பலவிதப்பட்ட சாட்டுகளைக் கூறிக்கொண்டிருந்த மகிந்த கொம்பனிக்கு இப்போது மட்டும் (புத்த) ஞானம் பிறந்து விட்டது.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களின் விடுதலைக்கு நீதிமன்ற ஆணை வேண்டும் என்றதும் புலன்விசாரணை அதிகாரிகளின் அறிக்கை வரவேண்டும் என கூறியதும் நினைவை விட்டு அகலாதவையாகும்.
இப்போது அந்த சட்டங்களையும், விசாரணைகளையும் மகிந்த கொம்பனி தூக்கி எறிந்துவிட்டு, நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட அதி உத்தம ஜனாதிபதியாக தடுத்து வைக்கப்பட்ட 1000 பேரை விடுதலை செய்ய முன்வந்தமையும், A9 (கண்டி) பாதையை 24 மணிநேரம் திறப்பதற்கான அனுமதியை வழங்கியமையும், யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலையத்தினுள் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கான அனுமதியும், பயணவழி சோதனைகளும், கெடுபிடிகளும் தளர்த்தப்பட்டமையும், மீள நினைத்துப் பார்க்கையில் கனவோ, அல்லது மந்திரமோ என எண்ணத் தோன்றுகிறது.
'காற்றுள்ள போதே தூற்றத் தொடங்கியிருக்கும்' தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஞானமான செயற்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்றால் அதை மறுப்பதற்கு எவராலும் முடியாது.
'அழுதழுதும் அவள்தான் பிள்ளையை பெறவேண்டும்' என்பது போல தற்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான் தமிழ்மக்களுக்கான நெருக்குவாரங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஆகும். இரைக்காக ஆகாயத்திலே பறந்தாலும் தங்குவதற்காக கூட்டுக்குள் வரத்தான் வேண்டும். ஆகவே பிரிந்துபோக முயன்றவர்களுக்கும், பிரிந்துபோக எண்ணுபவர்களுக்கும் இச் சம்பவங்கள் நல்ல பாடமாக அமையும். இனிமேல் நடப்பது நலமாக நடக்குமென தமிழ்மக்கள் விசுவாசம் கொள்கிறார்கள்.
தமிழ்மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக 'மகிந்த கொம்பனி' தமிழ்மக்களுக்கு காட்டும் நன்மைகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவையானது, நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதிக்கு மேற்கூறியவை யாவும் 9 மாதங்களுக்கு முன்னரே செய்வதற்கு அதிகாரம் இருந்தும் இதுவரை செய்யப்படாது தனக்கான தேவை வரும் பட்சத்தில்('தனக்குத் தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்று புடைக்குமாம்') செய்ய முனைவதிலிருந்து புரிந்து கொள்வது யாதெனில், இலங்கையின் சம பிரஜைகளாக தமிழ்மக்களை சிங்களம் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக அர்த்தம் கொள்ளலாம். அதாவது மகிந்த ராஜபக்சவுக்கு இப்படியான நெருக்கடி வராவிடின் விடுதலை என்பதற்கோ, பாதை திறப்பிற்கோ, மற்றும் ஏனைய விடயங்களுக்கோ பேச்சே இருக்காது.
'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்' நிலை இப்போது ஏற்பட்டுவிட்டது. ஆகவே காலம் காலமாக ஏமாற்றிவந்த சிங்களத் தலைமைகளுக்கு, தமிழ்மக்கள் பாடம் புகட்ட வேண்டிய காலம் கனிந்து விட்டது. தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரனின் புத்திசாலித்தனமான முடிவை மேற்கோளாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது காத்திருந்து புத்திசாலித்தனமாக மகிந்த கொம்பனியின் காலை வாரிவிட வேண்டியதுதான் கடமையாகும். அதற்காக சரத் பொன்சேகா தமிழ்மக்களின் இரட்சகர் என்று அர்த்தம் கொண்டுவிடலாகாது.
எய்தவனை முதலில் பார்ப்போம்! அம்பை அடுத்ததாக பார்ப்போம்! இருப்பினும், இரண்டும் கவனிக்கப்படவேண்டியவை.
மல்லிகையூரான்
0 கருத்துரைகள் :
Post a Comment