சிங்கள, தமிழ்மக்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கைஅண்மையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, சிங்களப்பேரினவாத மேலாடையுடன் தனது அரசியல் தளத்தை பலப்படுத்துவதற்கான முயற்சிகளை, வந்த வேகத்திலேயே தொடங்கியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு, அண்மையில் வழங்கிய பேட்டியில் “தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவான பிறகே அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும்” என்று, அர்த்தமுள்ள தீர்வை வழங்குவதைப்போல, தனது கருத்தைப்பதிவு செய்துள்ளார்.

சிறுபான்மையினங்களிற்கு ஐம்பது சதவீத பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று ஜீ.ஜீ பொன்னம்பலம் வாதாடியபோதும், தாங்கள் சிங்களவர்களுடன் பரஸ்பரம் இணைந்து வாழலாம் என்று சில தமிழ்த்தலைவர்கள் நம்பி, ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் உருவாகிய சோல்பரி அரசியல் யாப்பிற்குள் இலங்கைத்தீவுக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கியது. 

ஆனால் சுதந்திரத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எந்த சிங்களத்தலைமையும் தமிழ்மக்களுடன் பரஸ்பர நம்பிக்கையைக் கண்டியெழுப்பவில்லை. மாறாக, சிங்கள மேலாதிக்க சித்தாந்தத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இலங்கையை பௌத்த சிங்கள நாடாகப் பிரகடனப்படுத்தும் செயற்பாடுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். “சிங்களம் மட்டும்” போன்று தமிழ்மக்களைச் சிறுமைப்படுத்தும் பல அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தனர். கலவரங்களை ஏற்படுத்தி தமிழ்மக்களை அச்சப்படுத்தவும், பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தவும் முனைந்தனர். தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை சிதைக்கும் நோக்கம் கொண்ட சிங்களக் குடியேற்றங்களின் உருவாக்கங்களை முனைப்புப்படுத்தினர். இதற்கெதிரான  தமிழ்மக்களின் சாத்வீகப் போராட்டங்களைக்கூட ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அடக்கியாள முற்பட்டதன் விளைவாகவே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. 

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் இன்னமும் ரணங்களாகவே தமிழ்மக்களின் மனங்களில் பதிந்துள்ளன. இராணுவ அட்டூழியம், அடக்குமுறை, என இன்றுவரை அந்த வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்தநிலையில், பரஸ்பர இணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனக்கூறுவதன் மூலம் தானும் அதேவழியில் வந்த சிங்களத்தேசியவாதிதான் என்பதை சரத்பொன்சேகா தெளிவாக நிறுவுகின்றார். 

மேலும் “தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் தமிழர்களை அவர்கள் நம்பவில்லை” எனக்கூறியுள்ளார். இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கு இருக்கும்  அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த துறவிகளுமாகச் சேர்ந்து சிங்களமக்களிடம் ஆழமாக, தவறான சிங்களப்பேரினவாத சிந்தனைத்தூண்டலை விதைத்து விட்டு, இன்று இதுதான் சிங்களமக்களின் சிந்தனை என வெளிப்படுத்தி தங்களது சிங்களமேலாண்மைவாத்தை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் தமிழ்மக்களிற்கு இருக்கும் உரிமைகளை வழங்க மறுப்பதற்கு புதிது புதிதாய காரணம் தேடுகின்றனர்.

தமிழ் சிங்கள மக்களிடம் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் சிங்கள அரசியல் தலைமைகளினால் இன ஜக்கியத்திற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அன்றி, பரஸ்பர ஜக்கியம் எவ்வாறு உருவாகும்? ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழர் தாயகப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் துரிதமான குடியேற்றங்கள், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களின் துயிலும் இல்லங்களை அழித்து அதன்மேல் இராணுவ முகாம்களையமைத்தல், ஆங்காங்கு முளைவிடும் பௌத்தவிகாரைகள், தமிழ்மக்களின் அடிப்படைப் பொருளாதார வளங்களை சிங்களப் பெரும்பான்மைக்கு கையகப்படுத்தும் செயற்பாடுகள், மிரட்டி, கடத்திப் பணம்பறித்தல், இயல்பு நிலையை தோற்றுவிக்காமை, போன்று அப்பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளை மறுதலித்து விட்டு, பரஸ்பரம் ஏற்படுத்தி விடலாம் என்று எவ்வாறு நம்பமுடியும்.

அத்துடன் “பல்லின இனங்களிற்கிடையே சுமூகமான நிலையேற்பட பத்து அல்லது இருபது ஆண்டுகள் கூட ஆகலாம் என்பதுடன் இராணுவத்தினரின் பிரசன்னம் தெடர்ந்து தமிழர் தாயகத்தில் இருக்கவேண்டும்”  என சரத் பொன்சேகா கூறுவதின் உள்ளர்த்தம், இராணுவ மேற்பார்வையில் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டைச் சிதைக்கவேண்டும் என்பதுதான்.

இங்கு சரத் பொன்சேகாவின் கருத்தில் அப்பட்டமாகத் தெரியும் சிங்கள மேலாதிக்க சிந்தனை என்பது  சிங்களக்கட்சிகளுக்கிடையேயான அரசியல் முரண்பாடு, அரசியல் பழிவாங்கலின் பாதிப்பு என்பவற்றைத் தாண்டி, சிங்களப்பேரினவாதம் என்ற சிந்தனையின் ஒருமித்த குரலாகத்தான், சிங்களவர்களின் கருத்துகள் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன என்பது மீண்டும் புலப்படுகின்றது.

இலங்கைத்தீவில் தமது உரிமைகளுக்காக நீண்டகாலம் சாத்வீக மற்றும் ஆயுதவழி போராட்டத்தில் போராடிய ஒரு இனத்திற்குப் பரஸ்பரம் எற்படுவதாயின் அதற்கிருப்பது ஒரே வழிதான் தமிழ்மக்களிற்கான சரியான அரசியல் உரிமைகளை வழங்குவதே ஆகும். அதில்லாமல் இயல்பாக பரஸ்பரம் ஏற்படும் எனக்கருதுவதோ! அன்றி இராணுவ அடக்குமுறைக்குள் இனத்தின் அடிப்படைகளை நீர்த்துப்போகச்செய்வதோ! அடிமைப்படுத்தி வைத்திருப்பதோ! பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தி விடலாம் என சிங்களத்தலைமைகள் நினைப்பேர்களேயானால் அது அவர்களின் அரசியல் மடமைத்தனமாகும்.

சிங்கள மக்கள் மத்தியில் சிங்களத்தலைமைகளினால் தொடர்ந்து  ஏற்படுத்தப்படுகின்ற இனவாதக்கருத்துக்களின் உருவாக்கமும் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவமுயலும் செயற்பாடுகளும் இனங்களிற்கிடையேயான இடைவெளிகளை அதிகப்படுத்திச்  செல்லுமேயன்றி அங்கு இன ஜக்கியம் ஏற்படவாய்ப்பேயில்லை அது ஏற்படப்போவதுமில்லை.

இராணுவ அடக்குமுறைக்குள் ஈழத்தமிழினம் வைக்கப்பட்டிருந்தால் அவர்களது அரசியல் விடுதலை தொடர்பான எண்ணக்கருத்துக்களை பலவீனப்படுத்தலாம் என்றோ! அவர்களது அரசியல் செயற்பாடுகளை ஆயுத வன்முறை மூலம் நசுக்கி விடலாம் என்றோ சிங்களம் கருதுமானால் அது தமிழ்மக்கள் பற்றிய புரிதலின் தோல்வியாகத் தான் இருக்கும்.

தமிழ்மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளை மறுதலித்து சமாதானம், சகவாழ்வு, இன ஒற்றுமை, இன ஜக்கியம் போன்றவை சாத்தியமானவையல்ல. அதேநேரத்தில் தமிழ்மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் சிங்களமக்கள் அதை எதிர்க்கின்றார்கள். இன ஜக்கியத்தின் அடித்தளத்தில் உருவாகும் சிங்கள மனநிலை மாற்றமே தமிழ்மக்களிற்கான அரசியல் உரிமை வழங்குவதற்கான காலம் என, சிங்கள மேலாண்மைவாதத்தை உருவாக்கும் சரத் பொன்சேகா உட்பட அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களின் கருத்தாகவும் இருக்கின்றது. இவை ஒருபோதும் எத்தகைய பரஸ்பரத்தையும் இனங்களுக்கிடையில் ஏற்படுத்தாது என்பதை யதார்த்தமானது. 

ஈழத்தவன்


Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment