வட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள்


சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புக்கள் உக்கிரமடையத் தொடங்கிய பின்னர், குறிப்பாக 1980களின் பிற்பகுதியில் இருந்து, எந்தநேரத்திலும் எங்கும் குண்டு விழலாம், ஒரு உயிர் சாதாரணமாகப் பலிகொள்ளப்படலாம் என்ற நிலைதான் தமிழர் தாயகத்தில் நிலவியது. உறக்கத்தில் கூட உயிர் பறிக்கப்படலாம். உணவு உண்ணும்போது அடுத்த கவளம் தொண்டைக்குழியில் இறங்கும் வரை உயிர் இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத ஒரு வாழ்க்கை. அவ்வாறான காலகட்டத்தில், 28.02.1991 அன்று, வட்டக்கச்சியில், சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுக் கோப்பையில், தசைத்துண்டங்களாகச் சிதறிவிழுந்த அவல சம்பவத்தை நிகழ்த்தியது சிறிலங்காவின் விமானப்படை. 

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள நான்கு கிராமப்பிரிவுகளை உள்ளடக்கியது வட்டக்கச்சி. வருடம் முழுமைக்கும் வற்றாத நீர்வளமும் பசுமையும் செழுமையும் உள்ள கிராமம். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தில் இரண்டுபோகங்கள் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதால், வயல்வெளிகள் எப்போதும் பசுமையாகவே இருக்கும். தென்னந்தோப்புக்கள், மா , பலா, வாழை என பழத்தோட்டங்கள்,   வீதிகளிலும் வெளிகளிலும் சுற்றி வரும் கால்நடைகள், சல சலத்து ஒடும் நீரோடைகள் என வட்டக்கச்சியின் வனப்பு கொட்டிக்கிடக்கும்.

இப்பிரதேசத்தில் “அரச நெற்பண்ணை” என்னும் பெயரில் அரசுக்குச் சொந்தமான நெல்வயல்கள் உள்ளன. இங்கு வேலை செய்பவர்கள், தங்கியிருந்து வேலை செய்வதற்காக வட்டக்கச்சி மூன்றாம் வாய்க்காற் பகுதியில் அரச நெற்பண்ணை விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு ஐந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்பமாகத் தங்கியிருந்து வயல்வேலை செய்து வந்தனர். 1991ஆம் ஆண்டு மாசி மாதம் இருபத்தெட்டாம் திகதி காலை 7.00 மணியளவில் வேலைக்குச் செல்வதற்காக விவசாயிகள் விடுதிகளில் காலை உணவு அருந்திக்கொண்டிருந்த வேளையில், சிறிலங்கா விமானப்படையின் இரண்டு “பொம்பர்” விமானங்கள் வட்டக்கச்சிப் பிரதேசத்தை மையப்படுத்தி வான்பரப்பில் வட்டமிட்டன. 

விமானத்தின் இரைச்சல்கேட்டு, குழிகளிலும் குன்றுகளிலும் ஓடி ஒழிவதற்கிடையில் மூன்று குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுவிட்டன. இதில் ஒரு குண்டு விடுதிக்குள் விழுந்து வெடிக்க மற்றைய இரண்டும் வயல்வெளிகளில் வீழ்ந்து வெடித்தன. இதில் ஒன்பது பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். உயிரிழந்த ஒன்பது பேரில் ஆறு பேரின் உடல்கள் சிதறுண்டு உருக்குலைந்துபோக ஏனைய மூன்று பேரின் உடல்களையும் காயப்பட்ட மூவரையும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றார்கள். இறந்தபோனவர்களின் உடல்களும், குண்டுவீச்சில் கொல்லப்பட்ட ஆடு, மாடு, கோழிகளும் ஒன்றாக ஒரேகுழியில் போட்டு மூடப்பட்டன.

இந்தச் சம்பவத்தை அடுத்து, தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்த நிலையில், சிதைந்த போயிருந்த அந்த விடுதிகளில் வாழ்வதற்கு அச்சமடைந்து எஞ்சியிருந்த குடும்பங்கள் விடுதிகளை விட்டு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றன. ”வியர்வை சிந்தி நாங்கள் உழைத்த நெல்வயல்களில் எங்கள் உறவுகள் சிந்திய குருதி கலந்திருக்கின்றது” என்று இன்று வரை அச்சம்பவத்தை மறக்கமுடியாமல் கண்ணீருடன் அவர்கள் கூறியது கனமாக வலித்தது. ஒரே நாளில் , சில நொடிப்பொழுதுகளில் ஒன்பது உறவுகளை ஒன்றாகப் புதைத்துவிட்டு, உறவாடி வாழ்ந்த மண்ணைவிட்டு வெளியேறிய அவர்களின் வேதனைகளை ஆறறுப்படுத்துவதற்கு வழி தெரியவில்லை, வார்த்தைகள் இருக்கவில்லை.

இச்சம்பவத்தின் போது சம்பவ இடத்திலிருந்த இராமையா பரமசுந்தரம் அவர்கள் கூறும்போது,“நான் நெற்பண்ணையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவேளை இரண்டு பொம்மர் விமானங்கள் வந்து குண்டு போட்டன. இந்தச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒன்பது பேர் கொல்லப்பட்டார்கள். மூன்று பேர் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு போய் காப்பாற்றிவிட்டோம். இறந்தவர்கள் அனைவரையும் ஒரே குழியில் போட்டுப் புதைத்தோம். இச்சம்பவத்தில் பண்ணையிலிருந்த, கிட்டத்தட்ட நாற்பது ஆடுகள், இருபது கோழிகளும் இறந்தன. அவற்றையும் மனித உடல்களுடன் ஒரே குழியில் போட்டுப் புதைக்க வேண்டிய சூழல் இருந்தது. ஏனென்றால் திரும்பவும் புக்காரா வந்து குண்டுபோடுமோ என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வந்து பார்வையிட்டுச் சென்றது. மக்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இந்த இடத்தில் குண்டுபோட்டதாக நான் கருதுகிறேன். ஏனென்றால் காலையில் தொழிலுக்குப் போகமுன் வந்து குண்டு போட்டால் எல்லோரும் இறப்பார்கள் என்ற திட்டம்தான். இன்று நேற்றல்ல 1990ம் ஆண்டிலிருந்தே சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களை கொலை செய்து கொண்டுதான் இருக்கிறது.” என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். 

குண்டு வீச்சில் பலிகொள்ளப்பட்டவர்கள்
 1. இராசேந்திரம் சித்திரம்மா 
 2. ஆறுமுகம் இராசேந்திரன்
 3. நாகமுத்து ஆறுமுகம் 
 4. ஆறுமுகம் கமலாதேவி
 5. முனியாண்டி செல்வம் 
 6. ஆறுமுகம் விஜயலட்சுமி
 7. முருகையா சுமதி 
 8. சின்னத்தம்பி உமாதேவி
 9. முருகையா சித்திரா
குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
  Blogger Comment
  Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment