இலங்கையில் உள்ள தம்புள்ள பகுதியில் சுமார் 80 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஹைரியா பள்ளிவாசலை சிங்கள இனவெறியர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கடந்த 20 -04 -2012 வெள்ளிக்கிழமை அன்று மதியம் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் தங்களின் வீரியமான போராட்டங்கள் மூலமாக கடும் கண்டனங்களை இலங்கை சர்வாதிகார அரசுக்கு எதிராக பதிவு செய்து வருகிறார்கள். இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாது தமிழ் அமைப்புகளும் குறிப்பாக மறுமலர்ச்சி திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் போன்றவர்களும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்கள்.
இலங்கையில் தங்களின் உரிமையைக் கேட்டுப் போராடிய தமிழ் மக்களை கொடூரமாக கொன்றுகுவித்த ராஜபக்சே அரசு தாயக விடுதலைக்காக நெடிய போரை தொடர்ந்துவந்த புலிகளை முழுவதுமாக அழித்துவிட்டோம் என கொக்கரித்து வரும் வேளையில், இலங்கையின் மற்றொரு தேசிய சிறுபான்மை இனமான முஸ்லிம்களின் வழிபாட்டு தளத்தை தகர்க்க முனைந்துள்ளது. ஆம் ராஜபக்சே என்கிற கொடூரனின் அடுத்த இலக்கு முஸ்லிம்கள் என்பதை இச்செயல் உலகத்திற்கு உணர்த்தியுள்ளது.
இலங்கை அரசின் திட்டமிடல்கள் தெளிவாக முஸ்லிம்களையும் உரிமைக்காகப் போராடிய தமிழர்களையும் பிரித்தாண்டது. கொள்கை ரீதியாக முஸ்லிம்களும் தமிழர்களும் இலங்கையில் சிங்களவனின் சதிவலையில் சிக்கி எதிரியானார்கள். அதன்மூலமாக தான் நினைத்தை இலங்கை சாதித்துக் கொண்டது.
இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஏன் பிணக்கு ஏற்பட்டது...? ஆரம்பம் முதலே முஸ்லிம்கள் புலிகளின் விடுதலை போராட்டத்திற்கு எதிரானவர்களா...? நிச்சயமாக இல்லை. அந்த உண்மை தற்போதைய தலைமுறை இலங்கை முஸ்லிம்களுக்கு தெரிந்துவிடாமல் திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது.புலிகளின் ஆரம்பகால தளபதிகளில் பெரிதும் மதிக்கப்பட்டவர் லெப்.கர்னல் ஜுனைதீன் என்பது எத்தனை முஸ்லிம்களுக்குத் தெரியும்...?புலிகளின் முதன்மை போர் பயிற்றுவிப்பாளராக செயல்பட்டவர் கடாபி என்கிற முஸ்லிம் என்பது எத்துனை முஸ்லிம்களுக்குத் தெரியும்?புலிகளின் போர்ப்படையில் தமிழீழ விடுதலைக்காக களமாடி வீரமரணம் கண்ட வீரன் இம்ரான் என்கிற முஸ்லிமின் பெயரால்,இம்ரான் படை அணி ஒரு தனிப் பிரிவிற்கு பெயரிட்டு இம்ரானின் தியாகத்தை புலிகள் பெருமைப்படுத்தியது எத்தனை முஸ்லிம்களுக்குத் தெரியும்...?
- ஆக புலிகளின் தனி ஈழப் போராட்டத்தின் துவக்கத்தில் முஸ்லிம்களும் இணைந்தே செயல்பட்டுள்ளனர்.இலங்கையின் இருபெரும் தேசிய சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்துவிட்டால் தனித் தமிழீழம் என்பது மிக எளிதில் சாத்தியமாகிவிடும் என்கிற அச்சத்தால் முஸ்லிம்களையும் தமிழர்களையும் பிரிக்கக்கூடிய செயலை இலங்கையின் உளவுப்பிரிவுகள் சரியான முறையில் செய்து, இலங்கை முஸ்லிம்களையும் தமிழர்களையும் பகைவர்கள் ஆக்கியது. எப்படியெனில் ஊர்க்காவல் படை என்கிற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை அமைப்பாக்கி அவர்களுக்கு பலவிதமான சலுகைகளையும் ஆசை வார்த்தைகளையும் தந்து தன்வசப்படுத்தியது இலங்கை அரசு.இந்த முஸ்லிம்களைக் கொண்டு தமிழர்கள் மீது தாக்குதல்களை நடத்தி முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கிடையே நிரந்தரமான பகையை உருவாக்கியது. அதன் பிறகுதான் முஸ்லிம்கள் புலிகளால் தாக்கப்படுகிறார்கள்; யாழ்பாணத்தை விட்டு வெற்று மனிதர்களாக வெளியேற்றப்பட்டார்கள். இது உலக முஸ்லிம்கள் மத்தியில் புலிகளுக்கு மிகப்பெரிய எதிர்வினையை உருவாக்கியது.அந்த காலகட்டத்தில் இலங்கை அமைச்சரவையில் இருந்த ஒரு சில முஸ்லிம் அமைச்சர்களை அரபுநாடுகளுக்கு அனுப்பி புலிகளால் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவங்களைப் பரப்பி புலிகளை ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிரானவர்களாக சிங்கள அரசு சித்தரித்து வெற்றியும் கண்டது.ஒரு கட்டத்தில் சிங்களவனின் சூழ்ச்சியை விளங்கிக்கொண்ட புலிகளும் முஸ்லிம்களும் தொப்புள்கொடி உறவுகளுக்கு மத்தியிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சம்மதித்து பல அமர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தி, புலிகள் தாங்கள் முஸ்லிம்களைத் தாக்கியதற்கும் அவர்களை சொந்த மண்ணைவிட்டு வெளியேற்றியதற்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டனர். ஒரு சுமூகமான சூழல் மீண்டும் ஏற்பட்டது. அதனடிப்படையில் முஸ்லிம்கள் தங்கள் சொந்தமண்ணில் மீண்டும் குடியேறலாம் என்கிற நிலை ஏற்பட்டும் அகதிகள் முகாம்களில் அடைக்கலமாகி இருந்த முஸ்லிம்களை சிங்கள ராணுவம் அவர்களின் இருப்பிடங்களில் மீள்குடியேற்றம் செய்யவில்லை. காரணம் அப்படி முஸ்லிம்கள் அகதி முகாம்களில் இருந்து வெளியேறி தங்கள் இருப்பிடங்களில் குடியமர்ந்துவிட்டால் முஸ்லிம்கள் கொண்டிருந்த புலிகள் மீதான பகையுணர்வு நீர்த்துப்போய் நேசமாகிவிடும் என்கிற அச்சமே...ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்திலும் புலிகளுக்கு எதிரான களங்கள் உருவாகின. புலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. அத்தகைய சூழலில் முஸ்லிம்களும் தொடர்ந்து அதிகாரமைய்யங்கள் பரப்பிவந்த பொய்களால் புலிகளிடம் இருந்து அன்னியப்பட்டே நின்றனர். இலங்கையில் முஸ்லிம்களும் தமிழர்களும் மீண்டும் ஒன்றிணைந்துவிடாதபடி சிங்கள அரசு தொடர்ந்து தற்காத்து வந்தது. புலிகளைப் பற்றிய தவறான கருத்துகளை சிங்கள ஊடகங்கள் முஸ்லிம்களிடம் பரப்பி வந்தது. ஆனால் அதனை தமிழக தமிழ்த் தேசிய சக்திகள் முறியடித்து இருக்கலாம். அதாவது முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் முடிவுக்கு வந்த செய்தியையோ ஏன் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டது என்கிற செய்தியையோ என்ன காரணத்தினாலோ தமிழ்த் தேசியவாதிகள் பேச மறுத்துவிட்டனர்.இன்று நமது தமிழ் உறவுகள் கொத்துகொத்தாக ஈழ மண்ணில் கொன்றுகுவிக்கப்பட்டபோதும் நாம் கையறுபட்ட நிலையில் தொலைக்காட்சிகளின் முன்னால் அமர்ந்து அந்தக் கொடுமைகளை கண்டுகளித்தோம். இப்போதாவது எஞ்சியுள்ள இலங்கை முஸ்லிம்களையும் தமிழர்களையும் தமிழக தமிழ்த் தேசியவாதிகள் ஒன்றிணைக்க வேண்டும். கடந்தகால உண்மைகளை மக்களுக்குச் சொல்லவேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டோம் என்கிற மமதையில் இதோ சிங்களவன் தனது அடுத்த வெறியாட்டத்தை ஆரம்பித்துவிட்டான். மற்றொரு தேசிய சிறுபான்மை இனமான முஸ்லிம்களை ஒடுக்க முனைந்துவிட்டான் என்பதற்கான அறிகுறிதான் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல். ஒரு இனம் அழிக்கப்பட்டதையும் ஒரு இறையில்லம் தாக்கப்பட்டதையும் எப்படி ஒப்பிடுவது...? தோழர்களே... ஒரு முஸ்லிமாக என்னால் யாழ்ப்பாண நூலகம் தகர்க்கப்பட்டதையும் தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதையும் வெவ்வேறாக பிரித்துப் பார்க்கமுடியவில்லை...இலட்சக்கணக்கான நம் உறவுகளைக் கொன்று குவித்துவிட்ட பிறகும் இன்றும் குதூகலமாக வலம்வரும் ராஜபக்சே சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உலகில் வேறெங்கும் இது போன்ற இன அழிப்புகள் இனிமேல் நடைபெறா வண்ணமாக ராஜபக்சேவின் தண்டனை அமைய வேண்டும். அதற்கு முதலில் ஈழத்தில் தமிழ்ச் சொந்தங்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும். அந்த ஒருங்கிணைப்பின் மூலமாக தமிழீழ தனிநாடு மலர்ந்திட சர்வதேச சமூகத்தை வலியுறுத்த வேண்டும். அப்பணியை நமது தாயக தமிழ்த் தேசிய சக்திகள் முன்னெடுக்க வேண்டும்.அதற்கும் முன்னதாக இன்றைக்கும் முஸ்லிம்கள் மத்தியில் ஈழத்தமிழ் மக்கள் குறித்த ஆதரவை திரட்ட முடியாத வண்ணம் ஆறாத ரணமாக வடுவாக இருப்பது புலிகளால் நடத்தப்பட்டதாக இன்றளவும் அறியப்படும் காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதலும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதும்தான். அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் நமது தாயக தமிழ்த் தேசிய அமைப்புகள் முஸ்லிம்களுக்கு அறியத் தர வேண்டியது கட்டாயம். தமிழீழ கட்டமைப்பில் நமது தாய்த் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியம். ஆகவே முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையிலான அனைத்து பிரச்சனைகளுக்கும் விமர்சனங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டியது கட்டாய கடமை. அதற்கான வாய்ப்பை சிங்களவனே இன்றைக்கு தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் மூலமாக ஏற்படுத்தித் தந்திருக்கிறான். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காவண்ணம் தடுப்பதுடன் பிரிந்துகிடக்கும் இருபெரும் சமூகமும் ஒருங்கிணைய வேண்டியதும் அவசரமான அவசியம்.சமூகங்களைப் பிரித்து சதிவலை விரித்து சதிராட்டம் நடத்தி சாதித்துவிட்டோம் என்கிற ஆணவத்தில் உலவும் சிங்கள ஏகாதிபத்தியத்தை வேரறுக்க, பள்ளிவாசலைத் தாக்கி தங்கள் கொழுப்பை கொப்பளித்துள்ள ராஜபக்சே வகையறாக்களின் கொட்டத்தை முடக்க, முஸ்லிம்களும் தமிழர்களும் ஓரணியில் திரள வேண்டும். அனைவரின் பங்களிப்போடும் தனித் தமிழீழம் மலரவேண்டும்.முஸ்லிம்களும் தமிழர்களும் மதங்களால் மாறுபட்டிருக்கலாம். மொழியால், உணர்வால் ஒன்றிணைந்தவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய காலம் இது.
கட்டுரையாளர் வேங்கை.சு.செ.இப்ராஹீம்
நன்றி கீற்று இணையம்
வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...
ReplyDeletevanakkam plz add your post in http://www.valaiyakam.com/