இன்று கொண்டாடப்படவிருக்கும் 62 ஆவது சுதந்திரதினம் சிங்கள தேசத்தின் சுதந்திரதினம். இதுவானது, இலங்கை என்ற ஒரு தேசத்துக்கு கீழ் இரு வேறுபட்ட இனங்கள் தத்தமது கலை கலாச்சார விழுமியங்களுடன் வாழ முற்படும் நிலையில் அதனை அடக்குமுறையால் பலவந்தமாக ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து கண்டியில் நடாத்த எத்தனிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மலிவான அரசியல் தனத்தை காட்டி நிற்கிறது. சிங்கள தேசத்தின் இன்றைய சுதந்திர தினம் அனைத்து தமிழ்மக்களின் கரிநாளாகும்.
இன்றைய சுதந்திர தின விழாவிலே மூவினங்களும் ஒற்றுமையாக வாழ்வதைக் சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு தமிழ் முஸ்லீம் பாடசாலைப் பிள்ளைகளை அமைச்சின் சுற்று நிரூபத்தின் மூலம் அழைத்து வருவார்கள். அடிவருடிகளாக இருக்கும் தமிழ் அமைச்சர்கள் தாமும் தம்மோடு சேர்ந்த தமிழ் சகபாடிகளையும் அழைத்துவந்து கதிரைகளை நிரப்பி ஜனாதிபதி மகிந்தாவின் முகத்தில் சிரிப்பைக் காண முனைவார்கள். இவையெல்லாம் காலம் காலமாக நடைபெற்றுவரும் வழமையான சம்பவங்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சுதந்திர தினம் பற்றிய உடன்பாடு எதுவும் இல்லாமல் இலங்கையில் வாழ்ந்து வருவதால் இத்தினம் பற்றிய உணர்வே இருக்காது. சிங்கள தேசத்தின் சுதந்திரதினத்தை காலம் காலமாக நினைவுபடுத்த வேண்டிய ஒரு புறக் குறிப்பொன்று எப்பொழுதும் நிலைத்திருக்கும். அதாவது, கடந்த 2008 ம் ஆண்டு காலிமுகத்திடலில் நடந்தேறிய சுதந்திர தின நிகழ்வில் அமைச்சர் அத்தாவுல்லா சடுதியாக எழும்பி இதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்தி 'தனது மக்கள் சார்பான நன்றியறிதல்' என பெருமைப்பட்டுக் கொண்டதனையும் அதனை ஏனைய முஸ்லீம் அமைச்சர்கள் அவரது செயலை கேவலமாக எள்ளிநகையாடியதும் நினைவை விட்டு அகலாதவை. ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு முஸ்லீம் மக்கள் அமைச்சர் அத்தாவுல்லாவுக்கு 'ஆடையே இல்லாமல்' செய்துவிட்டதும் நினைவை விட்டு அகலாதவை.
தணல்
0 கருத்துரைகள் :
Post a Comment