மனித உரிமை மீறல்கள்: சிறிலங்கா மேற்குலக மோதலில் வெற்றி யாருக்கு?


மேற்குலக சக்திகளின் ஆதரவுடன் உருவாக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் பரிந்துரையானது சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தத்தை மேற்கொண்டு அதன் ஊடாக பிற பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கேட்பதற்கான உத்தியாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக்கொண்ட The Economist சஞ்சிகை சிறிலங்கா தொடர்பான கட்டுரையில் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளின் முன்னர், சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்கள் ஒருபோதும் உயிருடன் திரும்பி வரப் போவதில்லை. சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளன. 

"எமது மக்கள் தற்போது பெற்றுக் கொண்ட நல்வாய்ப்புகள் தொடர்பாக எந்தவொரு உணர்வுள்ள மனிதனும் புரிந்து கொள்வான். இன்று சிறிலங்காவில் படுகொலைகள் நடைபெறவில்லை, யுத்தம் நடைபெறவில்லை. சிறிலங்காவில் அமைதி நிலவுகின்றது. மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்" என்பது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரனும், சிறிலங்காவின் அதிகார சக்தியைக் கொண்ட பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்சவின் கருத்தாகும். 

சிறிலங்கா அரசாங்கம் தனது மக்கள் மீது மேற்கொண்ட மீறல்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என 2009 ல் யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் தற்போது முதன் முதலாக, நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரின் போது அழுத்தம் பிரயோகிக்கப்படலாம். பெப்ரவரி 27 அன்று தொடங்கவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா பிரதிநிதிகள் குழு இவ்வாரம் ஜெனீவா சென்றடைந்துள்ளனர். 

ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா இக் கூட்டத் தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவை எவ்வாறு பேணுதல் என்பது தொடர்பிலும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் பெறப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பிலும் சிறிலங்கா அரசாங்கம் மீது   அழுத்தம் கொடுப்பதை நோக்காகக் கொண்டே அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் இணைந்து இத் தீர்மானத்தை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது சிறிலங்கா அரசாங்கமானது தான் செய்த குற்றங்களை எண்ணி கவலைப்படவில்லை. "விசாரணை அறிக்கைகளைக் கருத்திற் கொள்ளவும்" என ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

"பல்வேறு அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விட்ட பிரிவினைவாத ஆயுத அமைப்பான புலிகள் அழிக்கப்பட்டதை எவரும் படுகொலை என்ற வகையறாவுக்குள் அடக்கிவிட முடியாது" எனவும் சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார். 

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நிராயுதபாணிகளாக சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நிர்வாணமாக்கி அவர்களை சித்திரவதைப்படுத்தி பின்னர் படுகொலை செய்தமையை உறுதிப்படுத்தும்  விதமாக சிறிலங்கா இராணுவச் சிப்பாய்களால் எடுக்கப்பட்ட கானொலி ஆதாரங்களை சிறிலங்கா அதிபர் ஏற்கமறுத்திருந்தார். 

பொதுமக்கள் மற்றும் சரணடைந்தவர்களைக் கொலை செய்யுமாறு தன்னால் கட்டளை வழங்கப்பட்டிருக்கவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார். போரில் இவ்வாறு கொல்லப்பட்டதற்கான சாட்சியை தன் முன்கொண்டு வருமாறு அதிபர் கோரியுள்ளார். "யுத்தத்தில் சாவுகள் நிகழவில்லை எனக் கூறமுடியாது. ஆனால் திட்டமிட்டு இவ்வாறான சம்பவங்கள் மேற்கொள்ளப்படவில்லை" எனவும் சிறிலங்கா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். 

யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் உறுதிப்படுத்தப்படும். இவ் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சில விடயங்கள் பிரதானமானவை என ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். எடுத்துக்காட்டாக, இராணுவத்தால் ஏதாவது மீறல்கள் மேற்கொள்ளப்பட்டால் அதனை ஆராய்வதற்கான 'இராணுவ நீதிமன்றங்கள்' பிரதானமான விடயமாகும் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார். 

ஆனால் மேற்குலக சக்திகளின் ஆதரவுடன் உருவாக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் பரிந்துரையானது சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தத்தை மேற்கொண்டு அதன் ஊடாக பிற பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கேட்பதற்கான உத்தியாகவே பார்க்கப்படுகிறது. 

இப்பரிந்துரைகளில், சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடுவது போன்று தமிழ் மொழியில் பாடுவதற்கான அனுமதி வழங்கப்படுதல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல், இராணுவச் செல்வாக்குகளைக் குறைத்தல், பொது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காவற்துறையைக் கொண்டு வருதல், தமிழர்களைத் துன்பப்படுத்துகின்ற துணை ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை முடக்குதல், குறைந்தது இராணுவச் சிப்பாய்களால் தனித்து மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பில் ஆரபய்ந்து தண்டனை வழங்குதல் போன்றவையே சிறிலங்கா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் பிற பரிந்துரைகளாகும். 

சிறிலங்காவின் உள்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால், சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரப் போக்கு தொடர்பில் உலக நாடுகளில் வாழ்பவர்களே தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். முன்னரை விட தற்போது உளவியல் ரீதியாக மக்கள் அச்சப்படுகின்றனர் என சிறிலங்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சிறிலங்காவில் வெள்ளை வான் கும்பல்களின் ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் காணாமற் போதல்கள் என்பன அதிகரித்துள்ளன. 

அத்துடன் தமிழர் வாழும் பகுதிகளில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சிறிலங்காவின் வடக்கில் உள்ள 'உயர் பாதுகாப்பு வலயங்களில்' மிகப் பெரிய மனிதப் புதைகுழிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் மீளிணக்கப்பாட்டை நிலைநாட்டுதல் என்பது தொலைவில் காணப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

யுத்தத்தின் முடிவிலோ அல்லது அதன் பின்னரோ சிறிலங்கா அரசாங்கப் படைகள் தம்மை எதிர்த்த 10,000 வரையிலானவர்களைக் கொலை செய்ததமை தொடர்பில் கொல்லப்பட்டவர்களின் தாய்மார் மற்றும் கணவனை இழந்த பெண்கள் வழங்கிய சாட்சியங்களிலிருந்து தான் நம்;புவதாக சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் சரணடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் புலி உறுப்பினர்கள் காணாமற்போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையானது தனது விடயத்தில் மூக்கை நுழைக்க முடியாது, அதாவது அதற்கான உரிமை அது கொண்டிருக்கவில்லை என்பதே சிறிலங்காவின் தற்போதைய நிலைப்பாடாகும். 

கியூபா, பாகிஸ்தான், ரஸ்யா, அல்ஜீரியா, சீனா போன்ற நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாக உள்ளன. அதாவது மனித உரிமைகள் பேரவையில் மேற்குலக நாடுகளால் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பிரேரணையை இந்நாடுகள் எதிர்த்துள்ளதுடன் இது தொடர்பில் தமது விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன. 

வெளித்தரப்பினரே தம்மீது குழப்பத்தை ஏற்படுத்துவதாக சிறிலங்கா அதிபரின் பிறிதொரு சகோதரரும், முதன்மை அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். "மேற்குலக நாடுககளின் விமர்சனங்களால் சிறிலங்கர்களாகிய நாம் கவலையடைகிறோம். எம்மீது அழுத்தங்கள் மேற்கொள்ளப்படாது விடில், நாட்டில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதில் நாம் தற்போது செய்வதை விட மேலும் பலவற்றை மேற்கொள்ள முடியும்" என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் உண்மையானவை என நினைக்கின்றன. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதால், சிறிலங்கா அரசாங்கமானது கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையை ஆரம்பித்தது. 

அரசாங்கத்தில் உள்ள மிதவாதிகள் உள்ளடங்கலாக பெரும்பாலானவர்கள், சிறிலங்காத் தீவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ள ஐரோப்பாவுடனும், மேற்குலக நாடுகளுடனும் உறவை நெருக்கமாகப் பேணவே விரும்புகின்றனர்.  அத்துடன் தமிழ் மக்களுடன் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்காகவே இந்தியாவுடன் சிறந்த உறவைப் பேண முயற்சிக்கப்படுகிறது. 

யுத்த கால மீறல்களைக் காரணம் காட்டி சிறிலங்காவில் அடுத்த ஆண்டில் கொழும்பில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடும் மாநாடு கைநழுவிவிடக் கூடாது என்பதில் ராஜபக்ச அதிக கவனம் கொண்டுள்ளார். இதற்கு சிறிலங்காவின் தந்திரோபாய ரீதியான நகர்வே கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதாவது நாட்டில் உண்மையான மீளிணக்கப்பாட்டையும், ஜனநாயக ஆட்சியையும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபர் ராஜபக்ச துரிதப்படுத்தும் பட்சத்தில், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மிகப் பயங்கரமான மீறல்கள் தொடர்பில் வெளித் தரப்பினர் தமது அழுத்தத்தை குறைக்கலாம்.

நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment