அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்காகவே ஜெனீவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றிய தாமர குணநாயகம் பதவி விலக்கப்பட்டதாகவும், அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதன் மூலம் மனித உரிமை விவகாரங்களிலிருந்து தப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் முனைவதாகவும் ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.
ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியான தாமர குணநாயகத்தை கியூபாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, ஜே.வி.பி அரசியல் அதிகார மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு கருத்து வெளியிட்ட ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க,
“'மே 18 அன்று காலிமுகத்திடலில் சிறிலங்கா அரசாங்கம் இராணுவ வெற்றியைக் கொண்டாடும் அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்ரனைச் சந்தித்து மிக இரகசியமாக சிறிலங்கா அரசாங்கத்தின் 'செயற்திட்டம்' தொடர்பாக கலந்துரையாடி, அவரின் ஆலோசனையைப் பெறவுள்ளார்.
இது சிறிலங்கா அரசாங்கத்தின் ஏமாற்றுப் புத்தியை தெளிவாக காண்பிக்கின்றது“ என்று தெரிவித்துள்ளார்.
“தம்மிடம் காண்பிப்பதற்கு முன்னர் 'செயற்திட்டத்தை' முதலில் மக்களிடம் காண்பிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டது.
இருப்பினும், இச் செயற்திட்டத்தை முதலில் மக்களிடம் காண்பிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது.
அமெரிக்காவை திருப்திப்படுத்துவதற்காகவே ஜெனீவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றிய தாமர குணநாயகம் பதவி விலக்கப்பட்டார்.
அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதன் மூலம் மனிதஉரிமை விவகாரங்களிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்கின்றது.“ என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் நிலவும் அரசியல் சூழலை அபிவிருத்தி செய்தல் மற்றும் கட்சியானது தனது முன்னேற்றங்களின் மூலம் எவ்வாறு தனது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது என்பது தொடர்பாகவும் ஜேவிபியின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
'சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக மக்கள் மீது அழுத்தத்தை வழங்கிவருகின்றது. எவ்வாறிருப்பினும், சிறிலங்கா அரசாங்கத்தின் கீழ்த்தரமான நிகழ்ச்சித் திட்டங்களை எதிர்த்து மக்கள் ஓரிடத்தில் இன்னமும் அணிதிரளவில்லை.
இதனால் மக்களை ஒன்று திரட்டுவதற்கு எமது கட்சியின் மாவட்ட மற்றும் தேர்தல் தொகுதி ஒழுங்கமைப்பாளர்களை உடனடியாகப் பலப்படுத்தவேண்டும்' என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
'நாங்கள் எமது கட்சியின் முழுப் பலத்தையும் ஒன்றிணைத்து 'ஆறு வார கால மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கையை' மிக வெற்றிகரமாக முன்னெடுக்கவேண்டும்.
மக்களின் ஆணையைக் கொள்ளையிட்டு அதன் மூலம் மேற்கொள்ளப்படும் 'ஒழுங்குமுறையற்ற தேர்தல்களை' எதிர்த்து மக்கள் அணிதிரள வேண்டும்.
முதலாளித்துவ நாடுகள் எதிர்நோக்குவதைப் போல எமது நாட்டு மக்களும் நெருக்கடிக்கு முகங்கொடுக்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளித்துவம் என்பது பதிலாக இருக்காது என்பதை மக்களுக்கு உணர்த்துவது மிக இலகுவான காரியமாகும்.
துண்டுப்பிரசுரங்களை வழங்குதல் மற்றும் சிறிய சிறிய சந்திப்புக்களை மக்களுடன் ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றின் மூலம் அவர்களிடம் இவ்வாறான செய்திகளை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என அனுரா திசநாயக்க தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment