“சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்“ என்கிறது ஒரு பழமொழி. இந்தப் பழமொழியை இலங்கை அரசாங்கம் இப்போது பின்பற்றத் தொடங்கி விட்டது போலவே தெரிகிறது. இலங்கை அரசுடன் சண்டைபிடிக்க விடுதலைப் புலிகள் தான் இல்லையே - சண்டைக்காரன் என்றால் யார் என்ற கேள்வி வரலாம்.
இலங்கையுடன் யாரும் இப்போது சண்டைக்குப் போகாது விட்டாலும், பலரை அரசாங்கம் தனது எதிரிகளாகவே பார்க்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர் மெல்ல மெல்ல அமெரிக்காவிடம் இருந்து விலகத் தொடங்கிய இலங்கை, அண்மைக்காலமாக அமெரிக்காவை எதிரி போன்றே கருதி வருகிறது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்த ஆரம்பித்ததால், அந்த நாட்டுடனான உறவுகள் கசந்து போனது. அதிலும் சீனாவுடன் இலங்கைக்கு மேலும் நெருக்கம் ஏற்பட, இந்த விரிசல் இன்னும் அதிகமானது. அமைச்சர்கள் அமெரிக்காவைத் தாக்குவதும், ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் அமெரிக்காவின் மீறல்களைச் சுட்டிக்காட்டி அரசு அறிக்கைகளில் கேலி செய்வதும் வழக்கமானது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அதனை இலங்கை கடுமையாக எதிர்த்து நின்று தோற்கடிக்க முனைந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் இரு நாடுகளும் உச்சக் கட்டமாக மோதிக் கொண்டன. இந்தியா- பாகிஸ்தானை விட அந்த இராஜதந்திரப் போர் மும்முரமாக இருந்தது. இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா பங்கேற்ற எதிர்ப்புப் பேரணியில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. இது இலங்கையின் இராஜதந்திரத்தைக் கீழ் மட்டத்திற்கு கொண்டு சென்ற அதேவேளை, இலங்கை எந்தளவுக்கு அமெரிக்காவுடன் விரோதப் போக்கை கடைப்பிடித்தது என்பதற்கு உதாரணமாகவும் அமைந்தது. ஆனால் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் நிலைமைகள் மாற்றமடையத் தொடங்கியுள்ளன.
தீர்மானம் நிறைவேறப் போகிறது என்று தெரிந்ததும், முன்னதாக நிராகரித்த ஹிலாரியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு அமெரிக்கா வருவதாக அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இதற்கமையவே கடந்தவாரம் அவர் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா வரும் போது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான திட்டம் ஒன்றுடன் தான் வரவேண்டும் என்று அமெரிக்கா உறுதியாகவே கூறியிருந்தது. இந்தநிலையில் தான் இலங்கை அரசாங்கம் ஓரளவுக்கு இறங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. இதற்குக் காரணம், இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிப் போகத் தொடங்கியது தான். ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது இலங்கையை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் இலங்கை அரசாங்கம் மீளவில்லை. அதனால் தான் ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் இலங்கையின் எந்தவொரு உயர்மட்டப் பிரமுகர்களும் இந்தியாவுக்குச் செல்லவில்லை. இந்தியாவின் அண்மைய நகர்வுகளும் இலங்கைக்குச் சார்பானதாக இல்லை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண, நிறைவேற்றுமாறு இந்தியா சுட்டிக்காட்டும் விடயங்களை இலங்கை ஏற்கத் தயாராக இல்லை. இந்தக் கட்டத்தில் தான் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இலங்கை விவகாரம் குறித்துக் கலந்துரையாடி விட்டுப் போயுள்ளார். இதன்போது, இலங்கை விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் பொதுவான நிலைப்பாடு ஒன்றின் அடிப்படையில் செயற்படுவது என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. இது இலங்கைக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்தியா வந்திருந்த போதும் இந்தியப் பிரதமருடன் இதுபற்றிப் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்திருந்தார். இலங்கை விவகாரம் தொடர்பாக எவ்வாறு அணுகுவது என்று சர்வதேச தலைவர்கள் இந்தியாவுடன் பொது இணக்கப்பாட்டுக்கு வரும் போது, அதை இலங்கை அரசாங்கம் வெளியே நின்று வேடிக்கை பார்க்க முடியாது. ஏனென்றால், உலக வல்லரசான அமெரிக்காவையும், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் பகைத்துக் கொண்டு இலங்கையால் நிமிர்ந்து கொள்ள முடியாது. இதனை அரசாங்கம் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனையடுத்தே இலங்கையின் போக்கில் சில மாற்றங்கள் தெரிவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் பயணத்துக்கு முன்னதாக அமெரிக்கா முன்வைத்த சில விடயங்களை நிறைவேற்ற அரசாங்கம் முன்வந்தது.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விபரங்களை வெளியிட அரசாங்கம் எடுத்த முடிவும் அதில் ஒன்று. இந்த விபரங்களை தருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் பலமுறை அலைக்கழித்து ஏமாற்றியது. இப்போதும் கூட, அந்த விபரங்களைப் பெறக்கூடிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. கடந்த பெப்ரவரி மாதம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வந்தபோதும் இப்படித் தான், இராணுவத்தின் மீதான குற்றசாட்டுகளை விசாரிக்க இராணுவ நீதிமன்றத்தை அமைத்துள்ளதான அறிவிப்பு வெளியானது. ஒருமாதம் முன்னதாகவே அந்த இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. அதற்குப் பின்னர் அந்த இராணுவ நீதிமன்றத்துக்கு என்னவானது- அதன் விசாரணைகள் எந்தக் கட்டத்தில் உள்ளன என்ற தகவல் ஏதும் இல்லை. அதேபோலவே தான், தடுப்புமுகாம்களில் உள்ளவர்களின் விபரங்களை உறவினர்கள் அறிந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பும், ஏப்ரல் 1ம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக –முற் திகதியிட்டு வந்துள்ளது. ஆனால் இந்தப் பத்தி எழுதப்படும் வரை எவருக்கும் அந்த வசதி கிடைத்ததாகத் தகவல் இல்லை. அடுத்து அமெரிக்கா அடிக்கடி வலியுறுத்தி வரும் சரத் பொன்சேகாவின் விடுதலைக்கும் அரசாங்கம் இணங்கியது. வெளிவிவகார அமைச்சர் பீரிசின் பயணத்துக்கு வசதியாக- அவர் மீதான அழுத்தங்களைக் குறைக்கும் வகையில், அரசாங்கம் பல சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தி அமெரிக்காவை சமாதானப்படுத்த முயன்றது. இதைவிட, அமெரிக்காவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் ‘பற்றன் பொக்ஸ்‘ என்ற தரகு நிறுவனத்தின் உதவியையும் அரசாங்கம் நாடியுள்ளது. இவையெல்லாம், அமெரிக்காவுடனான உறவுகளை மீளவும் புதுப்பித்துக் கொள்வதற்கான முயற்சிகளாகவே தெரிகின்றன.
அமெரிக்காவைப் பகைத்துக் கொள்வது நீண்டகால நோக்கில் ஆபத்தானது என்று அரசாங்கத்துக்குப் புரிந்திருக்கிறது. அதனால் தான் சற்று இறங்கிப் போகத் தொடங்கியுள்ளது. சண்டைக்காரனான அமெரிக்காவின் காலில் விழத் தயாரான போதும் சாட்சிக்காரனான இந்தியாவை அது கண்டு கொள்ளவில்லை. போரின் போதும், அதற்குப் பின்னரும், இலங்கையைக் காப்பாற்ற இந்தியா மிகப்பெரிய உதவிகளை வழங்கியது. ஆனாலும் ஜெனிவாவை மனத்தில் வைத்துக் கொண்டு இந்தியாவுடன் நெருங்கிச் செல்லாமல் எட்ட நிற்கவே இப்போதைக்கு இலங்கை விரும்புகிறது.
கட்டுரையாளர் ஹரிகரன் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment